Published:Updated:

பெரியசாமியைப் போட்டுக்கொடுத்தது தி.மு.க-காரரா?

திண்டுக்கல் திகுதிகு

பிரீமியம் ஸ்டோரி
##~##

கிட்டத்தட்ட 10 மாதங்களாக, 'இன்று... நாளை’ என்று எதிர்பார்க்கப்பட்டது ஐ.பி.யின் கைது. அதுவும் நடந்து விட்டது! 

திண்டுக்கல் ஐ.பெரியசாமி, தி.மு.க.வின் முன்வரிசைத் தலைவர்களில் ஒருவர். அவரது கைது, சினிமா காட்சிகள் மாதிரி அரங்கேறியது. 'இந்த அ.தி.மு.க-காரங்க, எப்படியாவது அண்ண னைப் பிடிச்சு உள்ளே தள்ளிடணும்னு தவியாத் தவிச்சாங்க. நிலஅபகரிப்பு வழக்குல பிடிச்சுப் போடலாம்னு திட்டம் போட்டாங்க. ஆனா, இவர் மேல யாரும் புகார் கொடுக்கலை. சிலர் மூலமா நிலஅபகரிப்பு, கொலைப் புகார்னு என்னென்னமோ முயற்சி பண்ணியும் ஒண்ணும் நடக்கலை. அப்புறம், அசோக் நகர்ல இருக்குற ஐ.பி. வீட்டுல லஞ்ச ஒழிப்புத் துறை மூலமா சோதனை செஞ்சாங்க. அதுலேயும் ஒண்ணும் சிக்கலை. சோர்ந்துபோய் உட்கார்ந்த நேரத்துலதான் இந்தக் குவாரி மேட்ட ரைக் கையில் எடுத்திருக்காங்க.!'' என்று, ஐ.பி. ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

பெரியசாமியைப் போட்டுக்கொடுத்தது தி.மு.க-காரரா?

அய்யம்பாளையம் சத்திக்கரடு பகுதியில் இருக்கும் ஒரு தனியார் குவாரிக்கு சட்ட விரோதமாக அனுமதி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெரியசாமி வளைக்கப்பட்டு உள்ளார். கனிமவளத் துறை அதிகாரிகள் மூலமாகப் புகார் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முரளிதரன் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய நேரத்தில், 'இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரைச் சம்பந்தப்படுத்தி வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி போலீஸ் என்னை வற்புறுத்துகிறது’ என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அதைப் புகாராகவும் நீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறார்.

ஆனால், 'ஐ.பெரியசாமிதான் சட்ட விரோதமாக அனுமதி கொடுத்தார்’ என்று முரளிதரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் சொல்கிறது. இதைவைத்து அவரைக் கைதுசெய்ய வந்தது போலீஸ். தகவல் கேள்விப்பட்டு, 4-ம் தேதியே திண்டுக்கல் வந்து, 'என்மீது தேவை இல்லாமல் பொய்வழக்குப் பதிவு பண்றீங்க’ என்று, எஸ்.பி-யிடம் மனு கொடுத்தார் பெரியசாமி. அதைப் பொருட்படுத்தாத போலீஸ், அவரைக் கைது செய்தது.

பெரியசாமியை கூம்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த காவல் துறையினர், நிலக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

காவல் துறை வட்டத்தில் பேசினோம். 'இது அரசியல் ரீதியான நடவடிக்கை அல்ல. கனிம வளத் துறையில் இருந்து புகார் வந்தததால்தான் நடவடிக்கை. முரளிதரனைக் கைது செஞ்சு விசாரிச்சப்போ, அவர் கொடுத்த வாக்குமூலத்தை வைத்துத்தான் ஐ.பெரியசாமியைக் கைது செய்திருக் கிறோம்.' என்றார்.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தால்தான் முழு ரகசியம் வெளியே வரும்!

- ஜி. பிரபு, படங்கள்: வீ. சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு