Published:Updated:

இனி, சிறையையும் ஜெயிப்பார்கள்!

பேரறிவாளன், முருகன் ரிசல்ட்

##~##

வாழ்க்கை ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் பேரறிவாளனுக்கு பரீட்சை ரிசல்ட் வந்து விட்டது. சிறைத்துறை வரலாற்றில் முதன்மையான மதிப்பெண் வாங்கி இதிலும் கவனிப்பைப் பெற்று விட்டார். 

'வேலூர் மத்தியச் சிறையை, பேரறிவாளனும் முருகனும் சேர்ந்து ஒரு கல்விக்​கூடமாக மாற்றி விட்டார்கள்’ என்​கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 21 வருடங்​களாகச் சிறை​யில் அடைபட்டு, தூக்குத் தண்டனையை எதிர்​நோக்கி இருப்ப​வர்கள் இவர்கள். ஆனாலும், மனம் தளராமல், சிறையிலேயே படித்து  ப்ளஸ் டூ தேர்வு எழுதினார்கள். பேரறிவாளன் 1,096 மதிப்பெண்களும், முருகன் 983 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளிடம் பேசினோம். ''படிப்பின் மேல் அத்தனை ஆர்வம் கொண்டவன் என் மகன் பேரறிவாளன். 12-ம் வகுப்புத் தேர்வு எழுத முடியவில்லை என்ற ஏக்கம் அவனிடம் நீண்ட காலமாகவே இருந்தது. அது இப்போது நிறைவேறி விட்டது. ஜோலார்பேட்டையில் 10-ம் வகுப்பு முடித் தான். அப்போது, பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்தான். பிறகு, கிருஷ்ணகிரியில் அரசு பாலிடெக்னிக்கில் சேர்ந்து டிரிபிள்-இ முடித்தான். அதிலும் 85 சதவிகிதத்துக்கும் மேல் வாங்கினான். அதன் பிறகுதான் கொலை வழக்கில் கைதாகி சிறைக்குப் போனான். ஆனாலும் நாங்கள் ஒவ்வொரு முறை பார்க்கச் செல்லும்போதும் பகுத்தறிவு, பொது அறிவு தொடர்பான புத்தகங்களை வாங்கிவரச் சொல்வான்.

இனி, சிறையையும் ஜெயிப்பார்கள்!

சிறையில் இருந்தவாறே பேரறிவாளன் பி.சி.ஏ. முடித்து பிறகு எம்.சி.ஏ. முடித்தான். தட்டச்சுப் பயிற்சியையும் சிறையில் இருந்தவாறே முடித்துள்ளான். எம்.ஃபில் படிக்க வேண்டும் என்பது பேரறிவாளனின் கனவுகளில் ஒன்று. எம்.ஃபில். படிப்பதற்கு 12-ம் வகுப்புச் சான்றிதழ் அவசியம் என்று கூறினார்கள். அதனால்தான் இந்த வருடம் 2 தேர்வு எழுதினான். இவனைப் பார்த்து முருகனுக்கும் படிப்பு ஆர்வம் ஏற்பட்டு விட்டது.

கடந்த 2011-ம் வருடம் தேர்வு எழுதச் சென்றபோது, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, தேர்வுக்கு அனுமதிக்க மறுத்து விட்டனர். அப்போதே மிகவும் கவலையாக இருந்தான். இவனுக்குப் படிப்பு மீதுள்ள ஆர்வத்தைப் பார்த்த சிறைத்துறை அதிகாரிகள், வேலூர் மத்திய சிறைச் சாலையில் தேர்வு மையத்தை இந்த ஆண்டு ஏற்படுத்திக் கொடுத்து உதவினார்கள். இப்போது என் மகன் நிறைய மதிப்பெண்கள் எடுத்ததைப் பார்த்து, மகிழ்ச்சியில் நிற்கிறேன். அதே நேரம் மாணவர்களுக்குப் பள்ளியிலோ, கல்லூரியிலோ பேராசிரியராகப் பாடம் சொல்லித்தர வேண்டிய ஒருவன், சிறையில்

இனி, சிறையையும் ஜெயிப்பார்கள்!

இன்னும் மாணவனாகவே இருப்பதை நினைத்தால், மனது வலிக்கிறது. எப்படி இந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்தார்களோ, அதுபோலவே சிறைக் கம்பிகளையும் தர்மம் என்ற சாவியைக் கொண்டு திறந்து வருவார்கள்'' என்று நம்பிக்கையுடன் கண் கலங்கினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ''பேரறிவாள னையும் முருகனையும் எப்படி வாழ்த்​துவது என்று தெரியவில்லை. கடந்த 21 வருடங்களாகத் தாங்க முடியாத சோகத் தோடும் பிரிவுகளின் ஏக்கத்தோடும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் இவர் களுக்கு இந்த மதிப்பெண்கள் ஆறுதல் தரும். பேரறிவாளன் மாணவன் அல்ல. அவன் ஒரு பேராசிரியர். சிறையில் மற்ற கைதிகளுக்கு என் தம்பி பயிற்சி தரும் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அத்தனைக் கனிவான வார்த்தைகளால் சொல்லித் தருவான். பல இரவுகளில் அவன் உண்ணாமல்கூட படுத்தது உண்டு. ஆனால் புத்தகம் படிக்கா​மல் ஒருபோதும் உறங்கியது இல்லை.

அவர்கள் சிறைக் கூடத்தைக் கல்விக் கூடமாக மாற்றி வருகிறார்கள். மனைவி, மகளைப் பிரிந்திருக்கும் நிலையிலும் தம்பி முருகன் 983 மதிப்பெண்கள் எடுத்திருப்பது எத்தனை பெரிய சாதனை? அதிலும் வணிகவியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். கூடிய விரைவில் சிறைக் கம்பிகளில் இருந்தும் அவர்கள் வெளியே வருவார்கள். நியாயம் எப்போதும் காப்பாற்றப் படும். ஆனால் அதற்கான காலம் அதிகமாவதுதான் வேதனை'' என்று நெகிழ்ந்தார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ''பேரறிவாளனிடம் இருக்கும் ஆற்றலுக்கு இன்னும் 100 மதிப்பெண்கள் அதிகமாகப் பெற்று இருக்க வேண்டும். முருகனும் அதே போலத்தான். என்னைப் பொறுத்த வரை அவர்கள் சிறையில் இல்லை. மாணவர்களாக விடுதியில் இருக்கிறார்கள். படிப்பை முடித்துவிட்டு அவர்கள் நிச்சயம் வெளியே வருவார்கள்'' என்றார்.

சிறைக்கூடங்களில் இருந்தாலும் வைராக்கி​யமாகப் படித்தால் உயர்வான மதிப்பெண்கள் வாங்க முடியும் என்பதற்கு தன்னம்​பிக்கை உதாரணமாக இருவரும் திகழ்கிறார்கள்!

- கே.ஏ.சசிகுமார்

 ஆல் பாஸ் கைதிகள்!

தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் 34 பேர் ப்ளஸ் டூ தேர்வு எழுதி இருந்தனர். அத்தனை பேருமே தேர்ச்சி அடைந்து விட்டனர். மதுரை மத்தியச் சிறையில் சௌந்திர பாண்டியன் என்ற கைதி, 1,080 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இவர், தேனி மாவட்டம் போடி பூதிப்புரம் அருகே உள்ள வாழையத்துப்பட்டியைச் சேர்ந்தவர். சொத்துத் தகராறில் தன்னையும், தம்பியையும் தாக்கிய அண்ணனைக் கொலை செய்த வழக்கில் 2002-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அலுவலர்கள் கொடுத்த ஊக்கம் காரணமாகத்தான் ப்ளஸ் டூ தேர்வுக்குப் படித்தாராம். அடுத்து அஞ்சல் வழியில் பட்டப்படிப்பு படிக்கவும் ஆர்வமாக இருக்கிறார்.  

'மதுரை மத்தியச் சிறையில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய 10 கைதிகளும் பாஸ்’ என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார், ஜெயில் கண்காணிப்பாளர் ஆனந்தன்.

- கே.கே.மகேஷ்