Published:Updated:

நெருக்கும் அரசு... வெடிக்கும் வைஷ்ணவி!

சிக்கலில் மதுரை ஆதீனம்

##~##

'இன்றைய ஸ்பெஷல் என்ன?’ என்று கேட்கும் அளவுக்கு தினம்தினம் திகில் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது மதுரை ஆதீன மடம். வாரிசு நியமனத்தில் தொடங்கிய சர்ச்சை, வருமான வரித்துறை ரெய்டில் வந்து நிற்கிறது. 

நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்து, தருமபுர ஆதீனத்தின் குருசாமி தேசிகர் மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனித்தனியாக தாக்கல் செய்திருந்த வழக்குகள் கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தன. இரண்டு பேருக்காகவும் வாதாடிய வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார், ''ஆதீனங்கள் நீதிமன்றத்துக்கு வருவது மரபு அல்ல. நீதிபதிகள் வேண்டுமானால், ஆதீன மடத்தில் வந்து விசாரணை நடத்தட்டும்’ என மதுரை ஆதீனம் சொல்லி இருக்கிறார். நாங்கள் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே, ஆதீனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு விசாரணை நடத்த வேண்டும்'' என, எடுத்ததுமே நெருப்பைப் பற்ற வைத்தார்.  தொடர்ந்து பீட்டர், ''மடத்தில் நடப்​பவை எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, மதுரை ஆதீனத்துக்கு ஏதோ மருந்து கொடுத்து முடக்கி வைத்து இருக்கிறார்கள். அந்த மருந்தைத் தொடர்ந்து கொடுத்தால், கொஞ்சம் கொஞ்சமாக அது ஆளையே கொன்று​விடும். அவரை இப்படியே வைத்திருந்து வெளிநாட்டுக்குக் கடத்திவிட்டு, மடத்தை ஆக்கிரமிக்க சதி நடக்கிறது. 'மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைக் கைப்பற்றுவேன்’ என்று சொல்லி சட்டம் - ஒழுங்குப் பிரச்னையை உண்டாக்கப் பார்க்கிறார் நித்தியானந்தா. எனவே, மதுரை ஆதீன மடத்தை நிர்வாகம் செய்வதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்து அறநிலையத் துறைச் செயலாளர், மதுரை கலெக்டர் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். மருத்துவச் சிகிச்சை மையத்தில் சோதனை அளித்து, மதுரை ஆதீனத்தைக் காப்பாற்ற வேண்டும்'' என்று வாதிட்டார்.

நெருக்கும் அரசு... வெடிக்கும் வைஷ்ணவி!

மு.க.அழகிரி வழக்குகளில் ஆஜ​ராகும் வக்கீல் வீர.கதிரவன், மதுரை ஆதீனத்துக்காக வாதாடினார். ''நித்தி​யானந்தா நியமனம் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு எல்லாம் ஏற்கெனவே மீடியாவில் விளக்கம் சொல்லிவிட்டோம். ஆதீனம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்'' என்றார்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் முகமது மைதீன், ''மதுரை ஆதீனம் தொடர்பாக இதுவரை அரசுக்கு நேரடியான புகார்கள் எதுவும் வரவில்லை. ஆதீனமாக இருப்ப வர்களின் மனநிலை குறித்தோ, ஒழுக்க நெறி தவறியவர்களை ஆதீனங்களாக நியமிக்கப் பட்டது குறித்தோ புகார் வந்தால், இந்து அறநிலையச் சட்டப்பிரிவு 60-ன் படி விசாரணை நடத்தவோ, தற்காலிகமாக ஆதீன நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவோ அரசுக்கு அதிகாரம் உண்டு'' என்று தெளிவுபடுத்தினார்.

''பணம் என் கைக்கு வரலையே?''

நெருக்கும் அரசு... வெடிக்கும் வைஷ்ணவி!

விசாரணைகள் முடிந்து தீர்ப்பை ஒத்தி​வைத்த மறுநாளே, வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஆதீன மடத்துக்குள் தட​தடக்க, ஏகத்துக்கும் டென்ஷனாகிப் போனது ஆதீன வட்டாரம். திருவண்ணாமலையில் நடந்த நித்தியானந்தா பட்டாபிஷேக விழாவுக்காகப் புறப்பட்டுக்​கொண்டு இருந்த ஆதீனத்தை, அன்று காலை 8 மணிக்கே மடக்கி விட்டது வருமான வரித் துறை. துணைக் கமிஷனர் சுந்தரேசன் தலைமையில் சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த அதிகாரிகள் ஏழு பேர் ஆதீன மடத்துக்குள் நுழைந்தனர்.  

ஆதீனத்தின் கணக்கு வழக்கு விவகாரங்களைக் கேட்ட அதிகாரிகள், 'நித்தியானந்தா பெங்களூருவில் வைத்து உங்களுக்கு வழங்கியதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாய் எங்கே?’ என்று துருவ, 'அந்தப் பணம் இன்னும் என் கைக்கு வந்து சேரலையே’ என்று அப்பாவியாய்ச் சொன்னாராம் ஆதீனம். ரெய்டு நடந்தபோது, 'காணவில்லை’ என்று சொல்லப்பட்ட வைஷ்ணவியும் மடத்தில் இருந்தார். ஆதீனக் கணக்குகளைக் கையாண்டவர் என்பதால், அவரையும் கிடுக்கிப்பிடி போட்டார்களாம். கிடைத்த ஆவணங்களை அட்டைப் பெட்டியில் அள்ளிக்​கொண்டு மதியம் 1.45 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்கள் அதிகாரிகள்.

''நாங்க பார்க்காத ரெய்டா?''

இதற்கு  விளக்கம் கொடுத்த மதுரை ஆதீன செய்தித் தொடர்பாளர் பாண்டிச்செல்வம், ''நாங்கள் பார்க்காத ரெய்டா? மதுரை ஆதீனத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தி.மு.க. மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தின் தூண்டுதலில் இந்த ரெய்டு நடந்து இருக்கிறது'' என்று சொன்னார். அவரிடம் பேசியபோது, ''ஆங்கிலேயர்கள் ஆட்சியில் மதுரை ஆதீனத்தைத் தேடித்தான் பிரபுக்களே வந்து இருக்கிறார்கள். மதுரை ஆதீனங்கள் யாரும் நீதிமன்றத்துக்குப் போனது இல்லை. ரெய்டு உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்தும் ஆதீனங்களுக்கு விதி விலக்கு உண்டு. அதையும் மீறி ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். நித்தியானந்தர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி ஆகி, ஒரே ஒரு வழக்கு மட்டும் விசாரணையில் இருக்கிறது; அதுவும் நிற்காது. நித்தியானந்தரையும் மதுரை ஆதீனத்தையும் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் பக்கம் தவறு இருந்தால், இரண்டு பேரையும் இவ்வளவு சுதந்திரமாக நடமாட விட்டிருப்பாரா?  

நித்தியானந்தர் சிக்கலில் இருந்தபோது, பேரம் பேசினார்கள். அது படியவில்லை என்றதும் தி.மு.க-வின் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் ஆட்களும் இன்னும் சிலரும் சேர்ந்து​கொண்டு திருவண்ணாமலை ஆசிரமத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். பிடதி ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் 10 முறை ரெய்டு நடத்தினர். 26 வழக்குகளைப் போட்டார்கள். அவர்களால் ஒரு ருத்ராட்சத்தைக் கூட எடுக்க முடியவில்லை. அத்தனைக்கும் கணக்கு வைத்திருந்தார் நித்தியானந்தர். அப்போது தோற்றுப்​போனவர்கள், இப்போது மதுரை ஆதீனத்தை மிரட்டிப்பார்க்கிறார்கள். மதுரை ஆதீனத்தில் ஸ்டாப்ளர் பின் வாங்கிய கணக்குக்கூட பக்காவாய் இருப்பதால், இங்கேயும் பருப்பு வேகவில்லை. வந்த அதிகாரிகள் ஆதீனத்திடம் வருத்தம் தெரிவித்து, ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு போனார்கள்'' என்று சொன்னார்.

நெருக்கும் அரசு... வெடிக்கும் வைஷ்ணவி!

''மதுரை ஆதீனத்துக்கு வருமான வரித் துறையினரை அனுப்பினீர்களாமே?'' என்று மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்திடம் கேட்டதற்கு. ''ஆதீனம் அப்படிச் சொல்லவில்லை. அங்குள்ள அதிகாரி ஒருவர் அப்படிச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை'' என்று நறுக்கென முடித்துக் கொண்டார்.

''மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகிவிட்ட தமிழக அரசு, அதற்கு முன்ன​​தாக கூடங்குளம் பிரச்னையில் கையாண்​டதைப் போல ஒரு பொதுக்கருத்தை உருவாக்க நினைத்தது. விரைவில், மதுரை ஆதீனத்தை அரசு கைப்பற்றப்போகிறது என்பதைத்தான் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சூசகமாக சுட்டிக்காட்டினார். இதைத் தெரிந்துகொண்ட ஆதீனம் தரப்பு, அமைச்சர் பழனிமாணிக்கத்தை இதில் இழுத்துவிட்டு, பிரச்னையைத் திசை திருப்பி, ஜெயலலிதாவின் அனுதாபத்தைப் பெறத் துடிக்கிறது'' என்கிறது தி.மு.க. வட்டாரம். இதனிடையே, 'மடாதிபதிகளைப் பழிவாங்கும் நோக்கம் தி.மு.க-வுக்கு என்றுமே இருந்தது இல்லை. எனவே, மதுரை ஆதீனத்தில் நடந்த ரெய்டுக்கும் தி.மு.க-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என, தி.மு.க. தலைமைக் கழகமும் ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

நெருக்கும் அரசு... வெடிக்கும் வைஷ்ணவி!

''ரெய்டுகள் நடத்தலாம்!''

''ஆதீனங்களில் ரெய்டு நடத்தாமல் இருக்க, விதிவிலக்கு இருக்கிறதா? மதுரை ஆதீனத்தை நீதிமன்றத்துக்கு அழைக்கக் கூடாதா?'' என்று, திருப்பனந்தாள் காசி திருமடத்து அதிபர் காசிவாசி முத்துக்குமார சுவாமி தம்பிரானிடம் கேட்டோம்.

''முன்பு ஒரு முறை தருமபுர ஆதீனத்திலேயே வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கிறது. ஆகவே, ஆதீனங்களுக்கு விதிவிலக்கு எதுவும் இல்லை. காணிக்கையாக வரும் ஒவ்வொரு காசுக்கும் கணக்கு உண்டு. ''ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்கில் மட்டும் அப்போது மதுரை ஆதீனகர்த்​தராக இருந்தவருக்கு, 'நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம்’ என்று விதிவிலக்கு கொடுக்கப்​பட்டது. அதைவைத்து, 'நானும் நீதிமன்றத்துக்கு வர மாட்டேன்’ என, மதுரை ஆதீனம் பிதற்றுகிறார்'' என்று சொன்னார்.

மதுரை ஆதினத்தை மீட்க...

இதனிடையே இந்து மக்கள் கட்சி, தேவர் தேசியப் பேரவை உள்ளிட்ட இயக்கங்கள் ஒன்று கூடி, 'மதுரை ஆதீன மீட்புக் குழு’ என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள், மே 13-ல் மதுரை ஆதீன மீட்பு ஆலோசனை மாநாடு ஒன்றையும் மதுரையில் நடத்துகிறார்கள். இது​ தொடர்பாக நம்மிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலை கண்ணன், ''செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தாவுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதை ரத்து செய்யக் கோரியும், சுயநினைவு இல்லாமல் இருக்கும் மதுரை ஆதீனம் அருணகிரி குறித்து விசாரணை நடத்தி அவரை மீட்கக் கோரியும், இந்து அறநிலையத் துறையில் புகார் கொடுத்து இருக்கிறோம்.

நெருக்கும் அரசு... வெடிக்கும் வைஷ்ணவி!

தனக்கு 1.20 கோடி சீடர்கள் இருப்பதாகச் சொல்லும் நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தையும், பிடதிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள சொத்துக்களை அவருக்கு எழுதிவைத்து வைரக் கீரிடத்தை வேண்டுமானாலும் சூட்டி அழகு பார்க்கட்டும். மதுரை ஆதீன மடத்தை இந்து பக்தர்களும் அரசும் பார்த்துக்கொள்ளும்'' என்றார். நித்தியானந்தர் எதிர்ப்பாளர்களை சைவ ஆதீனங்கள் கையில் எடுத்ததால், இவர்களுக்குப் போட்டியாக 15 வக்கீல்கள் ஒன்று சேர்ந்து, 'நித்தியானந்தர் ஆதரவு வழக்கறிஞர்கள் அமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

வைஷ்ணவி விவகாரம்!

  இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி, 'மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் பெண் பக்தை ஒருவரை அறைக்குள் பூட்டி வைத்து அடிக்கிறார்கள்’ என்ற செய்தி பரவியது. இது தொடர்பாகப்

நெருக்கும் அரசு... வெடிக்கும் வைஷ்ணவி!

பேசியவர்கள், ''வருமான வரித் துறை ரெய்டு வந்துட்டுப் போனதில் இருந்தே வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் கோபத்துடன் இருந்தாங்க. அதில், நித்தியின் சீடரான தயானந்தா என்பவரின் மனைவி மத்தியாவுக்கும் வைஷ்ணவிக்கும் பிரச்னை ஏற்பட்டு, வைஷ்ணவி தாக்கப்பட்டார். விஷயம் வெளியே பரவியதால், விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வந்து விசாரணை நடத்தினார்'' என்றார்கள் மடத்தைச் சேர்ந்தவர்கள்.

வைஷ்ணவியிடம் விசாரணை நடத்திய விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் கதிர்வேலிடம் பேசினோம் ''ஆதீனம் வர்றார்னு சொல்லி, சில பொருட்களை நித்தியானந்தாவின் ஆட்கள் வைஷ்ணவிகிட்ட கேட்டிருக்காங்க. சில பொருட்களை எடுத்துக் குடுத்துருக்கு. 'இன்னும் கொஞ்சம் பொருட்கள் வேணும்’னு கேட்டுருக்காங்க. 'அதெல்லாம் ஆதீனத்தைக் கேட்காமத் தர முடியாது’னு சொல்லவும், அந்தாளுங்க அசிங்கமாத் திட்டியிருக்காங்க. அங்க இருந்த இன்னொரு லேடி, 'அவகிட்டே இருந்து சாவியைப் பிடுங்கு’னு சத்தம் போட்டுருக்காங்க. உடனே வைஷ்ணவி, ரூமுக்குள்ள போயி கதவைப் பூட்டிக்கிருச்சு. கதவை திறக்கச் சொல்லி சத்தம் போடவும்... கொஞ்ச நேரம் கழிச்சுத் திறந்திருக்கு. அப்ப அந்த இன்னொரு லேடி, 'இவளுக்கு என்ன இவ்வளவு திமிர்?’னு சொல்லி சுரிதார் துப்பட்டாவைப் பிடிச்சு இழுத்ததில், சுரிதார் லேசா கிழிஞ்சிருச்சு. விசாரிச்சதுல, வைஷ்ணவி இதைத்தான் எங்கிட்ட சொல்லிச்சு. 'புகார் குடுக்குறீயாம்மா?’ன்னு கேட்டதுக்கு, 'ஆதீனம் வந்ததும் அவர்கிட்ட கேட்டுட்டுக் குடுக்குறேன்’னு சொல்லிச்சு. ஆனா ரெண்டு சாமிகளும் வந்ததுமே ஆதீனக் கேட்டை இழுத்து மூடிட்டாங்க. இரவு 9.30 மணி வரைக்கும் மடத்து வாசல்ல காத்திருந்துட்டு திரும்பிட்டேன். அந்தப் பொண்ணை ஆதீனம் சமாதானப்படுத்திட்டார்னு கேள்விப்​பட்டேன்'' என்றார்.

ஆனால், 'மடத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கச் சொல்லி நித்தியானந்தாவின் சீடர்கள், வைஷ்ணவியை நிர்பந்தம் செய்ததில்தான் சண்டை நடந்தது’ என்​கிறார்கள். ஆக, எந்த நேரமும் வெடிக்கத் தயாராக இருக்கிறது, வைஷ்ணவி எரி​மலை!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: கே.குணசீலன்,

எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  பா.கந்தகுமார் 

 நள்ளிரவில் பட்டாபிஷேகம்!

நித்தியானந்தருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சிக்காக மதுரை ஆதீனம் கிளம்பியபோதே ரெய்டுக்கு அதிகாரிகள் வந்துவிட்டதால், அதனை முடித்துவிட்டு இரவு 11.15 மணிக்குத்தான் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அதன்பிறகு தொடர்ந்த நிகழ்ச்சி அதிகாலை 2 மணி வரை நடந்தது.

மதுரை ஆதீனத்துக்குத் தருவதாகச் சொல்லப்பட்ட தங்க சிம்மாசனத்தில் ஆதீனத்தை அமர வைத்து, தங்கக்கிரீடம், தங்க காலணி மற்றும் வெள்ளிச் செங்கோல் வழங்கினார் நித்தியானந்தா. அதன்பிறகு, நித்தியானந்தருக்கு தங்கத்தால் ஆன ருத்திராட்ச மாலை அணிவித்து தங்கக்கிரீடம் சூட்டி, அடுத்த மதுரை ஆதீனத்துக்கான பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.

  மைக் பிடித்த மதுரை ஆதீனம், ''மதுரை ஆதீனத்தை சிறந்த மேதைகள், ஞானிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், போர்க்குணம் கொண்டவர்கள் எல்லாம் அலங்கரித்தார்கள். இப்போதும், டேலன்டட், கேபபிள், இன்டலிஜென்ட், பிரேவ் அண்ட் வாரியர் ஆன ஒருவரைத்தான் கடவுள் கொடுத்துள்ளார். இவர், தொண்டை மண்டல சைவ வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச்சான்றிதழை, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் வழங்கி இருக்கிறது. இது போதுமா?'' என்று ஆதாரத்தை அனைவருக்கும் காட்டியவர், ''நித்தியானந்தா மீது ஒரே ஒரு குறை சொல்றாங்கய்யா... பாலியல் புகாரில் சிக்கியவராம். இந்த உலகத்தில் யார்தான் பாலியல் புகாரில் சிக்காதவர்? பிடதி ஆசிரமத்தில் பெண்கள் நடனம் ஆடுறாங்க, பெண்கள் சீடர்களா இருக்காங்கன்னு எழுதுறாங்க. ஏன் பெண்கள் இருக்கக் கூடாது? பாண்டியப் பேரரசி மங்கையர்க்கரசியால்தான் மதுரை ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது.  பரத நாட்டியத்தைத் தோற்றுவித்த நாட்டில், நடனம் ஆடுவது தவறா?'' என்று கேள்வி எழுப்பியவர், போகிறபோக்கில் ஜெயலலிதா அரசுக்கு பாராட்டு தெரிவிக்கவும் தவறவில்லை.

- கோ.செந்தில்குமார்