Published:Updated:

ராகுல் ஃபெயில்... அகிலேஷ் மெடல்!

மாயாவதியை வீழ்த்திய முலாயம் புயல்

ராகுல் ஃபெயில்... அகிலேஷ் மெடல்!

மாயாவதியை வீழ்த்திய முலாயம் புயல்

Published:Updated:
##~##

யானைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி. ஆனால், அரசியலில் யானையை சைக்கிள் ஒன்று உருட்டித் தள்ளி இருக்கிறது. உத்தரப் பிரதேசத்​தில் ஆளும் கட்சியாக, அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த மாயா​வதியை (இவரது கட்சிச் சின்னம் யானை!) ஊதித் தள்ளிவிட்டு, முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்து​ விட்டார், முலாயம் சிங் யாதவ் (இவரது சின்னம் சைக்கிள்!) . 

உ.பி-யில் ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு 224 தொகுதிகளும் மாயாவதிக்கு 80 தொகுதிகளும் கிடைத்து உள்ளன. 47 தொகுதிகளில் ஜெயித்து மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கும் பி.ஜே.பி., கடந்த தேர்தலைவிட நான்கு தொகுதிகளை இழந்துள்ளது. காங்கிரஸ் ஆறு ஸீட் அதிகமாகப் பெற்றும், 28 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி, தொடர்ந்து நான்காவது இடத்திலேயே உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகுல் ஃபெயில்... அகிலேஷ் மெடல்!

இந்தத் தோல்வி குறித்துப் பேசும் மாயாவதி, 'காங்கிரஸும், பி.ஜே.பி-யும் செய்த மதவாத அரசியல் காரணமாக, பெரும்பாலான முஸ்லீம் வாக்குகள் சமாஜ்வாடியின் பக்கம் திரும்பிவிட்டன. தலித் வாக்குகள் மட்டுமே எங்கள் கட்சிக்கு முழுமையாகக் கிடைத்தது. அதனால்தான் 80 தொகுதிகளில் வென்று இருக்கிறோம். இந்த ஓட்டும் கிடைக்கவில்லை என்றால், பீகாரில் லாலுவுக்கு வந்த நிலைமை எனக்கும் வந்திருக்கும்’ என்று திருப்திப்பட்டுக் கொள்கிறார்.

ராகுல் ஃபெயில்... அகிலேஷ் மெடல்!

இவரைத் தோற்கடித்த 73 வயது முலாயம் சிங்குக்கு கிடைத்திருக்கும் மெஜாரிட்டி, 1977-க்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் கிடைக்காதது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சாதி, மத பேதம் இன்றி மாயாவதி மீது மக்கள் காட்டிய வெறுப்புதான் முலாயம் சிங்குக்கு வாக்குகளை அள்ளிக் குவித்து இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பின்னணியில் இருப்பவராக சுட்டிக்காட்டப்படுபவர், முலாயம் சிங்கின் 39 வயது மகன் அகிலேஷ் சிங் யாதவ்.

''ஒரு வருடத்துக்கு முன்பே தேர்தல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய அகிலேஷ், சுமார் 10,000 கி.மீ. பயணம் செய்து 400 கிராமங்கள் உட்பட உ.பி-யின் அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்தார். மிகவும் கவனத்துடன் தேர்தல் அறிக்கை தயாரித்ததைப் போலவே, வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் அதிக அக்கறை காட்டினார். சமாஜ்வாடி கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில், 40 வயதுக்குக் குறைவாக உள்ள 162 பேருக்கு ஸீட் கொடுத்தார். மகளிர் மசோதாவுக்கு எதிரானது சமாஜ்வாடி கட்சி என்ற கருத்தை உடைக்கும் வகையில், 40 பெண்களுக்கு ஸீட் கொடுத்தார் அகிலேஷ்'' என்று  புகழ் மாலை சூட்டுகிறார் சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்தர் சௌத்திரி. முலாயம் சிங் பதவி ஏற்றுக்கொண்டாலும், திரை மறைவு முதல்வராக அகிலேஷ்தான் இருப்பார் என்று கட்சியினர் உறுதியுடன் நம்புகிறார்கள்.

அகிலேஷ் கோல்டு மெடல் வாங்கிவிட, கடைசி மாணவராக வந்து ஃபெயில் ஆகிவிட்டார் ராகுல். 48 மாவட்டங்களில் 211 பிரசாரக் கூட்டங்கள் நடத்தியும், பயன் இல்லை. பேரிடியாக, இந்திரா குடும்பத்துக் கோட்டையாக கருதப்படும் ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து, காங்கிரஸுக்கு ஒரு சட்டமன்றத் தொகுதிகூட கிடைக்கவில்லை. அமேதியிலும் இரண்டு மட்டுமே கிடைத்தது. ராகுலுக்கு ஆதரவாகத் தீவிரமாகப் பிரசாரம் செய்த பிரியங்காவும் இப்போது அப்செட்.

இந்தத் தோல்வி குறித்து காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கிடம் கேட்டபோது, ''அகிலேஷ§டன் ராகுலை ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல. காரணம், அகி​லேஷை உ.பி-க்கு வெளியே யாருக்கும் தெரியாது. ஆனால், ராகுல் ஒரு தேசியத் தலைவர். இந்தத் தேர்தலில் ராகுல் உ.பி-யின் முதல் அமைச்சராக முன்னிறுத்தப் படவில்லை. அவர் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்தார். ராகுல் போன்ற சிறந்த தலைவர்கள் பிர சாரம் செய்தும் வாக்குகள் கிடைக்காதது ஆய்வுக்கு உரியது. இந்தத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்'' என்றார். சோனியாவும் வேட்பாளர் தேர்வுதான் தவறு என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்.

மத்தியில் பிரதான எதிர்க் கட்சியான பி.ஜே.பி-க்கும் இந்தத் தேர்தல் முடிவு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, உ.பி. மாநில பி.ஜே.பி. தலைவர் சூர்ய பிரதாப் ஷாஹி மற்றும் சட்டசபையின் கட்சித் தலைவரான ஓம்பிரகாஷ் சிங் ஆகியோர் படு​தோல்வி அடைந்துள்ளனர். முதல் அமைச்சர் வேட்பாளர்களாகக் கருதப்பட்ட கல்ராஜ் மிஸ்ரா மற்றும் உமாபாரதி ஆகியோர் வெற்றி அடைந்து இருந்தாலும், கடந்த ஐந்து தேர்தல்களிலும் தக்க வைத்திருந்த அயோத்தி தொகுதியை பி.ஜே.பி. இழந்ததுதான் அதிர்ச்சி.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி-யின் அடித்தளமே ஆட்டம் கண்டுவிட்டதால், வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணிக்குப் பிரகாசமான வாய்ப்பு இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள்.

- ஆர்.ஷஃபி முன்னா

படங்கள்: பவண்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism