Published:Updated:

இலவச அரிசி திட்டம்: முதல்வர் ஜெ. தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 1,2011

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் தொடங்கிவைத்தார்.

இலவச அரிசி திட்டம்: முதல்வர் ஜெ. தொடங்கி வைத்தார்

அவரைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே இலவச அரிசித் திட்டத்துக்கான உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்துக்கான உத்தரவினை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டது. ஜூன் 1-ம் தேதி முதல் இத் திட்டம் நடைமுறைக்கு வரும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. ##~~##

இந்த நிலையில், இலவச அரிசித் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உள்பட்ட ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள டி.யு.சி.எஸ். ரேஷன் கடையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா, ஏழு பயனாளிகளுக்கு இலவச ரேஷன் அரிசி பையை வழங்கினார். முதல்வர் ஜெயலலிதா உருவம் பதித்த பையில் இலவச அரிசி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் அரிசி பெறத் தகுதியுடைய 1 கோடியே 83 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 12 முதல் 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.

இதேபோன்று, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 62 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி அளிக்கப்படுகிறது.

இலவச அரிசித் திட்டத்துக்காக ஆண்டுக்கு மேலும் ரூ.400 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.