ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

பிட் அடித்த சசிகலா!

பிட் அடித்த சசிகலா!

பிட் அடித்த சசிகலா!

டந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து பதில் சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன(?) சசிகலா அடுத்த ரவுண்ட் ஆட்டத்துக்குத் தயாராகி விட்டார். புதன்கிழமை காலையில் சென்னையில் இருந்து இளவரசி மற்றும் இளவரசியின் மருமகன் ராஜராஜனோடு கிளம்பி பெங்களூரு வந்தார்.

 உளவுத்துறையை உளவு பார்த்த சசி!

##~##

சென்னையில் தொடங்கி கோர்ட் நடவடிக்கை வரையிலும் மாநில உளவுத்துறை சசிகலாவை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்பதை எழுதி இருந்தோம். இந்தமுறை, உளவுத்துறை அட்ரியா ஓட்டலிலும் புகுந்து, சசிகலாவுக்காகக் காத்துக்கிடந்தது. இதை அறிந்துகொண்டோ என்னவோ, அவர்களுக்குத் தண்ணி காட்டிவிட்டு, இந்த முறை கேபிடல் ஓட்டலில் இளவரசியுடன் தங்கினார் சசிகலா. ஆனால், அட் ரியா ஓட்டலிலும் அறை போடப்பட்டுள்ளது. அந்த அறையைக் காலி செய்யாமல், அங்கு தனக்கு வேண்டப்பட்டவர்களை தங்கவைத்தார் சசிகலா. அவர்களை விட்டு உளவுத் துறையின் ரியாக்ஷன்களைக் கேட்டு அறிந்துகொண்டாராம். கேபிடல் ஓட்டலில் தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே அனுமதிக்கச் சொல்லி இருக்கிறாராம். அதனால், வழக்கறிஞர்களைத் தவிர மற்றவர்கள் யாருமே உள்ளே நுழைய முடியவில்லை.

மீடியாவுக்குத் தடை?

வழக்கம் போல காலை 10.30 மணிக்கு கோர்ட்டுக்கு இளவரசியுடன் வந்த சசிகலா, இந்தமுறை சின்ன ஹேண்ட்-பேக்கும், கண்ணாடியும் அணிந்து வந்தார். மீடியாக்கள் படம் எடுக்கக் கூடாது என்பதற்காக, வக்கீல் செந்திலின் டிரைவர் குறுக்கே கைநீட்டி தடுத்து நின்றார். அதனால், புகைப்படக்காரர்கள் ஆத்திரப்பட்டு டென்ஷன் ஆக, கூலாக உள்ளே போய்விட்டார் சசிகலா. நீதிபதிக்கு முன்பாகவே வந்துவிட்டதால், குற்றவாளிக் கூண்டில் அமர்ந்து இளவரசியுடன் சகஜமாகப் பேசி சிரித்துக்கொண்டு இருந்தார். சசிகலா ரொம்பவே குஷியான மூடில் இருந்ததைப் பார்த்த, அவரது வழக்கறிஞர்களுக்கே ஆச்சர்யம்.

சசிகலாவிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக மீடியாக்கள் கோர்ட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே, சசிகலா தரப்பு வக்கீல் ஒருவர் நீதிமன்​றத்தை அணுகி, 'பத்திரிகைகாரர்களை சின்னம்மா பக்கத்தில் உட்கார வைக்காதீங்க. அவங்க கோர்ட்டில் நடப்பதை எல்லாமே எழுதிவிடுகிறார்கள். அம்மா (ஜெயலலிதா) வந்திருந்த சமயத்தில் மீடியாவை கோர்ட்டுக்குள்ளே  அனுமதிக்கவில்லை. அதனால் ஒரு நியூஸ் கூட வெளியே போகவில்லை. அவர்களுக்கும் பிரச்னை இல்லை. இப்போது சின்னம்மா இமேஜ் ரொம்பவும் டேமெஜ் ஆகியிருக்கு. அதனால் மீடியாக்​க‌ளை கொஞ்சம் தூரமா... இல்லாட்டி பின்னாடியாவது உட்கார வைங்க’ என்று கெஞ்சும் தொனியில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பிட் அடித்த சசிகலா!

அதற்கு, 'இது நீதிமன்றம். உங்க இஷ்டத்துக்கு எல்லாம் எதுவும் பண்ண முடியாது’ என்று பதில் வந்ததாம்.

நீதிபதியின் சுறுசுறுப்பு

கடந்த வாரம் சசிகலா வேண்டும் என்றே நீட்டிமுழக்கி பதில் அளிக்கும் விதம் பிடிக்காமல் எழுந்துபோன அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா, புதன் அன்றும் கோர்ட்டுக்கு வரவில்லை. அவருக்குப் பதிலாக சந்தேஷ் சவுட்டா வந்திருந்தார். கடந்த முறை வெள்ளை குர்தா, பைஜாமாவில் வந்திருந்த சுதாகரன், இந்த முறை பச்சை நிற பைஜாமா அணிந்து வந்திருந்தார். இவரும் வழக்கம் போல கோர்ட் ஆரம்பித்த பிறகும் இளவரசியுடன் பேசிக் கொண்டே பொழுதைப் போக்கினார்.

இதுவரையிலான நான்கு நாட்களில் 172 கேள்விகளே முடிந்து இருந்தது. அதனால் இந்த முறை அதிகமான கேள்விகளுக்கு விடைகளை வாங்கிவிட வேண்டும் என்று நீதிபதி அவசர அவசரமாகக் கேள்வி கேட்டதை உணர முடிந்தது.  நீதிபதி கடகடவென கேள்விகளை வாசிக்க வாசிக்க, மொழிபெயர்ப்பாளர் ஹரீஸும் வேகமாக தமிழில் மொழிபெயர்த்து சசிகலாவிடம் கூறினார்.

ஆனால், சசிகலா கொஞ்சமும் அசர​வில்லை. வழக்கம் போலவே நிறுத்தி நிதானமாக கேள்விகளை எழுதிய பிறகு, ஆழ்ந்து யோசித்து பதில் அளித்தார். அவர் செய்யும் தாமதம் போதாது என்று சசிகலாவின் வக்கீல் மணிசங்கரும், வக்கீல் செந்திலும் அடிக்கடி குறுக்கீடு செய்தனர். இதைக் கவனித்த  நீதிபதி, '313 பிரிவின் படி கோர்ட்டும், குற்றவாளியும்தான் பேச வேண்டும். நீங்கள் இப்படி அடிக்கடி குறுக்கிட்டு கோர்ட்டின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என்று  கூறினார்.

நீதிபதி சொன்னதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத சசிகலா, கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் அவ்வப்போது, 'பத்திர எண், செக் எண் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும்’ என்று சொல்லி,  ஃபைல்களைப் பார்த்து விட்டுத்தான் பதில் அளித்தார். இதனால், நீதிபதி மல்லிகார்ஜூனையா தலை மேல் கை வைத்துக் கொண்டு உச்சபட்ச டென்ஷனில் காணப்பட்டார். நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் களைத்துப் போயிருந்த  சசிகலாவுக்கு, அடையார் ஆனந்தபவன் தயிர்சாதம் மதிய உணவாக வந்தது.

காட்டிக் கொடுக்காத சசி!

மதிய இடைவேளை முடிந்து கோர்ட்டுக்கு வந்த சசிகலாவுடன் வழக்கமாக வலம் வரும் உதவியாளர் தண்டபாணியும், செந்திலும் வரவில்லை. காரணம் விசாரித்தபோது, 'ஜூ.வி-யில் அவரைப்பற்றி வெளியான செய்தியால் அப்செட்’ என்றார்கள், அவர்களுக்கு நெருக்கமான வழக்கறிஞர்கள். காலை முதல் கோர்ட்டில் மந்தமாகவே கேள்வி - பதில் ஓடிக்கொண்டு இருந்ததால், வக்கீல்கள் கோர்ட்டில் அமர்ந்துகொண்டே வேறு சில வழக்கு சம்பந்தமான பேப்பர்களைப் படிக்கத் தொடங்கினார்கள். உளவுத் துறை ஆட்களும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் கடமை உணர்வுடன் 'ஷிப்ட்’ முறையில் நோட்ஸ் எடுத்துக் கொண்டு இருந்த‌னர். மீடியாக்களில் வரும் செய்திகளால் டென்ஷன் ஆன சசிகலா பென்சிலை வாயில் வைத்து கடித்தபடி அவ்வப்போது, அனைவரையும் விரோதமாக பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை ஜெயலலிதா பற்றி, கேள்விகள் வரும் போதும் மிகவும் தெளிவாக அவர் பெயரைக் குறிப்பிடாமல் பதில் அளித்தார்.

'ராமசாமி உடையார், ஜெயலலிதா வீட்டுக்கு அடிக்கடிச் சென்று அவரை சந்தித்துப் பேசியது பற்றி தெரியுமா?’ என்று, நீதிபதி கேள்வி கேட்டதும், ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமாரின் முகத்தைப் பார்த்து கண்ஜாடை காட்டிவிட்டு, 'தெரியாது’ என்று சத்தமாக பதில் அளித்தார். அடுத்து, 'கொடநாடு தேயிலைத் தோட்டத்தை ஜெயலலிதாவும், நீங்களும் சென்று பார்த்தீர்களா?’ என்று கேட்டார். அந்தக் கேள்விக்கும் தன்னுடைய வக்கீல் மணிசங்கரிடம் ஏதோ சைகை செய்து உறுதி பெற்ற பிறகே, 'இல்லை. நாங்கள் பார்க்கவில்லை’ என்று பதில் அளித்தார். ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா குறித்த கேள்விக்கு சசிகலா பதில் அளிக்கும் போதும், உளவுத் துறையினரை உற்றுப் பார்த்தபடியே பதில் அளித்தார். அவர்களும் சசிகலாவின் முகபாவனைகள், சைகைகள் உட்பட அனைத்தையும் குறித்துக் கொண்டனர்.

காப்பி அடித்து மாட்டிக் கொண்ட சசி!

பல்வேறு இடங்களில் வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் வீடுகள் மற்றும் அவற்றின் மதிப்புகளைப் பற்றிய கேள்விகளை நீதிபதி கேட்டு கொண்டு இருந்தார். சென்னை அண்ணாநகர், கிழக்கு கடற்கரைச் சாலையில் பண்ணை வீடு வாங்கியது குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கையில், 'ஜெயலலிதாவின் அரசியல் எதிரி கருணாநிதி. எனவே அவருடைய ஏவுதலின்படியே, ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது’ என்று சசிகலா சொன்னதும் ஆக்ரோஷமாக எழுந்த அரசு தரப்பு வக்கீல் சந்தேஷ் சவுட்டா, 'கேள்விக்குச் சம்பந்தமே இல்லாத பதிலைச்  சொல்கிறார்’ என்று கோபமானார்.

உடனே, 'எப்போது கருணாநிதி பேரைச் சொன்னாலும் இவருக்குக் கோபம் வருகிறது. குறுக்கிடுகிறார்’ என்று தன் பங்குக்கு சசிகலாவும் கோபத்துடனே பதில் கூறினார். இதனால் மேலும் ஆவேசமான சவுட்டா, ''313-ன் படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் மொழி பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்து இருக்கிறோம். கேள்விகளைக் குறிப்பெடுக்க வசதியாக பேனா, பென்சில், பேப்பர், ஃபைல், டேபிள் என்று அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால் சசிகலா பதில் சொல்லும் போதெல்லாம் கேள்வியைக் குறிப்பு எடுப்பதாகக் கூறி, ஏற்கெனவே எழுதி எடுத்து வந்துள்ள ரெடிமேட் பதிலைப் பார்த்து காப்பி அடித்துச் சொல்கிறார். இடையிடையே அவருடைய வக்கீல் டீமும் உதவி செய்கிறர்கள். இப்படிச் செய்வதைவிட எழுத்துப் பூர்வமாகவே பதிலைக் கொடுத்து விடலாமே’ என்று மீண்டும் சீறினார்.

பிட் அடித்த சசிகலா!

ஆச்சார்யாதான் அதிரடி கொடுப்பார் என்றால் அவரது சிஷ்யரும் பல மடங்கு சீறுவதைக் கண்ட சசிகலா தரப்பு வக்கீல்கள் அதிர்ந்து போனார்கள். சசிகலாவும் டென்ஷன் ஆனார். உடனே, ஜெய​லலிதாவின் வக்கீல் பி.குமார், சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், இளவரசியின் வக்கீல் அசோகன் ஆகியோர் கூட்டாக எழுந்து 'சசிகலா பார்த்துப் படிக்கவில்லை.அரசுத் தரப்பு வேண்டும் என்றே குற்றம் சாட்டி, எங்களது உரிமையில் தலை​யிடுகின்றனர்’ என்று ஆட்சேபம் தெரிவித்தனர். அதற்கு சந்தேஷ் சவுட்டா, 'சசிகலாவின் நோட்பேடை வாங்கிப் பாருங்கள்’ என்று நீதிபதியிடம் கூறினார். முதலில், நோட்பேடைத் தரத் தயங்கிய சசிகலா, அதை கோபத்தோடு கோர்ட் எழுத்தர் பிச்சமுத்துவிடம் நீட்டினார். நோட்பேடைப் பார்த்த நீதிபதி, அதில் தமிழில் எழுதி இருந்தவற்றை கிளார்க் பிச்சமுத்துவின் மூலமாகத் தெரிந்து கொண்டார்.

கோபம் அடைந்த நீதிபதி, 'நோட்பேடு, ஃபைல், குறிப்புகள் எதுவும் இல்லாமல்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று தன் பங்குக்கு டென்ஷன் ஆனார். உடனே கோபமடைந்த சசிகலா சேரைவிட்டு வேகமாக எழுந்து, 'இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து 20 வருடங்கள் ஆகுது. எல்லாவற்றையும் எப்படி ஞாபகம் வச்சிக்க முடியும். சில குறிப்புகளைத்தான் எழுதி வச்சிருந்தேன்’ என்று ஆக்ரோஷமாகவே பதில் சொன்னார். இந்தப் பதிலால் மேலும் டென்ஷன் ஆன நீதிபதி, 'குற்றவாளிக் கூண்டில் இருக்கும் நீங்கள் எதுவும் நேரடியாக கூறமுடியாது. உங்கள் வக்கீல் மூலம்தான் பேச வேண்டும்’ என்று சொல்லவும் கோபத்தின் உச்சிக்கே சென்ற சசிகலா, 'நீங்கள் செய்வது சரியல்ல’ என்று நீதிபதியையும், அரசு வக்கீலையும் பார்த்துக் கூறிவிட்டு காலையில் இருந்து போடாமல் இருந்த கறுப்புக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டார். கோர்ட்டில் நிலவிய கோபக் காட்சிகளைப் பார்த்த மீடியாக்கள் அசந்தே போய்விட்டார்கள்.

வெளியே வந்த சசிகலா தரப்பினர், 'அரசு வக்கீலும், நீதிபதி மல்லிகார்ஜூனையாவும் கருணாநிதியின் ஆட்கள். அவங்க நடந்துக்கிற விதமே அவங்க யாருக்கு வேண்டப்பட்ட ஆளுன்னு தெரியுதே...’ என்று மீண்டும் மீண்டும் மீடியாக்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தனர்!

ஸ்பெஷல் கிளாஸ்

கோர்ட்டில் காப்பி அடித்து மாட்டிக்கொண்டதால், கேபிடல் ஓட்டலில் நுழைந்த பிறகும் ரொம்பவும் டென்ஷனாகவே இருந்தாராம் சசிகலா. அடுத்த நாள் நோட்பேட் பார்த்து படிக்கமுடியாது என்பதால், புதன்கிழமை இரவு 11 மணி வரை வழக்கறிஞர்கள் பி.குமாரும், மணிசங்கரும் ஸ்பெஷல் கிளாஸ் எடுத்திருக்கிறார்கள். 'சசிகலாவுக்கே இந்த நிலைமை என்றால் நமக்கெல்லாம் என்ன ஆகுமோ?’ என்று சுதாகரனும் இளவரசியும் மிரண்டு போனார்களாம்.

கறுப்புக் கண்ணாடி சசிகலா!

வியாழன் காலை கோர்ட்டுக்கு வந்தபோது பதற்றத்தோடும், டென்ஷனாகவும் காணப்பட்டார் சசிகலா. இன்றைக்கும் கோர்ட்டில் பல அதிரடிக் காட்சிகள் அரங்கேறும் என எதிர்பார்த்து, மீடியாக்கள் கோர்ட்டில் மொய்த்தன. சில உள்ளூர் அ.தி.மு.க. புள்ளிகளும் உள்ளே அமர்ந்து, நடப்பதை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தனர். கோர்ட்டுக்குள் நுழைந்த உடன் சுதாகரன் தன்னுடைய கண்ணாடியைக் கழற்றி விட்டார். சசிகலாவோ, கறுப்புக் கண்ணாடியைக் கேட்டு வாங்கி போட்டுக்கொண்டார்.

'சின்னம்மாவுக்கு பெங்களூர் வெயில் ஒத்துக் கொள்ளவில்லை. கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். அத னால்​தான் கண்ணாடி’ என்று விளக்கம் கொடுத்தனர் சசி தரப்பினர். ஆனால் மீடியாக்களோ, அவர் குறித்து வைத்திருப்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துப் படிப்பதற்காகத்தான் கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார்’ என்று விளக்கம் கொடுத்தனர்.

பிட் அடித்த சசிகலா!

சசிகலா திடீரென் கறுப்புக் கண்ணாடியுடன் இருப் பதை அரசு வக்கீல் சந்தேஷ் சவுட்டாவும், நீதிபதியும் உற்றுப் பார்த்தபடியே இருந்தனர். சசி தரப்பு வக்கீல் மணிசங்கர் எழுந்து, 'தமிழில் வாக்குமூலம் பதிய வேண்டும் என்று கோரி இருந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. எனவே, நாங்கள் நாளை அந்த வழக்கைப் பார்க்க டெல்லிக்குப் போக வேண்டி இருக்கிறது. விசாரணையை மதியத்துடன் ஒத்தி வைக்க வேண்டும்’ என்று ஒரு மனுவைப் போட்டார். அதற்கு அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், மனுவை நீதிபதி மல்லிகார்ஜூனையா தள்ளுபடி செய்தார். இதனால், சசிகலா தரப்பு வக்கீல் அனைவரும் ஒரே நேரத்தில் கோர்ட்டில் இருந்து வெளியேறி, கார்டனுக்கு விஷயத்தைத் தெரிவிக்க முண்டியடித்தனர். சசிகலாவிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார் நீதிபதி. ஆச்சர்யமாக பல கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் அளித்தார். இரண்டாவது நாள் முழுவதும், மயிலாப்பூரில் வாங்கப்பட்ட பங்களா, சோழிங்கநல்லூர் வீடு, ஈஞ்சம்பாக்கம் பங்களா, ஸ்ரீராமநகரில் வாங்கப்பட்ட வீடு, கொடநாடு நிலம் குறித்த கேள்விகளும், அவை குறித்த மதிப்புகளும்தான் கேட்கப்பட்டன. பல கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் சசிகலாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. அப்போதெல்லாம் கண்ணாடியைத் தூக்கி விட்டு, டிஷ்யூ பேப்பரில் துடைத்தபடியே அமைதியாகப் பதில் அளித்தார்.

சில கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், வக்கீல் மணிசங்கரிடம் புருவ மொழியில் பேசிவிட்டு பதில் அளித்தார். சசிகலா கறுப்பு கண்ணாடியுடன் இருந்ததால், மீடியாக்களை நிதானமாகவே பார்த்து ஸ்கேன் செய்து கொண்டார். கோர்ட் முடிந்து வெளியே வந்த கறுப்புக் கண்ணாடி சசிகலாவைப் படமெடுக்க புகைப்படக்காரர்கள் போட்டி போட, வக்கீல்களும், டிரைவர்களும் தடுக்க பெரும்பாடு பட்டனர். வழக்கமாக கோர்ட் முடிந்ததும் ஒன்றாக வெளியே வந்து, தனித்தனி காரில் பிரிந்து செல்லும் சசிகலா, சுதாகரன் இந்த முறை அப்படிச் செய்யவில்லை. சசிகலா வெளியேறிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே சுதாகரன் கீழே இறங்கி வந்தார்.

வியாழன் வரை 284 கேள்விகள் மட்டுமே முடிந்துள்ளன. அதனால், இன்னமும் போகவேண்டிய தூரம் ரொம்ப இருக்கிறது.

- இரா.வினோத்.

அட்டைப் படம்: 2009 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டது.

படம்: சு.குமரேசன்