Published:Updated:

நடந்தது குற்றம்!

நேரில் பார்த்த நிருபரின் சாட்சியம்

நடந்தது குற்றம்!

நேரில் பார்த்த நிருபரின் சாட்சியம்

Published:Updated:
நடந்தது குற்றம்!
##~##

ழ மண்ணில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்களை நேரில் கண்டு, 'தமிழ்நெட்’ இணையதளம் மூலம் உலகுக்கு அறியச்செய்தவர்கள்பலர். அவர்களில் முக்கியமானவர் யாழ்ப்​பாணத்தைச் சேர்ந்த செய்தி​யாளர் லோகீசன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஈழத்தில் 2004-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் மீதான இறுதிப்போர் தொடங்கப்பட்டு விட்டது. சிறிலங்கா ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தீவுப் பிரதேசமாகத்தான் வன்னி மண் இருந்தது. சமா​தான காலம் என்று சொல்லப்பட்ட காலத்திலும், அத்தியாவ​சியமான உணவுப் பொருட்கள், மருந்துகள் வன்னிக்குள் கொண்டுபோக முடியாமல் கடுமையான நெருக்கடி. பிறகு, தமிழ் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்​பட்டன. புதிதாக, சிறிலங்கா ராணுவம் பிரசவித்த அசுரக் குழந்தையான, 'ஆழ ஊடுருவும் படையணி’தான் இதில் முதன்மை.

முதலில் முகமாலையில் அறிவிக்காமலே தாக்குதலைத் தொடங்கியது, சிறிலங்கா ராணுவம். இறுதிப் போரின் முதல்​முதலான பெரும் இடப்பெயர்வு அப்போதுதான் நிகழ்ந்தது. பளை, இயக்கச்சி, புதுக்காட்டுச் சந்தி, ஆனையிறவுச் சந்தி வரை​யிலான எட்டு கி.மீ. பின்னிருந்த மக்கள், உயிரைக் காக்க ஓடத்தொடங்கினர். மன்னார், வவுனியா என மக்களைத் துரத்திய சிறிலங்கா ராணுவம், 2008 இறுதியில்

நடந்தது குற்றம்!

கிளிநொச்சியையும் கைப்பற்றியது. கிளிநொச்சியில் இருந்து செய்தி சேகரித்துவந்த நானும் மக்களுடனேயே ஓடத் தொடங்கினேன்.

கிளிநொச்சியை அடுத்து விசுவமடுவை நோக்கி நகர்ந்​தோம். ஒவ்வொரு நாளும் கற்பனையே செய்து பார்க்க முடியாதபடி சாவுகளுட​னேயே மிகக் கொடூரமானதாக மாறியது. படுகாயங்களுக்குச் சிகிச்சை செய்வது பற்றி யாராலும் சிந்திக்க முடியவில்லை. தொங்கிய கைகளோடும் கால்களோடும் உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள அலைந்த மக்களுக்கு ஒரே ஆறுதல், தற்காலிக மருத்துவமனைகள்தான். சிறிலங்கா ராணுவம் அவற்றின் மீதும் குண்டுகளை வீசி, குற்றுயிராய் இருந்தவர்களை முற்றிலுமாக முடித்தது.

திடீரென ஒரு நாள், நள்ளிரவு 1 மணிக்கு மேல், கல்லாறு கிராமத்தில் சிறிலங்காவின் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. மறுநாள், நான் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, வழக்கத்தைவிட வித்தியாசமான வெடிபொருள் மீத்தங்கள் அங்கு இருந்தன. அந்தத் தாக்குதலுக்கு ஆளானவர்​கள் உடல்களில் பார்க்கவே சகிக்க முடியாதபடி படுகோரமான காயங்களும் ரசாயனப் பொருட்களும் படிந்துகிடந்தன. அவை அனைத்தையும் தெளிவான படங்களாக எடுத்து, படுகாயம் அடைந்தவர்களின் பேட்டிகளையும் எடுத்து, 'தமிழ்நெட்’டுக்கு அனுப்பினேன். அப்போதுதான், அவை க்ளஸ்டர் எனப்படும் கொத்துக் குண்டு என்று தெரியவந்தது.

நடந்தது குற்றம்!

ஒரு கட்டத்தில் உடையார்கட்டு பகுதியைப் பிடிக்க ராணுவம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. பாதுகாப்புவளையம் எனச் சொல்லி, மக்களை எல்லாம் அங்கு வரவைத்தது. ஏறத்தாழ மூன்றரை லட்சம் மக்கள் அந்த குறுகிய பரப்பில் கூடினார்கள். அவர்கள் அத்தனை பேர் மீதும் கண்மூடித்தனமாக வான்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலேயே பாதுகாப்பு வளையத்​துக்​குள் வந்த மக்கள் மீது ஷெல்லடிகள் தொடங்கப்​பட்டன. பல்முனைத் தாக்குதலால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, பல நூறுகளாக அதிகரித்தது. தாக்கு​தலைப் பார்க்க வந்தவர்களையும் இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர்.

ஈழ இனப் படுகொலையின் நேரடி சாட்சியமான நான், பாதுகாப்பாக வெளியேறுவதுதான் சிறந்தது என முடிவுக்கு வந்தேன். என்னிடம் இருந்த சாதனங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு, மக்களுடன் சேர்ந்து நானும் அரசுப் பகுதிக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி, அதிர்ச்சி அடையச் செய்தது. போராளிகளின் உடையில் மக்களுடன் இருந்தவர்கள், இரணைப்பாலை என்னுமிடத்தில் சிறிலங்கா ராணுவத் தரப்பில் நின்று எங்களை சோதனை செய்தார்கள். உணவின்றி ஒழுங்குசெய்யப்படாத முகத்தோடு தோற்றமே மாறி இருந்ததால், அவர்களிடமிருந்து நான் தப்பிவிட்டேன்.

நடந்தது குற்றம்!

பின்னர், வவுனியா ஆனந்த குமாரசாமிமுகாமில் வைக்கப்பட்டோம். உறவினர்கள் மூலமாக பெரும்தொகை கொடுத்து, அங்கிருந்து தப்பிய நான், கொழும்பில் தங்கியிருந்தேன். அப்போது, சோதனையிட்ட ஒரு போலீஸ் அதிகாரி, என்னை 'புலி’ எனச் சொல்லி, கைதுசெய்ய முயன்றார். உடனே பதற்றம் அடையாமல், 'நான் ஆசிரியராக வன்னியில் இருந்தவன். வேலைக்காக இந்தியா போகிறேன்’ என சொல்லித் தப்பித்தேன். அப்போது, திடீரென அங்கு வந்த 'வெள்ளைவேன்’ கும்பல் என்னை இழுத்து வேனுக்குள் போட முயன்றது. அவர்களிடம் இருந்தும் ஒரு வழியாகத் தப்பித்தேன். பின்னர், இந்தியாவுக்கு வந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பா சென்று சேர்ந்தேன்.

சிறிலங்கா ராணுவம் மக்கள் மீது நடத்திய போரில், மண்டைகளும் உடலங்களுமாகத் துண்டு துண்டாகச் சிதறியடிக்கப்பட்டு பச்சைக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை, ஒரு செய்தியாளனாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்னால் மறக்க முடியாது. இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய மனிதப் படுகொலை இப்படித்தான் நடக்கும் எனத் தெரிந்தும், அங்கே இருந்து சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் நிர்க்​கதியான மக்களை நிராகரித்துவிட்டுச் சென்றன. அந்த இடத்தில் நானும் சில நண்பர்களும் ஊடகக்காரர்களாக எங்களது பணியைச் செய்தோம். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட ஒவ்வொரு தாக்குதல் பற்றிய செய்தியையும் அனுப்பினேன். அதன் விளைவாக, அடுத்தடுத்த நாட்களில் தாக்குதலின் வீச்சு குறைந்தது. இதையே, சர்வதேச ஊடகங்கள் அங்கே இருந்தபடி செய்திருந்தால், பத்தாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும்'' என்று ஆதங்கப்படுகிறார்.

மனசாட்சியுள்ள வார்த்தைகள். பதில் சொல்லத்தான் யாருக்கு நேர்மை இருக்கிறது?

- இரா. தமிழ்க்கனல் 

தீர்மானம் வெற்றி பெற்றாலும்      ஆகப்போவது ஒன்றும் இல்லை!

 போர் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ராஜபக்ஷே இந்தியப் பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தபோது சொன்னார்... ''நாங்கள் இந்தியாவுக்காகவும் போரிட்டு இருக்​கிறோம்!''

ஆமாம். ராஜபக்ஷே பொய் சொல்லவில்லை. இந்தப் போரை இந்தியா பின்னின்று நடத்தியது. 'எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர்களில் தொடங்கி, 'விக்ரஹா’ ரோந்துக் கப்பல் வரை சகல படைக்கலன்​களையும் இலங்கைக்கு வழங்கியது. ஆட்களை அனுப்பியது. சிங்களப் படைக்கு இங்கு பயிற்சி அளித்தது. கோடியக்கரையில் இருந்தும் உச்சிப்புளியில் இருந்தும் கடல் பகுதியைக் கண்காணித்து உளவு சொன்னது. ராஜதந்திர ரீதியாக போருக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொண்டது. யோசித்துப் பாருங்கள்... இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அபத்தம்? ஆனாலும், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ''அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும். ஆனால், தீர்மானத்தின் இறுதி வரைவை ஆய்வு செய்யும்'' என்று இரண்டு பக்கமுமாக பதில் சொல்லி இருக்கிறார்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

2009-ம் ஆண்டு மே 15-ம் தேதி அமெரிக்க பசிபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதி திமேத்தி ஜே கீட்டிங், அன்றைய இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணனையும் வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனையும் சந்தித்தார். பின்னர், ''இலங்கையில் போர்ப் பகுதியில் 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு’ உதவ அமெரிக்கக் கப்பற் படைக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்கின்றன'' என்று அறிவித்தார். விடுதலைப் புலிகள் தலைமை அமெரிக்காவிடம் இருந்தும் இங்கிலாந்திடம் இருந்தும் பொதுமன்னிப்பு உறுதிமொழியை எதிர்பார்த்துச் சரணடையக் காத்திருந்த நாள் அது. 'ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் பொதுமன்னிப்பு’ என்ற பொய்யான வாக்குறுதி, சர்வதேசத்தால் வழங்கப்பட்டதற்கான மறைமுக சாட்சி அது. ஆமாம். அமெரிக்காவுக்கும் இதில் பங்கு உண்டு. 'உலகிலேயே மிக ஆபத்தான பயங்கரவாத அமைப்பு’ என்று விடுதலைப் புலிகளுக்கு முதன்முதலில் கட்டம் கூட்டியது அமெரிக்காதானே?  கொத்துக்கொத்தாகக் குண்டுகள் விழுந்தபோதும், தமிழ் உயிர்கள் வீழ்ந்தபோதும் எல்லோரும்தானே வேடிக்கை பார்த்தார்கள்? எல்லாருடைய விருப்பத்தின்​பேரில்தான் அது நடந்தது!

போர்க் குற்றங்களுக்காக சர்வதேசம் மூன்று வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.

முதலாவது, ஐ.நா. சபையின் பாதுகாப்பு அவையின் மூலம் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம். இங்கு இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. இலங்கையைக் காப்பாற்ற சீனாவிடம் உள்ள 'வீட்டோ’ அதிகாரம் போதுமானது.

