Published:Updated:

பரவுகிறது 'பச்சோந்தி' வைரஸ்!

பன்றிக் காய்ச்சல் பீதியில் தமிழகம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

கோடையின் வெப்பம் மக்களை ஒருபுறம் வாட்டி வதைக்க... மறுபுறம் பன்றிக் காய்ச்சல் பீதியும் மக்களை மிரட்டுகிறது. இன்ஃபுளூயன்ஸா 'ஹெச்1 என்1’ என்ற வகை வைரஸ் கிருமிகளால்  ... பன்றிக் காய்ச்சல் ஏற்படுகிறது. 

வழக்கமாக குளிர் காலத்தில்தான் இந்த வகைக் காய்ச்சல் மனிதர்களைத் தாக்கும். இப்போது, கோடைக் காலத்திலும் பரவத் தொடங்கி இருக்கிறது. ''பச்சோந்தி போல தனது கேரக்டரையே அந்த வைரஸ் மாற்றிக் கொண்டுவிட்டது. அதன் ஜீன்களில் ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனால்தான், குளிர்காலத்தில் இருந்து கோடை காலத் துக்குத் தாவி விட்டது'' என்கிறார் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

பரவுகிறது 'பச்சோந்தி' வைரஸ்!

90 வருடங்களுக்கு முன்பே மெக்ஸிகோ நாட்டில் பன்றிகளிடம் வைரஸ் தாக்குதல் தென்பட்டது. பின்னர், அந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கியது. அதை அடுத்து, அந்த நாட்டு மக்களில் பலரும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பயன் அளிக்காமல் இறந்தனர். அதில் இருந்து, அந்தக் காய்ச்சலை பன்றிக் காய்ச்சல் என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். நல்ல ஆரோக்கியமான மனிதர்களை இந்த வகை வைரஸ் அதிகம் தாக்காது. அதே நேரம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள், குழந்தைகளை உடனே தாக்கும். அவர்கள் மூலம் மற்றவர்களையும் வெகு சீக்கிரத்தில் தொற்றிக்கொள்ளும்.  

கடந்த மூன்று மாதங்களாகவே, தமிழகத்தின் ஒருசில இடங்களில் மக்கள் திடீர் காய்ச்சலால் அவதிப்பட்டனர். காய்ச்சலின் தாக்கம் குறையாமல் போகவே, நாளா வட்டத்தில் பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என்று கவலைப்பட்டனர்.  மருத்துவத் துறையின் கணக்குப்படி, தமிழகத்தில் இதுவரை சுமார் 40 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். சளி, இருமல், தலைவலி, தொடர் காய்ச்சல் இருப்பவர்கள், தங்களுக்கு பன்றிக் காய்ச்சல் வந்துவிட்டதா என்ற சந்தேகத்துடன் மருத்துவமனைகளை நோக்கிக் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஏப்ரல் 9-ம் தேதி வரை பன்றிக் காய்ச்சல்

பரவுகிறது 'பச்சோந்தி' வைரஸ்!

அறிகுறியுள்ள  பொதுமக்கள் யாரும் வரவில்லை. இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு முன்கூட்டியே தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது. காய்ச்சலுடன் வருகிறவர்களின் உறவினர்களுக்கும்கூட இதே மாதிரி தடுப்பு ஊசி போடக் காத்திருக்கிறார்கள்.

மருத்துவமனையின் டீன், டாக்டர் கீதாலட்சுமியிடம் பேசியபோது, ''2009-ல் பறவைக் காய்ச்சல் பரப்பும் வைரஸும் பன்றிக் காய்ச்சல் பரப்பும் வைரஸும் இணைந்து புதுவித காம்பினேஷனில் இன்புளூயன்சா 'ஹெச்1 என்1’ என்கிற புதுவித வைரஸ் உருவானது. அடிப்படையில், பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு வைரஸ் பரவியதால்,

பரவுகிறது 'பச்சோந்தி' வைரஸ்!

இதையும் பன்றிக்காய்ச்சல் என்றே மக்கள் சொல்கிறார்கள். தொடர் காய்ச்சல், வாந்தி, பேதி, மூச்சுத்திணறல், தலைச் சுற்றல் போன்றவைதான், இந்தவகை வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள். வைரஸின் தன்மை அடிக்கடி மாறக்கூடியது. அப்படி மாறும்போதெல்லாம் அதற்குத் தகுந்தாற்போல தடுப்பு சிகிச்சை முறையையும் மருத்துவத் துறையினரால் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.

இப்போது கோடையில் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு மாத்திரைகளைக் கொடுத்து வருகிறோம். ஒருமுறை தடுப்பு ஊசி போட்டுக்கொண்டால், நிரந்தரமாகக் காய்ச்சல் வராது என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. அடுத்தடுத்து வைரஸின் மாறுபடும் தன்மைக்கு ஏற்ப தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டவர்கள், வெளியில் நடமாடாமல் வீட்டுக்குள்ளேயே இரண்டு நாட்கள் முடங்கி இருப்பது நல்லது.

சளி, தும்மல், இருமல் மூலம் அருகில் இருப்பவர்​களுக்கு இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டது. அதனால் வெளியே வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மூக்கு, வாய் ஆகியவற்றைத் துணியால் கட்டிக்கொண்டு நடமாட வேண்டும். பொதுவாகவே, வெளியே சென்று வீடு திரும்புபவர்கள், வீட்டுக்குள் நுழைந்தவுடன் சோப்புத் தண்ணீரால் கைகளை நன்றாகக் கழுவினாலே, கிருமிகள் தொல்லை ஒழியும். இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் தீரா நோய் உள்ளவர்கள்  கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்கிறார்.    

தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் பொற்கைப் பாண்டி​யனிடம் பேசியபோது, ''இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பன்றிக் காய்ச்சலுடன் ஏழு பேர் வந்தார்கள். படிப்படியாக அதிகரித்து, இந்த மாதம் 32 பேருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. புனே, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இப்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. அங்கே இருந்து இங்கே வருபவர்கள் மூலம் தமிழகத்திலும் இந்தக் காய்ச்சல் பரவுகிறது. எங்களைப் பொறுத்த வரையில், இது சாதாரண ஃப்ளூ காய்ச்சல்தான். டாமி ஃப்ளு மாத்திரைகள் சாப்பிட்டாலே சரி ஆகும். ஆனால், நாள்பட்ட காய்ச்சல் உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்து முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால், நுரையீரலைப் பாதித்து இறப்பு வரை போகக்கூடும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போர்க்கால ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. போதுமான மாத்திரைகள், தடுப்பு ஊசிகள், பரிசோதனைக் கூடங்கள் எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன. அதனால் மக்கள் பீதி அடையத் தேவை இல்லை'' என்றார்.

பொதுமக்களும் அரசும் இணைந்து இந்தக் காய்ச்சலை எதிர்கொள்ள வேண்டும்!

- கனிஷ்கா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு