Published:Updated:

''வீரபாண்டியார் இடத்துல ஜெ. படத்தை எவன் வெச்சது?''

அங்கம்மாள் காலனியில் துவம்சம் ஆன கட் அவுட்!

''வீரபாண்டியார் இடத்துல ஜெ. படத்தை எவன் வெச்சது?''

அங்கம்மாள் காலனியில் துவம்சம் ஆன கட் அவுட்!

Published:Updated:
##~##

டந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மீடியாக்களில் பரபரப்பாக அடிபட்ட சேலம் அங்கம்மாள் காலனி, இப்போது மீண்டும் தலைப்புச் செய்தியில்! 

ஏ.என்.எஸ். ஜூவல்லர்ஸ் அதிபர் சீனிவாச குப்தா, தன்னிடம் வேலை பார்த்த 18 குடும்பங்களுக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள அங்கம்மாள் காலனி நிலத்தைத் தானமாகக் கொடுத்தார். 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நல்ல சம்பவம் இது. அவர்கள், அந்த நிலத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தார்கள். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் இவர்களுக்கு நிம்மதி குலைந்தது. 2008-ம் ஆண்டு அந்த நிலத்தை, அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் வாங்கிவிட்டதாகச் சொல்லி, சில ரவுடிகள் அங்கம்மாள் காலனிக்குள் நுழைந்தார்கள். குடிசைகளைச் சூறையாடி, அந்த மக்களை அடித்து மிரட்டிக் காலி செய்ய வைத்தார்கள். இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'அந்த மக்களை 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட இடத்தில் மீண்டும் குடியமர்த்த வேண்டும். பாதிப்புக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனாலும், கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகள், அதைக் கண்டுகொள்ளவே இல்லை.  

''வீரபாண்டியார் இடத்துல ஜெ. படத்தை எவன் வெச்சது?''

தேர்தல் பிரசாரத்துக்கு சேலம் வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 'நான் ஜெயித்து ஆட்சிக்கு வந்தால், அங்கம்மாள் காலனி​யை மீட்டுத் தருவேன்’ என்று சபதம் செய்தார். அதன்படியே ஜெயலலிதா முதல்வர் ஆனதும், அந்த மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டார்கள். அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்த அங்கம்மாள் காலனிவாசிகள், முனியப்பனுக்குக் கிடா வெட்டி பொங்கல் வைத்து, ஏப்ரல் 22-ம் தேதி குடிசை போட்டு வாழத் தொடங்கினார்கள். இந்த நிம்மதி ஒரு மாதம்கூட நீடிக்கவில்லை!

''வீரபாண்டியார் இடத்துல ஜெ. படத்தை எவன் வெச்சது?''

கடந்த 2-ம் தேதி இரவு, அங்கம்மாள் காலனிக்குள் புகுந்த ரவுடிகள், ஏழு குடிசைகளை பிய்த்து எறிந்ததோடு, ஒரு குடிசைக்கு தீ வைத்துக் கொளுத்திய தாகத் தகவல் பரவியது. உடனடியாக அங்கு சென்றோம்.

பாதிக்கப்பட்ட மாணிக்கம் என்பவர் முதலில் நம்மிடம் பேசினார். ''அன்னிக்கு நைட் 12.30 மணி இருக்கும். திடுதிப்புனு 30 பேர் எங்களை ரவுண்டு கட்டிட்டாங்க. கத்தி, சூரி, பாட்டில், சைக்கிள் செயின்னு ஆயுதங்களோடு இருந்தாங்க. எங்க கழுத்தில் கத்தியும், உடைந்த பாட்டிலும் வெச்சி, 'எல்லோரும் செல்போனை எடுங்கடா. இல்லைன்னா, குத்திக் கொன்னுடுவோம்’னு மிரட்டினாங்க. நாங்க பயந்துபோய் போனைக் கொடுத்துட்டோம். 'ஏண்டா தலைவர் வீரபாண்டியாரை எதிர்த்துட்டு இந்த இடத்தில் வாழ்ந்துடுவீங்களா..? நாளைக்கு காலையில் யார்கிட்டேயும் சொல்லாம ஒழுங்கா இடத்தைக் காலி பண்ணிட்டு ஓடணும். இல்லைன்னா, கொளுத்திடுவோம். ஜாக்கிரதை’னு சொல்லி அடிச்சாங்க.  

எங்க நிலத்தை மீட்டுக் கொடுத்த முதல்வர் அம்மாவுக்கு ஃப்ளெக்ஸ் போர்டு வெச்சிருந்தோம். 'தலைவர் வீரபாண்டியார் நிலத்துல எவன்டா இந்தப் படத்தை வெச்சது?’னு சொல்லி முதல்வர் அம்மாவைக் கெட்ட கெட்ட வார்த்தையால் அவதூறாப் பேசினாங்க. அந்த ஃப்ளெக்ஸ் போர்டைக் கீழே தள்ளி செருப்பால் அடிச்சுக் கிழிச்சாங்க. குடிசையில் இருந்த சேர், டேபிள், டி.வி, அரிசி, பருப்பு எல்லாத்தையும் தூக்கி வெளியே வீசிட்டாங்க. பிறகு, குடிசைகளைப் பிய்ச்சு எறிஞ்சிட்டு ஒரு குடிசைக்குத் தீ வெச்சுட்டுப் போயிட்டானுங்க'' என்று சோகத்துடன் சொன்னார்.  

''வீரபாண்டியார் இடத்துல ஜெ. படத்தை எவன் வெச்சது?''

சகுந்தலா என்ற பெண், ''குடிசையைத் துவம்சம் செஞ்சப்ப, உள்ளே தூங்கிட்டு இருந்த என்னோட ஆறு வயசுப் பொண்ணு கீர்த்திகா பயந்துபோய் அழுதா. உடனே உள்ளே இருந்தவன் குழந்தையோட ஒரு காலைப் பிடிச்சு தூக்கி வெளியில வீசிட்டான். குழந்தை கீழே விழுந்து மயக்கம் ஆயிடுச்சு. இங்கே எங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லைங்க. திரும்பவும் எந்த நேரமும் வந்து எங்களைக் கொன்னுடுவாங்க. அம்மா ஆட்சியிலேயும் வீரபாண்டி ஆறுமுகத்தின் ரவுடித்தனம் அடங்கலை. அம்மாதான் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கணும்'' என்று அழுதார்.  

அங்கம்மாள் காலனி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து போராடி வரும் குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் பொதுச் செயலாளர் ஹரிபாபு, ''அங்கம்மாள் காலனி நிலத்தில், தனது மூத்த மகன் செழியனின் மகள் சூர்யாவுக்கு ஆஸ்பத்திரி கட்டித் தருவதற்காகத்தான் வீரபாண்டி ஆறுமுகம் இப்படிச் செய்கிறார். அவரது தூண்டுதலின் பேரில் பாரப்பட்டி சுரேஷின் தம்பி குட்டி மற்றும் பூபதி தலைமையில் 30 அடியாட்கள் ஆயுதங்களோடு அங்கம்மாள் காலனிக்குள் புகுந்து அராஜகம் செய்து இருக்கிறார்கள். முதல்வருக்கே சவால்விடும் வீரபாண்டி ஆறுமுகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மக்களுக்கு உரிய பாதுகாப்பும் அடிப்படை வசதியும் செய்துகொடுக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

இதுபற்றி பேச வீரபாண்டி ஆறுமுகத்தைப் பல முறை தொடர்புகொண்டும் பேச முடியாததால், அவருடைய மகன் வீரபாண்டி ராஜாவிடம் பேசினோம். ''அங்கம்மாள் காலனி தொடர்பாக கோர்ட்​டில் கேஸ் இருக் கிறது. அந்த நிலத்தில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, யார் அங்கே போய் இருப்பாங்க? இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. தலைவர் பிறந்த நாளுக்காக சென்னை வந்துட்டேன். சேலம் வந்த பிறகு விசாரித்துப் பார்க்கிறேன்'' என்றார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சேலத்தில் இருந்த எட்டு பேரை முதலில் கைது செய்தனர். முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தைக் கைது செய்வதற்காக, திங்கள் மதியமே சென்னை வந்து சேர்ந்தனர் சேலம் போலீஸார். தி.நகர் வீட்டில் இருந்த அவரைக் கைது செய்து சேலத்துக்கு அழைத்துச் சென்றனர். அன்று இரவு 9.45 மணிக்குச் சேலத்தை அடைந்த போலீஸ் வேன், முதலில் சூரமங்கலம் ஸ்டேஷனுக்குச் சென்றது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அங்கிருந்து கிளம்பி அரசு மருத்துவமனைக்குச் சென்றது. அங்கு, வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு, அஸ்தம்பட்டியில் உள்ள ஜே.எம்.-2 மாஜிஸ்திரேட் லட்சுமி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆவணங்களைச் சரிபார்த்த மாஜிஸ்திரேட், வீரபாண்டி ஆறுமுகத்தை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து,  இரவு 10.30 மணிக்கு சேலம் மத்தியச் சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டார் ஆறுமுகம். சிறை வாசலில் தி.மு.க. தொண்டர்கள் ஆயிரக்கணக்கில்  திரண்டு இருந்ததால், அவரை அழைத்து வந்த போலீஸ் வேன், கூட்டத்தில் சிக்கித் தள்ளாடியது.

அரைமணி நேரத்தில் தொண்டர்கள் கூட்டம் கலைந்தபிறகு, சிறைக்குள் இருந்து வீரபாண்டி ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு வந்த வேன் சென்னை புழல் சிறை நோக்கிப் பறந்தது.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன், எம். விஜயகுமார்