Published:Updated:

''நீங்க நல்லா இருக்கணும்!''

-நெகிழ்ந்து உருகிய செம்மங்குப்பம்

''நீங்க நல்லா இருக்கணும்!''

'தானே’ தாண்டவத்தின் கோரப் பிடியில் சிக்கி, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. சொல்லொணாத் துயரத்துக்கு ஆட்பட்ட அம் மக்களின் துயர் துடைக்கும் பொருட்டு 'டாக்டர் விகடன்’ சார்பில், தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. 

புயலால் பாதிக்கப்பட்ட - மருத்துவத் தேவை அதிகம் உள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் சேவையை வழங்கிவருகிறது விகடன் குழுமத்தின், தானே துயர் துடைப்பு அணி. பத்திரக்கோட்டை, அரசடிக்குப்பம் புதூர் ஆகிய கிராமங்களைத் தொடர்ந்து கடலூர் அருகே தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் உள்ள செம்மங்குப்பம் கிராமத்தில், மருத்துவ முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்முடன் சேர்ந்து உதவ புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (பிம்ஸ்) மருத்துவமனையும் முன்வந்தது.

கடந்த 25-ம் தேதி மருத்துவ முகாமை நடத்தி முடித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில், 19 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 32 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஆர்வத்துடன் முகாமில் பங்கேற்றனர். இந்த முகாமுக்குத் தேவையான மருந்துகளை சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள பிரபா மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் ஆர்.நெடுஞ்செழியன் மற்றும் என்.பிரபாகரன் ஆகியோர் அளித்திருந்தனர்.

''நீங்க நல்லா இருக்கணும்!''

செம்மங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், காலை 8.30 மணிக்கெல்லாம் மக்கள் முகாமுக்கு வர ஆரம்பித்தனர். பெயர்ப் பதிவு முடிந்து சிகிச்சைக்காக ஒவ்வொரு நபராக மருத்துவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டனர். முகாமில், ரத்தத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தம், மற்றும் ஈ.சி.ஜி. ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கண், காது - மூக்கு - தொண்டை, மன நலம், மகளிர் மற்றும் மகப்பேறு, குழந்தைகள் நலம், சரும நோய்கள், பொது மருத்துவம், எலும்பு, அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மருத்துவ முகாமில், ஓர் இளம்பெண்ணைப் பரிசோதித்த டாக்டர்கள் நாகராஜ் மற்றும் புவனேஷ்வரி, அந்தப் பெண்ணுக்கு 'டவுண் சிண்ட்ரோம்’ என்ற நோய் இருப்பதைக் கண்டறிந்தனர். அதாவது வளர்ச்சிக் குறைபாடு, மன வளர்ச்சிக் குறைவு, பேச்சுத் திறன் குறைவு, கண் பார்வையில் குறைபாடு எனப் பல்வேறு பிரச்னைகள்... இந்த நோய் உள்ளவர்களுக்கு இதயத்தில் துளை, ரத்தப் புற்றுநோய் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதையும் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், அந்தப் பெண்ணுக்குத் தங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்தவர்கள், சிகிச்சையின் முக்கியத்துவம்குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினர்.

நம்மிடம் பேசிய அந்தப் பெண்ணின் அம்மா, ''இவ்வளவு நாள் எங்க பொண்ணுக்கு என்ன செய்றதுன்னு தெரியாமல் இருந்துட்டோம். எங்களுக்கும் வயசாகிடுச்சு. இதுக்கு மேல எப்படி இந்தப் பெண்ணைக் காப்பாத்துறதுன்னு பயத்தில் இருந்தோம். டாக்டரே இவ்வளவும் செய்றேன்னு சொல்றப்ப அந்தப் பயம் எல்லாம் போயிடுச்சு. இப்போதான் கொஞ்சம் நிம்மதி. வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிட்டு, மாத்துத் துணி எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரி போறேன். ரொம்ப நன்றிய்யா'' என்று கை கூப்பி நெகிழவைத்தார்.

முகாமில், சிக்கலானப் பிரச்னை உள்ளவர்களை பிம்ஸ் மருத்துவமனைக்கு நேரடியாக அழைத்துச் சென்று சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளையும் மருத்துவமனை நிர்வாகம் செய்திருந்தது. மருத்துவர்களின் கனிவானப் பேச்சு, அக்கறையோடு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள், இலவச மருந்துகள் எல்லாமும் சேர்ந்து கிராம மக்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டன. உரிமையோடு டீ, காபி சாப்பிடச் சொல்லி தங்கள் வீடுகளுக்கு அழைத்தவர்கள், கண்கள் கலங்க 'நீங்க நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்திச் சென்றனர்.

முகாமில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு, தீவிர சிகிச்சை தேவை என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அடுத்த முகாம் விரைவில் பண்ருட்டி அருகில் நடைபெற உள்ளது.

- விகடன் 'தானே’

துயர் துடைப்பு அணி