Published:Updated:

உள்ளுக்குள் எரிச்சல்... ஊரெல்லாம் விரிசல்...

உள்ளுக்குள் எரிச்சல்... ஊரெல்லாம் விரிசல்...

உள்ளுக்குள் எரிச்சல்... ஊரெல்லாம் விரிசல்...
##~##

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டங்களில், கட்சிக் கோஷ்டிப் பூசலுக்கு பெட்ரோல் ஊற்றி எரியவைத்து விட்டார்கள் உடன் பிறப்புக்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெட்ரோல் விலையைக் குறைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும், பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்ட ணத்தை உயர்த்திய மாநில அரசாங்கத்தைக் கண்டித்தும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்து இருந்தார். அதன்படி, கடந்த 30-ம் தேதி தென்சென்னையில் கருணாநிதியும், வடசென்னையில் அன்பழகனும், திண்டிவனத்தில் ஸ்டாலினும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை வகித்தனர். இந்த இடங்களில் எல்லாம் அமைதியாகவே நடந்து முடிந்தன ஆர்ப்பாட்டங்கள். ஆனால், கோஷ்டிக் கானத்துக்குப் பிரபலமான பல இடங்களில் தி.மு.க. உடன்பிறப்புகள் 'உடைந்து நின்று’ ஆர்ப்பாட்டங்களை நடத்தவே, இந்தக் காட்சிகளைக் கண்டு அதிர்ந்து நின்றார்கள் கட்சியின் மூத்த தொண்டர்கள்.

மதுரை மல்லுக்கட்டு!

மதுரையில் அழகிரி கோஷ்டியும் ஸ்டாலின் ஆதரவாளர்களும் தனித்தனியாக செயல்பட்டு வருவது குறித்து நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, இப்போது ஸ்டாலின் பக்கம் தாவியதைத் தொடர்ந்து, பல அதிரடிகள் மதுரையில் அரங்கேறி வருகின்றன.

உள்ளுக்குள் எரிச்சல்... ஊரெல்லாம் விரிசல்...

கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் 3-ம் தேதி எப்படிக் கொண்டாடுவது என்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை, அழகிரி ஆதரவாளர்கள் அடியோடு புறக்கணித்ததையும் கடந்த இதழில் எழுதி இருந்தோம்.  

'எவர் வந்தாலும் வராவிட்டாலும் 30-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்குக் கழகத் தொண்டர்கள் படையெடுத்து வர வேண்டும்’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் அந்தக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். தலைமை அறிவித்த ஆர்ப்பாட்டம் என்பதால், இதில் கோஷ்டி கானம் ஒலிக்காது என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் வழக்கத்தைவிட அதிகமாக எதிரொலித்தது.

30-ம் தேதி காலை 9 மணிக்கே மதுரை தலைமை தபால் நிலையத்தின் முன் தொண்டர்கள் திரள ஆரம்பித்தார்கள். மத்திய அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் பலரும் கறுப்புச் சட்டை அணிந்தும் கறுப்புக் கொடி ஏந்தியும் வந்து இருந் தார்கள்.

மேடைக்குப் பதில் லாரி ஒன்றுதான் மேடையாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் மீது ஏற நிர்வாகிகள் தயங்க, மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, இளைஞர் அணி அமைப் பாளர் ஜெயராமன், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், வேலுச்சாமி, முன்னாள் துணை மேயர் குழந்தைவேலு, சமீபத்தில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட பாக்கியநாதன் உள்ளிட் டவர்கள் மட்டும் தயக்கத்துடன் மேலே ஏறினார்கள். மற்றவர்கள் மேடைக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் மாதிரி தூரமாக நின்றுகொண்டார்கள். அவர்களைப் பார்த்து, 'அண்ணே... வாங்கண்ணே!’ என்று அழைக்க... அவர்களோ காது கேளாதவர்கள் மாதிரியே திரும்பி நின்றார்கள்.

20 அடி தூரம் தள்ளி பிளாஸ்டிக் சேர்கள் போட்டு ஒரு கும்பல் உட்கார்ந்து இருந்தது. முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் எம்.எல்.ஏ. கௌஸ் பாட்சா, மாவட்டப் பொருளாளர் மிசா பாண்டியன், துணைச் செயலாளர் உதயகுமார், பகுதிச் செயலாளர்கள் கோபிநாதன், பாண்டி யராஜன், ஒச்சுபாலு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம், சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட(?!) இசக்கிமுத்து - என்று அழகிரியின் போர்ப் படைத் தளபதிகள் தனியே உட்கார்ந்து இருந்தார்கள். பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தபடி மீசையைத் திருகியபடி, மேடைப் பகுதியை கண்காணித்துக்கொண்டு இருந்தார் மன்னன். அந்தத் தோரணையைப் பார்த்து, கூட்டத்துக்கு உள்ளேயே குனிந்து தலைமறைவானார்கள் பலர்.

ஸ்டாலின் ஆதரவாளர்கள் மேடையில் நிற்க, அழகிரி ஆட்கள் தனியாக சேர் போட்டு உட்கார்ந்து இருக்க, வேகமாக வந்தார் வி.கே.குருசாமி. இவர் அழகிரி ஆள். வந்த வேகத்தில் மேடை ஏறி விட்டார். மேடைக்குப் போன பிறகுதான் 'நம்ம ஆட்கள் யாரையும் காணோமே’ என்று உறைக்க ஆரம்பித்தது. கீழே இறங்கினாலும் தப்பு, மேலே நின்னாலும் தப்பு என்று அவர் தவித்த தவிப்பு இருக்கிறதே... அய்யோ பாவம்.

பொய் வழக்குப் போடும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து சில மாதங்களுக்கு முன் இதே இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். ஆறு கல்யாண மண்ட பங்களில் அவர்களை அடைத்துவைத்தது போலீஸ். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில், இரண்டு கோஷ்டிகளையும் சேர்த்தே 300-க்கும் குறைவானவர்களேதான் பங்கேற்றார்கள். காரணம் கேட்டால், 'நிர்வாகிங்க கலந்துக்குங்க'ன்னுதான் அண்ணன் சொன்னார். கட்சிக்காரங்களை எல்லாம் திரட்டிக்கிட்டுப் போகச் சொல்லலை' என்கிறார்கள்.

அது சரி!

ராமநாதபுரம் ரவுசு!

ராமநாதபுரம்  மாவட்டச் செயலாளர் சுப. தங்கவேலனுக்கும் ரித்தீஷ§க்கும் இடையே உள்ள மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்த ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்காக, மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலன் தரப்பினர் காலை 9.30 மணிக்கே திரண்டு விட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது 150 பேர்தான் என்றாலும், வெற்றிப் பெருமிதத்தோடு வீர உரையாற்றிய சுப.தங்கவேலன் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அதையே செயல் வீரர்கள் கூட்டமாக்கி, வருகிற 3-ம் தேதி தலைவரின் பிறந்த நாள் விழாவை எப்படி எல்லாம் கொண்டாட வேண்டும் என்று ஆலோசனைகளை அள்ளி வழங்கிக்கொண்டு இருந்தார்.

உள்ளுக்குள் எரிச்சல்... ஊரெல்லாம் விரிசல்...

அப்போது, தங்கவேலனால் ஆளாக்கப்பட்டு இன்று அவரது பிரதான எதிரியாக இருக்கும் ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் ஒரு கூட்டம் ஊர்வலமாக வந்தது. மத்திய அரசைக் கண்டித்து தனியாக ஆர்ப்பாட்டம் நடத்த தொடங்கி விட்டார்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்புவதைவிட, 'வருங்கால மாவட்டச் செயலாளர் அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் வாழ்க’ என்ற கோஷம்தான் அதிகம் கேட்டது. இதைக் கேட்டு சும்மா இருக்க முடியாத தங்கவேலன் தரப்பினர், 'கழகத்தின் நிரந்தர மாவட்டச் செயலாளர் அண்ணன் சுப.தங்கவேலன் வாழ்க’ என்று எதிர்க் கோஷம் போட்டார்கள். இந்த இரண்டு குரூப்பும் நெருங்கினால் கைகலப்பு வந்துவிடுமே என்று கலங்கிய போலீஸார், இடையே தடுப்பாக நின்று பாதுகாக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள்.

முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, எம்.ஏ.சேக் உள்ளிட்ட அழகிரி ஆதரவாளர்கள் ஜே.கே.ரித்தீஷ் பக்கத்தில் நின்றார்கள். ஆனால், முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் ஆகியோர் சுப.தங்கவேலன் பக்கத்தில் நின்றாலும் அவருடைய ஆளாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. 'நாங்க எந்த அணியையும் சாராதவர்கள். தலைமைக் கழக உத்தரவுப்படி ஆர்ப்பாட்டம் நடத்த வந்திருக்கிறோம்’ என்று தங்கவேலன் பக்கத்தில் நின்றுகொண்டே முருகவேல் சொல்ல, தலையில் அடித்துக்கொண்டார்கள் பத்திரிகையாளர்கள்.

பவானி ராஜேந்திரனோ, 'வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் நதிகள் எல்லாம் கடைசியில் ஒன்றாகக் கடலில் கலப்பது மாதிரி, பல்வேறு பிரிவுகளாக வந்தாலும் நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்’ என்று தேர்ந்த அரசியல்வாதிபோல் சமாளித்தார்.

எந்தெந்த அணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கவனமாகக் குறித்துக்கொண்ட போலீஸாரும் பத்திரிகையாளர்களும் எல்லா ஆர்ப்பாட்டமும் முடிந்த பிறகும், கொஞ்ச நேரம் காத்திருந்தார்கள். வேறு ஏதாவது குரூப் வருகிறதா என்று பார்க்கத்தான். நல்ல வேளை அப்படி யாரும் வரவில்லை!

சேலத்தில் கைகலப்பு!

மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ கணபதி, சூடாமணி, சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, சுபாஷ் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். பிரச்னை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் வரவில்லை. திண்டிவனத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி முகாமுக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள்.

உள்ளுக்குள் எரிச்சல்... ஊரெல்லாம் விரிசல்...

அவர் வரவில்லை என்றாலும் அவரது சிஷ்யப் பிள்ளைகள் சிறப்பாகவே வீரபாண்டி ஆறுமுகத்துக்குக் குடைச்சல் கொடுத்தார்கள். தொழிற்சங்கக் கொடியுடன் வந்த ராஜேந்திரனின் ஆதரவாளர்களான தொ.மு.ச-வினர், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு முன் நின்றபடி, வேண்டும் என்றே உரக்கக் கோஷம் எழுப்பினார்கள். இதனால் வீரபாண்டி ஆறுமுகம், 'கொடியைப் பிடுங்கிட்டு இவனுங்களை அடிச்சு விரட்டுங்கடா’ என்று, மைக்கில் டென்ஷன் ஆகவே, ஆறுமுகத்தின் ஆதரவாளர்களுக்கும், ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு கலவரம் மூண்டது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த காவல்துறை உடனே இரு தரப்பினரையும் படாதபாடுபட்டுப் பிரித்து அனுப்பியது. போலீஸ் கொஞ்சம் அசமந்தமாக இருந்திருந்தால், சேலத்தில் ரத்தம் சிந்தியிருக்கும்.

இப்படி பெட்ரோல் விலையைக் குறைக்கும் ஆர்ப்பாட்டம், கோஷ்டி கானத்தை அணையாமல் எரியவைக்கக் காரணம் ஆகிவிட்டது!

- ஆர்.மோகன், கே.கே.மகேஷ், வீ.கே.ரமேஷ்

அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன், உ.பாண்டி, பா.காளிமுத்து