Published:Updated:

''யாரை நம்பியும் பணம் தரவேண்டாம்...''

எச்சரிக்கிறார் ஆர்.நடராஜ்

##~##

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்றாலே, ஊழல், முறைகேடு, குழப்பம், காலதாமதம் போன்றவைதான் முன்பு ஞாபகத்துக்கு வரும். தேர்வு ஆணையத்தின் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பதவி ஏற்றபோது இதைச் சுத்தப்படுத்தும் படலம் ஆரம்பம் ஆனது. இதன் தலைவராக முன்னாள் டி.ஜி.பி.யான ஆர்.நடராஜ் பொறுப்பேற்றுக்கொண்டதும் மொத்தமாக எழுந்து நிற்க ஆரம்பித்தது அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம். மத்திய தர வர்க்கத்தினர் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது இந்தத் தேர்வு ஆணையம். சமீபத்தில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு, மெகா பரீட்சையாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், இரண்டு நாட்களாக 'முரசொலி’யில் நடராஜையும் தேர்வு ஆணையத்தையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வர ஆரம்பித்தன. 'புரியாத கேள்விகள், மாறிய கேள்வித்தாள்கள், தேர்வு மையக் குளறுபடிகள், பின்கோடு மாற்றம் என்று ஏகக் குளறுபடிகள் நடந்தன’ என்கிறது அந்தக் கட்டுரை. இதற்கான பதிலை அறிய நடராஜை சந்தித்தோம். 

''குரூப் 4 தேர்வு அமைதியாக நடந்தது என்று நீங்கள் சொல்​கிறீர்கள். ஆனால், பட்டுக்கோட்டையில் 5,451 பேர் சில குளறுபடிகளால் தேர்வு எழுத முடியாமல் தவித்தார்களாமே? தர்மபுரியில் சில கேள்வித்தாளில் சில கேள்விகள் மாயம் ஆகி விட்டதாமே?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''யாரை நம்பியும் பணம் தரவேண்டாம்...''

''தேர்வு மையத்தின் பெயரை பிரின்ட் செய்ததில் தவறு நடந்திருக்கலாம். 12 லட்சம் பேர் எழுதும்போது ஒன்றிரண்டு தவறுகள் நடந்திருக்கலாம். புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குத் திரும்பவும் தேர்வு நடத்தவும் தவற மாட்டோம். பிரின்டிங் சரியில்லாத கேள்வித் தாள்கள் இருந்தால், அதை மாற்றித்தரும்படி சொல்லி இருந்தோம். அதனால் ஏதாவது காலதாமதம் ஆகியிருந்தால், அதற்கெனக் கூடுதல் நேரம் கொடுக்கவும் அறிவுறுத்தி இருந்தோம். தமிழகம் முழுவதும் வெகுசில இடங்களில்தான் இதுமாதிரி பிரச்னைகள் இருந்தது. அதுகுறித்து அந்தந்த மாவட்டக் கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டு இருக்கிறோம். இனி, இதுபோன்று சிறு தவறுகள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்போம்.''  

''விடைத்தாளை கார்பன் பேப்பர் வைத்து பிரதி எடுத்துக்கொள்ள அனுமதிப்பதாக முதலில் சொல்லிவிட்டு, பிறகு மறுத்து விட்டீர்களே?

''அதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. அதனால், இந்த முறையை நாங்கள் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. பிரதி எடுப்பது சாத்தியம் இல்லை. மேலும், அதில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வரலாம் என்பதால், தவிர்த்து​ விட்டோம்.''

''குரூப் 4 தேர்வு எழுத 10-ம் வகுப்பு தேர்ச்சியே தகுதியாகக் கருதப்படுகிறது. ஆனால், பட்டப் படிப்பு  படித்தவர்​களும் ​கூட சில கேள்விகள் மிகக்கடினம் என்கிறார்களே?''

''சிந்திக்கக்கூடிய அரசு ஊழியர் தேவை என்பதுதான் எங்கள் குறிக் கோள். டுடோரியல் காலேஜ் நடத்தும் தேர்வர்கள் கொடுக்கிற பயிற்சிக்கு சவால் விடும் வகையில் எங்கள் கேள்விகள் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். தகுதியான, கடினமான தேர்வை எழுதி ஜெயித்தோம் என்ற நினைப்பு தேர்வர்களுக்கு வரவேண்டும்.  கேள்வித்தாள்களில் சுலப​மானவை, கடினமானவை, மிகக்கடினமானவை என்பதற்கான விகிதம் உண்டு. இதை எல்லாம் பரிசீலித்து, அறிவியல் பூர் வமாகத்தான் கேள்வித்தாளை தயாரித்து உள்ளோம். இப்படிச் செய்வதால், ஒரே மார்க்கை பலர் வாங்குவதைத் தவிர்க்கலாம். முன்பு, தேர்வு ரிசல்ட் வெளியாகும்போது, நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியவர்கள் பலர் இருப்பார்கள். வேறு வழி இல்லாமல், வயது முதிர்ச்சியை வைத்து ஆளைத் தேர்ந்து எடுப்பார்கள். இப்போது அந்த முறையை ஒழித்து விட்டோம்.''

''முந்தைய நிர்வாகத்தில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்திருக்கின்றன. அதுகுறித்து என்ன முடிவு எடுத்தீர்கள்?''

''பழைய முடிவுகள் சில வருடங்கள்கூட பெண்டிங் இருந்தன. இன்டர்வியூ போன்ற சில சம்பிரதாயங்கள்  சரிவர நடக்காத காரணத்தால் ரிசல்ட் வெளி யாகாமல் இருந்தது. அதேபோன்று சாதிச்சான்றிதழ் சரிபார்ப்பு என்ற பெயரிலும் காலதாமதம். பெண்டிங் இருந்தவர்களில் சுமார் 7,000 பேருக்கு வேலை தந்து விட்டோம்.''

''பணிகளுக்கு விறுவிறுவென ஆட்​களை நியமிப்பதால், அரசுக்குக் கூடுதல் செலவு ஆகுமே? அரசு இதை எப்படிப் பார்க்கிறது?''

''கூடுதல் செலவு நிச்சயம் கிடையாது. ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு பணி இடங்கள் சாங்ஷன் ஆகியிருக்கிறதோ, அதற்கு ஏற்பச் சம்பளம் வந்து விடும். இப்போது வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரப்படும். காலி இடங்களுக்கு உரிய சம்பளத்தை அரசிடம் சரண்டர் செய்துவிடுவோம். இது திட்டமிட்ட செலவுதான். காலி இடங்களை நிரப்புவதன் மூலம் அரசின் புதிய திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடியும் என்பதால் அரசுக்கு லாபம்தான்.’'  

''அரசியல்வாதிகள் சிலர், வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலிக்​கிறார்களே? இன்டர்​வியூவில் பென்​சிலில்தான் மார்க் போடு​வார்கள். நாங்கள் கூடு​தல் மார்க் போட உதவு​வோம் என்​கிறார்களே?''

''இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது இன்டர்வியூ நிகழ்வுகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்கிறோம். யாரும் எப்போதும் பார்க்கலாம். இப்போது மார்க் சிஸ்டம் கிடையாது, கிரேடு சிஸ்டம்தான். அதுவும் பேனாதான். பென்சில் பயன்படுத்தப்படுவது இல்லை. யாராவது சிபாரிசுடன் வந்தால், அந்த நபரை டிஸ்குவாலிஃபை செய்து விடுவோம். எனக்குத் தெரிந்தவரையில் யாரும் சிபாரிசுக்கு வந்ததாகத் தெரியவில்லை. யாரை நம்பியும் மக்கள் பணம் தரவேண்டியது இல்லை. இங்கே எல்லாமே மெரிட்படியே நடக்கிறது!''

- ஆர்.பி. படம்: எம்.உசேன்