Published:Updated:

முப்படை முற்றுகையில் கூடங்குளம்...

முப்படை முற்றுகையில் கூடங்குளம்...

முப்படை முற்றுகையில் கூடங்குளம்...
##~##

கொலைக்களக் கொந்தளிப்பில் இருக்கிறது கூடங்​குளம் உலைக்களம்! இதனால், தென்தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்குமோ என்ற அச்சம் உறைந்து கிடக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய ஜீவ மரணப் போராட்டமாகக் கருதும் இந்தக் கடைசிக் கட்டப் போராட்டத்தில் திரண்டு நிற்கிறார்கள். இவர்களை எப்படி மத்திய மாநில அரசுகள் எதிர்கொள்ளப் போகின்றன என்ற பதற்றம் பரவி வருகிறது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்காக வந்​திருந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார், துணை ராணுவப் படையினர் அப்படியே கூடங்​குளத்தைச் சுற்றி குவிக்கப்பட்டனர். தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த 'ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ்’ படையினருக்கும் சிறப்பு அழைப்பு. போதுமான அளவுக்கு போலீஸார் அனைத்து இடங்களுக்கும் சென்று சேர்ந்ததும், கூடங்குளம் எதிர்ப்பாளர்களைக் கொத்துக் கொத்தாக அள்ள ஆரம்பித்தது போலீஸ். அவர்களை ரிமாண்ட் செய்து பாளையங்கோட்டை, திருச்சி, கடலூர் என்று பல்வேறு திசைகளில் உள்ள சிறைகளில் அடைத்தனர்.

இடிந்தகரைக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. உள்ளே இருந்து யாரும் வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. ராதாபுரம் தாலுக்கா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாலைகள் முழுக்க போலீஸ் வாகனங்களின்ரோந்து.

முப்படை முற்றுகையில் கூடங்குளம்...

உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த உதய​குமாரன், புஷ்பராயன், மைபா.ஜேசுராஜ் உள்ளிட்​டோரை, பேச்சுவார்த்தை என அழைத்துக்  கைது செய்ய முயற்சி எடுத்தது போலீஸ். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர் சிறுமியர் என ஒட்டுமொத்தமாக அந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் இடிந்தகரையில் வெவ்வேறு வழிகள் வழியாகக் கூடிவிட்டார்கள்.

இந்தத் தகவல் அக்கம்பக்கத்துக் கிராமங்களுக்கு எட்டியது. சாலை வழியாக வர முடியாத மக்கள், படகுகள் மூலம் இடிந்தகரைக் கிராமத்தில் குவிந்​தனர். அதனைத் தடுப்பதற்காக கடலோரக் காவல் படையினர் படகுகளில் ரோந்து சுற்றினர். அவர்களின் விமானமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கவே, இடிந்தகரை பகுதியில் டென்ஷன் கூடியது. கிட்டத்தட்ட முப்படைகளின் முனையில் கூடங்குளம் உள்ளது.

கைது செய்யப்பட்ட 200-க்கும் அதிகமானோர் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்​கப்​பட்ட நிலையில், போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலனை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்​படுத்தாமல் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அலைக்கழிப்பதாகத் தகவல் பரவியது. இதனால், அணுஉலை எதிர்ப்பு வழக்க றிஞர்கள் சிலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தனர். இந்தத் தகவல் தெரிந்தோ என்னவோ, திடீரென அவரை வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது போலீஸ்.

போலீஸ் நடவடிக்கை பற்றிப் பேசிய கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், ''அணு உலைக்கு எதிராகக் காந்திய வழியில் போராட்டம் நடத்தும் எங்களைத் தீவிரவாதிகள் போல போலீஸார் சித்திரிக்கிறார்கள். இந்தப் பகுதியை முள்ளிவாய்க்கால் போல ஆக்கி விட்டார்கள். தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. பால், காய்கறிகள் என அடிப்படைத் தேவைகள் எதுவுமே கிடைக்கவிடாமல் தடுக்கிறார்கள். சாலைப் போக்குவரத்தைத் தடுத்துவிட்​டார்கள். மின்சாரத்தைத் துண்டித்தார்கள். எங்களைச் சந்திப்பதற்கு வக்கீல் களைக்கூட அனுமதிக்கவில்லை. எங்களை மற்ற மக்களிடம் இருந்து பிரித்து, தனித்தீவு போல மாற்றி, நாலா பக்கமும் காவல் துறையும் ராணுவமும் நிற்கிறது.

ஆயிரக்கணக்கில் போலீஸாரைக் குவித்து இந்தப் பகுதியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.  எங்களை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யட்டும். அதற்காக நாங்கள் பயப்படவில்லை. ஜனநாயகத்துக்கு உட்பட்டுப் போராடும் எங்களை அச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக, குழந்தைகளுக்குப் பால் கிடைக்காமல் செய்வதும், அப்பாவி மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைக்க முடியாதபடி செய்வதும் நியாயம்தானா?'' என்றார் காட்டமாக.

தொடர்ந்து பேசிய போராட்டக் குழு உறுப்பினர் புஷ்பராயன், ''கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறோம். எங்கள் ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் டி.எஸ்.பி-யாக இருக் கிறார்கள். அவர்கள் மூலம் டி.ஐ.ஜி. பேசி, எங்களை சரண் அடையச் சொன்னார். ஆனால், எங்கள் மக்கள் அதை ஏற்கவில்லை. எஸ்.பி. விஜயேந்திர பிதாரி தொலைபேசி மூலம் உதயகுமாரனிடம் பேசி னார். அப்போது, 'மக்களைக் கஷ்டப்படுத்தாமல் இருக்க, நீங்களாகவே சரண் அடைஞ்சிருங்க’ என்று சொன்னார். அவர் பேசியதை மைக்கில் போட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தியபோது, அவர்கள், 'கைது செய்தால் ஊரோடு எல்லோரையும் கைது செய்யட்டும். தனிநபர் யாரையும் கைது செய்யக் கூடாது’ என்று உறுதியாகச் சொன்னார்கள். அதனால் போலீஸார் எப்போது வேண்டுமானாலும், எங்கள் எல்லோரையும் கைது செய்யட்டும்'' என்றார் ஆவேசமாக.

முப்படை முற்றுகையில் கூடங்குளம்...

கூடங்குளத்தில் முகாமிட்டு இருக்கும் காவல் துறை தென்மண்டல ஐ.ஜி.யான ராஜேஸ்தாஸ், ''போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கிவிட்டது. அவர்களாக வந்து சரண் அடையா விட்டால், நாங்கள் அவர்களைக் கைது செய்ய வேண்டி இருக்கும். இதில், பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறோம்'' என்று சொன்னார்.

இதற்கிடையே, கடந்த ஐந்து மாதங்களாக வேலைக்குச் செல்ல முடியாமல் முடங்கிக் கிடந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் பலத்த பாதுகாப்புடன் பணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி அடைந்தனர். இது பற்றி நம்மிடம் பேசிய கூடங்குளம் அணு உலைக்கான திட்ட இயக்குநர் காசிநாத் பாலாஜி, ''அணு உலையில் 'டம்மி ஃப்யூல்’ நிரப்பி 'ஹாட் ரன்’ எனப்படும் அணு உலையைப் பரிசோதிக்கும் சோதனை நடத்தியதும் ஊருக்குள் பிரச்னை ஏற்பட்டு விட்டது. அதனால், கடந்த அக்டோபர் 13-ம் தேதி முதல் எங்களால் அணு உலைக்குள் செல்ல முடியாமல் பணிகள் அனைத்தும் தேங்கி விட்டன.

இப்போது, தமிழக அமைச்சரவை தீர்மானத்தைத் தொடர்ந்து வேலையை மீண்டும் தொடங்கி விட்டோம். மொத்தம் உள்ள 950 பணியாளர்களில் 850 பேர் முதல் நாள் வேலைக்கு வந்து விட்டார்கள். அணு உலைப் பணியை வேகப்படுத்த இருக்கிறோம். அதனால், வேறு இடங்களுக்கு டிரான்ஸ்ஃபரில் சென்றவர்கள், வேறு அணு உலைகளில் பணியாற்றும் பொறியாளர்கள் ஆகியோரையும் அழைத்து வந்து சீக்கிரமாக வேலையை முடித்து மின் உற்பத்தியைத் தொடங்கப் போகிறோம்'' என்றார் நம்பிக்கையுடன்.

அணு உலையை எப்படியாவது திறந்து விட அரசு முடிவெடுத்து விட்டதால் பதற்றம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

அடுத்த சில நாட்கள்... மிக முக்கியமானவை!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார், ஆர்.எம்.முத்துராஜ்

 உதயகுமாரன் பள்ளிக்கு மிரட்டல்!

நாகர்கோவில் எறும்புக்காடு அருகே உதயகுமாரன் அவரது மனைவி மீரா ஆகியோரால் நடத்தப்படுகிறது, சாக்கர் மெட்ரிகுலேசன் பள்ளி. இந்தப் பள்ளியின் காம்பவுண்டுச் சுவரை, கடந்த 3-ம் தேதி மர்ம நபர்கள் இடித்துத் தகர்த்தார்கள். அவர்கள் கண்டுபிடிக்கப்படும் முன்னரே, 20-ம் தேதி பள்ளியின் நுழைவு வாயில் மற்றும் சுற்றுச் சுவரை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது ஒரு கும்பல். பள்ளி வாகனத்தை அடித்து நொறுக்கி, வகுப்பறை, நூலக அறையையும் சேதப்படுத்தி விட்டனர். குடிநீர் குழாய், மோட்டாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

முதல் சம்பவம் நடந்ததுமே பள்ளிக்கு போலீஸ் காவல் போடப்பட்டது. இரண்டாவது சம்பவம் நடந்த தினம் இரவு 2 மணி வரை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்திருக்கிறார்கள். அப்போது, 'அழிக்கால் பகுதியில் மணல் அள்ளுகிறார்கள். அதைச் சென்று தடுங்கள்’ என்று அந்தக் காவலர்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாம். அதற்குப் பிறகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.  

இதுகுறித்துப் பேசும் உதயகுமாரனின் மனைவி மீரா, 'கடந்த வாரம் எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. பள்ளியை ஜெர்மனியில் போய் நடத்து. அடுத்த வருடத்தில் இருந்து ஆடு மாடு கூட உன் பள்ளியில் படிக்காது. இங்கே இருந்தால் உன்னைச் சும்மா விட மாட்டோம்’ என்று மிரட்டி இருந்தார்கள். உடனே, போலீஸில் புகார் கொடுத்தேன். இப்போது, மீண்டும் எங்கள் பள்ளி நொறுக்கப்பட்டுள்ளது. குறைந்தது 25 பேராவது இந்தச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் எங்களை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கிறார்கள். நாங்கள் பயப்பட போவதில்லை'' என்று சொன்னார்.

ஏரியா முழுவதும் எக்கச்சக்க காவலர்கள் நிற்கும்போது, இந்தப் பள்ளி இடிக்கப்பட்டது ஆச்சர்யம்தான்.

- பி.கே.ராஜகுமார்

 மிரட்டும் 144

ராதாபுரம் தாலுக்காவில் உள்ள 50 கிராமங்களுக்கும் போடப்​பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, வழக்கறிஞர் புகழேந்தி உள்ளிட்ட மூன்று பேர் தாக்கல் செய்த மனு, கடந்த 23-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

''ஒரு வீட்டில் இருந்து அடுத்த வீட்டுக்கும் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்துக்கும் மக்கள் போக முடியவில்லை. பத்திரிகைகளில் வந்த தகவல்படி, மக்களுக்கு பால், குடிநீர், மின்சாரம் போன்றவை கிடைக்க வில்லை. அதனால், நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு, இடைக்காலத் தடை விதிக்கவேண்டும்'' என்று வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், ''மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், போராட்டக்காரர்கள்தான் சாலைகளைத் துண்டித்து, அடிப்படை வசதிகள் கிடைக்க விடாமல் செய்கிறார்கள். அரசின் நிலைப்பாடு சரிதான்'' என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முகமது யூசுப் இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர், ''ராதாபுரம் தாலுக்காவில் உள்ள அனைவருக்கும், போராட்டக்காரர்களுக்கும் சேர்த்து அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தடை ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று உத்தரவு போட்டவர்கள், 144 தடை உத்தரவு மீதான இறுதித் தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.

- ஜோ.ஸ்டாலின்