Published:Updated:

கடத்தலுக்குக் காரணம் அதிகாரப் போட்டியா?

திகிலில் ஒடிசா

##~##

டிசா மாநிலத்தில் இரண்டு இத்தாலி யர்களைப் பிடித்த மாவோயிஸ்ட்டு கள், இப்போது ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வையும் கடத்தி விடவே, மாநிலமே திகிலில் உறைந்து கிடக்கிறது! 

ஒடிசாவின் ஆன்மிக நகரான பூரியில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 55 வயது பசுஸ்கோ பாலோ மற்றும் 60 வயது கிளாடியோ களங்கிலோ ஆகிய இருவரும் 19 வருடங்களாக சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்கள், கடந்த மார்ச் 15-ம் தேதி காலையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதியான கந்தமால் மாவட்டத்தின் தாரிங்பாடி நதிக்கரையில் உள்ளூர் இளைஞர்களுடன் சிலருடன் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது, திடீரென வந்த மாவோ யிஸ்ட் கும்பல், துப்பாக்கி முனையில் அனைவரையும் கடத்தியது. பிறகு உள்ளூர் இளைஞர்களை விடுவித்து விட்டு, இரண்டு இத்தாலியர்களுடன் தப்பிப் போனது. அந்தக் கடத்தலுக்குப் பொறுப்பு ஏற்ற சுனில் என்கிற சப்யாசாக்சி பாண்டா, 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

கடத்தலுக்குக் காரணம் அதிகாரப் போட்டியா?

ஏற்கெனவே, தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றதற்காக இத்தாலியர்கள் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், மாவோயிஸ்ட்டுகளின் செயல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே இருந்த நல்லுறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், மாவோயிஸ்ட்டுகள் மீதான போலீஸ் வேட்டையை உடனடியாக நிறுத்திய அரசு, பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. அந்தப் பேச்சு வார்த்தை முடிவதற்குள், ஒடிசாவின் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ-வான ஜினா ஹிகாகாவை கடந்த 24-ம் தேதி பணயக் கைதியாகப் பிடித்து விட்டனர்.

ஆந்திர எல்லையில் உள்ள தயாபுட் காட்டுப் பகுதியில் பழங்குடியினர் பகுதியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார் ஜினா.

கடத்தலுக்குக் காரணம் அதிகாரப் போட்டியா?

அப்போது, ஆயுதங்கள் ஏந்திய சுமார் 100 மாவோயிஸ்ட்டுகள் அவரது வாகனத்தை வழிமறித்து சிறைப்பிடித்தனர். ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ-வான ஜினா, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். பழங்குடி மக்களுக்காக பல நற்பணிகள் செய்து, பொதுமக்களின் செல்வாக்கைப் பெற்றவர்.

இந்தநிலையில், கந்தமால் பகுதிக்கு மூன்று பத்திரிகையாளர்களை அழைத்த பாண்டா, கடத்தப்பட்ட இத்தாலியர் களில் கிளாடியோ களங்கிலோவை மட்டும் 11 நாட்களுக்குப் பின் விடுவித்தார். 'நல்லுணர்வு’ வெளிப்படுத்தும் வகையில் விடுதலை செய்யப்பட்டதாக பாண்டா சொல்லி இருந்தாலும், உண்மையில் மாவோயிஸ்ட்டுகளுக்கு இடையே ஏற் பட்ட பிளவுதான் உண்மையான காரணம் என்று சொல்லப்படுகிறது.

''நாடு முழுவதிலும் உள்ள மாவோயிஸ்ட்டுகளில் அதிகாரம் மற்றும் முக்கியப் பொறுப்புக்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். ஐந்து வருடங்களுக்கு முன் மாவோயிஸ்ட்டின் ஒடிசா மாநில அமைப்புச் செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்ட பாண்டா, இதனை மாற்றி அமைக்க முயன்றார். ஆனால், ஆந்திரா மற்றும் ஒடிசா எல்லை யின் சிறப்புப் பிராந்தியக் குழுவின் செயலாளர் ராமகிருஷ்ணா இதை விரும்பவில்லை. அதனால், இருவரின் குழுக்களுக்கு இடையே, யாருக்கு செல் வாக்கு அதிகம் என்பதைக் காட்டுவதில் போட்டி கிளம்பியது.

கடந்த வருடம் பிப்ரவரியில் மல்கான்கிரி மாவட்டக் கலெக்டர் வினில் கிருஷ்ணாவை, ராமகிருஷ்ணா தலைமையிலான குழு கடத்தியது. அப்போது வைக்கப்பட்ட கோரிக்கைகளில் பெரும்பாலானவை,

கடத்தலுக்குக் காரணம் அதிகாரப் போட்டியா?

அரசால் ஏற்கப்பட்டன. இதன்மூலம், அந்தக் குழு அடைந்த செல்வாக்கை, பாண்டா தலைமையிலான குழுவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற் காகவே குறிவைத்து இத்தாலியர்களை பாண்டா குழு கடத்தி உள்ளது.

2010-ல் கைதாகி சிறையில் இருக்கும் தன் மனைவி சுபஸ்ரீயை விடுவிப்பதே பாண்டாவின் முக்கியக் குறிக்கோள். இதைக் குலைப்பதற்காக, கடந்த மார்ச் 22-ல் மல்கான் கிரியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுத் தள்ளியதுடன் எம்.எல்.ஏ-வையும் பணயக் கைதியாகப் பிடித்துவிட்டனர்'' என்கிறார்கள் மாவோயிஸ்ட் தரப்பை நன்கு அறிந்த உள்ளூர்வாசிகள்.

இதுபோன்ற காரணத்துக்காகவே ஜார்கண்ட் மாநிலத்திலும் சில வருடங்களுக்கு முன், மாவோ யிஸ்ட்டுகள் இடையே பிளவு ஏற்பட்டது. அப்போது, தீர்த்தய பிரஸ்துதி கமிட்டி மற்றும் ஜார்கண்ட் பிரஸ்துதி கமிட்டி என்ற பெயரில் புதிய அமைப்புகள் உருவாகின. இதன் பின்னணியில் மத்திய, மாநில அரசுகளின் உளவுப்பிரிவினர் இருப்பதாக மாவோயிஸ்ட்டுகள் குற்றம் சாட்டினாலும், சாதி ஆதிக்கம்தான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதே காரணங்களை வைத்துத்தான் மாவோ யிஸ்ட்டுகளின் தலைவரும், ஆந்திராவைச் சேர்ந்த வருமான கிஷண்ஜியை கடந்த வருடம் மத்திய போலீஸ் சுட்டுத் தள்ளியது. அதனால், பீப்பிள் வார் குரூப் (பி.டபிள்யூ.ஜி), மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் ஆஃப் இந்தியா (எம்.சி.சி.) போன்ற பல்வேறு பெயர்களில் இயங்கிவந்த அமைப்புகள் 2004-ல் சி.பி.ஐ. மாவோயிஸ்ட் என்ற பெயரில் ஒன்று சேர்ந்தன. இப்போது, அவர்களிடையே ஏற்பட்டுள்ள விரிசல், மாவோயிஸ்ட்டுகளின் வலுவை இழக்க வழி வகுத்து உள்ளது.

மத்திய அரசின் உதவி தேவையா என்று ப.சிதம்பரம் போனில் கேட்டபோது, பதில் சொல்லாத ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக், மாவோயிஸ்ட்டுகள் மீதான தாக்குதலை மீண்டும் துவங்க ஆயத்தம் செய்து வருகிறார். அதேநேரம், பாண்டா மற்றும் ராமகிருஷ்ணா குழுக்களை பேச்சுவார்த்தைக்கும் அழைத்துள்ளார்.

ஒடிசாவில் அமைதி மலரட்டும்!

- ஆர்.ஷஃபி முன்னா