Published:Updated:

சாலை மறியலுக்குத் தூக்கு தண்டனையா?

கூடங்குளம் பொய் கேஸ் காட்சிகள்

##~##

சாலை மறியல் செய்தால் தூக்கில் போட முடியுமா? 'முடியும்’ என்கிறது தமி​ழகக் காவல் துறை. கூடங்குளம் போராட்​டத்தில் சாலை மறியல் செய்த 178 பேர் மீது 'நாட்டுக்கு எதிராகப் போர் தொடுத்தார்கள்’ என்று வழக்குப் பதிவு செய்திருக்கிறது போலீஸ். இந்தக் குற்றத்துக்கான அதிகப்பட்சத் தண்டனை... தூக்கு! 

ஆறு மாதங்களுக்கு மேலாக கூடங்குளம் போராட்​டங்கள் தொடர்ந்தபடியே இருக்க, அதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு ஆதரவு முகம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா. அதே நேரம் காங்கிரஸ் அரசின் மத்திய அமைச்சர்களோ, 'விரைவில் அணு உலையைத் திறந்துவிடுவோம். மாநில அரசுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம்’ என்றார்கள். அவர்கள் என்ன 'பேசினார்கள்’ என்பது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே 'அணு உலை திறக்கப்படும்’ என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பில் தெரிந்தது. கூடங்குளத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு போராட்டத்தை முன்நின்று நடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டித்து கூட்டப்புளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அவர்களில் 178 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைத்தது காவல் துறை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சாலை மறியலுக்குத் தூக்கு தண்டனையா?

கைது செய்யப்பட்ட பொதுமக்​களுக்கு ஜாமீன் கேட்டு கடந்த 26-ம் தேதி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அங்குதான் அதிர்ச்சி குண்டு போட்டது போலீஸ். கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசத்துக்கு எதிராகப் போர் தொடுப்பது (121), அதற்குச் சதி செய்வது (121ஏ), போர் தொடுக்கும் நோக்கத்துடன் ரகசியமாக மறைந்திருப்பது (123)

சாலை மறியலுக்குத் தூக்கு தண்டனையா?

ஆகிய பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு செய்து இருந்தது. இதில், 121, 121ஏ ஆகிய குற்றங்களுக்கு அதிகப்பட்சத் தண்டனை... தூக்கு. பிரிவு 123-க்கான அதிகபட்சத் தண்டனை... ஆயுள் சிறை. சாலை மறியல் செய்த மக்களைத் தீவிரவாதிகளைப் போல சித்தரித்து போலீஸ் போட்டிருக்கும் வழக்கு தென் தமிழகத்தின் கொதிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

கூட்டப்புளி மக்களுக்கான ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்து வாதாடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்​பாளர் வழக்கறிஞர் ராஜுவிடம் பேசினோம். ''கூட்டப்புளியில் கைது செய்யப்பட்ட 178 பேரில் 106 பேர் ஆண்கள், 42 பெண்கள், 30 சிறுவர்கள். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு இருக்கும் அந்த 30 சிறுவர்களையும் சேர்த்துத்தான் தேசத்துக்கு எதிராகப் போர் தொடுத்தார்கள் என்கிறது அரசு. உண்மையில் இந்த வழக்கு, போராடும் மக்களை நோக்கி அரசு விடுத்து இருக்கும் வெளிப்படையான எச்சரிக்கை. நீங்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால், எந்த எல்லைக்கும் போவோம் என்ற மிரட்டல். இப்போது அந்தப் பகுதி மக்களின் உண்மையான தலைவலி இந்த வழக்குகள்தான். அவர்கள் யாரும் போராளிகள் இல்லை. அன்றாடங்​காய்ச்சிகள். சாதாரண மக்கள். அவர்களைக் கூடங்குளத்தில் பிடித்து, பாளையங்கோட்டையிலோ, மதுரைச் சிறைக்கோ கொண்டு போகா​மல், திருச்சி சிறையில் அடைப்பதே கொடூரம்.  ஜாமீன் கொடுப்பதற்கும் போலீஸ் ஆட்சேபிக்கிறது. அப்பீலுக்குச் சென்று ஜாமீன் வாங்கினாலும் ஒவ்வொருவருக்கும் இரண்டு பேர் உத்தரவாதம் தர வேண்டும். அதற்கு 356 பேர் கூட்டப்புளியில் இருந்து கிளம்பிப்போக வேண்டும். ஒருவேளை நிபந்தனை ஜாமீன் கொடுத்து ஏதாவது ஒரு ஊரில் தங்கியிருக்கச் சொன்னால், அத்தனை பேரும் கல்யாண மண்டபம் பிடித்தா தங்க முடியும்?'' என்று காட்டமாகக் கேட்கிறார் ராஜு.

கைது செய்யப்பட்டவர்களை சிறையில் சென்று பார்த்தால் தங்கள் மீதும் வழக்குப் போட்டு போலீஸ் கைது செய்துவிடும் என்று உறவினர்கள் அஞ்சுகின்றனர். இதனால் ஏதோ சொத்து தகராறில் கைதானவர்கள் போல சிறையில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இன்னொரு புறம் கூடங்குளம் உண்ணாவிரதம் தொடர்பாக 200-க்கும் அதிகமான எஃப்.ஐ.ஆர்-களைப் பதிவு செய்து வைத்திருக்கிறது போலீஸ். அவை அனைத்திலும் சுப.உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட சில பெயர்களும், கூடவே 'கண்ணால் கண்டால் அடையாளம் சொல்லத்தக்க 2,000 பேர்’ என்ற வாசகமும் இடம் பெற்றிருக்கிறது. 'அந்த வாசகம் மிகவும் அபாயகரமானது’ என்று எச்சரிக்கிறார் ராஜு.

''அந்த 2,000 பேரில் போலீஸ் யார் பெயரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். எந்தக் கேள்வியும் இல்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக தங்களுக்கு டார்ச்சர் கொடுத்தவர்களாக மக்களைப் பார்க்கிறது போலீஸ். இதனால் மேலும் மேலும் பொய் வழக்குகளைப் போட்டு அன்றாட வாழ்க்கையை நாசமாக்குவார்கள். இதை நாம் தடுத்தாக வேண்டும். 'கூடங்குளம் அணு உலைப் பணிகள்தான் ஆரம்பித்துவிட்டதே’ என விரக்தியில் ஒதுங்கிச் சென்றுவிட்டால், அந்த மக்களுக்கு அது பெரும் துன்பமாக முடியும். அந்தப் பகுதி மக்கள் இப்போது வரை மன உறுதி குலையாமல்தான் இருக்கின்றனர். பல்லாயிரம் போலீஸ், ராணுவம், விமானப் படை என அந்தப் பகுதியையே ராணுவமயமாக்கிய பிறகும்கூட, அவர்கள் அஞ்ச வில்லை. ஆனால் அவர்கள் மீது நூற்றுக்கணக்கில் பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளுகிறது போலீஸ். இப்படிப் போராடுபவர்கள் மீது பொய் வழக்குப் போடுவது பிரிட்டிஷ் ஆட்சியின் நடைமுறை. அப்படியானால், இங்கு பிரிட்டிஷ் ஆட்சியா நடக்கிறது? அணு உலைக்கு எதிராகப் போராடுபவர்கள் இந்தப் பொய் வழக்குகளுக்கு எதிராகவும் பேச வேண்டும். இல்லையெனில், போலீஸுக்கு இது ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாக அமைந்துவிடும். பிறகு எந்தப் போராட்டம் என்றாலும், பொய் வழக்கும் சிறையும் வழக்கம் ஆகிவிடும்.

சாலை மறியலுக்குத் தூக்கு தண்டனையா?

இன்னொரு பக்கம் அரசின் தொடர்ச்சியான பொய்ப் பிரசாரம் காரணமாக, கூடங்குளம் தவிர்த்த இதர பகுதி மக்களிடம் இந்தப் போராட்டத்துக்குப் போதுமான ஆதரவு இல்லை. அதனால்தான் 'இப்படிக் கொஞ்சப் பேரைத் தூக்கி உள்ளே போட்டாத்தான் போராடுறவன்லாம் திருந்துவான்’ என்று பலர் பேசுகின்றனர். இது மிகவும் ஆபத்தான பேச்சு... ஆபாசமானதும்கூட. அவர்கள் யாரும் சம்பள உயர்வு கேட்டோ, இலவசங்கள் கேட்டோ போராடவில்லை. கூலி வேலையில் கிடைக்கும் நூறு ரூபாயைக்கூட துறந்துவிட்டு பொது நலனுக்காக ஒன்று சேர்ந்து உள்ளனர். பசி, பட்டினியோடும் உயிர் பயத்தோடும் ஒவ்வொரு நாளையும் கழிக்கின்றனர். இப்போது வழக்குகளும் சேர்ந்துகொண்டுவிட்டன. தங்களின் நிலத்தை, வாழ்வை, எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ள நினைப்பது தவறா? கூடங்குளத்தை நிறுத்தினால், இனி அமைய இருக்கும் அணு உலைகளையும் நிறுத்த வேண்டியிருக்கும். அதனால்தான் அப்பாவி மக்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தேனும் கூடங்குளத்தை செயல்படுத்தத் துடிக்கிறார்கள்!'' என்கிறார் ஆவேசமாக!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்​டத்தில் பங்கேற்பவர்கள், போராட்டத்துக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது, 'தேசத் துரோகம், தேசத்துக்கு எதிரான போரை நடத்துதல்’ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுவது குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான விஜயேந்திர பிதரியிடம் கேட்டதற்கு, ''இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்பதால், இதுபற்றி பேசுவது தவறாகிவிடும். சில பிரிவுகளில் நாங்கள் வழக்குத் தொடர்ந்து இருப்பதற்கான காரணத்தையும் அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்'' என்று சொன்னார்.

கூடங்குளம் சுற்று வட்டார மக்களோ, 'இப்போதே இந்த நிலைமை என்றால், இனிவரும் காலம் எப்படி இருக்குமோ?’ என்ற அச்சத்தில்  இருக்கின்றனர். அணு உலையைச் சுற்றிலும் ராணுவக் கண்காணிப்பு இருக்கும் என்பதால், தங்களின் அன்றாட வாழ்வு கொடுமையான கண்காணிப்பிலும், கட்டுப்பாடுகளிலுமே கழியும் என்பது அவர்களுக்குப் புரிகிறது. எனவேதான் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

- பாரதிதம்பி

 'சாலை மறியலுக்கு எப்படி இந்தப் பிரிவின்கீழ் வழக்கு போட முடியும்?’

 வழக்கறிஞர் ராஜு: ''ஒரு குற்றம் எப்படி செய்யப்படுகிறது என்பதை விட, அதன் நோக்கத்தை வைத்தே குற்றத்தின் தன்மை மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் கூடங்குளம் அணு உலையை இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையதாக பார்க்கிறது மத்திய அரசு. அதனால் அதற்கு எதிராகப் போராடுவது என்பது தேசத்துக்கு எதிராகப் போர் தொடுப்பதற்கு சமம் என்கிறார்கள். ஆகவே ஆயுதம் தூக்கினால்தான் தீவிரவாதி என்றில்லை. சாத்வீகமாக உண்ணாவிரதம் இருந்தால் கூட உங்களை தீவிரவாதியாக சித்தரிக்க முடியும். இதில் இன்னொரு விஷயம், கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிக்கப் போவதாகத்தான் அரசு சொல்கிறது. ஆனால் இப்போது நாட்டின் பாதுகாப்பு என்கிறார்கள். அப்படியானால் உள்ளே தயாரிக்கப்போவது மின்சாரமா, அணுகுண்டா? இந்தக் கேள்வியையும் நாம் எழுப்பியாக வேண்டும்''

 போராட்டம் முடிந்தது... எதிர்ப்பு தொடர்கிறது!

 கூடங்குளம் அணு உலைப் பணிகள் வேகம் பிடித்து இருக்கும் சூழலில், போராட்டக் குழுவினர் தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொண்டுள்ளார்கள்.

சாலை மறியலுக்குத் தூக்கு தண்டனையா?

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்​நிலை மோசம் அடையத் தொடங்கியதால், அவர்களோடு பேச்சுவார்த்​தை நடத்த தமிழக அரசு முன்வந்தது. அதன்படி, கடந்த 27-ம் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், சப்-கலெக்டர் பாஜி பாகரே ரோகினி ராம்தாஸ், காவல் துறை டி.ஐ.ஜி-யான வரதராஜூ, எஸ்.பி-யான விஜயேந்திர பிதரி ஆகியோர் அரசின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டனர். போராட்டக் குழுவின் சார்பில் ராதாபுரத்தைச் சேர்ந்த அரிமா​வளவன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்​பட்டது. ராதாபுரம் தாலுக்கா அலுவலகத்தில் மதியம் 2.15 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை மூன்று மணி நேரம் நீடித்தது.

போராட்டக் குழுவின் சார்பில் ஏழு கோரிக்கைகள் முன்​வைக்கப்​​பட்டன. அதன்படி, 'வழக்குகளை வாபஸ்பெறுவது, சிறையில் இருப்பவர்களை உடனே விடுதலை செய்வது, அணு மின் நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் ஒரு சுதந்திரமான குழுவின் மூலம் கடலியல், நீரியல், நிலவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, அணு உலைக்கு 30 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்குவது, இடப்​பெயர்ச்சிப் பயிற்சி கொடுப்பது, அணுக் கழிவை என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அறிவது மற்றும் ஜனநாயக முறைப்படி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிப்பது’ எனக் கோரிக்கை வைத்தனர்.

இது பற்றி பேச்சுவார்த்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த அரிமாவளவன், ''ராதாபுரம் பகுதியில் போடப்பட்ட 144 தடை உத்தரவை உடனே விலக்கிக்கொள்வதாகச் சொல்கிறார்கள். கூடங்குளம் அணு உலையைச் சுற்றிலும் மட்டுமே அந்த தடை உத்தரவு இருக்கும். மற்ற கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என உத்தரவாதம் தந்திருக்கிறார்கள்'' என்றார்.

பின்னர் இந்தக் குழுவினர், அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து போராட்ட பந்தலில் இருந்தவர்களிடம் தெரியப்படுத்தினர். அதற்குப் பிறகு பேசிய உதயகுமாரன், 'பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிப்பதாக இருப்பதால், சாகும் வரை உண்ணாவிரதம் கைவிடப்படுகிறது. ஆனாலும், சிறையில் இருக்கும் நமது தோழர்கள் அனைவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகே, நாம் அனைவரும் வீட்டுக்குச் செல்வோம். அதுவரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். கடைகள் திறக்கப்பட மாட்டாது. மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்ல மாட்டார்கள். அனைவரும் இந்தப் பந்தலில் கூடி இருப்போம்’ என்று சொன்னதைக் கூட்டத்தினர் ஆரவாரத்தோடு ஏற்றுக்கொண்டனர்.

நம்மிடன் பேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், ''30 கி.மீ. தூரத்துக்குப் பேரிடர் மேலாண்மை பயிற்சி கேட்பதால், அணு உலையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. அந்தப் பயிற்சி கொடுக்கும்போது, சைரன் அடித்ததும் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு, உடனடியாக ஓடுவதற்கான பயிற்சி கொடுப்பார்கள். பணம், பொருள் என எதையும் எடுக்க அவகாசம் இல்லாமல் ஓட வேண்டிய நிலைமை வரும். அதனால் இந்தப் போராட்டம் இன்னும் பல கிராமங்களுக்குத் தானாகவே பரவும். பிறகு அவர்களும் எங்களோடு சேர்ந்து போராட்டத்தில் குதிப்பார்கள். .அதனால்தான் அந்தப் பயிற்சியைக் கேட்கிறோம்.

நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தை நிறுத்தி இருக்கிறோமே தவிர, எங்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. அணு உலையை நிறுத்தும் வரை ஜனநாயகத்துக்கு உட்பட்டு எங்கள் போராட்டம் பல வடிவங்களில் தொடரும்'' என்றார் உறுதியுடன்.

இதனிடையே, கூடங்குளத்தைச் சுற்றிலும் இருக்கும் கிராமங்களில் வளர்ச்சிக்காக, தமிழக அரசு 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. அதனை விரைவாகச் செலவு செய்து மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது.  

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார், எம்.ஆர்.முத்துராஜ்