Published:Updated:

மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்பட மாட்டேன்..!

நித்திக்கு எதிராக சதானந்த கவுடா

பிரீமியம் ஸ்டோரி
##~##

நினைத்த நேரத்தில் சந்திக்க முடிகிறது கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை. பெங்களூரு குமரகுருபா சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பில் இருந்து... 

''நித்தியானந்தா விவகாரத்தில், கன்னட அமைப்புகளின் மிரட்டலுக்கு அடிபணிந்துதான் ஆசிரமத்துக்கு சீல் வைக்கவும் கைதுசெய்யவும் நீங்கள் உத்தரவிட்டதாக சொல்கிறார்களே..?''

''யாருடைய மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கையும் பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டனர். அதனால், நடவடிக்கை எடுத்தேன். நித்தியானந்தா விவகா ரத்தில் நான் தாமதமாக நடவடிக்கை எடுத்ததாகக்கூடச் சிலர் சொல்கிறார்கள். அதற்கு என்ன சொல்வது?''

''இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் ஜெயேந்திரர் இருப்பதாக சொல்கிறார்களே..?''

''நித்தியானந்தா பல ஆண்டுகளாக கர்நாடகாவில் இருக்கிறார். ஒரு நடிகையோடு அவர் இருந்த வீடியோ வெளியானது. அதன் பிறகு இப்போது நடந்த பிரச்னை என்று தொடர்ந்து அவர் மீது புகார் வந்துகொண்டே இருந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் ஆலோசனை செய்த பிறகே நித்தி யானந்தா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். சுவாமி நித்தியானந்தாவை இப்போதும் நான் மதிக்கிறேன். அதே நேரத்தில் அவர் தவறு செய்தால், அதைப் பார்த்துக்​கொண்டு சும்மா இருக்க முடியாது. கடவுளின் பெயரைச் சொல்லி கர்நாடகாவின் அமைதியை சீர்குலைக்க யார் நினைத்தாலும் அவர்கள் அத்தனை பேர் மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பேன்.''

மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்பட மாட்டேன்..!

''நித்தியானந்தா உங்கள் மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறாரே..?''

''ஒரு லட்சம் வழக்குகள் கூட போடட்டும். அவற்றை சட்டப் படி எதிர்கொள்வேன். ஓடி ஒளிய மாட்டேன். ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்... சத்தியம் வெல்லும்.''

''ஆசிரமத்துக்கு சீல் வைக்கும் அதிகாரமே உங்களுக்கு இல்லை. அதனால்தான் சீல் வைக்கும் முடிவைத் திரும்பப் பெற்று விட்டீர்கள்’ என்று நித்தியானந்தா தரப்பில் சொல்​கிறார்களே..?''

''ஆசிரமத்தில் சட்டம் ஒழுங்கை மீறிய‌ சம்பவங்கள் நடப்பதாக அரசின் கவனத்துக்கு வந்தது. தற்காலிகமாக சீல் வைக்க‌ நடவடிக்கை எடுத்தேன். அதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அசோக் உத்தரவுப்படி ஒரு வாரம் ரெய்டு நடந்தது.  சோதனைகளும் விசாரணைகளும் முடிந்து விட்டன.

மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்பட மாட்டேன்..!

அதனால் சீல் வைக்கும் முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன். ஆசிரமத்தில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து ஒரு வாரத்தில் இறுதி அறிக்கை வந்து விடும். அதன்பிறகு முடிவு எடுக்கப்படும்.''

''கர்நாடகத்தில் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து மூடப்​பட்டு வருவதால், தமிழர்கள் தாய்மொழி கற்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறதே?''

''கர்நாடகத்தில் எல்லா மாநில மக்களும் வசிக்கிறார்கள். அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க உரிமை இருக்கிறது. யாருடைய தாய்மொழிக் கல்வி உரிமையையும் பறிக்கும் எண்ணம் என் தலைமையிலான அரசுக்கு எப்போதும் இல்லை. கர்நாடகத்தில் தமிழ்ப் பள்ளிகள் மட்டும் அல்லாமல், சில கன்னடப் பள்ளிகளும்கூட போதிய மாணவர்களின் வருகைப் பதிவு இல் லாததால் மூடப்பட்டு வருகின்றன. கல்வி அதிகாரிகளுடன் கலந்து பேசி தமிழர்கள் தாய்மொழிக் கல்வி கற்க நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.''

''காவிரி நடுவர் நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 'கர்நாடகா உரிய நேரத்தில் போதிய நீரை தராமல் அணை கட்டிக்கொண்டு இருக்கிறது’ என, மனுத்தாக்கல் செய்து இருக்கிறாரே?''

''கர்நாடகத்தில் வறட்சியின் காரணமாக பல மாவட்டங்களில் விவசாயிகளின் தற்​கொலை தொடர்கிறது. பருவமழை பொய்த்துப்​போனதால் பல ஊர்களில் குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. இதுதான் கர்நாடகத்தின் யதார்த்த நிலை. புதிதாக எங்கும் நாங்கள் அணை கட்ட​வில்லை. காவிரி நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு, அப்பீல், மனு என, தமிழக அரசு தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டு இருப்பதைக் கவனித்து வருகிறோம். எதுவாக இருந்தாலும் சட்டப்படி எதிர்கொள்வோம். தமிழகத்தோடு விரோதப் போக்கைக் கடைப் பிடிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எல்லாப் பிரச்னைகளும் தீர வேண்டும் என்றால் வருணபகவான்தான் மனது வைக்க வேண்டும். ஆண்டு​தோறும் மழை பெய்து​விட்டால் எந்த பிரச்னையும் வராதே!''

- இரா.வினோத்

படங்கள்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு