Published:Updated:

இன்னும் சில சீனியர் ஐ.பி.எஸ்-கள்?

கஸ்டடியில் மிரள வைக்கும் பிரமோத்குமார்!

##~##

''பாசி கேஸ் விஷயத்தை வெளிப்படையாப் பேச நான் தயார். ஆனா, சில சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகளை அது டிஸ்டர்ப் பண்ணும். பரவாயில்லையா?'' என்று விசாரணை அதிகாரிகளை மிரளவைத்து இருக்கிறார், சி.பி.ஐ. கஸ்டடியில் இருக்கும் பிரமோத்குமார். 

நிதி நிறுவன மோசடியில் சிக்கிய திருப்பூர் பாசி நிதி நிறுவன நிர்வாகிகளை மிரட்டிப் பணம் பறித்த வழக்கில், சி.பி.ஐ. போலீஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார், தமிழக ஆயுதப்படை ஐ.ஜி-யான பிரமோத்குமார். கோவை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஐந்து நாள் கஸ்டடியில் சி.பி.ஐ. எடுத்தது. சி.பி.ஐ-யின் கூடுதல் எஸ்.பி. சங்கர் தலைமையிலான விசாரணை அதிகாரிகள், ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை பிரமோத்குமாரிடம் விசாரணை நடத்தி​ வருகிறார்கள்.

கோவை சர்க்யூட் ஹவுஸில் நடந்த விசாரணைப் படலத்தின்போது, பிரமோத்குமார் என்னதான் பேசினார் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

இன்னும் சில சீனியர் ஐ.பி.எஸ்-கள்?

''பிரமோத்குமார், ஆரம்பத்தில் விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவே இல்லை. எனவே, நாங்கள் எங்களது பாணியை மாற்றினோம். இதுபோன்ற வி.ஐ.பி-களுக்கு ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனைப் போட்டுக்காட்டுவது வழக்கம். சி.பி.ஐ. விசாரணையின்போது... தனது பவரைக் காட்டி ஒத்துழைக்க மறுக்கும் பெரிய மனிதர்களுக்கு, ஒத்துழையாமையின் பின்விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதைப் பல்வேறு உதாரணங்களுடன் விளக்குவதுதான் அந்த பவர்​பாயின்ட் பிரசன்டேஷன். இதைப் பார்த்த பிறகு​தான் ஓரளவு ஒத்துழைக்கத் தொடங்கினார்.

'நான் மேற்கு மண்டல ஐ.ஜி-யா இருந்தப்பதான், பாசி பிரச்னை நடந்துச்சு. அந்த மண்டலத்தின் தலைமை அதிகாரியான நான் எப்படி நேரடியாக அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பேன்? எனக்குக் கீழே வேலை செய்த யாரெல்லாம் பாசி நிறுவனத்துடம் நெருக்கமாக இருந்தாங்கன்னு விசாரிங்க. என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, பிரச்னையை சுமுகமா முடிக்கிறேன்னு சொல்லி, பணம் பண்ணினவங்க யாருன்னு கண்டுபிடிங்க. அவங்களைப் பிடிச்​சுட்டா, யார் யாரோட கைக்கு எல்லாம் பணம் போச்சுங்கிறது தானா தெரிஞ்சுடும்.

பாசி விஷயத்துல என் பெயரை இழுத்ததுமே, நான் நிறைய விஷயங்களை டிடெக்ட் பண்ணி​வெச்சிருக்கேன். எனக்கே தெரியாம என் பெயரைப் பயன்படுத்தி பல பேர் பணம் பார்த்தாங்க. அதே மாதிரி பாசி நிறுவனத்தைச் சேர்ந்த கமலவள்ளி, தான் கடத்தப்பட்டதா குறிப்பிட்டுக் கொடுத்த ரகசிய வாக்குமூலத்துல சொன்ன விஷயங்​களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏதோ பெரிய கொள்ளைக்காரனை விசாரிக்கிற மாதிரி என்னை ட்ரீட் பண்ணாம, சாதாரணமா டீல் பண்ணுங்க’ என்றார்.

விசாரணைக்கு இடையில், அடிக்கடி மார்பில் கை வைத்துக் கஷ்டப்பட்டு இருமினார். கூடவே, 'ரொம்ப ஸ்ட்ரெஸ் வந்தா, ஹார்ட் பாதிக்கும்’னு சொன்னார். டெல்லியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அபார்ட்மென்ட் வாங்கியது, வட இந்தியாவில் பல வழிகளில் பணத்தை முதலீடு செய்தது பற்றிக் கேட்டபோது, புன்னகையுடன் நிறுத்திக் கொண்டார்.

அவர் சொன்ன முக்கியமான விஷயம் இதுதான். 'இந்த கேஸ்ல நான் இன்னும் வெளிப்படையாப் பேசினா, சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிங்க சில பேருக்குத் தர்மசங்கடம் ஏற்படும். இதை எல்லாம் நீங்களே புரிஞ்சுக்கோங்க... இல்லைன்னா, டெல்லியில விசாரிச்சுத் தெரிஞ்சுக்குங்க’னு அழுத்தமாச் சொன்னார்.

இன்னும் சில சீனியர் ஐ.பி.எஸ்-கள்?

'பண விஷயத்திலும், பாசி நிறுவன நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்பட்ட பிரஷரிலும் அந்தச் சமயத்தில் ஆளும்கட்சி​யாக இருந்தவர்களின் கை இருந்ததா?’ன்னு கேட்டதுக்கு, பிரமோத் சொன்ன தகவல் மிகவும் முக்கியமானது. அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது'' என்று பூடகமாகச் சொன்னார்கள்.

இதற்கிடையில், பாசி நிறுவன விவகாரங்களில் குற்றச்சாட்டு​களுக்கு உள்ளான மோகன்ராஜ், திருப்பூர் மாவட்டக் குற்றப் பிரிவில் இன்ஸ்பெக்டராக நியமிக் கப்பட்டது குறித்து, சி.பி.ஐ. தோண்டித் துருவி வருகிறது. இது குறித்து, அப்போது கோவை சரக டி.ஐ.ஜி-யாக இருந்த பாலநாக​தேவியிடம் (இப்போது மதுரை சரக டி.ஐ.ஜி.) சில தகவல்களைக் கேட்டி​ருக்கிறது சி.பி.ஐ. அதேபோல் பாசி விவகாரம் உச்சத்தில் இருந்த போது திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்தவர் சாந்தி. இவரது அலுவல​கத்துக்கு ஏ.சி., மற்றும் டி.வி. வாங்கிக் கொடுக்கப்பட்டதன் பின்னணியையும் சி.பி.ஐ. கிளறி உள்ளதாம். போகிற போக்கைப் பார்த்தால், இன்னும் பல பெரிய தலைகள் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், பிரமோத் குமாரின் பழைய வரலாறுகளைப் புரட்டி இருக்கும் சி.பி.ஐ-யின் கவனத்​தில், அவர் மீது பெண் போலீஸார் சிலர் கொடுத்த ஏடா​கூடப் புகார்கள் கிடைத்துள்ளதாம். அதை வைத்து பிரமோத்குமாரை சி.பி.ஐ. மடக்கப் பார்க்கிறது. ஆனால், டெல்லி செங்​கோட்டைப் பிரமுகர் தரப்பில், விசாரணைக்கே முட்டுக்கட்டை போடப்படுகிறதாம்.

என்ன செய்யப்போகிறது சி.பி.ஐ.?

- எஸ்.ஷக்தி