Published:Updated:

'வாக்கு எண்ணும் மையங்களில் செல்போனுக்கு தடை'

சென்னை, மே.6,2011

வாக்கு எண்ணும் மையங்களுக்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். ##~~##

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வருகிற 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சென்னை மண்டலத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள பொன்விழா கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தப் பயிற்சிக்குப் பிறகு நிருபர்களிடம் பிரவீன் குமார் கூறுகையில், "மே 13-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளோம். சென்னையில் தான் கடைசி கட்ட பயிற்சி அளித்துள்ளோம்.

வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை வாகனங்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், கலெக்டர்கள் உள்ளிட்ட யாருடைய வாகனங்களாக இருந்தாலும் அனுமதி கிடையாது.

அதுபோல வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே ஒவ்வொரு கட்சிசார்பிலும் ஒரு ஏஜெண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்கு அடையாள கார்டு தேர்தல் அதிகாரி மூலம் வழங்கப்படும். அதைக் கொண்டுதான் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லமுடியும். அவர்கள் ஒரு முறை மையத்திற்குள் சென்றால் முடிவு வெளிவந்த பின்னர்தான் மையத்தை விட்டு வெளியே வரமுடியும்.

ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கையின்போது 8 முதல் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மத்திய தேர்தல் பார்வையாளர் இருப்பார். வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். 2 ஆயிரத்து 800 மைக்ரோ அப்சர்வர்கள் என்று அழைக்கப்படும் மத்திய அரசு அதிகாரிகளும் இருப்பார்கள்.

ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பு கேமராவுடன் வீடியோ கருவியும் பொருத்தப்படும். வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதல் முடிவு வரை இடைவெளி இன்றி முழுமையாக வீடியோவில் எடுக்கப்படும்.

ஒவ்வொரு சுற்றின் முடிவும் வீடியோவில் பதிவு செய்யப்படும். அதன்பிறகே ஒவ்வொரு சுற்றின் முடிவும் வெளியிடப்படும். ஒவ்வொரு சுற்றின் முடிவும் சரிபார்த்த பின்னர்தான் அடுத்த சுற்று எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களுக்களுக்குள் யாரும் செல்போன் எடுத்துச்செல்லக்கூடாது. தேர்தல் அதிகாரி மட்டும் செல்போன் வைத்திருப்பார். பத்திரிகையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தகவல் மையத்திற்குள் மட்டும் செல்போன் பயன்படுத்தலாம். வாக்கு எண்ணும் இடத்தில் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார், மத்திய துணைராணுவப் படை போலீசார் ஆகிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். இவர்கள் அனைவரும் பரிசோதனை செய்த பின்னரே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல முடியும்," என்றார் பிரவீன் குமார்.