Published:Updated:

அடுத்தடுத்து ஆறு முறை நில நடுக்கம்!

அடுத்தடுத்து ஆறு முறை நில நடுக்கம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

'விட்டாச்சு லீவு...’ என்று, விபரீதம் புரியாமல் கடந்த 11-ம் தேதி மதியமே துள்ளிக் குதித்துக் கிளம்பினார்கள். யார்...?

சென்னை பள்ளிக் குழந்தைகள்தான். நில நடுக்கம் உணரப்பட்டதுமே சென்னை முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. நில நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத குழந்தைகள்,

அடுத்தடுத்து ஆறு முறை நில நடுக்கம்!

சந்தோஷமாக ஓடினார்கள். வீதி யெங்கும் பெரியவர்கள் பயந்த விழிகளுடன் வீட்டுக்கு வெளியே நிற்பதைக் கண்டபிறகுதான் குழந்தைகளுக்கும் பயம் வந்தது.

முன்பெல்லாம் நிலநடுக்கம் எப்போதாவது வரும் என்றாலும், பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்புக்குப் பிறகு தலைகீழாகி விட்டது நிலைமை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும், அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்தையும் வீட்டையும் விட்டு ரோட்டுக்கு மக்கள் ஓடி வந்து விட்டார்கள்.

அடுத்தடுத்து ஆறு முறை நில நடுக்கம்!

வாரத்துக்கு இரண்டு முறையாவது நிலநடுக் கத்தைச் சந்திக்கும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த புதன்கிழமை மதியம் 2.05 மணிக்கு சுமார் 8.5 ரிக்டர் அளவுக்கு (2004-ல் 9.3 ரிக்டர்) நில நடுக்கம் பதிவானது. இதையடுத்து, இந்தியாவின் பல மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள அத்தனை நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, புவியியல் ஆராய்ச்சி மையம் சார்பில் இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அதுவும், 'மாலை 5 மணி அளவில் சென்னை உள்ளிட்ட கடலோர நகரங்களை சுனாமி பேரலைகள் தாக்கும்’ என்று எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் அதிர்ந்து நின்ற நேரத்தில், நல்லவேளையாக உடனடியாக அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

அடுத்தடுத்து ஆறு முறை நில நடுக்கம்!

இந்நிலையில், சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் மாலை 3.57-க்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம், 6.2 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்டது. இதனையும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் உணரமுடிந்தது. அடுத்தடுத்து தொடர்ந்து ஆறு முறை நில நடுக்கம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கவே, மக்கள் வீட்டுக்கும் போகமுடியாமல் ரோட்டிலும் நிற்க முடியாமல் அவஸ்தைப்பட்டனர். அடுத்தடுத்து சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைக் கண்டு, புவியியல் ஆராய்ச்சியாளர்களே சற்று நடுங்க ஆரம்பித்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், நான்கு முறைக்கு மேல் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் இல்லையாம்.

  கடற்கரை காலி

சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து, மெரீனா தொடங்கி கடலூர், புதுவை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இருந்த மக்களை, போலீஸார் அதிரடி யாக வெறியேற்றினர். அடுத்த அரை மணி நேரத்தில் கடற்கரைப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இரவு வரை சகஜ நிலைக்குத் திரும்பவே இல்லை.

கூடங்குளம் அதிர்ச்சி

அடுத்தடுத்து ஆறு முறை நில நடுக்கம்!

சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளை அதிரவைத்த நிலநடுக்கம், கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் விட்டு வைக்கவில்லை. அணு உலையைச் சுற்றிலும் வசிக்கும் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடிந்தகரை மக்களும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். கூடங்குளம் அணு உலையில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அத்துடன், சுனாமி ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விஞ்ஞானிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அதனால், கூடங்குளம் பகுதி மக்கள் ஏகமாய் அதிர்ந்து போனார்கள். மக்கள் மிரட்சியைக் கண்ட அணு உலை நிர்வாகத்தினர், 'வழக்கமான ஆலோசனையில்தான் விஞ்ஞானிகள் ஈடுபட்டார்கள். சுனாமி அல்லது நிலநடுக்கம் தொடர்பான மீட்டிங் இல்லை’ என்று தாங்களாகவே முன்வந்து விளக்கம் அளித்தார்கள்.

நில நடுக்கத்துக்குப் பிறகு, கூடங்குளத்துக்கு அருகில் உள்ள பணகுடி கிராமத்தில் இருக்கும் ராமலிங்கசுவாமி கோயிலின் தெப்பக் குளத்தில் தண்ணீர் திடீரென்று மூன்று அடி உயரத்துக்கு உயர்ந்து நின்றது. இதைக் கண்டதும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். உடனே, கூடங்குளம் அணு உலை அமைந்திருக்கும் ராதாபுரம் யூனியனில் உள்ள மருத்துவமனைகளை உஷார்படுத்திய மாவட்ட நிர்வாகம், அனைத்து டாக்டர்களையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு போட்டது. அத்துடன் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. அடுத்த சில மணி நேரத்தில் தண்ணீர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிய பின்னர்தான் மக்கள் நிம்மதிப் பெருமுச்சு விட்டார்கள்.

அப்பாடா!

- எல்.ஆண்டனிராஜ், எஸ்.கோபாலகிருஷ்ணன்

படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு