ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மாற்று அரசியல் மலராதா..?

மாற்று அரசியல் மலராதா..?

மாற்று அரசியல் மலராதா..?

'மனிதர்கள் செய்யக்கூடிய மிக மோசமான ஏழு பாவங்களில் ஒன்று, கொள்கையற்ற அரசியல்’ என்றார் அண்ணல் காந்தி. ஏற்றுக்கொண்ட கொள்கைகளில் சிறிதும் சமரசம் இன்றி மக்கள் நலனுக்காகவே இயங்கும் அரசியல் கட்சி ஒன்றுகூட இன்று இந் தியாவில் இல்லை என்பதுதான் உண்மை. தான் நேர்ந்து கொண்ட லட்சியப்பாதையில் பொது மக்களை நடத்திச்செல்ல முயலாமல், அவர்களுடைய மலினமான மனோபாவங்களைத் தன் சொந்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் தரம் குறைந்த சந்தர்ப்பவாத சாகசமே தலைமைக்குரிய தகுதியாகிவிட்டது. எந்தத் தவறான பாதையில் தடம் பதித்தாவது பதவியைப் பெறுவது, அதிகாரத்தை அடைந்து அளவில்லாமல் பணத்தைப் பெருக்குவது, வாழ்க்கை தரும் இன்பங்களை வகை வகையாய் சுவைப்பது என்ற மூன்று அந்தரங்க ஆசைகளுடன் நம் பெரும்பாலான அரசியல்வாதிகள் 'பொதுத் தொண்டு’ என்னும் போலி வேடம் புனைந்து சமூக வீதிகளில் சஞ்சரிக்கின்றனர். 

##~##

மூதறிஞர் ராஜாஜி தமிழகத்தில் 1967 பொதுத் தேர்தலில் தொடங்கி வைத்த கூட்டணி தர்மம்தான், இன்று நம்மிடையே அரங்கேறியிருக்கும் அனைத்து அரசியல் அதர்மங்களுக்கும் அடித்தளம். அறத்துக்குப் புறம்பான அரசியல் ஆதாயங்களைக் கனவிலும் கருதாத காந்தியப் பாதையில் ஒரு கர்ம யோகியைப் போல் பயணித்த ராஜாஜியின் அடிமனத்திலும் தனிநபர் பகைமை ஆழமாக வேரோடிக்கிடந்தது. ஆயிரம் வேதங்களையும், அகிலத்தின் அரசியல் சாத்திரங்களையும் முற்றாகக் கற்றுணர்ந்த தன்னை விட, ஒரு படிக்காத காமராஜர் பாமர மக்களால் கடவுளுக்கு நிகராகப் போற்றப்படுவதை ராஜாஜியால் ரசிக்க முடியவில்லை. காங்கிரஸை ஒழிக்கவேண்டும் என்பதைவிட, தன்னுடைய அரசியல் எதிரி காமராஜரின் செல்வாக்கை அடியோடு அழிக்க வேண்டும் என்ற அவசியமற்ற ஆவேசம்தான் அவரை அண்ணாவுடன் கூட்டணி அமைக்கத் தூண்டியது.

மாற்று அரசியல் மலராதா..?

அண்ணாவின் அரசியல் பவனிக்கும், ராஜாஜியின் ஆன்மிகப் பயணத்துக்கும் எந்த வகையில் உடன்பாடு? கழகக் கொள்கைக்கும், சுதந்திரா கட்சியின் செயல்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எண்ணெய்யும் தண்ணீரும் எப்படி ஒன்று கலக்க முடியும்? பகைமை சார்ந்த அரசியல் பலிபீடத்தில் எல்லா அடிப்படை லட்சியங்களும் வெட்டுண்டு வீழ்ந்தன. 'குல்லுக பட்டர்’ என்று பழிக்கப்பட்டவர், 'மூதறிஞர்’ என்று பாராட்டப்பட்டார். அப்படிப் பாராட்டியது அண்ணாவின் சந்தர்ப்ப சாகசம். பூணூலை ஒரு கையால் பிடித்தபடி மறுகையால், 'உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்’ என்று, ராஜாஜி வாய் மலர்ந்தது தனிநபர் பழி வாங்கும் படலம்.

ராஜாஜி, தான் செய்த பாவத்துக்கு பிராயசித்தம் காண 1971 பொதுத்தேர்தலில் காமராஜருடன் கைகோத்து நின்றார். அவருடைய தவறுக்குத் துணை நின்ற தமிழினம், அவர் செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேட வாய்ப்பு வழங்கவில்லை. அதுதான் தமிழரின் தனிப்பெருங்குணம். ராஜாஜி வகுத்துத் தந்த கூட்டணி தர்மத்தை அவரால் 'நம்பர் ஒன் எதிரி’ என்று வர்ணிக்கப்பட்ட இடதுசாரி இயக்கங்கள் இன்று வரை தவறாமல் கடைப்பிடித்து வருவதுதான் அரசியல் அவலம். வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட கொள்கையற்ற கூட்டணி என்ற ராஜாஜியின் ஃபார்முலாவை, கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் தத்தெடுத்தார்.

கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் ஏற்பட்ட 'யார் பெரியவர்’ என்ற போட்டியில், 1972-ல் கழகம் இரண்டானது. பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்ததும், அண்ணாவிடம் இருந்து சம்பத் விலகியதும், கலைஞரிடம் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேறியதும், வைகோ தனிக்கட்சி கண்டதும் தனிநபர் பூசலால்தானே தவிர, தத்துவத் தேடலினால் அல்ல. கலைஞரின் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவரை எதிர்த்துக் களம் கண்ட எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திக்கொள்ள கல்யாணசுந்தரம் வியூகம் அமைத்தார்.

அ.தி.மு.க-வுக்கு ஆரம்ப காலத்தில் அரசியல் வடிவம் அளித்ததில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரும்பங்கு உண்டு. ஊழல் நடைமுறைகளைத் தமிழரின் தவிர்க்க முடியாத வாழ்வியல் விழுமியங்களாக வளர்த்தெடுத்த கலைஞரின் ஆட்சியை அகற்ற கம்யூனிஸ்ட்டுகள், எம்.ஜி.ஆரை பயன்படுத்தப் பார்த்தனர். ஆனால், எம்.ஜி.ஆர்-தான் உண்மையில் கம்யூனிஸ்ட்டுகளை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டார். கலைஞரின் வீழ்ச்சியில், கழகத்தின் வனவாசத்தில் வளர்ந்தது எம்.ஜி.ஆரே தவிர, கம்யூனிஸ்ட்டுகள் இல்லை.

படகோட்டியாக, மீனவ நண்பனாக, ரிக்ஷாக் காரனாக, விவசாயியாக, தொழிலாளியாகத் திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆரை மக்கள் நம்பினர். ஆனால், வர்க்க பேதமற்ற சமுதாயத்தைச் சமைப்பதற்காக அரும்பெரும் தியாகங்கள் செய்த தன்னலமற்ற தலைவர்களாலும், உயர்நெறி சார்ந்த தோழர்களாலும் அப்பழுக்கற்ற இயக்கமாக உருவெடுத்த இடதுசாரி இயக்கங்களை அவர்கள் இன்றுவரை நம்பவில்லை. தமிழக வாக்காளர்களில் ஐந்து சதவிகிதம்கூட நம் காம்ரேடுகளுக்கு வாக்களிக்க முன்வரவில்லை. அரசியல் அதிசயமாய் நம்மிடையே நடமாடும் நல்லகண்ணுவின் தியாகமும், அறிவார்ந்த தா.பாண்டியன், மகேந்திரன் போன் றோரின் ஆற்றலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு ஏன் கை கொடுக்கவில்லை? தோழர் ஜி.ராமகிருஷ்ணனைப் போன்ற ஊழலின் நிழல்படாத நேர்மையாளர்கள் பலர் இருந்தும் மார்க்சிஸ்ட் அமைப்பு ஏன் மாபெரும் மக்கள் இயக்கமாக மாற முடியவில்லை? ஒரே காரணம்.... இவர்கள் அரசி யலில் மார்க்ஸை மட்டும் நம்பவில்லை. எம்.ஜி.ஆர் முதல் விஜயகாந்த் வரை நடிகர்களையே நம்பிக் கெட்டனர்.

மக்களின் புறக்கணிப்பால் விரக்திப் பள்ளத்தில் விழுந்து கிடக்கும் இடதுசாரிகள், பட்டத்து யானையைப் பிச்சையெடுக்கவிட்டது போல், ராமாவரத்திலும், கோபாலபுரத்திலும், போயஸ் தோட்டத்திலும், கடைசியாகக் கோயம்பேடு சந்தையிலும் மார்க்ஸியத்தை அடகுவைத்து விட்டனர். ராஜாஜிக்கும் அண்ணாவுக்கும் கொள்கை உடன்பாடு இல்லாமல் போனாலும், குறைந்த பட்சம் இருவரும் அரசியலை வைத்துச் சொத்து சேர்க்கவில்லை; வாரிசுகளோடு வலம் வரவில்லை, மார்க்ஸுக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன உறவு? ஏங்கல்ஸுக்கும் விஜயகாந்துக்கும் என்ன தொடர்பு? சென்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதாவின் அவமதிப்புக்கு ஆளான நிலையில் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க, கோயம்பேடு நோக்கி நடந்தபோதே கம்யூனிஸ்ட்டுகளின் கம்பீரம் கலைந்துவிட்டது. இன்று, சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட்டுகள் விஜயகாந்த்தை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? மூலதனத்தில் முதல் பக்கத்தையாவது விஜயகாந்த் வாசித்திருப்பாரா? 'எச்ச மதிப்புக் கோட்பாடு’ (Theory Of Surplus Value) என்றால் என்னவென்று தோழர் களுக்கு அவர் பாடம் நடத்துவாரா? எங்கே போகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்?

மிக மலினமான ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அமையப்போவதற்கு அச்சாரம்தான் விஜயகாந்த் மீது கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு சாராருக்குக் கனிந்திருக்கும் காதல். முதல்வர் ஜெயலலிதா கணிசமான எம்.பி-க்களைக் கையில் வைத்துக்கொண்டு தேசிய அரசியலில் முக்கியமான பாத்திரம் வகிக்கும் வாய்ப்பை எந்த 'விலை’ கொடுத்தும், எவ்வளவு 'தியாகம்’ செய்தும் தடுப்பதற்குக் கலைஞர் முயன்று பார்ப்பார். தன் வலிமையைக் கூடுதலாகவும், பிறர் வலிமையை மிகக்குறைவாகவும் எடைபோடும் தன்மை ஜெயலலிதாவின் மிகப்பெரிய பலவீனம். அணி சேரும் கட்சிகளுக்கு அவர் கிள்ளிக் கொடுக்கும்போது, கலைஞர் அள்ளிக்கொடுக்க முன்வருவார். அவரளவில் இனி அரசியலில் இழப் பதற்கு ஒன்றும் இல்லை. 'எத்தனை இடங்கள் நம் பிச்சைப் பாத்திரத்தில் விழும்?’ என்பதுதானே இங்குள்ள கட்சிகளின் கவலை! அதை அறியாதவரா கலைஞர்?

காங்கிரஸுக்கு 10, விஜயகாந்துக்கு 10, இடதுசாரி களுக்கு 4, விடுதலைச் சிறுத்தைக்கு 1, கழகத்துக்கு 15 என்று, கலைஞர் தொகுதிகளைப் பங்கிட்டு மெகா கூட்டணி அமைக்க நிறைய வாய்ப்பு உண்டு. 'ஜெயலலிதாவுடன் சேர்ந்து கலைஞரை வீழ்த்திய வர்கள் எப்படி வாழ்த்துவார்கள்?’ என்ற கேள்விக்கே நம் விவஸ்தையற்ற அரசியலில் இடம் இல்லை. நேற்று, 'கருணாநிதியின் அதிகார அத்துமீறலை அழித்தொழிக்க’ ஜெயலலிதாவுடன் வியூகம் அமைத்த விஜயகாந்த், நாளை ஜெயலலிதாவின் ஆணவத்துக்குச் சாவுமணி அடிக்க முத்தமிழ்க் கலை ஞருடன் களம் இறங்குவார். காம்ரேடுகள் எப்படிக் கலைஞருடன் நட்புகொள்வார்கள்? அதற்கு ஜெய லலிதாவே வழி அமைத்துக் கொடுப்பார்.

மதவாத எதிர்ப்பு, தொழிலாளர் விரோதப் போக்கு என்ற என்றும் மாற்றமுறாத இரண்டு மந்திர கோஷங்கள் இருக்கும் வரை காம்ரேடுகள் அணி மாறுவதற்காக அதிகம் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. மோடியோடு சேர்ந்து பிரதமர் பதவியைப் பிடிக்கவேண்டும் என்ற 'சோ’வின் ஆசைக்கு ஜெயலலிதா பச்சைக் கொடி காட்டி விட்டால், சிவப்புச் சிந்தனையாளர்கள் கலைஞரை ஆதரிக்கவேண்டிய கட்டாய த்துக்கு தள்ளப்படுவார்கள். கொள்கையற்ற கூட்டணி (பதவியைப் பிடிக்கும் ஒரே லட்சியத்துடன்) என்னும் ராஜாஜி ஃபார்முலா மீண்டும் நடைமுறைக்கு வரும். அதற்கான ஒத்திகை மேடைதான் சங்கரன் கோவில் இடைத்தேர்தல்.

காங்கிரஸ், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., பார திய ஜனதா ஆகிய கட்சிகளின் முகங்களில் நீக்கமற ஊழல் கறை நிறைந்திருக்கிறது. ஊழலோடு வகுப்புவாத முத்திரையும் பா.ஜ.க. முகத்தில் பளிச்சிடுகிறது. இவற்றுக்கு மாற்றாக மக்கள்நலன் சார்ந்து மாற்று அரசியலை உருவாக்கும் கடமை கம்யூனிஸ்ட்டுகளுக்கு இல்லையா? நாடாளுமன்றத்துக்கு இருவரும், சட்டப்பேரவையில் 10 பேரும் இரு திராவிடக் கட்சிகளின் தயவில் இரு ப்பதே இவர்களுக்குப் போதுமானதா? இது போதும் என்றால், இவர்கள் மருத்துவர் ராமதாஸைவிட எந்த வகையில் வேறு பட்டவர்கள்? விஜயகாந்திடம் 10 சதவிகிதம் வாக்குகள் இருப்பதால், அவர் பின்னால் நிற்கப் புறப்பட்டவர்கள்... 30 சதவிகிதம் வாக்கு உள்ள ஜெயலலிதாவுக்கே 'ஜெயகோஷம்’ போடலாமே!

'நல்ல அரசியல்’ என்னும் நாற்றங்கால் இடுவதற்கு, சங்கரன்கோவில் சரியான வயல். வைகோவும் இடது சாரிகளும் இணைந்து களை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கலாம். இடதுசாரிகள் அரசியல் மாற்றத்துக்கு அணி சேர்க்கத் தயாராக இல்லை.

இடம் மாறி விழுந்துகிடந்தால், சிவப்பு ரோஜாவும் ஒரு களைதான்.