இரண்டாவது, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை மூலம். தன்னுடைய வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முதலாக ஒருவரை - காங்கோவின் தாமஸ் லுபாங்காவை - போர்க் குற்றவாளி என்று அறிவித்திருக்கிறது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம். அதன் சக்தி அவ்வளவுதான். இங்கும்கூட இலங்கை தண்டிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில், போர் அற விதிகளைக் கடைப்பிடிக்கும் உறுதிமொழியை ஏற்று, இந்த நீதிமன்றத்தின் கீழ் வரும் நாடுகள் மீதுதான் சர்வதேச நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கை இதில் கையெழுத்து இடவில்லை.

மூன்றாவது... மனித உரிமை ஆணைய விசாரணை மூலம். வெறும்  கண்டனங்களையும் கோரிக்கை​களையும் வலியுறுத்தல்களையும் மட்டுமே முன்வைக்க அதிகாரம் பெற்ற அமைப்பு இது. இதன் முன்புதான் இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. சுருக்கமாக இந்தத் தீர்மானம் என்ன சொல்கிறது? போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க இலங்கை அரசு அமைத்த 'விசாரணை ஆணையம்’ அளித்த அறிக்கையில் உள்ள விஷயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறது. சரி, அந்த அறிக்கை என்ன சொல்கிறது? அதிர்ச்சி அடையாதீர்கள். இரண்டு பகுதிகளைக்கொண்ட அந்த அறிக்கையின் முதல் பகுதி போர்க் குற்றங்கள் தொடர்பானது. இலங்கை ராணுவம் எந்தப் போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று சொல்கிறது. இரண்டாவது பகுதி, போருக்குப் பிந்தைய தமிழர்கள் நிலை தொடர்பானது. தமிழர்கள் பகுதி முழுவதும் ராணுவமயமாக்கப்பட்டுள்ள சூழல் மாற்றப்பட வேண்டும். தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. இதைத்தான் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் முன்மொழிகிறது. போரில் நடந்த மனித உரிமை மீறல்களையோ, போர்க் குற்றங்களையோ, அவை தொடர்பான சர்வதேச விசாரணையைப் பற்றியோ அல்ல!

சரி, அப்படியே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்​பட்டால் என்ன நடக்கும்? இலங்கை அரசு நடவடிக்​கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கோரும்.

அப்போதும் இலங்கை அரசு கேட்காவிட்டால்? ஒன்றும் நடக்காது. அதிகபட்சம் சில பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம். இலங்கையைப் பொறுத்த அளவில் அதுவும் நடக்காது. ஏனெனில், அது ஒரு சந்தை நாடு. அதற்குத் தடை விதித்தால், விதிப்பவர்களுக்குத்தான் அதிக நஷ்டம். இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச சொன்னதுபோல, 'கோக் இல்லாவிட்டால், சிங்களர்கள் செத்துப் போய்விடுவார்களா என்ன?’

சரி, இப்படி ஒரு விஷயத்துக்கு ஏன் இத்தனை களேபரம்?

சீனாவுடனான பனிப்போரில், ஆசியப் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி​வைக்க அதன் நெருக்கமான கூட்டாளி இலங்கையைத் தட்டிவைக்க வேண்டிய அரசியல் அமெரிக்காவுக்கு. தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்னையைத் திசை திருப்ப வேண்டிய அரசியல் ஆளும் அ.தி.மு.க-வுக்கு. அதற்குப் பதில் லாவணி பாட வேண்டிய நிர்ப்பந்த அரசியல் தி.மு.க-வுக்கு. இந்த விஷயத்தைப் பெரிய விவகாரமாக எடுத்துக்கொள்ள இலங்கைக்கும் அரசியல் உண்டு. ராஜ​பக்ஷே மீதான அதிருப்தி மறைந்து தேசிய வெறி மீண்டும் தலைதூக்க இது உதவும். ஆக, எல்லோருடைய அரசியலுக்கும் செத்தும் உயிர் கொடுக்கிறான் ஈழத் தமிழன்!

- சமஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism