Published:Updated:

ராமஜெயத்தின் ரத்த நிமிடங்கள்?

ராமஜெயத்தின் ரத்த நிமிடங்கள்?

பிரீமியம் ஸ்டோரி
ராமஜெயத்தின் ரத்த நிமிடங்கள்?
##~##

'ராமஜெயத்தைக் கொலை செஞ்சவங்களைப்​பத்தி தெரிஞ்சுக்க திருச்சி போலீஸ் மோகனூர் போயிருக்​காங்க...’ - போலீஸ் வட்டாரத்தில் நமக்கு கிடைத்த ஒரு வரித்தகவல் இது. 

மோகனூர் எங்கே என்று விசாரித்ததுமே, 'என்ன ஆவியோட பேசப்போறீங்களா?’ என்றுதான் பலரும் கேட்டார்கள். 'அடப் பாவ​மே, போலீஸ் கடைசியில் இந்த வழிக்குப் போய் விட்டதா?’

நாமக்கல்லில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் 16-வது கிலோ மீட்டரில் இருக்கிறது மோகனூர். 'ஆவியோடு பேசுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டதுமே, ''ஆமாங்க, 'ஆவி ராணி’ன்னு ஒருத்தவங்க இருக்காங்க. மாரியம்மன் கோயிலுக்கு எதிர்லதான் அவங்க வீடு..'' என்று வழி சொல்லி அனுப்பி வைத்தார் பூ விற்கும் ஒரு பெண்.

ஆவி ராணியின் வீட்டுக் கதவைத் தட்டினோம். உள்ளே இருந்து எட்டிப்பார்த்த ஒரு பெண், ''ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல மட்டும்தான் ஆவியோட பேச முடியும். அதுவும் நீங்க தனியா வந்தா பேச முடியாது. ஆணும் பொண்ணும் சேர்ந்துதான் வரணும்'' என்று வரிசையாக கண்டிஷன்களைச் சொன்னார்.

ராமஜெயத்தின் ரத்த நிமிடங்கள்?

''நீங்க யாரு..?''

''நான்தான் ஆவி ராணி...'' என்று சொல்லிவிட்டு படக்கென்று கதவை சாத்திக்கொண்டார்.

செவ்வாய்க் கிழமை...மோகனூருக்குப் மீண்டும் சென்றோம். ஆவி ராணி வீட்டு வாசலில் மூன்று குடும்பங்கள் வரிசையில் நின்றது. அவர்களோடு நாமும் காத்திருக்க... மஞ்சள் பூசி, நெற்றி நிறையக் குங்குமத்தோடு சிவப்பு நிறப் புடவையில் வெளியில் வந்தார் ஆவி ராணி. ''ஆவியோடு பேசுறவங்க எல்லாம், அரை லிட்டர் நல்லெண்ணெய், சூடம், பத்தி, மூணு எலுமிச்சம்பழம், கை நிறையப் பூ வாங்கிட்டு வந்திடுங்க'' என்று மீண்டும் வீட்டுக்குள் பதுங்கிக்​ கொண்டார்.

அவர் சொன்ன பொருட்களை எல்லாம் அருகிலிருந்த கடையில் வாங்கிக்கொண்டு மீண்டும் காத்திருந்தோம். வரிசைப்படி ஆட்களை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் ராணியின் கணவர். வெளிச்சம் வராத எட்டுக்குப் பத்து அளவுள்ள சின்ன இருட்டு அறை. தரையில் பெரிய சைஸில் மூன்று அம்மன் படங்கள். அதற்கு முன் விளக்கும், பத்தியும் சூடமும் புகைந்து திகில் சூழலை உருவாக்கி இருந்தது. பின்பக்கமாக காலைமடித்து உட்கார்ந்திருந்தார் ஆவி ராணி.

ராமஜெயத்தின் ரத்த நிமிடங்கள்?

ஆவி ராணிக்கும் நமக்கும் நடந்த உரையாடலை அப்படியே தருகிறோம். மற்றபடி இது எவர் சார்ந்த நம்பிக்​கையும் அல்ல!

ஆவி ராணி: ''சொல்லுங்க.. என்ன கேட்கணும்?''

ஜூ.வி: '' செத்துப்போன ஒருத்தரின் ஆவி​யோடப் பேசணும்''

ஆவி ராணி: ''செத்து 30 நாள் ஆகி இருந்தால்தான் முழுசாப் பேச முடியும். இருந்​தாலும் நீங்க வந்துட்டீங்க. வருதான்னு பார்க்கலாம். ஆவி வந்தா மட்டும் காசு கொடுங்க. இல்லைன்னா வேண்டாம்.''

நாம் வாங்கிக் கொண்டுபோன எண்ணெய்யை விளக்கில் ஊற்றினார். பத்தியை வாங்கிப் பற்ற வைத்தவர் அதையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார்.

ஆவி ராணி: ''செத்துப்போனவர் பேரைச் சொல்லு...''

ஜூ.வி: ''ராமஜெயம்.''

ஆவி ராணி: ''ஊரைச் சொல்லு...''

ஜூ.வி : ''திருச்சி.''

ஆவி ராணி: ''எந்த ஆளுங்க?''

ஜூ.வி: ''ரெட்டியாருங்க...''

கொஞ்ச நேரம் பத்தியில் இருந்த புகையை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தவர், உடம்பை ஒரு உலுக்கு உலுக்கி, தலையைச் சிலுப்புகிறார். ராமஜெயத்தின் ஆவி என்று, ராணி பேசுகிறார். இனி, ராமஜெயம் ஆவிக்கும் ஜூ.வி-க்கும் நடந்த உரையாடல்.

ஆவி: ''யாருடா நீ... உன் பேரு என்ன?''

ஜூ.வி: ''ராஜா..''

ஆவி: ''உனக்கு இன்னொரு பேரும் இருக்கு சொல்லு.''

ஜூ.வி: ''ராஜாதிருவேங்கடம்.''

ஆவி: ''டேய்... டேய்... காரு எங்கடா..? டேய்... காரு எங்க..? அண்ணன் எங்கடா?''

ஜூ.வி: ''அண்ணன் ஊர்ல இருக்கார்...''

ஆவி: ( பெருங்குரலெடுத்து மிரட்டும் தொனியில்) ''டேய்ய்... அண்ணன் எங்கடா..? அண்ணனை வரச் சொல்லுடா... டிரைவர் யாருடா..? டிரைவர் எங்க? டேய்... போடா எழுந்திருச்சி. போடா... என்ன நடந்துச்சின்னும் தெரியல. இப்படி வெட்டுப்​பட்டுக் கிடக்குறியே.. உன்னை யாரு என்ன பண்ணினாங்​கன்னு ரிசல்ட்டு தெரியணும். இதைத்தான்டா கேட்க வந்திருக்க?''

ஜூ.வி.: ''ஆமா... சொல்லுங்க. என்ன நடந்துச்சு?''

ராமஜெயத்தின் ரத்த நிமிடங்கள்?

ஆவி: ''தெரியலைடா... நான் வண்டியில வந்தேன்டா... ஆளுங்க பின்னாடி வந்தமாதிரி இருக்குடா. முன்னாடி யாரும் வரலடா.''

ஜூ.வி: ''உங்களைத் தூக்கிட்டுப் போனது யாரு?''

ஆவி: ''எனக்கு கட்சி வேஷ்டி வாங்கித் தர்றியா? போய் வாங்கிட்டு வா... எனக்கு ஒய்ட் கலர் சட்டை வேணும். டேய் நான் அனாதையாடா? என்னை வாயைப் பொத்தி தூக்கிட்டுப் போயிட்டானுங்கடா... தூக்கிட்டுப் போய் என்னை வேற எடத்துல வெச்சி வேலையை முடிச்சிட்டானுங்கடா.''

ஜூ.வி: ''உங்களைக் கடத்தியது யார்?  யாருன்னு சொல்லுங்க... உங்களை கண்ணைக் கட்டியாத் தூக்கிட்டுப் போனாங்க?''

ஆவி: ''என் மொபைல் எங்கடா..? என் மொபைல் எங்கடா?''

ஜூ.வி: ''தெரியலையே...''

கைவிரலையும், கழுத்தையும் காட்டி, மோதிரமும், செயினும் காணோம் என்று சைகையில் சொல்கிறார். கையை முறுக்கிக் காட்டி, கைகளைக் கட்டியதாகச் செய்து காட்டுகிறார். கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்து வெட்டுவதைப்போல செய்து காட்டுகிறார்.

ஜூ.வி: ''கழுத்துல வெட்டினாங்களா?''

ஆமாம் என்பதைப் போல தலையை ஆட்டுகிறார்.

ஜூ.வி: ''யாருன்னு உங்களுக்கு அடையாளம் தெரியலையா?''

ஆவி: ''தெரியலையே... ஒருத்தனா இருந்திருந்தா சமாளிச்சிருப்பேன். நாலு பேரு இருந்தானுங்கடா. நாலு பேரை நான் எப்படி சமாளிப்பேன்? என்னால எதுவும் பண்ண முடியல. முன்விரோதம் நிறைய இருந்தாலும் நான் யாரையும் பகைச்சிக்கலடா. ஊரே என்னைக் கண்டா, பயந்து நடுங்குவாங்கடா. யாரு செஞ்சாங்கன்னு தெரியலடா.''

ஜூ.வி: ''உங்களை வீட்டுல இருந்து தூக்கிட்டுப் போனாங்களா? இல்ல... வெளியில இருந்தீங்களா? எங்க இருந்து உங்களைக் கடத்தினாங்க?''

ஆவி: ''வீட்டுல இருந்து என்னை எவனாவது தூக்கிட்டுப் போயிடுவாங்களா? எவனுக்குடா அந்தத் தைரியம் இருக்கு? மாந்தோப்புலதான் இருந்தேன். டிரைவரைக் காணோம். யாரோ பின்னால வந்து தூக்கிட்டானுங்கடா.''

ஜூ.வி: ''உங்க குடும்பத்துக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?''

ஆவி: ''கொலைகாரங்களைக் கண்டுபிடிச்ச பிறகு வா... அதுக்கப்புறம் எல்லாம் சொல் றேன்.''

இதுவரை ஆவியாகப் பேசியவர் அடுத்து ராணியாக மாறி, ''இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. 250 ரூபாய் பணத்தை வெத்தலை பாக்குல வெச்சி, சாமிக்கு முன்னாடி வெச்சிட்டுக் கிளம்புங்க. செத்துப்போய் 30 நாளைக்குப் பிறகுதான் ஆவிங்க நிதானமாப் பேசும். அதுக்குப் பிறகு வந்தீங்கன்னா... பேசலாம்'' என்று சொல்லி நம்மை அனுப்பி வைத்தார்.

கிறுகிறுத்துப் போய் வெளியே வந்தோம்!

- கே.ராஜாதிருவேங்கடம்,  ம.சபரி

படங்கள்: க.தனசேகரன்

 ''அமாவாசைக்குள் கொலையாளிகள் சிக்குவாங்க!''

ராமஜெயம் (?!) ஆவியோடு பேசிவிட்டு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, நமது நிருபர் ஒருவர் ஆவி ராணியை சந்தித்தார்.

அப்போது ராணி, நிதானமாகச் சொன்னது இதுதான்:

''எனக்கு சொந்த ஊரு திருச்சி மாவட்டத்துல இருக்கும் தொட்டியம். எனக்கு ஏழு வயசா இருக்கும் போது, 'பொன்னர் சங்கர்’ கோயிலுக்கு எங்க அப்பா கூட்டிட்டுப் போனார். அங்கேதான் பொன்னர் சங்கர் சாமி என் மேல இறங்கிட்டாங்க. அதுல இருந்தே நான் அருள் வாக்கும், ஆவி வாக்கும் சொல்ல ஆரம்பிச்சிட்டேன். அந்த சமயபுரம் மகமாயிக்கு முன்னாடி உட்கார்ந்து ஊதுபத்தியைக் கொளுத்தி வைக்கிற வரைக்கும்தான் நான் ராணியா இருப்பேன். அதுக்குப் பிறகு, பத்தியில இருந்து வர்ற புகையைப் பார்க்க.. பார்க்க.. நான் கூப்பிடும் ஆவி அந்த புகை வழியா வந்து என் உடம்புல ஏறிக்கும். எனக்கு மட்டும் அந்தப் புகையில ஆவி நிற்கிறது தெரியும்.

1996-ம் வருஷத்துல ஒரு வழக்கு சம்பந்தமாப் பேசணும்னு ஜெயலலிதா அம்மா என்னை வரச்சொன்னதா திருச்சியில இருந்து ஒரு எம்.பி. கூப்பிட்டார். ஆனா எங்க அப்பா, 'யாரா இருந்தாலும் உன்னைத் தேடித்தான் வரணும். நீ போகாதே’ன்னு சொல்லிட்டார். தமிழ்நாடு முழுக்க எத்தனையோ கண்டுபிடிக்க முடியாத கேஸ்களைக் கண்டுபிடிக்க போலீஸ்காரங்க என்னைத் தேடி வருவாங்க. நானும் அவங்க சொல்லும் ஆவிகளோட பேச வச்சிருக்கேன். ஈரோடு கலெக்டரா இருந்தவர் ஒருத்தர், அவங்க குடும்பத்துல இறந்து போன ஒருத்தரோடு பேச என்கிட்ட வந்தார். எவ்வளவு கூட்டம் வந்தாலும், ஒரு நாளைக்கு நாலு பேருக்கு மேல பார்க்கிறது இல்லை'' என்றார்.

ராமஜெயம் கொலை வழக்கில் கொலையாளிகள் எப்போது சிக்குவார்கள் என்று கேட்டபோது, ''வரப்போற அமாவாசைக்குள்ள, கொலை செஞ்சவங்க போலீஸ்ல சிக்கிடுவாங்க'' என்று ஆருடம் சொல்லி இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு