Published:Updated:

பிரணாப் அறியாத இந்திய வரலாறு!

பிரணாப் அறியாத இந்திய வரலாறு!

##~##

''இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்'' என்று, தெளிவாகப் புரியும்படியான கோரிக்கை கடிதத்தை மன்மோகன் சிங்குக்கு, கருணாநிதி அனுப்பினார். இதற்கு, பிரதமர் அனுப்பிய பதில் கடிதத்தை நூறு தடவை படித்தாலும் புரியவில்லை! 

உங்களுக்காவது புரிகிறதா எனப் பாருங்கள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உள்ள தீர்மானத்தைப் பொறுத்தமட்டில் முன்னோக்கியதும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மோதலையும் அவநம்பிக்கையையும் ஆழப்படுத்துவதற்கு மாறாக, பொறுப்பு நிர்ணயித்தல் மற்றும் சமரசம் தொடர்பான பிரச்னைகளில் முன்னெடுத்துச் செல்லும் வழியைக் காண்பதை உறுதி செய்வதும் ஆன முடிவை அடைவதற்கான முயற்சியில் நாம் அனைத்துத் தரப்பினருடனும் தொடர்புகொண்டுள்ளோம்!'' என்று முடித்து இருக்கிறார் பிரதமர். ஆனால், தமிழக மக்கள் மத்தியிலும் தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டு கொடுத்த குரலின் காரணமாக வேறு வழி இல்லாமல் இறங்கி வரவேண்டிய நிலைக்கு மன்மோகன் தள்ளப்பட்டார். ''இலங்கைக்கு எதிரான

பிரணாப் அறியாத இந்திய வரலாறு!

தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவே இந்தியா விரும்புகிறது'' என்பது மன்மோகனின் இன்றைய நிலைப்பாடு. சொன்னது மாதிரியே ஆதரித்து வாக்களித்துள்ளது இந்தியா. ஆனால், இத்தகைய முயற்சிகளை இந்தியா தான் செய்திருக்க வேண்டும். இதுவரை இந்தியா மௌனமாக இருந்ததே பெரும் தவறு. இப்போதும் இந்த முடிவையும் வேறு வழியில்லாமல்தான் எடுத்துள்ளது காங்கிரஸ் அரசு. இப்படி ஒரு முடிவு எடுப்பதைத் தவிர்க்க எத்தனையோ சால்ஜாப்புக்களை காங்கிரஸ் அமைச்சர்கள் செய்தார்கள்.

தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றின் முதல் முறையாக இலங்கை விவகாரத்தில் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். 'ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஏற்க வேண்டும்’ என்பதுதான் இந்தக் கட்சிகளின் முழுமுதல் கோரிக்கை. இதைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனும் வழிமொழிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் எல்லக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து கோரிக்கை வைத்தன. இதற்கு பதில் சொல்ல முன்வந்த நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இந்தியாவின் வரலாறே தெரியவில்லை. குறிப்பாக, ஜவஹர்லால் நேரு என்ற ஒருவர் இருந்தது அவருக்குத் தெரியுமா என்றே தெரியவில்லை. ''குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டுக்கும் எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது இல்லை என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாடு'' என்று பிரணாப் சொல்லி இருக்கிறார்.

உலகில் எங்கெல்லாம் அடக்குமுறையும் ஒடுக்கு முறையும் நடந்திருக்கிறதோ, அங்கெல்லாம் இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்து வந்திருப்பதுதான் பாரம்பரிய நிலைப்பாடு!

யூதர்களின் மீது இனப் படுகொலையை நடத்திய ஹிட்லரைக் கண்டிப்பதில் முதல் ஆளாக இருந்தவர் காந்தி. 'மனித குலத்துக்காக ஒரு போர் நடத்தலாம் என்றால், ஓர் இனத்தைப் படுகொலை செய்கிற ஹிட்லரை எதிர்த்துப் போர் செய்வது முற்றிலும் நியாயமானதே’ என்றார் அவர். ''உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்து இருக்கிறது. ஏகாதி பத்தியவாதிகளும் பாசிஸ்ட்டுகளும் ஓர் அணியில் இருக் கிறார்கள். சோஷலிஸ்ட்டுகளும் தேசியவாதிகளும் எதிர் அணியில் இருக்கிறார்கள். பாசிசத்தையும் ஏகா திபத்தியத்தையும் எதிர்க்கிற உலக முற்போக்கு சக்தி களுடன் நாம் சேர்ந்திருக்கிறோம்'' என்று லக்னோ காங்கிரஸில் பகிரங்கமாக அறிவித்தார் நேரு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா - சோவியத் என, உலகம் இரண்டு குழுக்களாகப் பிரிந்தபோது, இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தது. அப்போதும் பிரதமர் நேரு, ''பாசிசம், காலனியம், இன வெறி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்று சொன்னார்.

பிரணாப் அறியாத இந்திய வரலாறு!

இந்தோனேஷியாவில் டச்சு அரசாங்கம் படை களைக் கொண்டுபோய்க் குவித்தபோது எதிர்த்தார் நேரு. அதற்குப் பிறகுதான், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலே தலையிட்டது. வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் மோதல் ஏற்பட்டபோது, போரை நிறுத்த இந்தியா கடுமையாக முயற்சித்தது. போர்க் கைதிகளின் பரிவர்த்தனைக்கு நடுநிலை நாடுகளின் கமிஷன் நியமிக்கப்பட்டது. அதன் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெனரல் திம்மையா இருந்தார். அமெரிக்கா, சோவியத், சீனா ஆகிய மூன்று நாடு களையும் பகைத்துக்கொண்டு எடுத்த முடிவு இது. இந்தோசீனா - பிரெஞ்சு காலனிப் படைகளுக்கும் வியட்நாம் புரட்சிக்காரர்களுக்கும் நடந்த போரை முடிவுக்குக் கொண்டுவர நம்முடைய நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமேனனின் ஆறு அம்சத் திட்டம் பயன்பட்டது.

சூயஸ் கால்வாயை எகிப்து நாட்டுடமை ஆக்கியபோது, பிரிட்டனும் பிரான்சும் அந்த நாட்டின் மீது படை எடுத்தன. 'இது ஆக்கிரமிப்பு’ என்று நேரு கண்டித்தார். பெல்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற காங்கோ உள்நாட்டுப் போரை நிறுத்தியது இந்திய ராணுவம். சீனாவை, ஜப்பான் ஆக்கிரமித்தபோது, இந்தியா கண்டித்தது. மக்கள் சீனக் குடியரசு அமைக்கப்பட்டபோது இந்தியாதான் அதை முதலில் அங்கீகரித்தது. ஐ.நா. சபையில் மக்கள் சீனாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று வாதிட்ட நாடும் இந்தியாதான். அதே சீனா, திபெத் நாட்டை ஆக்கிரமித்தபோது இந்தியா கண்டித்தது. தலாய்லாமா ஆயிரக்கணக்கான கைதிகளுடன் இந்தியா வர அனுமதித்தது. இப்படித் தொடர்ச் சியாக ஏகாதிபத்தியத் தன்மைகளுக்கு எதிராகப் போராடிய பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு.

கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் துணிச்சலான முடிவுகளை இந்திரா எடுத்தார். ராணுவ ஆட்சியில், வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் முழுமையாகப்

பாதிக்கப்பட்டார்கள். பலரும் கொல்லப்பட்டார்கள். சுமார் ஒரு கோடி மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள். ஜெனரல் அரோரா தலைமையில் இந்திய ராணுவத்தை கிழக்கு பாகிஸ்தானுக்குள் விட்டார் இந்திரா. 93 ஆயிரம் வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தார்கள். வங்காளதேசம் என்ற நாடு உருவானது. அமெரிக்காவையும் சீனாவையும் எதிர்த்தே எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இந்தப் பின் புலத்தில்தான், ''இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் பிரச்னை அல்ல. அது இனப்படுகொலை'' என்று இந்திய நாடாளுமன்றத்திலேயே பிரதமர் இந்திரா அறிவித்தார்.

உள்ளூர்த் துப்பாக்கிகளையும், தங்களுக்குத் தெரிந்த தொழில்நுட்ப அறிவுடன் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளையும் வைத்து சிங்கள ராணுவத் துடன் போராடிக்கொண்டு இருந்த போராளி அமைப்புகளுக்கு நவீன ஆயுதங்களையும், உயர்தரப் பயிற்சிகளையும் கொடுத்தது இந்திராதான். தமிழ் நாட்டின் பல்வேறு மலைப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் பயிற்சி எடுத்துக்கொண்டது, பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன்தான் என்பது இன்றைய இளைய தலைமுறை பலருக்கும் தெரியாது.

யாழ்ப்பாணத்துக்குள் தடையை மீறி ஹெலி காப்டரை அனுப்பி உணவுப் பொட்டலங்களைப் போட்டவர் ராஜீவ் காந்தி. தமிழர்கள் உரிமையைக் காக்க ஜெயவர்த்தனாவுக்கு எதிரில் உட்கார்ந்து கையெழுத்துப் போட்டவர். ''அணு ஆயுதங்களை 2010-ம் ஆண்டுக்குள் தடை செய்ய வேண்டும்'' என்று ஐ.நா. பொதுச் சபையில் பேசியவர். தென்ஆப்பிரிக்க நிறவெறியை எதிர்த்தவர். நிறவெறி கொண்ட அந்த நாட்டுடன் வர்த்தகம் கூடாது என்ற முடிவெடுத்த நாடும் இந்தியாதான்.  இப்படி வர்த்தகம் செய்யாத ஆப்பிரிக்க அரசுகளுக்கு உதவ 'ஆப்பிரிக்க நிதி திரட்ட வேண்டும்’ என்று அறிவித்தவரும் ராஜீவ் தான்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து விடுதலை பெறப் போராடிய நமீபியாவின் ஸ்வாபோ இயக்கத்தை இந்தியா ஆதரித்தது. நமீபியா விடுதலை அடைந்தபோது, தான் பிரதமராக இல்லை என்றாலும், ராஜீவ் அந்த விழாவில் பங்கேற்றார். கம்போடியாவை வியட்நாம் ஆக்கிரமித்தபோது, இந்தியா எதிர்த்தது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் இதற்கான முயற்சி எடுத்தார். வியட்நாம் ராணுவம் இறுதியில் வெளியேறியது.

இப்படி நேருவும், இந்திராவும், ராஜீவும் தங்களுக் கென ஒரு கொள்கை வகுத்துக்கொண்டு, அதற்கு எதிரான நாடுகளைக் கண்டிக்கவும் தண்டிக்கவுமான முயற்சிகளில் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய விஷயங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் பூசி மெழுகிவிட்டார் பிரணாப்.

''எந்த ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்தது இல்லை'' என்று

எஸ்.எம்.கிருஷ்ணா சொன்னது நம்முடைய பாரம் பரிய குணாம்சத்துக்கே எதிரானது. 'அநியாயம் எங்கே நடக்கிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்'' என்ற கிருஷ்ணரின் கீதா உபதேசமே நம்முடைய பாரம்பரியம். 'சொந்தச் சகோதரர்களே தவறு இழைத்திருந்தாலும் தண்டனை கொடு’ என்று உபதேசித்தான் கிருஷ்ணன்.

மகாபாரதக் கதையில் மட்டும் அல்ல... மகாவம்சக் கதையில்கூட நாம் பாடம் கற்கத் தயாராக இல்லை என்றால் பழியும் பாவமும் யாருக்கு?

- ப.திருமாவேலன்