Published:Updated:

பிரணாபின் பட்ஜெட் தேறுமா?

விளக்குகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்

பிரணாபின் பட்ஜெட் தேறுமா?

விளக்குகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்

Published:Updated:
##~##

ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் கொடுத்த அதிர்ச்சிக்குப் பிறகு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. வழக்கம்போல் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாராட்ட, எதிர்க் கட்சியினர் திட்டித் தீர்க்கிறார்கள். பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். 

ஆர்.கோபாலன், நிதி அமைச்சகத்தின் செய​லாளர் (பொருளாதார விவகாரங்கள்): ''நாட்டின் எதிர்காலத்தைக் கணக்கில்கொண்டு, சில ஆக்கப்​பூர்வமான நடவடிக்கைகளை அரசு இந்த பட்ஜெட்டில் மேற்கொண்டுள்ளது. செலவினங்​களைக் குறைத்து நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க இந்த பட்ஜெட்டில் முயற்சிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரணாபின் பட்ஜெட் தேறுமா?

மேற்கொள்ளப்பட்டு இருப்ப​தால், எல்லோரையும் கவரும் விதமாக இல்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரம் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும்.

மானியத்தையும், கடனுக்கு நாம் கொடுக்கும் வட்டித் தொகையையும் எதிர்காலத்தில் குறைக்க வேண்டும். இந்த இரண்டு விவகாரங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் 28 பைசா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் செலவுகளைக் குறைத்து, புதிய திட்டங்களுக்குப் பணத்தை செலவழித்தால் வளர்ச்சி கிடைக்கும். இதனால் மானியத்தையும் கடனையும் குறைக்க இந்த பட்ஜெட்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மானியம் கொடுப்பது மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் மட்டுமே பயன் அடைய வேண்டும். ஆனால், வசதி படைத்தவர்களும் மானியத்தின் மூலம் பலன் அடைகின்றனர். ஏழைகளுக்கு மண்ணெண்ணெய் கிடைக்க

பிரணாபின் பட்ஜெட் தேறுமா?

வேண்டும் என்பதில் அரசுக்கும் விருப்பம் உண்டு. ஆனால், அதுவே கறுப்புச் சந்தைக்கு போய்க் கலப்படத்துக்குப் பயன்படுகிறது என்றால், ஏன் மானியம் கொடுக்க வேண்டும்? ஏழைகளுக்கு ரேஷன் தேவை. ஆனால், போலி ரேஷன் கார்டுகள் மூலம் வீணாவதைத் தடுக்க அரசு விரும்புகிறது. அதனால் சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும் வளர்ச்சி தரக்கூடிய பட்ஜெட்.''

டாக்டர் எஸ்.கார்த்திகேயன், (பொருளாதாரப் பேராசிரியர்): ''மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், கட்டுமானம் மற்றும் இதர வசதி வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமே தவிர, இலவசமாகக் கொடுக்கக் கூடாது. மக்கள் உழைக்க வேண்டும். செலவழிக்க வேண்டும். எதிர்காலத்துக்குச் சேமிக்க வேண்டும். அவரவர் பணத்தில், சேமிப்பில் வாழ்க்கை நடத்த வேண்டுமே தவிர, எல்லாவற்றுக்கும் அரசை எதிர் பார்த்து இருக்கக் கூடாது. ஆனால், இதுவரை

இருந்த  அரசாங்கங்கள், தங்களைச் சார்ந்தே மக்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்டது.

'30 வயதுக்குள் இருப்பவர்களுக்கு எந்தச் சலு கைகளும் இல்லை, உழைத்தால்தான் சாப்பாடு’ என்ற நிலையை அரசு கொண்டுவராத வரை, நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கவே முடியாது. அரசு கொடுக்கும் மானியங்களில் பெரும்பாலான தொகை, பெட்ரோல், டீசலுக்குத்தான் செல்கிறது. டீசலுக்கு விலை ஏற்றினால் விலைவாசி உயரும் என்பது சரிதான். ஆனால், லட்சங்களைக் கொட்டி கார் வாங்குபவர்களுக்கு மானிய விலையில் ஏன் டீசலைக் கொடுக்க வேண்டும். இந்த 'லாபியை’ எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு மக்களை ஊக்குவிப்பதற்காக ஒரு திட்டத்தைச் செயல்படுத்து​கிறார்கள். அவர்கள் வாங்கும் பொருளுக்கு வரி செலுத்திவிட்டு, அந்த பில்களை ஏர்போர்ட்டில் கொடுத்து, செலுத்திய வரிப்பணத்தைத் திரும்ப வாங்கிக்கொள்ளலாம். அதுபோல இங்கும் செய் யலாம். டீசல் விலையை அதிகரித்து விட்டு, லாரி உரிமையாளர்களுக்குத் திரும்பவும் கொடுத்து விடலாம். பல காலமாக சொல்லி வந்த இந்த விஷயம் பற்றி இந்த பட்ஜெட்டில் எந்தத் தெளிவும் இல்லை.

பிரணாபின் பட்ஜெட் தேறுமா?

கறுப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்​பட்டுள்ளது. ஆனால், கறுப்புப் பணம் ஏன் உருவாகிறது என்பதைப்பற்றி அரசு யோசிக்கவே இல்லை.

17 சேவைகளைத் தவிர அனைத்து சேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 சதவிகித வரியை 12 சதவிகிதமாகவும் உயர்த்தி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், சேவைத் துறையின் பங்களிப்பு 20 சதவிகிதம் என்ற அளவில்தான் இருந்தது. இப்போது 60 சதவிகிதம். இதனால், சேவைத் துறைக்குக் கூடுதல் வரி விதித்து, அதன் மூலம் வருமானத்தைக் அதிகரிக்கப் பார்க்கிறது. செலவுகளைக் குறைக்காமல் சேவை வரியை அதிகரித்து, அதன்மூலம் வருமானத்தை அதிகரித்து இருக்க வேண்டாம். இதனால், சாதாரண மக்களின் மாதாந்திரச் செலவுகள்தான் அதிகரிக்கும்.''

எம். நந்தகுமார், இ.டி.ஏ.சி. என்ஜினீயரிங் துணைத் தலைவர் (திட்டங்கள்): ''சேவைத் துறை, உற்பத்தித் துறை, விவசாயம் ஆகிய மூன்றும் சிறப்பாக இருக்கும்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும். ஆனால், இவை அனைத்துக்கும் மின்சாரம் வேண்டும். குறுகிய காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அலசி இருக்கிறார்களே தவிர, நீண்டகாலத் தேவை குறித்துச் சொல்லவே இல்லை. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மின்உற்பத்தி நிலையங்கள் நிலக்கரியைக் கொண்டு இயங்குகின்றன. அதற்கு கலால் வரியை முற்றிலும் நீக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், நீண்ட கால நோக்கத்துக்கு நிலக்கரித் தேவையை எப்படி பூர்த்தி செய்யப் போகிறோம் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. சேவைத் துறையில் அதிக வருமானம் கிடைக்கிறது என்பதற்காக, அதற்கே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். உற்பத்தித் துறையை ஊக்குவிக்காமல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது.''

- சரோஜ்கண்பத், வா.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism