Published:Updated:

'அத்தை'க்கு வெற்றி!

மிரளும் மியான்மர்

##~##

மியான்மர் நாட்டில் இருந்து வந்திருக்கும் செய்தியைக் கேட்கும்போது சிலிர்ப் பாக இருக்கிறது. எந்த அதிகார வர்க்கம் அந்தப் பெண்மணியை வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது என்று தடை விதித் ததோ... அதே பெண்மணி இன்று நாட்டுத் தலைவராக எழுந்து நிற்கிறார்! 

ஏறத்தாழ 20 ஆண்டு காலமாக வீட்டுச் சிறையில் இருந்த ஆங் சான் சூகி... இப்போது வெற்றித் தலைவியாக வலம் வருகிறார்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சூகியின் தந்தையான ஆங் சான், பிரிட்டிஷாருக்கு எதிராக பர்மா ஆர்மியை உருவாக்கியவர். வரலாற்றுக் காலம் தொடங்கி சீனர்களும் மங்கோலியர்களும் சுரண்டிய மிச்சமாக இருந்தாலும், இயற்கை வளத்துக்குப் பஞ்சம் இல்லாத நாடு பர்மா. பூமிக்கு மேலே, வைரம் பாய்ந்த தேக்கு மரங்கள் என்றால், பூமிக்குக் கீழே வைரங்கள். 1885-ல் பிரிட்டி ஷாரின் காலனியாக, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தபோதுதான், பிரிட்டனுக்கு எதிராகக் களத்தில் குதித்தார் கல்லூரி மாணவராக இருந்த ஆங் சான். இரண்டாம் உலகப்போர் நடந்த நேரம். கம்யூனிஸ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவராக இருந் தாலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் போர்த் தந்திரத்தோடு பிரிட்டனை எதிர்க்க ஜப்பானின் உதவியை நாடினார் ஆங் சான். பிரிட்டனைத் துரத்தியதும் ஆட்சியை உங்களி டம் ஒப்படைப்போம் என்று சொல்லி இருந்தது ஜப்பான். ஆனால், அந்தப் போரில் ஜப்பான் அடிவாங்கியதால், சுதந்திரம் கிடைக்க வில்லை.

'அத்தை'க்கு வெற்றி!
'அத்தை'க்கு வெற்றி!

பிரிட்டன் தன் காலனி ஆதிக்கத்தை விலக்கிக்கொள்ள முடிவெடுத்தபோது, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற் றோடு பர்மாவும் சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டது. 1947-ல் பர்மாவின் முதல் அதிபராகப் பதவியேற்க இருந்த நேரத்தில், எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் ஆங் சான். அப் போது ஆன் சான் சூகிக்கு வயது இரண்டு.

அப்பா பெயரான ஆங் சாம், பாட்டியின் பெயரான சூ, அம்மாவின் பெயரான கின்கி... இந்த மூன்றையும் இணைத்துக்கொண்டு ஆங் சான் சூகி ஆனார்!

ஆங் சான் சூகியின் தாய், பர்மாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். அதனால் தன் மூன்றாவது வயதிலேயே தன் தாயுடன் இந்தியாவுக்கு வந்து சிம்லாவிலும் டெல்லி யிலும் பள்ளிப் படிப்பை முடித்தார் சூகி.

அதன் பிறகு, லண்டனில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை கல்லூரியில் முக்கியப் பாடங்களாக முடித்தார். ஐ.நா-வில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தார். இந்தக் காலக்கட்டத்தில் மியான்மர் என்று பெயர் மாற்றப்பட்ட பர்மாவில் சர்வாதிகார ஆட்சி தொடங்கியது. 1962-க்குப் பிறகு கொடூரமாக நடந்து கொள்ளத் தொடங்கினார் அதிபர் நீ வின்.

பிரிட்டிஷ்காரரான மைக்கேல் ஏரிஸ்ஸை மணந்த ஆங் சான் சூகிக்கு இரண்டு மகன்கள். மூன்று வயதில் பர்மாவை விட்டுச் சென்ற சூகி, 1988-ல் தாய் நாட்டைப் பார்க்க... இல்லை இல்லை.. உடல் நிலை சரியில்லாமல் இருந்த தாயைப் பார்க்க வந்த நேரத்தில் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சூகிக்கு மட்டும் அனுமதி கொடுத்துவிட்டு கணவருக்கும் இரண்டு மகன்களுக்கும் குடியுரிமை தர மறுத்தது ராணுவம். சர்வாதிகார அரசாங்கத்தின் கொடுமையைக் கண்டு ஆத்திரம் அடைந்தார் சூகி.

அதே ஆண்டில் 8-வது மாதம் 8-ம் தேதி மியான் மரில் ஜனநாயகம் வேண்டி மிகப்பெரிய புரட்சி வெடித்தது. அந்த மகத்தான '8888’ போராட் டத்தில் கலந்துகொண்டார் சூகி. அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட புரட்சி அது.

ராணுவத்தின் பிடி இறுகியது. சூகியை வீட்டுச் சிறையில் வைத்தது. 90-ம் ஆண்டில் அவருடைய தேசியக் குடியரசுக் கழகத்தினர் மகத்தான வெற்றி பெற்றபோதிலும், அவரிடம் ஆட்சியை ஒப்படைக் காமல் வீட்டுச் சிறையிலேயே வைத்தது. 86 சதவிகித ஓட்டுகள் பெற்றிருந்த நிலையிலும், 'தேர்தலில் தில்லுமுல்லு நடந்துவிட்டது’ என்று சொன்னது ராணுவம். ராணுவத்தின் அதிகாரத்துடன் நடந்த தேர்தல் வெற்றி குறித்து, இப்படி ஒரு காரணம் சொல்லப்பட்டதைக் கண்டு உலகமே அதிர்ந்தது. இது போதாது என்று தேர்தலில் வென்ற பலருக்கும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் கிடைத்தது.

'அத்தை'க்கு வெற்றி!

அடுத்த ஆண்டு, சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. வீட்டுச் சிறையில் இருந்த சூகிக்குப் பதிலாக, அவருடைய மூத்த மகன் அலெக்ஸாண்டர் நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார். கணவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு, லண்டனில் உயிருக்குப் போராடியபோதும் ஆங் சான் சூகிக்கு வீட்டுச் சிறையில் இருந்து விடுதலை கிடைக்கவில்லை. ஐ.நா. சபையின் கோபி அன்னான், போப் ஆண்டவர் போன்ற பலரும் வேண்டுகோள் விடுத்தும், சர்வாதிகார அரசு அசைந்து கொடுக்கவே இல்லை. கடைசிவரை சூகியைச் சந்திக்காமலேயே இறந்து போனார் ஏரிஸ். அதன்பிறகு சூகி இங்கிலாந்து செல்வதற்கு, 'திரும்பி வரக்கூடாது’ என்ற நிபந்தனையுடன் அனுமதி கிடைத்தது. ஆனால், தாய் நாட்டைவிட்டுப் போக மாட்டேன் என்று உறுதியுடன் மறுத்து விட்டார் சூகி. 'ஊழலுக்குக் காரணம் அதிகாரம் அல்ல... அச்சமே. பதவியை இழந்து விடுவோமோ என்ற அச்சமே அதை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களைச் சீர்குலைக்கிறது’ என்ற சூகி உரத்துச் சொன்னது, உலக அளவில் கவனிக்கப்பட்டது.

'மக்களுக்குத் தேவையானது என்ன என்பதை மிகக் கடைசியாக உணர்கிற விஷயத்தில் அரசியல் வாதிகள் அடிக்கடி ஆச்சர்யப்படுத்துகிறார்கள்’ என்பதுபோன்ற ஆவேச வார்த்தைகளுக்குச் சொந்தக் காரராக இருந்தாலும், சூகி அவரது தந்தையைப் போன்று ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவானவர் அல்ல. அவருடைய பாணி காந்தியப்பாதை. சிறையில் இருந்தபடியே ஆட்சியாளர்களை மிரளவைத்த தலைவர்களில் மண்டேலாவுக்குப் பிறகு, ஆங் சான் சூகிக்கு முக்கிய இடம் உண்டு.

கடந்த திங்கள்கிழமை, மியான்மரில் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. 44 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 43 தொகுதிகளில் வென்றிருக்கிறது சூகியின் கட்சி. (கடந்த தேர்தலை அவர் புறக்கணித்து விட்டார்!) இத்தனைக்கும் ஓட்டுப் போடப் போன மக்களுக்குப் பல வகையில் அச்சுறுத்தல் கொடுத்தது அரசு. ஓட்டு போட்டதும் அழிப்பதற்கு வசதியாக, ஓட்டுச்  சீட்டில் மெழுகு தடவி வைத்திருந்தது. இத்தனை திருவிளையாடல்கள் நடத்தியும் தோற்றுப்போனது அரசு. எல்லாவற்றையும் மீறி ஜனநாயகம் வெற்றி அடைந்து இருக்கிறது. ஆனாலும், இன்னமும் அசைந்து கொடுக்காத ராணுவ ஆட்சியின் மீது அத்தனை நாடுகளும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அதனால், உலக நாடுகள் மியான்மருக்குப் பொரு ளாதார நெருக்கடிகளைக் கொடுத்து எச்சரித்து இருக்கின்றன.

மியான்மரில் சூகியை 'டாவ்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். அதற்குத் தமிழ் அர்த்தம், 'அத்தை’. மியான்மர் மக்களுக்கு அத்தையாகிப்போன சூகிக்கு இப்போது வயது 66. மியான்மர் மட்டுமின்றி உலக மக்களின் ஆதரவையும் அன்பையும் அளவுக்கு அதிகமாகவே பெற்று இருந்தாலும், இன்னமும் அவருக்குத் துணையாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதன் பெயர்... தனிமை.!

- தமிழ்மகன்

 திருத்தம்

கடந்த 25.3.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியான ஒரு துணுக்கைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன் நமக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் நான் தமிழக உளவுத் துறையில் ஐ.ஜி.யாக இல்லை’ என்றும், 'குறிப்பிட்ட செய்தி சக அதிகாரிக்கும் எனக்கும் இடையே விரோதத்தை உண்டாக்கும் வகையில் இருக்கிறது’ என்றும் கூறுகிறார். அந்தச் செய்தி தன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உளவுத் துறையில் டி.ஐ.ஜி.யாக மட்டுமே ஏ.கே.விஸ்வநாதன் இருந்தார் என்ற திருத்தத்தை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் எண்ணம் நமக்கு இல்லை!

- ஆசிரியர்