Published:Updated:

கட்சி மீட்டிங் `நோ’: 17 பேர்... இரு குட்டி விமானங்கள்... ஸ்டாலின் குடும்பத்தின் கோடை ட்ரிப்!

ஸ்டாலின், துர்கா
ஸ்டாலின், துர்கா

சென்னையில் வெயில் கொளுத்தி வருவதாலும், அரசியல் நிகழ்வுகள் இல்லாததாலும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்குப் பயணமாகிவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்டாலின் பயணம் குறித்து தி.மு.க-வினரிடம் பேசியபோது, ``நல்லபடியாக வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. கருத்துக்கணிப்புகளும், கள நிலவரமும் தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கின்றன. தி.மு.க-தான் ஆட்சிக்கு வரவிருக்கிறது என்பதால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஸ்டாலினையும், மருமகன் சபரீசனையும், மகன் உதயநிதியையும் ரீச் பண்ணுவதற்கு முயன்றுவருகிறார்கள். போட்டியிட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும், புதியவர்களும், சீனியர்களும் அடுத்து அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம்பிடிக்க முட்டி மோதுகிறார்கள். அதிலும் சிலர் ஸ்டாலினின் செனடாப் சாலை இல்லத்தில் உட்கார்ந்துகொண்டே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஸ்டாலின் அதிருப்தியடைந்திருக்கிறார். எனினும், கட்சியினரிடம் அதைக் காட்டக் கூடாது என்பதால் அமைதியாக இருந்தவாறு, திடீரென கோடை ட்ரிப் செல்ல பிளான் போட்டார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும், மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஸ்டாலின் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். கொடைக்கானலில் தங்குவது, சுற்றிப் பார்ப்பது என எல்லாவற்றையும் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியும், அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாரும் மேற்கொண்டிருக்கிறார்கள்” என்றவர்களிடம் `யார் யார் சென்றிருக்கிறார்கள்?’ என்று கேட்டோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
Premkumar SK

தொடர்ந்து பேசியவர்கள், ``ஸ்டாலின் வெளியூர் எங்கு சென்றாலும் ஸ்பெஷல் சார்டடு ஃபிளைட் எனப்படும் குட்டி விமானத்தில்தான் பயணம் செய்வார். திருமேணி எர்த் மூவர்ஸ் பிரபாகருடைய குட்டி விமானத்தில் பறப்பதுதான் வாடிக்கை. அதன்படி, இந்தமுறை இரு விமானங்களில் பறந்திருக்கிறார்கள். ஸ்டாலின், துர்கா, உதயநிதி, கிருத்திகா உதயநிதி, சபரீசன், செந்தாமரை, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் இவர்கள் அனைவருடைய பிள்ளைகள் என மொத்தம் 17 பேர் செல்ல வேண்டியிருந்ததால் இரு குட்டி விமானத்தில் சென்றிருக்கிறார்கள். சென்னையிலிருந்து மதுரை சென்று இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்குச் செல்கிறார்கள். இன்று 16-ம் தேதி செல்லும் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், 19-ம் தேதி வரை அங்கு தங்குகிறார்கள். வரும் 19-ம் தேதி மீண்டும் சென்னை கிளம்புகிறார்கள். குடும்பத்துடன் ஓய்வெடுக்க வந்திருக்கும் தன்னை எக்காரணம் கொண்டும் கட்சி நிர்வாகிகள் கொடைக்கானலில் சந்திப்பது கூடாது எனக் கட்சியினருக்கு ரகசிய உத்தரவும் போடப்பட்டிருக்கிறது” என்பதோடு முடித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு