Published:Updated:

புதுக்கோட்டை: 2 பேருக்கு அமைச்சர் பதவி - 30 ஆண்டுகால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி

புதுக்கோட்டை அமைச்சர்கள்
புதுக்கோட்டை அமைச்சர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாக திருமயம் எம்.எல்.ஏ ரகுபதிக்கு சட்டத்துறையும், ஆலங்குடி எம்.எல்.ஏ சிவ.வீ.மெய்ய நாதனுக்குச் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் திருமயம் தொகுதியில் தி.மு.க-வின் எஸ்.ரகுபதி, ஆலங்குடி தொகுதியில் தி.மு.க-வின் சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டைத் தொகுதியில் தி.மு.க-வின் வை.முத்துராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸின் தி.ராமச்சந்திரன், கந்தர்வக்கோட்டையில் தி.மு.க கூட்டணியில் எம்.சின்னதுரை ஆகியோர் வெற்றிபெற்றனர். விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். புதுக்கோட்டையில் தி.மு.க கூட்டணி 5 இடங்களையும், அ.தி.மு.க கூட்டணி 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாக தி.மு.க ஆட்சியில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது.

திருமயம் எம்.எல்.ஏ எஸ்.ரகுபதிக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. சட்டத்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 1991-96-ல் இதே திருமயம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரகுபதிக்கு தொழிலாளர் நலத்துறை, வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தி.மு.க-வில் இணைந்த ரகுபதிக்கு, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் புதுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, வெற்றியும் பெற்றா. அப்போது, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பொறுப்பும் வகித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆலங்குடி எம்.எல்.ஏ சிவ.வீ. மெய்ய நாதனுக்கு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு 2006 முதல் 2016 வரையிலும் தி.மு.க சார்பில் அறந்தாங்கி ஒன்றியக் குழு தலைவராகவும், 2016-ல் ஆலங்குடி எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார்.

இதுபற்றி திமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது,

``புதுக்கோட்டைத் தொகுதியைப் பொறுத்தவரை தி.மு.க சார்பில் கடந்த 1989-ல் ஆலங்குடி தொகுதியில் வெற்றி பெற்ற சந்திரசேகரனுக்குக் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதன்பின்பு 1996 அமைச்சரவையில் தி.மு.க-வின் பெரியண்ணன் அமைச்சராக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அவர் கொறடாவாக நியமிக்கப்பட்டார். அதன்பின்பு 2006-ல் தி.மு.க அமைச்சரவையிலும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை.

'புள்ளம்பாடி யூனியன் தலைவர் டு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்'-கே.என்.நேருவின் அரசியல் பயணம்...

அதே நேரத்தில் ஒவ்வொரு முறை அ.தி.மு.க ஆட்சி அமைந்த போதும், மாவட்டத்தில் ஒரு அமைச்சரையாவது நியமித்துவிடுவார் ஜெயலலிதா. கடந்த 2011-ல் சுப்பிரமணியன், விஜயபாஸ்கர் என இருவரை அமைச்சராக்கியிருந்தார். இந்த நிலையில் தான் எங்கள் மாவட்டத்துக்கான 30 ஆண்டுக்கால அமைச்சர் கனவை இந்த முறை தி.மு.க தலைவர் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தோம். மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்காவது அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால், இருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து எங்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துவிட்டார்" என்கின்றனர் உற்சாகமாக.

அடுத்த கட்டுரைக்கு