Published:Updated:

தெற்கே... டெங்கு!

நெல்லையில் அலறும் பிள்ளைகள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

'டெங்குக் காய்ச்சல் வந்து விட்டால் மாத்​திரை கிடையாது, மரணம் ஏற்பட்டு விடும்’ என்று, தமிழகமே பீதியில் தவிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் மரண எண்ணிக்கை அரை சதத்தை நோக்கிச் செல்லவே, அதிர்ந்து நிற்கிறது அரசு. 

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில், நாள்தோறும் சராசரியாக 200 உள் நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலையில், வெளி நோயாளிகள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குழந்தைகள் வார்டில் போதிய இடவசதி இல்லாததால், கூடுதலாக இரண்டு வார்டுகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதிலும் இடம் இல்லாமல் ஒரே கட்டிலில் இரண்டு, மூன்று நோயாளிகள் தங்குவதும், தரையில் பாய் விரித்துத் தங்கும் அவலமும் தொடர்கிறது.

தெற்கே... டெங்கு!

ஏரியா முழுவதும் பதற்றம் நிலவுவதால், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்ச ரான டாக்டர் விஜய், நேரில் வந்து ஆய்வு செய்தார். 'நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடப்பதால் இந்த நோய் விரைவில் கட்டுப்படுத்தப்​படும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் டீன் மனோகரனிடம் பேசினோம். ''டெங்கு ஃபீவர் ஒருவித வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இந்த வைரஸை 'ஏடிஸ்’ வகையைச் சேர்ந்த கொசுக்கள் பரப்புகின்றன. இந்தக் கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். நல்ல தண்ணீரில் மட்டுமே வாழ்கின்றன. அதனால், வீடுகளில் குடிநீரை முறைப்படி பாதுகாக்க வேண்டும். மழை நீர் தேங்கும் வகையில் பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகளைப் போட்டுவைத்திருக்கக் கூடாது.

தெற்கே... டெங்கு!

டெங்கு வராமல் இருப்பதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. வந்த பிறகும் டெங்குக் காய்ச்சலை சரிசெய்ய மருந்துகள் கிடையாது. இந்த நோய்க் கிருமிகள் உடலில் புகுந்து வெள்ளை அணுக்களை சீர்குலைத்து அழித்துவிடுவதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. இதனால் உடலின் பாகங்கள் அனைத்தும் செயல் இழக்கும் ஆபத்து ஏற்படுகிறது. உடலின் வெள்ளை அணுக்களை சமன்செய்ய ரத்தம் கொடுப்பது மட்டுமே ஒரே வழி.

தெற்கே... டெங்கு!

இந்த நோய் தாக்கியவர்க​ளுக்குக் கடுமையான காய்ச்சல் இருக்கும். ஓரிரு நாளில் காய்ச்சல் கட்டுப்படுவதுபோல தெரியும். உண்மையில், டெங்கு வைரஸ் உள்ளே இருந்து தீவிரத் தாக்குதலுக்குத் தயாராகும். சில நாட்களில் மீண்டும் காய்ச்சல் வரும். இந்த சமயத்தில் உடலில் ரத்தக் கசிவு ஏற்படும். இது மிகவும் மோசமான சூழ்நிலை. ஆகவே, காய்ச்சல் வந்ததும் சரியான மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து​கொள்ள வேண்டும். எந்தக் காரணம்கொண்டும், தாங்​களாக​வே மருந்துக் கடையில் மாத்திரைகளை வாங்கிச் சாப்​பிடக் கூடாது'' என்றார் கண்டிப்​புடன்.

''இந்த நோயினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?'' என்று, குழந்தைகள் நல மருத்துவரான வி.டி.ராஜேஷிடம் கேட்டோம். ''பொதுவாகவே வயதாகி விட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து

தெற்கே... டெங்கு!

விடும். குழந்தைகளுக்கு எளிதாக நோய் தொற்றிக் கொள்ளும். அதனால்தான் இரு தரப்பினரையும் இந்த நோய் உடனடியாகத் தாக்குகிறது. இந்த நோய் குறித்த விழிப்புஉணர்வு  மக்களிடம் இன்னும் போதுமான அளவில் இல்லை. காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து குறைந்து விடும். அதனால், அடிக்கடி தண்ணீர், இளநீர், சர்க்கரைக் கரைசல் கொடுக்க வேண்டும்.

ஆனால், வெளியூர்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்கள் மணிக்கணக்கில் நோயாளிக்கு குடிப்பதற்கு எதுவுமே தராமல் கொண்டு வருகிறார்கள். இதனால், நோயாளிகள் நிலைமை மிகவும் மோசமடைந்து விடுகிறது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வலி, அசதி, சோர்வு இருக்கும் என்பதால் உடல்வலி மருந்துகளையும், ஸ்டீராய்ட் வகை மருந்துகளையும் உட்கொண்டு சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். காய்ச்சல் வந்ததும் மருத்துவரைச் சந்திப்பதுதான் சரியான தீர்வு'' என்றார்.  

சித்த மருத்துவத்தின் மூலம் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த முடியும் என்கிறார். சித்த மருத்துவ ஆராய்ச்சி மாணவரான ரமேஷ். ''சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்றவை ஏற்பட்டபோது சித்த மருத்துவமே அந்த நோய்களைத் தீர்க்கும் மருந்தாக இருந்தது. டெங்கு காய்ச்சலுக்கு சித்த வைத்தியத்தில், 'நிலவேம்புக் குடிநீர்’, 'நொச்சிக் குடிநீர்’ போன்ற கஷாயங்கள் இருக்கின்றன. இவற்றை நோய் தாக்குதல் இல்லாதவர்களும் சாப்பிட்டு, வரும் முன்னர் காத்துக்கொள்ளலாம்'' என்று சொல்கிறார்.

இவரது கருத்தையும் அரசு பரிசீலித்து, டெங்குவை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்!

- ஆண்டனிராஜ்,

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு