Published:Updated:

அம்மா பேரைச் சொல்லி ஒரு போன்!

அம்மா பேரைச் சொல்லி ஒரு போன்!

அம்மா பேரைச் சொல்லி ஒரு போன்!
##~##

டந்த 2.11.11 தேதியிட்ட ஜூ.வி. இதழில் கழுகார் பகுதியில் வந்திருந்த செய்தியை அப்படியே தருகிறோம்!

 ''சினிமாப் புள்ளிகள் வட்டாரத்தில் ரகசியமாகப் பேசப்படும் செய்தியில் நான் கேள்விப்பட்டதை மட்டும் சொல்கிறேன்'' - என்று பீடிகை போட்டார் கழுகார்!

''திரைப்பட இயக்குநர் ஒருவருக்குக் கடந்த வாரத்தில் ஒருவர் போன் செய்திருக்கிறார். 'நாங்கள் ஒரே நேரத்தில் 15 படங்களைத் தயாரிக்க இருக்கிறோம். அதில் நீங்கள் ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும்’ என்று கேட்டார். இந்த இயக்குநரும் ஒப்புக்கொண்டார். 'ஒரே நேரத்தில் 15 படம் பண்ணப்போறதா சொல்றீங்களே உங்க தயாரிப்பாளர் யாரு?’ என்று கேட்கிறார் இயக்குநர். தயங்கித் தயங்கி அந்த மனிதர், 'அவங்கதான்... மேடத்தோட மகள்’ என்று சொல்லி இருக்கிறார்!''

''மேடம்னா யாரு?''

'' 'எல்லாம் நம்ம மேடம் டாட்டர்தான். அவங்க அமெரிக்காவுல இருக்காங்க. அவங்கதான் இனிமேல் படத் தயாரிப்புல இறங்கப்போறாங்க’ என்று அந்த மனிதர் சொல்லி இருக்கிறார். இதற்கு மேல் அந்த விஷயத்தைத் தோண்டிக் கேட்க... அந்த இயக்குநருக்கு சங்கடமாக இருக்கவே.... போனை வைத்துவிட்டார். இதே மாதிரியான போன் இன்னொரு ஹீரோ - டைரக்டருக்கும் போயிருக்கிறது. 'மேடம் மகள் படம் பண்ணப்போகிறார்’ என்று அப்போதும் சொல்லப்​பட்டுள்ளது.''

அம்மா பேரைச் சொல்லி ஒரு போன்!

''கொஞ்சமும் நம்பும்படியாக இல்லையே?''

''மீதியும் சொல்லி முடிக்​கிறேன். குடும்பச் சர்ச்சையில் சிக்கி இருக்கும் டான்ஸ் டைரக்டருக்கும் இதேபோன்று போன் போனது. அவரிடம் அந்தப் பெண்ணே நேரடியாக பேசினாராம். மிகமிகச் சுத்தமான தமிழில் ஓர் ஆங்கில வார்த்தை​யைக்கூடக் கலக்காமல் அந்தப் பெண் பேசி இருக்கிறார். 'நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். விரைவில் தமிழகம் வரும்​போது உங்களைச் சந்திக்கிறேன்’ என்று சொன்னாராம். இதைச் சம்பந்தப்​

பட்டவர்களால் வெளியில் சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!''

''ஜெயலலிதா குரலில் பேசிக் கலக்கிய வெள்ளியங்கிரி என்பவரின் கைவரிசையாக இது இருக்கலாம் அல்லவா?''

''அதையும் நான் விசாரித்தேன். மிகமிக வறுமையில் வாடும் வெள்ளியங்கிரியிடம் இப்போது செல்போனும் இல்லை. சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் அவர் கஷ்டப்படுகிறார். எதுவாக இருந்தாலும் அவரே நேரடியாகத்தான் பேசுவார். இந்த மாதிரி பி.ஏ. வைத்துப் பேசும் அளவுக்கு பில்டப் இல்லை அவர். இதுவரை வெள்ளியங்கிரி யாருக்கு போன் செய்தாலும் பாராட்டி சில வார்த்தைகள் சொல்வாரே தவிர... வேறு எந்த கப்சாக்களையும் விட்டதும் இல்லை என்பதால் இது சந்தேகமாக இருக்கிறது. பட முதலீட்டில் யார் வேண்டுமானாலும் இறங்கலாம். அதற்கு முதல்வரின் பெயரை அதுவும் ரத்த சொந்தம் என்று பூடகமாகச் சொல்லிக்கொண்டு ஏன் செய்ய வேண்டும் என்பதுதான் மர்மமாக இருக்கிறது. அம்மாவின் கோபம் புரியாமல் யாரோ விளையாடுகிறார்கள்!'' என்று கிளம்பினார் கழுகார்!

- இதுதான் எட்டு மாதங்களுக்கு முன், நாம் சொன்ன செய்தி. இந்த மேட்டர் இப்போது க்ளைமாக்ஸை நெருங்கி விட்டதாக போலீஸ் வட்டாரம் ரகசியமாகக் கிசுகிசுக்கிறது.

அம்மா பேரைச் சொல்லி ஒரு போன்!

இதேபோன்ற அனுபவம் காமெடி நடிகர் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது. அப்புறமாகத்​தான் தெரிந்தது!

நடிகரின் லைனுக்கு வந்த போனை, மேனேஜர் எடுத்திருக்கிறார். 'மேடத்தோட மகள் பேசணும்னு ஆசைப்படுறாங்க. அவர் எங்கே போயிட்டார்?'' என கணீர் குரல் கேட்டதும், 'அவர் சொந்த ஊருக்குப் போயிட்டாருங்க... என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா அவர்கிட்ட உடனே சொல்லிடுறேன்’ என்றார் மேனேஜர்.

'அவரை அ.தி.மு.க-வில் சேரச் சொல்லுங்க... கார்டன்ல நாங்க டைம் ஃபிக்ஸ் பண்ணிக் கொடுக்கிறோம். அந்த நேரத்துக்கு அவரை அங்கே போகச் சொல்லுங்க. வேற ஏதும் டீட்டெய்ல்ஸ் வேணும்னா எங்க நம்பரைக் கான்டக்ட் பண்ணச் சொல்லுங்க...’ எனச் சொல்லி ஐந்து செல்போன் நம்பர்களைக் கொடுத்துவிட்டுக் 'கட்’டானது அந்தக் குரல்!

இந்தச் செய்திகளை மையமாகவைத்து விசாரணையை அப்போதே தொடங்கி இருக்கிறது போலீஸ். இந்த சூழ்நிலையில் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரிடம்  அவருக்கு நன்கு அறிமுகம் ஆனவர் ஒரு முக்கியமான தகவல் தந்தாராம். 'அதை முடிச்சுத் தர்றேன்... இதை முடிச்சுத் தர்றேன்னு சொல்லி ஒரு லேடி பேசுது. அவங்க கார்டன் பெயரை சரளமாப் பயன்படுத்துறாங்க’ என்று சொல்லி இருக்கிறார். இந்த தகவலை உளவுத்துறை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்புக்கு அந்த அதிகாரி சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் அந்தப் பிரச்னை அத்தோடு அமுங்கிப்போனது.

ஆனால், இந்த வேட்டையில் கடந்த இரண்டு வாரங்களாக போலீஸார் சுறுசுறுப்பு அடைந்துள்ளார்கள் என்று செய்தி வர... நாமும் விசாரணையில் இறங்கினோம்!

பிரியா மகாலட்சுமி என்பவர் போலீஸ் வளையத்துக்குள் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி பகுதியில் பிரியாவை நேரில் பார்த்து நமக்குத் தகவல் தந்த இளைஞர் ஒருவரைச் சந்தித்தோம்.

''சார், தயவுபண்ணி என்னோட பேரைப் போட்டு​றாதீங்க...'' என்ற கெஞ்சல் கோரிக்கையோடு தொடங்கினார் அந்த இளைஞர்.

''பெரிய இடத்து மகளை அணுகினால் வேலை வாய்ப்பு தொடங்கி, கட்சிப் பதவி, கான்ட்ராக்ட் என எதையும் சாதிக்கலாம்னு போனேன். யார் யார் இந்தப் பெண்ணை வந்து பார்த்துட்டுப் போனாங்கன்னு ஒரு லிஸ்ட் சொன்னப்பவே எனக்கு மண்டை சுத்த ஆரம்பிச்சிடுச்சு. தெய்வத்தின் பெயர் கொண்ட மந்திரி தொடங்கி, தெய்வமா சிலரால் வணங்கப்படுகிற ஆன்மிகத் தலைவர் வரை பலரும் அந்தப் பெண்ணை, பெரிய இடம்னே நம்புறாங்க. இந்தப் பெண் கேட்காமலே லட்சக்கணக்கில் பணத்தை அள்ளி இறைச்சிருக்காங்க. சினிமா ஆட்கள், கட்சிக்காரங்க, காவல் துறையைச் சேர்ந்தவங்கன்னு பலரும் பார்க்க வந்திருக்காங்க. நான் அவங்களைப் பார்த்தப்ப ரொம்பத் தன்மையாப் பேசினாங்க. யார்கிட்டயோ போன்ல, ரொம்ப ஸ்டைலிஷா இங்கிலீஷ் பேசினாங்க. 'நான் மேடத்தோட மகள்தான். ஏன் சந்தேகமா இருக்கா?’னு கேட்டாங்க. அவங்க ஏமாத்துறாங்களோ இல்லையோ... ஆனா, அவங்களைப் பெரிய இடத்தின் வாரிசா பலரும் நம்புறது உண்மை!'' என்றபடியே பிரியாவின் புகைப்படங்களை நம்மிடம் காட்டிய அந்த வாலிபர் மேற்கொண்டு பேச மறுத்து விட்டார். அந்தப் பெண் பெரிய இடத்துத் தொடர்புகள் உள்ளவர் என்கிற யூகமே அந்த இளைஞரை பயமுறுத்துகிறது என்பதை மட்டும் நம்மால் உணர முடிந்தது.

மேலும் நம் விசாரணையைத் தொடர்ந்தோம். அந்தப் பெண்மணியைச் சந்தித்துத் திரும்பிய பலரிடமும் பேசினோம். அந்தப் பெண் சொன்ன விவரங்களாக நம் காதுக்கு வந்தவை இவைதான்...

''இவர்  பிறந்த இடம் ஸ்ரீரங்கம். ஊட்டி, வேலூர் போன்ற நகரங்களில் பிரபலமான கல்வி நிலையங்களில் படித்தவர். எம்.பி.ஏ. பட்டதாரி. இவருடைய வளர்ப்புத் தாய் விஜயா. கிருஷ்ணகிரியில் நிறுவனம் ஒன்றை சில வருடங்களாக நடத்தி வருகிறார்.

திருவண்ணாமலை அருகே உள்ள பிரசித்தி பெற்ற சாமியார் ஒருவர் 15 நாட்கள் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்து பிரியாவுக்காக பிரத்யேக ஹோமங்களை நடத்தி இருக்கிறார். 'என் குடும்பப் பந்தம் நிலைப்பதற்கான ஹோமம் இது’ என்பது பிரியாவின் ஸ்டேட்மென்ட்.

செஞ்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோயிலின்  கும்பாபிஷேகத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி கொடுத்து, அங்கேயும் ஊர்மெச்ச யாகம் நடத்தி இருக்கிறார். தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டி​யதாக புகார் பதிவாகி இருக்கிறது. இந்தப் புகாரை வைத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த விஷயங்கள் அனைத்தும் போலீஸில் வெளிப்படையாக இல்லாமல் ரகசியமாகவே விசாரிக்கப்பட்டு உள்ளன. அடுத்தடுத்து வந்த புகார்களை வைத்து கிருஷ்ணகிரிக்குப் போய் பிரியாவை ஒரு போலீஸ் அதிகாரி விசாரித்ததாகத் தகவல் வர, அவரிடம் பேசினோம்.

''ஒரு குற்றவழக்கு விசாரணைக்காக கிருஷ்ணகிரி போனேனே தவிர, நீங்கள் குறிப்பிடும் பெண்ணிடம் விசாரிக்க நான் போகவில்லை!'' என்று, ஒரே வரியில் முடித்துக் கொண்டார்.

போலீஸ் வட்டாரத்தைச் சேர்ந்த இன்னும் சிலரிடம் பேசியபோதும், ''அப்படியரு நபரே கிடையாது!'' என மறுத்தார்கள். சி.பி.சி.ஐ.டி-யில் விசாரித்த போது, ''அப்படி யாரையும் விசாரிக்கவே இல்லையே. நீங்கள் கேட்பதே புதிதாக இருக்கிறது'' என்கிறார்கள்.

கிருஷ்ணகிரியில் இருக்கிறார், வேலூரில் இருக்கிறார், சென்னைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார், சேலம் சிறைக்குள் வைக்கப்பட்டு இருக்கிறார். காவேரிப்பட்டினம் ஸ்டேஷனில் வைத்துள்ளார்கள்... என்று வெவ்வேறு திசை திருப்பும் செய்திகளையே பெற முடிந்தது. நம்மிடம் தகவல் சொன்ன, இளைஞர் சொன்ன கிருஷ்ணகிரி முகவரியில் வேறு குடும்பம் இப்போது வசிக்கிறது.

''மேலிடத்துக்கு போலீஸ் தகவல் தந்தது. 'புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்து விடுங்கள். தேவை இல்லாத பப்ளிசிட்டி வேண்டாம்’ என்று சொல்லி​விட்டார்கள். அதனால்தான் போலீஸ் மறைக்கிறது'' என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் பெண் தனது வாக்குமூலத்தில் என்ன கதையெல்லாம் சொல்லி இருக்கிறாரோ!

- முகுந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு