Election bannerElection banner
Published:Updated:

`கூட்டணி தர்மத்துக்காகக் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு' எனச் சொல்லும் ராமதாஸுக்கு 20 கேள்விகள்!

மோடியுடன் ராமதாஸ்
மோடியுடன் ராமதாஸ்

கூட்டணி தர்மத்துக்காக உயிர் கொடுக்கும் இயக்கமா பா.ம.க? சந்தேகம் எழுப்புகின்றன 20 கேள்விகள்!

``மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கூட்டணி தர்மத்துக்காகவே பா.ம.க ஆதரித்தது. நாங்கள் வாக்களித்தது ஈழத் தமிழருக்கு எதிராக அல்ல. அன்புமணியின் மந்திரி பதவிக்காக நாங்கள் வாக்களிக்கவில்லை'' எனச் சொல்லியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

வெட்டிப் பேச்சுகளும் அறிக்கைகளும் விடும் சராசரி அரசியல் கட்சி அல்ல பா.ம.க. பசுமைத் தாயகம், பொங்கு தமிழ் அறக்கட்டளை, மது, புகையிலைக்கு எதிரான இயக்கம், சுற்றுச் சூழல் மேம்பாடு என பா.ம.க-வின் பாதை வித்தியாசமானது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... பேசுவதற்கு எப்படி தயாராக வேண்டும்... சட்டமன்ற நடைமுறைகள் என்ன என்பதையெல்லாம் தைலாபுரம் `பா.ம.க அரசியல் பயிலரங்க'த்தில் (Political Training Centre) பயிற்சி அளிக்கிறார்கள். இப்படியான பயிற்சியைத் தமிழகத்தில் எந்தக் கட்சியும் கொடுத்ததில்லை. இப்படியான நன்மதிப்பைப் பெற்றிருக்கும் பா.ம.க, `கூட்டணி தர்மத்துக்காக' என்கிற வாதத்தை வைத்திருப்பது சரிதானா?

``கூட்டணி தர்மத்துக்காகத்தான் குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்தோம்'' என சொல்லும் ராமதாஸிடம் எழுப்ப 20 கேள்விகள் இருக்கின்றன.

அன்புமணி
அன்புமணி
விகடன்

1. ``எனது வாரிசுகளோ சந்ததியினரோ கட்சியிலோ சங்கத்திலோ பொறுப்புக்கு வர மாட்டார்கள்'' என 1989 ஜூலை 16-ம் தேதி சென்னை கடற்கரை கூட்டத்தில் சொன்னார் ராமதாஸ். அன்புமணியைக் கொண்டு வந்ததன் மூலம் அவர் அளித்த இந்த சத்தியம் மீறப்பட்டுவிட்டது. `தர்மத்தை' காப்பாற்ற நினைக்கும் ராமதாஸின் நல்ல எண்ணம், சத்தியத்தைக் காப்பாற்ற ஏன் தவறிவிட்டது?

2. சமூக நீதி, இடஒதுக்கீட்டை எல்லாம் உயிர் மூச்சாகக் கொண்டது பா.ம.க. அந்த இட ஒதுக்கீட்டைக் குறைப்பதாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தால், 'கூட்டணித் தர்மத்துக்காக' பா.ம.க அதை ஆதரிக்குமா?

வாழப்பாடி ராமமூர்த்தி
வாழப்பாடி ராமமூர்த்தி
விகடன்

3. 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வுக்கும் வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸுக்கும் சேர்த்து, 8 தொகுதிகளைக் கொடுத்த கருணாநிதி, அதை இருவரும் பிரித்துக் கொள்ளச் சொன்னார். நீங்களோ ஒரு தொகுதியை மட்டும் கொடுக்க... வாழப்பாடி எதிர்ப்பு தெரிவித்தார். சேலத்தில் போட்டியிட்ட வாழப்பாடித் தோற்றுப் போனார். அந்தத் தேர்தலில் `கூட்டணி தர்மத்தை' சேலம் தொகுதியில் பா.ம.க கடைப்பிடித்ததா?

4. 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று, மத்தியில் வாஜ்பாய் அமைச்சரவையில் பா.ம.க-வைச் சேர்ந்த என்.டி.சண்முகம் சுகாதாரத் துறை அமைச்சராகவும் பொன்னுசாமி பெட்ரோலியத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்கள். இடையில் 2001 சட்டசபைத் தேர்தல் வந்தபோது திடீரென ஒருநாள், மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அதிரடியாக அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தது பா.ம.க. அப்போது `கூட்டணி தர்மம்' எங்கே போனது?

வாஜ்பாயுடன் ராமதாஸ்
வாஜ்பாயுடன் ராமதாஸ்

5. 2001 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த 27 சீட்டுகளும் புதுச்சேரியில் இரண்டரை ஆண்டு ஆட்சி பங்கும்தான் கூட்டணி தர்மத்தைக் கூறு போடக் காரணமா?

6. 2001 சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ``சீ.. சீ இந்தப் பழம் புளிக்கும்'' எனச் சொல்லி, உடனே அ.தி.மு.க கூட்டணியை விட்டு விலகி, மீண்டும் வாஜ்பாய் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களைப் பெற்றுக்கொண்டது பா.ம.க. சண்முகத்துக்கு உணவு பதப்படுத்தல் துறையையும் ஏ.கே.மூர்த்திக்கு ரயில்வே துறையையும் வாங்கிக்கொண்டீர்கள். ஒரு கூட்டணியில் இடம்பெற்று மந்திரிசபையில் தொடர்ந்துகொண்டிருந்தபோதே அதை உதறிவிட்டு, எதிரணியில் போய் 20 எம்.எல்.ஏ-க்களை ஜெயித்துவிட்டு, மீண்டும் அதே மத்திய மந்திரிசபையில் அமர்வது எல்லாம் அரசியலில் யாருமே கடைப்பிடிக்காத யுத்தி. கூட்டணி தர்மத்தில் இது எந்த வகை?

ஜெயலலிதாவுடன் ராமதாஸ்
ஜெயலலிதாவுடன் ராமதாஸ்
விகடன்

7. 2001 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியபோது, ``எங்களை ஜெயலலிதா மரியாதையாக நடத்தவில்லை. ராஜ்யசபா எம்.பி. பதவி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டோம். ஜெயலலிதா எந்தப் பதிலும் தரவில்லை. தன்மானத்தை இழந்துவிட்டு, அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்'' என்றார் ராமதாஸ். அன்றைக்குத் தன்மானத்துக்கே சோதனை வந்தபோது ஜெயலலிதாவிடம் இருந்து விலகி வாஜ்பாயிடம் போய்ச் சேர்ந்தது பா.ம.க. தன்மானம் பெரிதா, கூட்டணி தர்மம் பெரிதா என்பதற்கு பா.ம.க. விளக்கம் சொல்லுமா?

ஜெயலலிதாவுடன் ராமதாஸ்
ஜெயலலிதாவுடன் ராமதாஸ்
விகடன்

8. 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க.

தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததும் நடந்த 2006 உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க-வுக்கு இடங்களை ஒதுக்கினார் கருணாநிதி. ``பா.ம.க. இடங்களில் தி.மு.க-வின் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, திட்டமிட்டு எங்களைத் தோற்கடித்தார்கள். தி.மு.க. பச்சைத் துரோகம் செய்துவிட்டது'' எனக் கர்ஜித்தார் ராமதாஸ். கூட்டணி தர்மத்துக்காக அன்றைக்குப் பா.ம.க பொறுமையைக் கடைப்பிடிக்காமல் போனது ஏன்? கட்சிக்குப் பாதிப்பு என்றால் 'பச்சைத் துரோகம்' குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் `கூட்டணி தர்மம்' என்பது முரணாகத் தெரியவில்லையா?

கருணாநிதியுடன் ராமதாஸ்
கருணாநிதியுடன் ராமதாஸ்

9. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 7 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில்கூட பா.ம.க ஜெயிக்கவில்லை. உடனே ராமதாஸ், ``பா.ம.க போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க அதிக `விலை கொடுத்து’ வெற்றியை வாங்கியிருக்கிறது. இந்த வெற்றி நேர்மையானது அல்ல. ஜனநாயகம் தோற்றிருக்கிறது; பணநாயகம் வென்றிருக்கிறது. பா.ம.க போட்டியிட்ட தொகுதிகளில் பணம் கொடுத்தார்கள் என்பது எல்லாம் சாதாரண வார்த்தை. பணத்தை அள்ளி வீசி விதைத்திருக்கிறார்கள். விதைத்த அளவுக்கு அறுவடை செய்திருக்கிறார்கள்'' என்றார். இப்படிப் பேசிவிட்டு, அடுத்த இரண்டே ஆண்டுகளில் 2011 சட்டசபைத் தேர்தலில் பணநாயகத்திடம் (தி.மு.க) சரண் அடைந்தார் ராமதாஸ். தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துவிட்டு அவர்களிடமே போய் சரண் அடைவது எந்த வகையில் தர்மம்?

2009 தேர்தல்... ஜெயலலிதாவுடன் பா.ம.க. வேட்பாளர்கள்
2009 தேர்தல்... ஜெயலலிதாவுடன் பா.ம.க. வேட்பாளர்கள்

10. ``பா.ம.க சின்னமான மாம்பழத்தை ஒரு லாரி நிறைய கொண்டுவந்து, அதைக் காலால் மிதித்துத் துவைத்து அறிவாலயத்தில் கொண்டாடி உள்ளனர்'' என 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காட்டமாகச் சொன்ன ராமதாஸ், அதே அறிவாலயத்துக்குப் போய் 2011 சட்டசபைத் தேர்தலில் 30 சீட்டுகள் வாங்கிக்கொண்டார். தன் கட்சியின் சின்னத்தை அவமதித்தவர்களிடமே சரண் அடைவது தர்மமா?

அறிவாலயத்தில் மாம்பழத்தை அவமரியாதை செய்யும் தி.மு.க தொண்டர்கள்
அறிவாலயத்தில் மாம்பழத்தை அவமரியாதை செய்யும் தி.மு.க தொண்டர்கள்

11. ``தடை செய்யப்பட்ட குட்காவை 40 கோடி ரூபாய் கையூட்டு வாங்கிக்கொண்டு விற்பனை செய்ய அனுமதித்தவர் ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கர். அந்தப் பணம் அதிகாரப் படிக்கட்டுகளின் உச்சத்தில் இருப்போர் வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்துக்கே பெரும் அவமானம்'' எனச் சீறி அறிக்கை விட்டார் ராமதாஸ். குட்கா, பான்பராக், புகையிலை போன்ற போதைப் பொருளுக்கு எதிராக பெரும் போர் நடத்திவிட்டு, போதைக்குத் துணை போகிறவர்களிடமே அரசியல் கூட்டணி சேர்ந்தால், அதற்குப் பெயரும் கூட்டணி தர்மமா?

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்
விகடன்

12. இளைய சமுதாயத்தைக் கெடுக்கும் எனச் சொல்லிப் புகை பிடிக்கும் திரைப்பட காட்சிகளுக்கு எதிராகப் போராடுகிற ராமதாஸ், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார். புகை உடல்நலத்துக்கு கேடு எனத் தெரிந்த ராமதாஸுக்கு, ஊழல் நாட்டுக்கு கேடு எனக் கண்டறியத் தெரியாதா? இதுவும் சுயநல கூட்டணி தர்மத்துக்குதானா?

13. `சர்கார்' படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு எதிராக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ``அரசியல் பொறுப்பு பேசும் சர்கார் இயக்குநருக்கும் நடிகருக்கும் சமூகப் பொறுப்பு வேண்டாமா?'' எனக் கேட்டார். அது அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாதா டாக்டர்? நிழலுக்குக் கவலைப்பட்ட நீங்கள், ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு கூட்டணி அமைக்கும் நிஜத்துக்கு ஏன் கவலைப்படவில்லை?

சர்கார் படத்தில்
சர்கார் படத்தில்
Vikatan

14. இன்னொரு கட்சியின் வரலாற்றை எந்த அரசியல் தலைவரும் எழுதியதில்லை. ராமதாஸ் அ.தி.மு.க-வின் வரலாற்றை `கழகத்தின் கதை' எனப் புத்தகமாக எழுதினார். ``ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அ.தி.மு.க., இன்று ஊழல் சுனாமியாக மாறியிருக்கிறது'' எனப் புத்தகத்தில் முன்னோட்டம் கொடுத்தார். அப்படிப் புத்தகம் எழுதிவிட்டு, அதே அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வதும் `கூட்டணி தர்மத்துக்குள்'தான் அடங்குமா?

கழகத்தின் கதை
கழகத்தின் கதை
``என் இறுதி மூச்சு வரை அந்த 3 சத்தியங்கள் அமலில் இருக்கும்!" - ராமதாஸ் @1996 #VikatanVintage

15. ''ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்ததற்குக் கொள்கை மாறுபாடுகள் அல்ல. பதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பதில் ஏற்பட்ட போட்டிதான் காரணம்'' என `கழகத்தின் கதை'யில் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். `கூட்டணி தர்மம்' என இப்போது ராமதாஸ் பேசியிருப்பது கொள்கை மாறுபாடுகள் தானே?

கழகத்தின் கதை வெளியீட்டு விழாவில்...
கழகத்தின் கதை வெளியீட்டு விழாவில்...

16. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தபோது ``கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை'' எனச் சொன்னீர்கள். இப்போது குடியுரிமை மசோதா கொள்கையில் நாணலாகவும் கூட்டணி நிலைப்பாட்டில் தேக்குமரமாகவும் அல்லவா பா.ம.க மாறிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

17. முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் நடந்த ஊழல்களைப் பட்டியல் போட்டு 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் கவர்னரிடம் புகார் அளித்தது பா.ம.க. அந்த நிலைப்பாட்டில் பா.ம.க. இப்போதும் உறுதியாக இருக்கிறதா? அல்லது `கூட்டணி தர்மத்துக்காக' அதை வாபஸ் பெற்றுவிட்டதா?

எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்
எடப்பாடி, பன்னீருடன் ராமதாஸ்

18. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எடப்பாடி அரசு அடிக்கல் நாட்டியபோது, ''ஊழலில் திளைக்கும் மாநிலம் என்ற தீராப்பழியை தமிழகத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்குச் சமம்'' எனச் சொன்னார் ராமதாஸ். இப்போது ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி நடந்து முடிந்தால் அந்த விழாவில் `கூட்டணி தர்மத்துக்காக' பா.ம.க பங்கேற்குமா?

ஜெயலலிதா
ஜெயலலிதா

19. ``ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களை மறைக்க முடியாது; அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவ முடியாது'' என 2018 மே 7-ம் தேதி அறிக்கை விட்டீர்கள். அந்த பினாமிகளோடு இப்போது கூட்டணி அமைத்திருக்கும் பா.ம.க-வின் பாவங்களை எங்கே கழுவுவார்கள்?

20. சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தை பா.ம.க எதிர்க்கிறது. அதை எப்படியும் கொண்டு வந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரையில் போராடுகிறது அ.தி.மு.க. இந்த எட்டு வழிச் சாலையை அ.தி.மு.க. அமல்படுத்த முற்பட்டால், அதை `கூட்டணி தர்மத்துக்காக' பா.ம.க ஆதரிக்குமா?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு