Published:Updated:

இந்தியாவின் பணிகள் இதனால் தடைபடும்!

காரணம் சொல்லும் காங்கிரஸ் மழுப்பல் கிருஷ்ணா...

இந்தியாவின் பணிகள் இதனால் தடைபடும்!

காரணம் சொல்லும் காங்கிரஸ் மழுப்பல் கிருஷ்ணா...

Published:Updated:
##~##

லங்கையில் நடந்த ரத்த வெறியாட்டங்களையும் போர்க்குற்றங்களையும் வெளிச்சம் போட்டு காட்டி, சிங்கள இனவெறிக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழகமே ஒரேகுரலில் வரவேற்று இருக்கிறது. வரலாற்று அதிசயமாக, இலங்கைக்கு எதிராக தமிழகம் ஒன்று சேர்ந்திருக்க... தீர்மானத்தை ஆதரிப்பது பற்றி கருத்துச் சொல்லாமல் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது இந்திய அரசு. இதனால், நாடாளுமன்றத்தில் ஒருசேர போர்க் கொடி தூக்கி, பட்ஜெட் கூட்டத் தொடரையே பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் தமிழக எம்.பி.க்கள். 

ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது நடைமுறை. அந்த வைபவம் கடந்த 12-ம் தேதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவின் பணிகள் இதனால் தடைபடும்!

அரங்கேறியது. ஜூலை மாதத்தோடு பதவி முடிவதால் பிரதீபா பாட்டீல் தனது பணிக்காலத்தில் ஆற்றும்  கடைசி உரை இது.  ஆனால், அதைகூட அவரால் அமைதியாக நிகழ்த்த முடியாத அளவுக்கு போய்விட்டது. காரணம், தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய எதிர்ப்பலைகள்!

பிரதீபா பாட்டீல் பேச ஆரம்பித் ததுமே, 'இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்’ என கோஷம் போட்டு அவரது உரைக்கு தடங்கல் ஏற்படுத்தினார்கள். முதலில், தி.மு.க. எம்.பி-க்கள்தான் எழுந்து கோஷம் போட்டார்கள். பிரதீபா பாட்டிலை ஜனாதிபதியாகக் கொண்டு வந்ததில் தி.மு.க-வுக்கு முக்கியப் பங்கு உண்டு. அவர்களே, பிரதீபா பாட்டீலுக்கு எதிராக கோஷம் போட்டது அரசியல் ஆச்சரியம். இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி ஜனாதிபதி உரை யில் எதுவும் குறிப்பிடப்படாமல் போனதால், இன்னும் கொதிநிலையை அடைந்தனர் எம்.பி-க்கள்.

அடுத்த நாளும், நாடாளுமன்றத்தில் டென்ஷன் கூடியது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தும் பேனர்களுடன் லோக்சபாவின் மையப் பகுதிக்கு வந்து குரல் கொடுத்தனர் தமிழக எம்.பி-க்கள். ராஜ்யசபாவில் அதைவிட உஷ்ணம். 'இந்தியாவின் நிலை பற்றி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கோஷமிட்டனர். வேறு வழியில்லாமல் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், சி.பி.ஐ. எம்.பி. டி.ராஜா, காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் ஆகியோர் பேச அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் எதிர்ப்புக் குரல்கள் மட்டும் ஓயவில்லை. இதனால், மூன்று முறை அவையை ஒத்தி வைத்தும் அன்றைய தினம் ராஜ்யசபாவை நடத்த முடியாத நிலை உருவானது.  

இந்தியாவின் பணிகள் இதனால் தடைபடும்!

மூன்றாவது நாள், வெளி யுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்தார். 'தீர்மானம் பரிசீலனைக்கு இறுதி செய்யப் பட்ட பிறகுதான் இந்தியாவின் நிலையை முடிவு செய்வோம். நாம் எடுக்கிற எந்த ஒரு முடிவும் இலங்கையுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவில் விளைவுகளை ஏற்படுத்தும்’ என்ற, கிருஷ்ணாவின் அறிக்கை, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது. இந்த அறிக்கையை கிழித்து வீசி எறிந்து வெளிநடப்பு செய்தார்கள் தமிழக எம்.பி-க்கள். கிருஷ்ணாவின் அறிக்கைக்குப் பிறகு நடந்த விவாதத்தில் திருச்சி சிவா, டி.ராஜா, கனிமொழி, ஞானதேசிகன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் பேசினர். இறுதியில், விவாதத்துக்கு எஸ்.எம். கிருஷ்ணா பதில் அளித்தபோது, ''ஐ.நா. கவுன்சிலில் விவாதம் ஓட்டெடுப்புக்கு வர இன்னும் 10 நாட்கள் இருக்கின்றன. அதற்குள் எவ்வளவோ விஷயங்கள் நடக்கும். நாங்கள் ஆராய்வோம்'' என்று மழுப்பினார்.

தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக் கலாம் என்கிற முடிவில் இந்தியா இருப்பதாகவும் டெல்லியில் தகவல் பரவிக்கிடக்கிறது. சிரியாவுக்கு எதிராக இப்படித் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்த போது, இந்தியா புறக்கணித்ததாம். ஆனால், இந்த முடிவைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற மன நிலையில்தான் தமிழகக் கட்சிகள் இருக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து தமிழக எம்.பி-களின் கருத்துகள் என்ன..?

இந்தியாவின் பணிகள் இதனால் தடைபடும்!

மைத்ரேயன் (அ.தி.மு.க.): ''இலங்கையில் நடந்த படுகொலைகளையும் போர்க்குற்றங்களையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் அம்மா தீர்மானம் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார். ஐ.நா-வில் இந்தத் தீர்மானத்தை நியாயப்படி இந்திய அரசுதான் கொண்டு வந்திருக்க வேண்டும். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையாவது இந்தியா ஆதரிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதுபற்றி எந்த கருத் தையும் மத்திய அரசு தெரிவிக்காமல் இருக்கிறது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. கடு மையாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தத் தீர்மானம் தொடர்பாக அம்மா இரண்டு முறை பிரதமருக்குக் கடிதம் எழுதிய பிறகு, பிரதமர் அளித்த பதிலும் திருப்தியாக இல்லை. எஸ்.எம்.கிருஷ்ணாவின் அறிக்கையும் மத்திய அரசின் தெளிவற்ற போக்கையே காட்டுகிறது. தமிழக மக் களின் ஒட்டுமொத்த எண் ணத்தையும் உணர்வையும் மதிக்காமல் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்வதை நிச்சயம் அனு மதிக்க மாட்டோம்.''

சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்): ''தீர்மானம் முறைப் படி அனுமதிக்கப்பட்டு நாள் குறிக்கப்பட்ட பிறகுதான், அதில் உரிய முடிவை எடுக்க முடியும். தீர்மானம் வருவதற்கு முன்பே முடிவைச் சொல்ல வேண்டும் என்று நிர்பந்திப்பது, பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு சமம். 'இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி, அந்த நாட்டு அரசு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும். வாழ்வாதாரங்களை உறுதி செய்ய வேண்டும்’ என சொல்லி இதே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2009 மே 27-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தை இப்போது ஏனோ மறந்து விட்டார்கள். போருக்குப் பிறகு அங்கே வாழும் தமிழர்களுக்காக இந்தியா வீடுகளைக் கட்டி வருவதோடு, அவர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா முடிவு எடுக்க நேரிட்டால், அங்கே நடக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.''

திருச்சி சிவா (தி.மு.க.): ''தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது தவிர வேறு எந்த யோசனையும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஈழத் தமிழர்களுடனான உறவு தொப்புள்கொடி உறவு. அவர்கள் இந்தியாவுக்கு அரணாக இருப்பவர்கள். அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அது நமது பாதுகாப்பை கேள்வி குறியாக்கி விடும். தென்னாப்பிரிக்கா இனப்பிரச்னை யில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை இந்தியா எடுத்தது. அதேபோல், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்தியா எடுத்த நிலைப்பாடும் எல்லோருக்குமே தெரியும். அந்த வகையில் இந்தத் தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்க வேண்டும். தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதால் இலங்கையின் உறவு ஒன்றும் கெட்டுப் போய்விடாது. அங்கே நடக்கும் இந்திய அரசின் நிவாரணப் பணிகள் இந்தத் தீர்மானத்தால் பாதிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.''

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): ''அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், தமிழர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சொல் லும் தீர்மானமாக அது இல்லை. ரொம்பவும் நீர்த்துப் போன இந்த தீர்மானத்தைக்கூட இந்தியா ஆதரிக்கத் தயங்குகிறது. இப்போதும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப் பட்டு, ராணுவ அட்டூ ழியங்கள் தொடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றால், இலங்கையின் மீது உலக நாடுகளின் தலையீடு இருக்கும். அது தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளின் மீது பார்வையைப் பதிக்கலாம். சீனாவைச் சேர்ந்த தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்து, சீன அரசுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தானில் தலையிட்டு பங்களாதேஷ் என்ற நாட்டை இந்தியா உருவாக்கிக் கொடுத்தது. இப்படி யெல்லாம் இன்னொரு நாட்டில் தலையிட்டு முடிவு எடுத்த இந்தியா, இலங்கை விவகாரத்தில் மட்டும் 'இன்னொரு நாட்டுக்கு எதிராக முடிவு எடுக்க மாட் டோம்’ என்று சொல்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்.''  ... இந்திய நாடாளுமன்றம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று பார்ப்போம்!

- எம்.பரக்கத் அலி

கூட்டணியில் இருந்து வெளியேறுமா தி.மு.க.?

இந்தத் விவகாரத்துக்கு இடையே இன்னொரு 'அரசியல்’ ஓடிக்கொண்டிருந்தது. தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி கூட்டணியில் இருக்கும் தி.மு.க. ஆக்ரோஷம் காட்டி வருகிறது. எதிரான முடிவை காங்கிரஸ் எடுத்தால், அமைச்சரவையில் இருந்து விலகி வெளியில் இருந்து மட்டும் ஆதரவு என்கிற முடிவை எடுக்க நினைக்கிறதாம் தி.மு.க! அதற்கு ஆழம் பார்க்கும் வகையில்தான், 'ஈழத்தமிழர்களுக்கு எதிரான விரோதப் போக்கு கடைப்பிடித்து வரும் காங்கிரஸுடன் இருக்கும் கூட்டணி உறவை தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என, அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் தி.க.தலைவர் கி.வீரமணி. ஏற்கெனவே, இலங்கை விவகாரத்தில் சரிந்து நிற்கும் தனது இமேஜை தூக்கி நிறுத்த தி.மு.க-வும் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவு வாபஸ் தொடர்பான கேள்விக்கு, 'செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுப்போம்’ என்று, கருணாநிதி பேட்டி கொடுத்ததற்கும் அர்த்தம் உண்டு என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism