ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

பீதியைக் கிளப்பும் பீகார்!

நேரடி ரிப்போர்ட்

பீதியைக் கிளப்பும் பீகார்!
##~##

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட வங்கிக் கொள்ளையரின் நதி​மூலம் தேடி, பீகாருக்குச் சென்றோம். நமது நேரடி விசிட்டில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிரடி ரகம்! 

வினோத்குமார் என்பவரின் உடலை சென்னையில் வந்து அவரது உறவினர்கள் வாங்கிச் சென்​றார்கள். அவரது உண்மையான பெயர் சுஜய்குமார். இவர், பீகாரின் பிரபலக் கொள்ளையன்என்ப​தால், பாட்னாவின் டி.ஜி.பி. அலுவ​ல​கத்​​திலேயே அடையாளம் காணப்​ப ட்டது. பாட்னாவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கும் கமர்ஜி கிராமத்தில் சுஜய்குமாரின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த பல வங்கிக் கொள்ளைகளில் சுஜய்குமார் ஒரு முக்கியக் குற்றவாளி. சென்னை வந்து உடலைப் பெற்ற அவனது தந்தை முனேஷ்வர் ராய் மற்றும் சகோதரி அனிதா ஆகியோர், ரகசியமாக இறுதிச் சடங்குகளை முடித்து விட்டனர்.  

சுஜய்யைப் பற்றி கௌரிகன்ச் காவல் நிலையத்தில் விசாரித்த​போது, ''முதன்முறையாக 2006-ல் ஒரு திருட்டு வழக்கில் சிக்கி, சிறைக்குச் சென்றான் சுஜய். ஜெயி லில் இருந்து வந்தபிறகு, வெளி மாநிலங்களில் மட்டும் தனது தொழிலை வைத்துக்கொண்டு, அவ்வப்போது பீகாருக்கு ரகசிய​மாக வந்து சென்றான். அவனது குடும்பத்தாரும் இந்தப் பகுதியில் தங்கள் அடையாளத்தை மறைத்​தே வாழ்கின்றனர். அவனை அடை​யாளம் காண்பதற்காக ஒரே ஒரு முறை அவனது வீட்டுக்கு நாங்கள் சென்றபோது, ஆண்கள் யாரும் அங்கு இல்லை. அவனிடம் இருந்த சொத்து விவரங்களும் வெளியில் தெரியவில்லை. கண்டிப்​பாக கொள்ளை அடித்த பணத்தை, தன் குடும்பத்தாரிடம் கொடுத்து சுஜய் மறைத்து வைத்திருக்க வேண்டும். அதனால்தான், லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து சென்று, சுஜய்​குமாரின் உடலை விமானத்தில் கொண்டு வந்தார்கள்'' என்று சொன்னார்கள்.

பீதியைக் கிளப்பும் பீகார்!

வினய்பிரசாத் என்று முதலில் அறியப்பட்​டவரின் உண்மையான பெயர் வினய்குமார். அதேபோன்று ஹரீஷ் குமார் என்று முதலில் சொல்லப்பட்டவரின் உண்மையான பெயர் ராஜீவ்குமார். இவர்கள் இருவரும் பாட்னாவில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். என்கவுன்டருக்கு மறுநாள், தமிழக போலீஸாரிடம் இருந்து நாளந்தா மாவட்ட எஸ்.பி-க்கு என்கவுன்டர் செய்யப்பட்டவர்களின் போட்டோக்கள் மெயில் செய்யப்பட்டன. அந்த மாவட்டத்தில் இருக்கும் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பப் பட்டதில், வினய்குமார் இருக்கும் பஹாபூர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குகள் எதுவும் இல்லை. வினய் குமாரின் கிராமமான கராய்பர்சுராயில் காண்பித்தபோது, அந்தப் பகுதியில் பல வருடங்களாக ஷேர்ஆட்டோ ஓட்டியவர் என்று தெரியவந்தது. கராய்பர்சுராய் கிராமத்துக்குச் சென்றோம். மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் வினய்குமாரின் மனைவி மாதுரி, ''எனது கணவர் கூலி வேலை செய்வதற்காக, ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்னைக்குச் சென்றார். திரும்பிவந்து, பாட்னாவில் ஒரு பிளாஸ்டிக் ஃபேக்டரியில் வேலை செய்தார். அங்கும் சரியான சம்பளம் கிடைக்கவில்லை என்பதால், கொஞ்ச காலம் ஷேர் ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டினார். இதிலும் நல்ல சம்பளம் இல்லை என்றதும் மீண்டும் சென்னைக்கு வேலை தேடிச் சென்றார். இங்கு திரும்பி வருவதற்காக 23-ம் தேதி ரயிலில் டிக்கெட் புக் செய்திருந்தார். அவர் மீது அநியாயமாக கொள்ளையன் என்று பழிசுமத்தி தமிழக போலீஸார் கொன்றுவிட்டனர். இந்தக் கொலையைப் பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று முதல்வர் நிதீஷ்குமாரை சந்தித்துக் கோருவேன். என் அப்பாவி கணவரைக் கொன்றதற்காக தமிழக அரசிடம் இருந்து நஷ்டஈடு பெற்றுத் தரும்படியும் கேட்பேன்'' என்று கதறினார்.

கிராமவாசியான நிரஞ்சன்குமார், ''வினய்குமார் மீது எந்தத் தவறும் இருக்க வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு சதி வலையில் வினய் சிக்கி, பலியாகி உள்ளார். அவர் உண்மையிலேயே கொள்ளையடித்து சம்பாதித்து இருந்தால், சுஜய்குமாரைப் போல் விமானத்தில் சென்று உடலைப் பெற்றுக்கொண்டு வந்திருப்பார்கள்'' என்றார்.  

ஆனால், நாளந்தா மாவட்ட போலீஸோ, ''மாதுரி சொல்வதில் பாதி மட்டுமே உண்மை. கொள்ளை​யில் வினய்குமாருக்குப் பங்குத் தொகை கிடைக்காமல் போயிருக்கலாமே தவிர, அவன் கொள்​ளைக்கு உதவி இருப்பது உண்மை. இது மாதுரிக்கும் தெரியும். அதனால்தான் முதலில் வினய்குமாரின் போட்டோவைக் காட்டியதும், 'அது தன் கணவர் இல்லை’ என்று மறுத்தார். ராஜீவ்குமார், வினய் குமாரின் ஒன்றுவிட்ட சகோதரி மகன். சுஜய் குமார், வினய்க்கு மச்சினன் முறை. அவர்கள் இருவருமே கொள்ளைக்காரர்கள் என்பது நன்கு தெரிந்தேதான், அவர்களுக்கு சென்னையில் வீடு எடுத்துக் கொடுத்திருக்கிறான்'' என்கிறார்கள்.

மூன்றாவது நபரான ராஜீவ்குமார், ஹில்சா காவல் நிலையத்தில் உடனடியாக அடையாளம்

பீதியைக் கிளப்பும் பீகார்!

காணப்பட்டான். ஆனால், 'அது தன் மகன் இல்லை’ என்று மறுத்த அவனது தாய் சுனிதா, ஐந்து வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ராஜீவின் போட்டோவைக் காட்டினார். அது ராஜீவின் லேட்டஸ்ட் போட்டோவுடன் மேட்ச் ஆகியும், சுனிதா ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ராஜீவின் தந்தை வீரேந்தர் பிரசாத் எனும் பகத்ஜி உண்மையை ஒப்புக்கொண்டார்.

வினய்குமாரின் கிராமத்தில் இருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ள மில்கிபர் கிராமத்தில், ராஜீவின் வீடு உள்ளது. ஹில்சா எனும் காவல் நிலைய எல்லையில் வரும் இந்தக் கிராமத்தில் நுழைந்தால், ராஜீவைத் தெரியாதவர்கள் கிடையாது.

''ராஜீவ் சின்ன வயதிலேயே வீட்டைவிட்டு ஓடி, பாட்னாவுக்குப் போய்விட்டான். அந்த மாவட்டத்தின் எல்லையில் உள்ள கபீர் மடத்தில் பணியாற்றி வந்தான். அதன் மடாதிபதியாக இருந்த மஹந்த் ராமேஷ்வர் தாஸை, 2009-ல் கொலை செய்துவிட்டுத் தப்பினான். அந்த மடாதிபதியைச் சுற்றி இருந்த விரோதிகள் ராஜீவுக்கு பண ஆசையைக் காட்டி, கொலை செய்யச் சொன்னதாகப் புகார் கிளம்பியது. அருகில் உள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கருக்குத் தப்பி, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவனை போலீஸாரால் பிடிக்க முடியவில்லை. நாளந்தாவின் கிராமங்களைச் சேர்ந்த சில கொள்ளையர்களுடன் ராஜீவுக்கு வலுவான தொடர்புகள் உண்டு. போபால் மற்றும் ராய்பூர் நகரங்களில் சில வருடங்களுக்கு முன் நடந்த வங்கிக் கொள்ளைகளில் ராஜீவ் பெயர் அடிபட்டது. அங்கே இருந்து சென்னைக்குத் தப்பிச் சென்றவன், என்கவுன்டரில் பலியாகி இருக்கிறான்'' என்கிறார்கள் கிராம​வாசிகள்.  

ராஜீவ்குமார் பற்றி உள்ளூர்ப் பத்திரிகையாளரிடம் விசாரித்தபோது, ''ராஜீவ்தான் சென்னையில் நடந்த வங்கிக் கொள்¬ளைகளின் மாஸ்டர்மைன்ட் ஆக இருக்கக்கூடும். ஏனெனில், சிறுவயதிலேயே குறுக்கு வழியில் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவன். பீகாரைச் சேர்ந்த வங்கிக் கொள்ளையர்கள் அனைவருடனும் அவனுக்குத் தொடர்பு உண்டு. இவர்களில் பலரும் ராஜீவின் உறவினர்கள். ஒரு கொள்ளைக்கு முன்பாக இடத்தை நோட்டம் போட்டு, திட்டம் தீட்டிச் செயல்படுத்துவதில் ராஜீவ் கில்லாடி. அவன் போகும் இடத்தில் எல்லாம், வினய்குமாரைப் போன்ற அப்பாவிகளுக்கு வலைவிரித்து, ஒரு பாதுகாப்பான இடம் பார்த்து அமர்ந்து கொள்வான். பிறகு, உள்ளூரில் வேறு சில பெயர்களில் பைக்குகளை வாங்கிச் சுற்றி வருவான். கும்பலாகச் சேர்ந்து கொள்ளை அடித்து, பைக்குகளை அந்த ஊரிலேயே அனாதையாகப் போட்டுவிட்டு ஜாகையை மாற்றிக்கொள்வான்.

பினாமி பெயர்களில் இங்கு அவனுக்கு நான்கு ஸ்கார்ப்பியோ கார்கள் உள்ளன. அவனது மாமாவின் பெயரில் பாட்னாவில் 45 லட்ச ரூபாய்க்கு நிலம் வாங்கி உள்ளான். கடந்த வருடம் ஹாஜிபூரில் ஒரு மதுக்கடையை பினாமி பெயரில் ஏலத்தில் எடுத்து, நடத்தி வந்தான். இப்போது தன் வீட்டை இடித்து பல லட்சம் ரூபாய் செலவில் கட்டினான்''  என்று சொன்னார்கள்.

''அடையாளம் காணாமல் இருக்கும் நான்காவது நபரும்,  இந்தப் பகுதியைச் சேர்ந்தவராகவும், மற்ற மூவரின் உறவினராகவும்தான் இருப்பார். கார​ணம், இந்தப் பகுதியில் மட்டும் ஒரு டஜனுக்கு மேற்பட்ட பிரபல கொள்ளைக்காரர்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் பீகார் ஜெயிலில் இருக்கும் சைலேந்தர் சிங். இவர் சத்தீஷ்கரின் வங்கியில் ஏழு கோடி ரூபாயை அபேஸ் செய்தவர். இவர் ஜெயிலில் இருந்தாலும், வெளியே இவருக்கு நிறைய சிஷ்யர்கள் உண்டு'' என்கிறார்கள் லோக்கல் போலீஸ்காரர்கள்.

''தமிழக போலீஸார் சரியான நபர்களைத்தான் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்'' என்று பீகார் போலீஸார் ரகசியமாகப் பாராட்டுகிறார்கள்.

- ஆர்.ஷஃபி முன்னா

படங்கள்: சந்திரகாத் சிங்,

அப்தாஃப் ஆலம் சித்திக்கீ