Published:Updated:

தண்ணீர்ப் போராளி

எட்டு ஆண்டுகளாக மெளனப் போராட்டம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

முனிவரைப் போன்ற நரைத்த சிண்டு, ஜிப்பா, நைந்துபோன வேட்டி, சால்வை, கழுத்தைத் தழுவும் தாடி, கைகளில் புரட்சி கக்கும் புத்தகங்கள், காலணியைக் கண்டிராத காய்த்த பாதங்கள் - இப்படிப்பட்ட தோற்றத்துடன் ஒருவரை, பெங்களூருவில் நடக்கும் போராட்டங்களில் முதல் வரிசையில் நிச்சயம் காணலாம். அவர் பெயர் அம்ருத் அம்ரோஸ்! 

பேசாமல் இரண்டு நிமிடங்கள் இருந்தாலே நம்மில் பலருக்குத் தலை வெடித்துவிடும். ஆனால் இவர் எட்டு ஆண்டுகளாக வாய் திறந்து பேசாமல், மௌனப் போராட்டம் நடத்தி வருகிறார். இயற்கை தரும் பெரும் கொடையான தண்ணீரை, காசுக்கு விற்றுக் கொழுக்கும் பண முதலைகளுக்கு எதிராகத்தான் இந்தப் போராட்டம்.

ஆமோதிப்பு, கடுங்கோபம், சத்தமில்லா சிரிப்பு, சைகைகள், காகிதத்தில் கிறுக்கல்களாக அம்ருத் தெரிவித்ததை, வார்த்தைகளாகத் தருகிறோம்.

தண்ணீர்ப் போராளி

''என் மூதாதையர்களின் ஊர் தருமபுரி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூருதான். எனக்குக் கல்யாணம் செய்து​கொள்ளப் பிடிக்கவில்லை. போராட்டம், ஆர்ப்​பாட்டம், பொதுக்கூட்டம் என்றே இப்போது 57 வயதாகி விட்டது. நானே போய் யாரிடமாவது, 'நான் தமிழன்’ என்று சொன்னாலும் நம்ப மாட்​டார்கள். அந்த அளவுக்கு கன்னடத்தின் மீது காதல். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் (கன்னடம்) எம்.ஏ. படித்திருக்கிறேன். வயிற்றை நிரப்புவதற்காக முற்போக்குப் புத்தகங்களை மட்டுமே விற்கிறேன். 1,000 சொற்களைவிட, அமைதி அசுர பலம் வாய்ந்தது என்பதை உறுதியாக நம்புபவன். அதனால்தான், இந்த மௌன விரதம்.

மார்ச் 1, 2003. மதியம் கடும் வெயில். ரோட்டோரம் படுத்தவாறு, பக்கத்தில் கட்டட வேலை செய்தவர்களைப் பார்த்துக்கொண்டு இருந்​தேன். அனல் வெயிலில்... தகர ஷீட்டுகளுக்கு அடியில் எட்டு மாதக் குழந்தை கேவிக்கேவி அழுதது. பால் இல்லை. அந்த ஏழைத் தகப்பன் பக்கத்து வீட்டில் ஓடிப்போய் தண்ணீர் கேட்டதற்கு தர மறுத்து விட்டாள் ஒரு பணக்காரி. கடைக்குப் போய் தண்ணீர் கேட்டால், 20 ரூபாய் கேட்கிறான். நாள் முழுக்க வேலை செய்தாலே 70 ரூபாய் சம்​பளம்தான். அவன் எப்படி 20 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்குவான்? இந்தக் கொடூரக் காட்சிதான் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக, அமைதியை ஆயுதமாக ஏந்த வைத்தது.

நான் சார்ந்திருந்த கர்நாடக விவசாய அமைப்பின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, நீதிமன்றத்தில் வழக்கும் போட்டோம். எதிர்ப்புகளை மீறி ஊர்தோறும் துண்டு அறிக்கைகள் கொடுத்தோம். ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். மினரல் வாட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, எங்கள் தலைவரே (நஞ்சுண்டேஸ்வரன்) வாட்டர் பாட்டிலில் நீர் குடித்ததைப் பார்த்து ஆத்திரம் அடைந்து விட்டேன். ஒரு பேப்பரில், 'காசு கொடுத்து வாங்கிய நீரைக் குடிக்கவே மாட்டேன் என சொன்னீர்களே? நீங்கள் செய்வது சரியல்ல!’ என்று எழுதி நீட்டினேன். அவர், ஆத்திரத்தில் என்னை அறைந்து விட்டார்.

பிறகுதான், தனித்துப் போராட ஆரம்பித்தேன். டெல்லி, மும்பை, சென்னை, மதுரை நகரங்களுக்குச் சென்று  மக்களைச் சந்தித்து இதுபற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன்.

இயற்கையின் படைப்பில் காற்றும் நீரும் பொது​வானவை. இவற்றை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அப்படிப்பட்ட நீரை பாட்டிலில் அடைத்துக் கொழுக்கிறார்கள் பண முதலைகள். காவிரி நீரை எடுத்து 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரைக்கும் லேபிளை மாற்றி மாற்றி விற்கிறார்கள். ஆனால் தீவனம், புண்ணாக்கு, தவிடு எல்லாம் போட்டுச் கறக்கிற, உயிர் காக்கும் பாலின் விலை 15 ரூபாய். மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு ஒரு நியாயம்... மாட்டுக்காரனுக்கு ஒரு நியாயமா? இந்தக் கொடுமைகளை அரசாங்கம் தட்டிக்கேட்காமல் இருப்பது பெருங்கொடுமை!  

50 வருடங்களுக்கு முன்னால் யாராவது தண்ணீர் குடித்துச் செத்துப்போனார்களா? 'மினரல் வாட்டர்’ என்று கெமிக்கல் தண்ணீரைக் குடித்து உத்தரப் பிரதேசத்தில் செத்துப்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உயிர்களுக்கு யார் பொறுப்பு? முன்பு 10 அடி தோண்டினாலே, தண்ணீர் கிடைக்கும். இப்போதோ 1,000 அடிக்கும் கீழே போனாலும், நீர் இல்லை. நீருக்காக அண்டை மாநிலங்களோடு சண்டை போடும் சூழல். அதற்குக் காரணம் காசுக்காகத் தண்ணீரை விற்கும் மல்டிநேஷனல் நிறுவனங்களும், நம் ஊர் தனியார் நிறுவனங்களும்தான்.

'இப்படியே பேசாமல் இருந்தால் ஊமையாகி​விடுவாய்’ என்று என் பால்ய நண்பர் எச்சரித்தபோது, 'இந்தப் போராட்டத்துக்காக நான் ஊமையானால் மகிழ்ச்சி’ என்று சொல்லி விட்டேன். இன்று, 'போராட்டங்களே பப்ளிசிட்டிக்காகத்தான்’ என்ற தோற்றம் உருவாகி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிடுகிற எனக்குப் பணமும் தேவை இல்லை, விளம்பரமும் தேவை இல்லை. ஆனால், நான் போராடுகிற விஷயத்துக்கு நிச்சயம் விளம்பரம் தேவை. ஒரு வேளை நான் வாழும் காலத்திலேயே காசுக்குத் தண்ணீரை விற்கும் முறைக்கு முடிவு வராமல் இருக்கலாம். ஆனால், என் சாவுக்குப் பிறகு, நிச்சயம் வாட்டர் பாட்டில்களுக்கு பால் ஊற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' என்கிறார்.

அம்ருத் உறுதி வெல்லட்டும்!

- இரா.வினோத்

படம்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு