Published:Updated:

''தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்!''

எம்.ஜி.ஆர். பாடினார்... ஜெயலலிதா சீறினார்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

மிஷன்... கட்டிங்... கட்டப்பஞ்சாயத்து... என்று ஏதாவது அடைமொழிகள்தான் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பலரின் அடையாளம். இவர்கள் மொத்தப் பேரையும் ஒரே இடத்தில் கூட்டி ​வைத்து திட்டித் தீர்த்து விட்டார் ஜெயலலிதா. 'திருந்தாவிட்டால் மா​நகராட்​சியைக் கலைப்பேன்’ என்ற ஜெயலலிதாவின் அதிர்ச்சி வைத்தியத்தில், பேதியாகிக் கிடக்கிறார்கள் சென்னைக் கவுன்சிலர்கள்! 

கடைசி வரிசைக்குச் சண்டை!

'அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கார்டனில் இருந்து உத்தரவு வந்ததுமே செவ்வாய் அன்று பரபரப்பு பற்றிக்கொண்டது. கட்சித் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டம், திடீரென்று மாநகராட்சிக்குச் சொந்தமான சர் பிட்டி தியாகராயர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. தலைமைக் கழகத்தில் லிஃப்ட் ரிப்பேர் என்பதால் இந்த மாற்றமாம். ஸ்டாலின் மேயராக இருந்த போது கட்டப்பட்டு, கருணாநிதி திறந்த வைத்த இந்த அரங்கத்தில் ஜெயலலிதா காலடி எடுத்து வைப்பதே இதுதான் முதல்முறை. இங்கே ஸ்கார்பியோ, டொயோட்டா குவாலிஸ் என்று வகைவகையான ஆடம்பரக் கார்களில் வந்து இறங்கினார்கள் கவுன்சிலர்கள். அடையாள அட்டை வைத்திருந்த கவுன்சிலர்களுக்கு மட்டும்தான் உள்ளே அனுமதி. செல்போன்களுக்குத் தடா போட்டு இருந்தார்கள். பரேடுதான் நடக்கப் போகிறது என்பதை மோப்பம் பிடித்துவிட்டதால், முதல்வர் கண்ணுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக முன்ஸீட்டுக்குச் சண்டை போடும் ரத்தத்தின் ரத்தங்கள், கடைசி வரிசைக்காக சண்டை போட்டார்கள்.

''தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்!''

3 மணி நேர டென்ஷன்!

மாவட்டச் செயலாளர்கள் செந்தமிழன், கலை​ராஜன், வெற்றிவேலுக்கும் 'நோ’ சொல்லப்பட்டது. போர்ட்டிகோவில் இருந்து அரங்கத்துக்குச் செல்லும் ஆறேழு படிக்கட்டுகளில் வெயில் அடிப்பதைக் கண்டவர்கள் பதறிப்போய் அவசர அவசரமாக கூரை அமைத்தார்கள். பூங்கொத்துடன் வந்த மாநகராட்சிக் கமிஷனர் கார்த்திகேயனுக்கும் அனுமதி இல்லை.  66 பெண் கவுன்சிலர்கள் உட்பட 169 கவுன்சிலர்கள் திகிலோடு உள்ளே அமர்ந்து இருந்தார்கள். '11 மணிக்கு அம்மா வருவார்’ என்று சொன்னதால், அனைத்து கவுன்சிலர்களும் அடித்துப் பிடித்து வந்தார்கள். ஆனால், மூன்று மணி நேரம் காக்க வைத்து டென் ஷன் ஏற்றிவிட்டுத்தான் ஜெயலலிதா வந்தார்!

திட்டு வாங்கிய மகாலிங்கம்... பயந்துபோன பெஞ்சமின்!

போர்ட்டிகோவிலேயே வெடிக்கத் தொடங்​கினார். தலைமை அலுவலக நிர்வாகி மகாலிங்கத்தை லெஃப்ட் ரைட் வாங்கினார் ஜெயலலிதா. ''நான் என்ன இங்க விழா நடத்துறதுக்கா வர்றேன்? வழி எல்லாம் பேனர் வெச்சிருக்காங்க? எதுக்கு பேனர் வைக்கிறதுன்னு விவஸ்தையே இல்லையா?'' என்று பொறிந்தபடியே  அரங்கத்துக்குள் நுழைந்தார். ஜெயலலிதாவுக்கு பொக்கே கொடுக்கும் வைபவமும் நடைபெறவில்லை. துணை மேயர் பெஞ்சமின் ஜெயலலிதாவின் காலில் படாரென விழ.. கண்டுகொள்ளாமல் போனார். பெஞ்சமின் நிமிர்ந்தபோது... எதிரே யாருமே இல்லை. இதுவே பெஞ்சமினைப் பதற வைத்துவிட்டது!

ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் மட்டுமே மேடையில் இருந்தனர். ஜெயலலிதா உள்ளே நுழைந்த வேகத்தில் ஜெயா டி.வி. கேமராமேன்களை வெளியேறச் சொன்னார். 'நடக்கப்போவது அக்னி மழை’ என்பது அப்போதே புரிந்துவிட்டது!

''தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்!''

ஒரு பீடை போய்... இன்னொன்று...

உள்ளே என்ன நடந்தது என்பதை கவுன்சிலர்கள் சிலரிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொண்டோம்!

''எந்த முதல்அமைச்சரும் கவுன்சிலர்களை அழைத்துப் பேச மாட்டார். ஆனால், உங்களை எச்சரிக்கை செய்வதற்காக ஒரு கூட்டம் போடும் நிலைக்கு என்னைத் தள்ளி​விட்டிருக்கிறீர்கள்'' என்று முன்னோட்டம் கொடுத்து பேச்சைத் தொடங்கினார் ஜெயலலிதா.

''சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சென்னை மாநகராட்சியைத் தனியாக நின்று கைப்பற்றுவதற்கு முழுக்கவே நான்தான் காரணம். சென்னை நகருக்கு வீராணம் குடிநீரை நான் கொண்டு வந்ததும்... முந்தைய தி.மு.க. கவுன்சிலர்களின் அடாவடியும்தான் நமக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது. கொள்ளை அடித்த அந்தப் பீடைகள் எப்போது ஒழியும் என்று காத்திருந்த மக்கள் நமக்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்தப் பீடைகளை நீங்கள் மிஞ்சி விட்டீர்கள். மக்களின் வெறுப்பை சம்பாதித்து ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்'' என்று நிறுத்த... வெலவெலத்துப் போயினர் கவுன்சிலர்கள்.

கொள்ளை அடிப்பதில்தான் எத்தனை வகை?

''வீட்டுக்கு மின்இணைப்பு தருவதற்கும் கவுன்சிலர்​களுக்கும் என்ன சம்பந்தம்? 'என்னைக் கேட்காமல் கனெக்ஷன் தரக்கூடாது’னு ஒரு மின்வாரிய அதிகாரியை மிரட்டி இருக்கீங்க. அந்த அதிகாரி மின்துறை

''தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்!''

அமைச்சரிடம் புகார் சொல்லி இருக்கிறார். அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் 'எனக்கு மாசம் இவ்வளவு மாமூல் தந்துடணும்’னு டிமாண்ட் பண்றீங்க... வீடு கட்டுவதற்காக ஜல்லி, மணல், செங்கல் கொட்டியிருக்கிற வீடுகளுக்கே போய் அடாவடி வசூல் பண்றீங்க. கழிவுநீர் இணைப்புக்கும் ஹோட்டல் நடத்த அனுமதி வாங்குவதற்கும் வசூல் வேட்டை நடத்துறீங்க. டீக் கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டிக்காரர்களிடமும் பணத்தைப் பிடுங்கிக்கிட்டு இருக்கீங்க. ரோடு போடுற கான்ட்ராக்டர்கிட்ட 'கட்டாயம் கமிஷன் கட்டியாக வேண்டும்’னு நீங்க ஆர்டர் போட்டதால், பல இடங்களில் வேலை நின்றுவிட்டது'' என்று கத்தையாகப் பேப்பர்களை எடுத்து படிக்க ஆரம்பித்து இருக்கிறார் முதல்வர். யார் யாரெல்லாம் எது எதற்கெல்லாம் பணம் வாங்கினார்கள் என்ற பட்டியலைப் படித்தார். இதில் பலருடைய பெயர்கள் எல்லாப் பிரிவுகளிலும் இடம் பிடித்திருந்தன!

''பணப் பேய் பிடிச்சு ஆடுறீங்க!''

'64-வது வார்டு வெற்றிநகர் மு.சுந்தர் யாரு? எந்திரிங்க!’ என்று அதிரடியாக ஜெ. சொன்னபோது வேர்த்துக் கொட்டியபடி எழுந்து நின்றார் சுந்தர். 'குப்பை அள்ளுற தனியார் கம்பெனியிடம், 'குப்பை கிடந்தா கிடக்கட்டும். அதை நீ அள்ளாம இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனா, எனக்கு மாசம் 50 ஆயிரம் கொடுத்துடு’னு மிரட்டியிருக்கீங்க. பணப் பேய் புடிச்சு ஆடியிருக்கீங்க...'' என்று சொன்னதும் ஸ்கூல் பையனைப் போல பம்மி இருக்கிறார் சுந்தர்.

''63-வது வார்டு அலிகான் பஷீர் யாரு?'' என்று ஜெயலலிதா கேட்க, அவரும் எழுந்து நின்றார். ''மாநகராட்சி பெயரையும் சின்னத்தையும் போட்டு போலியா ரசீது அடிச்சு பார்க்கிங் கட்டணத்தை வசூல் பண்ணிட்டு இருக்கீங்க.. கார்ப்பரேஷனுக்கு வர வேண்டிய வருமானத்தை வீட்டுக்கு சுருட்டிட்டுப் போயிருக்கீங்க..'' என்று சொல்ல கை கட்டியபடியே நின்றார் அவர். சினிமாப் படங்களின் டி.வி.டி-களை சசிகலாவுக்குக் கொண்டு​போய்க் கொடுக்கும் பணியைச் செய்ததன் மூலம் கட்சியில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டவராம். ''சட்டசபைத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றிய போதும் கூட்டணிக் கட்சி போட்டியிட்ட திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியை இழந்தது. இந்தத் தொகுதியில் ஜெ.அன்பழகன் வெற்றி பெறுவதற்குக் காரணமே அலிகான் பஷீரும் சிலரும், அன்பழ​கனோடு மறைமுகக் கூட்டணி போட்டதுதான் காரணம்'' என்று உளவுத் துறை அறிக்கை கொடுத்துள்ளதாம்!

  ''எப்படிச் சொல்றதுன்னே தெரியல..!''

அடுத்த பெயரை ஜெயலலிதா படிப்பதற்குள் பலரின் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது. ''இந்த அசிங்கத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல...'' என்று பீடிகை போட்டபடி, 173-வது வார்டு கவுன்சிலர் பி.ராஜலட்சுமி பிரபாகரனை எழுந்து நிற்கச் சொன்னார். ''பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்க. அவங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிட்டு விபசாரம் நடத்துறதுக்கு சப்போர்ட்டா இருக்கீங்க. இதைவிட அசிங்கம் இந்த உலகத்துல எதுவும் இருக்காது'' என்றவர் ராஜலட்சுமியை உஷ்ணத்தோடு பார்த்தார். ''உங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் உளவுத்துறை மூலம் கண்காணித்துத் தகவல்களைத் திரட்டி இருக்கிறேன். யார் யார் என்ன தப்பு செய்தார்கள் என்று எனக்குத் தெரியும்'' என்றபடியே அடுத்த பெயரைப் படிக்க ஆரம்பித்தார்.

''தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்!''

எல்லா வகையிலான தப்பும்!

114-வது வார்டு முகம்மது அலி ஜின்னாவை எழுந்திருக்கச் சொல்லி, அவர் மீது புகார் பட்டியலை வாசித்தார். கிட்டத்தட்ட எல்லாப் பிரிவு மோசடிகளிலும் இவர் பெயர் வறுபட்டது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதிலும் லாட்ஜ்களில் கட்டாய வசூல் வேட்டை நடத்தியதையும் புட்டுப் புட்டு வைத்தார். 2009 எம்.பி. தேர்தலில் தயாநிதி மாறனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டவர்தான் ஜின்னா.

அடுத்து 27-வது வார்டு எம்.கண்ணதாசன் மீது நான்கு புகார்களைப் படித்தார் ஜெயலலிதா. கண்ணதாசன், அமைச்சர் மூர்த்தியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவரம் ஏரியாவில் அவருடைய செயல்பாடுகள் எல்லை மீறிப்போனதாம்.

''194-வது வார்டு துரைப்பாக்கம் பாஸ்கரன், 'என்னைக் கேட்காமல் யாருக்கும் மின்இணைப்பு தரக் கூடாது’னு சொல்லியிருக்கிறார்'' என்று சொல்லி... அவரை எழுந்து நிற்கச் சொன்னார். ''117-வது வார்டு கவுன்சிலர் ஆறுமுகம் ஹோட்டல்கள் அனுமதிக்காக பணம்  கேட்டு மிரட்டி இருக்கிறார். ரேஸ் புட்டிங்கில் 174-வது வார்டு என்.எஸ். மோகன் கட்டிங் வாங்கி இருக்கிறார். தி.மு.க-காரனுக்கு சாதகமாக ஆர்.பொம்மி (வார்டு 125) வசூல் வேட்டை நடத்தியிருக்கிறார். சுகாதார நிலைக் குழுத் தலைவர் பழனி (171-வது வார்டு) அரசுக் கழிப்பிடங்கள் கட்டுவதிலும் கமிஷன் கேட்டு இருக்கிறார். தி.நகர் சத்தியா அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அடாவடி வசூல் செய்திருக்கிறார். வீடியோ சரவணன் சாலையோரக் கடைகளில்  50 ஆயிரம் வசூல் செய்து இருக்கிறார்'' என்று, அதிரடிகளை அடுக்கிக்கொண்டே போக, அரங்கமே பூகம்பத்தில் சிக்கியது போல் திகிலில் கிடந்தது.

குடும்பத்தோடு கும்மி அடிக்கும் பெண் கவுன்சிலர்கள்!

''பெண் கவுன்சிலர்களின் கணவர், மகன்கள், சகோதரர்களின் தலையீடுகள் பற்றியும் எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அவர்களின் அத்துமீறல் அதிகமாகி வருகிறது. அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கையை நான் எடுப்பேன். எம்.ஜி.ஆர் இருந்தபோது கூட கைப்பற்ற முடியாத சென்னை மாநகராட்சியை நாம் கைப்பற்றி இருக்கிறோம். ஆனால், உங்களுடைய அடாவடியால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்​திருக்கிறீர்கள். 2014-ல் அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எந்த மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டார்களோ அவர்களே உங்களின் அடாவடியால் நம்மை இந்தத் தேர்தலில் வீழ்த்தி விடுவார்கள். ஜூலை 31-க்குள் நீங்கள் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் தொலைத்துக் கட்டிவிடுவேன். சட்டப்படி மாநகராட்சியைக் கலைத்துவிட்டு சிறப்பு அதிகாரியை வைத்து ஆறு மாதம் மாநகராட்சியை நடத்துவேன். அதன் பிறகு தேர்தல் நடத்தும்போது நல்லவர்களுக்கு மட்டுமே ஸீட் கொடுப்பேன்'' என்று எச்சரிக்கை செய்துவிட்டுக் கிளம்பிப் போனார்.

ரிப்பன் பில்டிங்கில் புலம்பல் மீட்டிங்!

அடுத்து ஒரு மணி நேரத்தில் மாநகராட்சி மன்றக் கூட்டம். பல்ஸ் எகிற அவசரமாக ரிப்பன் மாளிகைக்குக் கிளம்பிப் போனார்கள் கவுன்சிலர்கள். பலரும் கேன்டீனில் உட்கார்ந்து அம்மாவின் அர்ச்சனைகளைச் சொல்லி ஆறுதல் தேடிக்​கொண்டார்கள்.

''தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்!''

''உளவுத்துறைக்காரங்க நன்றி கெட்டவனுங்க... வாங்கித் தின்னுட்டு போட்டுக் கொடுத்துட்டாங்க. பணம் கொடுக்கலேங்கிறதுக்காக என் மேல தப்பா ரிப்போர்ட் கொடுத்​துட்டானுங்க... செய்யாத தப்புக்கு எதுக்குத் தண்டனை? இனி​மேதான் நான் எல்லாத் தப்பும் செய்யப் போறேன். அண்ணே... அவனுங்களுக்கு (உளவுத் துறை) மாசம் இவ்வளவு கொடுத்துடலாம். வாராவாரம் வாய்க்கரிசி போட்டுடலாம்'' என்று உளவுத்துறை மீது தீராத ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர் பல கவுன்சிலர்கள்.

''எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பளம் உண்டு. எங்களுக்கு என்ன இருக்கு?'' என்று புலம்பியவர்கள், ''தப்புச் செய்யாத பலரையும் சிக்க​வைத்து இருக்கிறார்கள். மேயருக்கு வேண்டப்பட்ட கவுன்​சிலர்கள் பலர் தப்பிவிட்​டனர். டெண்டர் எடுப்பதைத் தடுத்து நிறுத்திய ஒரு கவுன்சிலர் பற்றி  பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக செய்தி வந்தது. அவர் பெயரை ஏன் சொல்லவில்லை'' என்றவர்கள் மேலும் சில பெயர்​களைச்  சொல்லி சீறினார்கள்.

அங்கேயேயும் வாத்தியார் பாட்டுத்தான்!

ஜெயலலிதாவின் நடவடிக்கை இதோடு முடிந்துவிடாதாம். கவுன்சிலர்கள் குவித்த சொத்துக் கணக்கை திரட்டச் சொல்லி, உளவுத்துறைக்கு உத்தரவு போட் டிருக்கிறார். அதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோல் ரிப்போர்ட் தரச்சொல்லி இருக்கிறார். கொடநாடு ரிட்ட னுக்குப் பிறகு, பலருக்கு ரிவிட் இருக்​கிறதாம். நிலைமை தெரிந்தோ தெரியா​மலோ, அரங் குக்கு வெளியே எம்.ஜி.ஆர். வேடம் அணிந்த ஒருவர் பாட்டுப் பாடி டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தார். 'வீட்டுக்​கெல்லாம் வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே... தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே. ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்... தாங்கள் வாழ்வதற்கு ஊர்ப் பணத்தில் வீடு கட்டினார்’ என்று அவர் பாடியது சூழ்நிலைக்கு பொருத்தமாக இருந்தது!

- எம். பரக்கத் அலி

படங்கள்: என்.விவேக், வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு