Published:Updated:

ஆயுதம் இல்லாதவர் எவரும் இல்லை!

சிறையில் விவேக் பேட்டி

பிரீமியம் ஸ்டோரி
##~##

கைதுக்குப் பிறகும் கலங்​காமல் இருக்கிறார் விவேக்! 

சென்னையில்கைது செய்யப்பட்ட மா​வோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச் செயலாளர் விவேக், பெரியகுளம் நீதி​மன்றத்​தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, கடலூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்​பட்டார். விவேக்கின் வழக்கறிஞர்கள் கேசவன், முருகன் ஆகியோர் மூலம் விவேக்கிடம் பேசினோம்.

''ஊத்தங்கரை, முருகமலைப் பகுதிகளில் நீங்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டீர்களா?''

''இல்லை. அங்கு நடந்தது அரசியல் பயிற்சி வகுப்புதான். அப்போது, எங்கள் பாதுகாப்புக்காக சில ஆயுதங்களை வைத்திருந்​தோம்.''

''தமிழகத்தில் மாவோயிஸ்ட்களின் செயல்​பாடுகள் எப்படி உள்ளன?''

''மிக திருப்திகரமாக, தீர்க்கமாக உள்ளன.''

ஆயுதம் இல்லாதவர் எவரும் இல்லை!

''மாவோயிஸ்ட்களின் தீவிரவாத நடவடிக்கை​களை எப்படி ஏற்க முடியும்? அப்பாவிகள்தானே இதில் பெரிதாக பாதிக்கப்​படு​கிறார்கள்?''

''பொத்தாம் பொதுவாக தீவிரவாத நடவடிக்​கைகள், வன்முறைச் செயல்கள் என்று கூறுவதும், இதில் பொதுமக்கள்தான்அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்என்று கூறு​வதும் தவறு. அது, அரசாங்கமும் அதிகார வர்க்கமும் கட்​டமைத்து, வெகு​ஜனங்களிடம் பரப்பும் தவறான கருத்து. மக்களும் அவர்​களின் நலன்களுக்காக போராடும் மாவோயிஸ்ட்டுகளும் இணைந்து ஒரு பக்கமாக நிற்கிறோம். மக்கள் நலனுக்கு எதிரான அரசும், அதன் படைகளும் இணைந்து எதிர்ப்புறம் நிற்கின்றனர். இந்த நிலையில், தங்களின் குறைந்தபட்ச உரிமைகளுக்காகப் போராடும் மக்களை ஒடுக்கத்தான் அரசு முயற்சிக்​கிறது. போலீஸ், சி.ஆர்.பி.எஃப்., ராணுவம் தொடங்கி, எல்லைப் பாதுகாப்பு படையையும் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்துகிறது. ஆக, அரசாங்கத்தால்தான் அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஜனநாயக வழியில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் எல்லாக் கட்சிகளும் ஆயுதங்கள் வைத்துள்ளன. வன்முறை செய்கின்றன. குண்டர்களைப் பயன்படுத்துகின்றன. அவை எல்லாம் வன்முறை இல்லையா? தீவிரவாதம் இல்லையா? அவற்றை விட்டுவிட்டு அவர்களால் ஒருநாள் கட்சி நடத்த முடியுமா? வன்முறையும் தீவிரவாதமும் மக்கள் நலனுக்காகப் பயன்படுகிறதா? அல்லது, மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதுதான் முக்கியம்.''

''ஆனாலும், இதுபோன்ற செயல்பாடுகள் மக்களிடம் இருந்து உங்களை அந்நியப்​படுத்தித்​தானே வைத்துள்ளது?''

''மக்களிடம் இருந்து மாவோயிஸ்ட்கள் அந்நியப்பட்டுள்ளனர் என்பது தவறான வாதம்.  எழுத்தாளர் அருந்ததிராய் சொன்னதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 'மாவோயிஸ்ட்கள் அனை வரும் பழங்குடியினர் அல்ல. ஆனால், 95 சதவிகித பழங்குடியின மக்கள் மாவோயிஸ்ட்கள்தான்’ என்பது அவரது கருத்து. எங்கள் நடவடிக்கைகளில் உள்ள நியாயங்களை மக்கள் புரிந்துகொண்டதால்தான், கிரீன் ஹன்ட் என்று சொல்லப்படும் பசுமை வேட்டைக் காலகட்டங்களில் 20 ஆயிரமாக இருந்த மாவோயிஸ்ட் குடிப்படைகளின் எண்ணிக்கை, இப்போது 1 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கூட நாங்கள் குறிப்பிடுவது அல்ல. அரசுக் குறிப்புகள் உறுதிப்படுத்தும் வளர்ச்சி இது. மக்கள் ஆதரவு இல்லாமல் ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சியும் வீச்சும் எப்படி சாத்தியப்படும்.''

''தமிழகத்தில் உங்கள் இயக்கத்துக்கு ஆதரவு அவ்வளவாக இல்லையே?''

''தொடக்க காலத்தில், மத்திய மற்றும் தென் இந்தியாவில் மக்கள் யுத்தக்குழு என்ற பெயரில்தான் இயங்கினோம். அப்போது, எங்கள் அமைப்பு மிகத் தீவிரமாக வேரூன்றி வளர்ந்ததே தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும்தான். 1980-களுக்குப் பிறகு, மாவோயிஸ கம்யூனிஸ்ட் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இயங்க ஆரம்பித்தோம். அப்போதும் மற்ற மாநி லங்களைவிட தமிழகத்தில்தான்  செயல்பாடும் நடவடிக்கைகளும் தீவிரமாக இருந்தன. அதன் பிறகு, சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, தமிழகத்தில் பின்னடைவைச் சந்தித்தோம். 2004-க்குப் பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது இந்தியாவில் 24 மாநிலங்களில், 638 மாவட்டங்களில் நாங்கள் தீர்மானகரமான சக்தியாக வளர்ந்துள்ளோம். இந்திய நிலப்பரப்பில் 30 சதவிகிதம் எங்கள் ஆளுகையின் கீழ் உள்ளது. விரைவில், தமிழகத்திலும் மக்கள் ஆதரவைப் பெறுவோம்.''

''நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழ​கத்தில் உங்கள் இயக்கத்துக்குப் பின்னடைவு​தானே?''

''மக்கள் நலனுக்காக, தலைவர்கள் முதல் அடித்தட்டு ஊழியர்கள் வரை இந்த இயக்கத்தில் உயிரையே தியாகம் செய்து உள்ளனர். அதனால்தான் இந்த இயக்கம் இத்தனை ஆண்டுகள் தன்னை நிலைப்படுத்தி வந்துள்ளது. அத்தகைய தியாக மனப்பான்மை உள்ள இயக்கம் ஒரு தனிநபர் கைதால் பின்னடைவைச் சந்தித்து விடாது. இயக்கத்தை இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல என்னுடைய கைது எங்கள் தோழர்களுக்கு கூடுதல் உத்வேகத்தையும் பொறுப்பையுமே அளிக்கும்.''

''இந்தப் புதுயுகத்தில், தலைமறைவு வாழ்க்கை யின் மூலம் வெகுஜன ஆதரவை நீங்கள் எப்படிப் பெற முடியும்?''

''தலைமறைவு வாழ்க்கை என்பது ஒரு புரிதல் கோளாறு. யாருக்கு நாங்கள் தலைமறைவு? மக்கள் விரோத அரசாங்கத்துக்கும் போலீஸுக்கும்தான் நாங்கள் தலைமறைவு. பொதுமக்களுக்கு அல்ல. நாங்கள் மக்களுடன் கலந்துதான் வாழ்கிறோம்; இயங்குகிறோம். எங்களின் பணிகளை முன்னெடுக் கிறோம். எங்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் அவர்களைச் சார்ந்துதான் இருக்கிறோம். இதில் எங்கு வந்தது தலைமறைவு?''

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு