Published:Updated:

'வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதலாக 55 பார்வையாளர்கள்'

சென்னை, மே 9,2011

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையொயொட்டி, கூடுதலாக 55 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்  தெரிவித்தார். ##~~##

மே 13-ல் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் டி.ராஜேந்திரன், பி.அமுதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் அமைச்சர் பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், வக்கீல் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், எம்.பி.க்கள் மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகேந்திரன் எம்.எல்.ஏ., இந்திய கம்ïனிஸ்டு கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில துணை செயலர் பழனிச்சாமி, பா.ஜ.க. சார்பில் வக்கீல் வானதி சீனிவாசன், காங்கிரஸ் நிர்வாகிகள் சதாசிவலிங்கம், மக்புல்ஜான், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் டாக்டர் ராமதாஸ், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாக்கு எண்ணிக்கையை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்தி முடிப்பதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த கூட்டம் முடிந்ததும், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறுகையில்,
"வாக்கு எண்ணிக்கைக்காக புதிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணப்படும் இடத்தின் இரண்டு பக்கமும் 100 மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால்தான் பட்டாசு கொளுத்துதல் போன்ற செயல்களுக்கு அனுமதி அளிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் அனுமதி இல்லை. இதுபோன்ற புதிய நடைமுறைகளுடன், பழைய நடைமுறைகளையும் இந்த கூட்டத்தில் எடுத்துரைத்தோம்.

வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏறக்குறைய முடிந்துவிட்டன. புதிய முறையில் வாக்குகளை எண்ணுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், அதில் சில சிரமங்கள் இருப்பதால், பழைய முறையிலே அதாவது 'பூத்' வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு தொகுதிக்கும் 8 முதல் 14 மேஜைகள் வரை போடப்படும்.

ஒவ்வொரு மேஜையிலும் 'வெப் கேமரா' பொருத்தி வாக்கு எண்ணிக்கை முழுமையாக பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணும் பணியில், ஒரு தொகுதிக்கு 16 ஊழியர்கள் வீதம் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 744 பேர் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். எனவே, கடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையைவிட கூடுதல் நேரம் ஆகும்.

வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை கண்காணிப்பதற்காக ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே தேர்தல் கண்காணிப்பு பணிக்காக 122 பொது பார்வையாளர்களும், 57 செலவு பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கையின் போதும் கண்காணிப்பு பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

இவர்களைத் தவிர, வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 55 பேர் கூடுதல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்," என்றார் பிரவீன் குமார்.