Published:Updated:

இந்தியா கட்டியதாகச் சொல்லும் வீடுகள் எங்கே இருக்கிறது?

அ.மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

றுதிப் போர் நடைபெற்ற கிளிநொச்சி, பரந்தன், முள்ளிவாய்க்கால், புதுக்குடி​யிருப்பு முதலான இடங்களுக்கு யார் வேண்டுமானாலும் இப்போது தாராளமாகச் சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள் என்ப​தைப் பத்திரிகைகளில் படித்திருந்தபோதும், தயக்கத்​தோடுதான் புறப்பட்டோம். 

மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பு முதலான பகுதிகளுக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. வவுனியா, புளியங்குளம் வழியாகச் சென்றால், சாலை நன்றாக இருக்கும். ஆனாலும் நாங்கள் மன்னார் யாழ்ப்பாணம் செல்கிற ஏ-32 சாலையில் தள்ளாடி, கத்தளம்பிட்டி, தேவன்பிட்டி, முழங்காவில், நாச்சிகுடா, பல்லவராயன்கட்டு வழி​யாகப் பூநகரிக்குச் சற்று முன்பாக வலப்புறம் திரும்பி கிளிநொச்சி செல்லும் பாதையைத் தேர்வு செய்தோம். சாலை படு மோசம் என்பதால் வாகன ஓட்டிகள் இரட்​டிப்பு வாடகை கேட்டனர். இருந்தபோதும் நாங்கள் இந்தப் பாதையைத் தேர்வு செய்ததற்குக் காரணம், இந்த வழியேதான் இறுதிப் போரின்போது இலங்கை ராணுவத்தின் ஒரு பிரிவு பேரழிவுகளை விதைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. அந்த அழிவுகளையும், ராணுவ முகாம்களின் மத்தியில் இன்றும் தொடரும் மக்களின் அவலங்களையும் இந்தப் பாதையில் சென்றால்தான் புரிந்துகொள்ள முடியும் என்றார் தேவா.

இந்தியா கட்டியதாகச் சொல்லும் வீடுகள் எங்கே இருக்கிறது?

யாழ்ப்பாணம் வரை செல்லும் அந்த நெடுஞ்சாலையை 'வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் புதுப்பித்துக்கொண்டு உள்ளனர். அந்த அதிகாலை வேளையில் சாலைப் பணிகளுக்காக மக்கள் சாரி​சாரியாகச்சென்று​​​​கொண்டிருந்​தனர். கடினமான பணியில் அதிக அளவில் பெண்கள் ஈடுபட்​டிருந்​தது எனக்கு வியப்பாக இருந்தது. அரசாங்கம் பெரிதாகப் பேசுகிற மீள் குடியேற்றம் இப்படியான நிலைமைகளைத்தான் ஏற்படுத்தி உள்ளது.

மீள் குடியமர்த்தப்​படுபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரையே உதவித் தொகை வழங்கப்படுகின்றன. அதற்குப் பின் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் இல்லை. சொந்தத் தொழிலுக்கும் சாத்தியம் இல்லை. கோழிப் பண்ணை முத​லானவற்றுக்கு இலங்கைப் பணம் 50 ஆயிரம் ரூபாய் வரை உதவி செய்த அமைப்புகள், அதில் 30 ஆயிரத்தை ஒரு வருடத்துக்குள் பிடுங்கிவிட்டன. கால்நடை மருத்துவமனை, மருத்துவர்கள் போன்ற வசதிகள் இல்லாததால் கோழிகளும் செத்துப்போயின. மக்​களுக்கான மருத்துவ​மனைகளும் போதிய வசதி​களும் மருத்துவர்களும் இல்லாமல் உள்ளன. கிளிநொச்சியைத் தாண்டி அமைந்துள்ள இன்னொரு பெரு நகரமாகிய தருமபுரம் மருத்து​வமனையில்தான் கல்மடு, வட்டகச்சி, உடையார்கட்டு, விஸ்வமடு முதலான பகுதி மக்களும் சிகிச்சை பெற வேண்டும். ஆனால் ஆறு மருத்துவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் ஒருவர்தான் உள்ளார் என்றார், நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த சிறு கடையின் முதலாளி. கிணறுகள் தூர் வாரப்படாமல் தூர்ந்து கிடப்பதால் தண்ணீர்ப் பஞ்சம் வேறு. ஒரு கிணறைப் புதிதாகத் தோண்ட இரண்டு லட்ச ரூபாய் தேவை என்​றார் ஒருவர்.

இந்தியா கட்டியதாகச் சொல்லும் வீடுகள் எங்கே இருக்கிறது?

இந்திய அரசு பெரி​தாய்ச் சொல்லிக்​கொள்ளும் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. நாங்கள் சென்ற பாதையில் கிளிநொச்சிக்கு அருகில் ஒரே ஓர் இடத்தில்தான் கொஞ்சம் வீடுகள் கண்ணில்பட்டன. ஆஸ்திரேலிய அரசின் வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்றும் நாச்சிகுடா அருகில் கண்ணில் பட்டது. கண்ணி வெடிகளை அகற்றும் பணி​யும் ஆங்காங்கு நடைபெற்றுக்​கொண்டுள்ளது. அகற்றிய பகுதிகள் எனவும், அகற்றும் பணிகள் நடக்கும் பகுதிகள் எனவும், போகக் கூடாத பகுதிகள் எனவும் எழுதப்பட்ட பலகைகள் ஆங்காங்கு கண்ணில் பட்டன. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 'டேனிஷ் டீமைனிங் குரூப்’ எனும் அமைப்பு இந்த மனிதாபிமானப் பணியைச் செய்துவருகிறது.

இத்தனை துயரங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் மக்கள் வாழ்ந்துதானே ஆக வேண்டும்? சீருடை அணிந்த குழந்தைகள் சைக்கிள்களிலும் நடந்தும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர். முருகன் கோயில் ஒன்றில் ஒருவர் அலகுக் காவடி எடுத்துத் தொங்கிக்கிடந்தார்.

பூநகரிக்கு முன்னதாக நாங்கள் வலப்புறம் திரும்பி வன்னேரிக் குளம், ஆனைவிழுந்தான் குளம், மணியன் குளம் வழியாக அக்கராயன் குளத்தை அடைந்தோம். இறுதிப் போரில் இது ஒரு முக்கியமான இடம். 2008 அக்டோபர் 18 அன்று இலங்கை ராணுவத்தின் 57-ம் படைப் பிரிவு இந்தப் பகுதியைக் கைப்பற்றியது. இன்னொரு படைப் பிரிவு பூநகரியில் இருந்து நகர்ந்து வந்து நவம்பர் 15

இந்தியா கட்டியதாகச் சொல்லும் வீடுகள் எங்கே இருக்கிறது?

அன்று பரந்தனைக் கைப்பற்றியது. புலிகளின் தலைநகராக இருந்த கிளிநொச்சியை ஒரே நேரத்தில் வடக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் தாக்குவதற்கு இந்த வெற்றிகள் உதவின. வானில் இருந்து இலங்கை விமானப் படை குண்டு மழை பொழிந்தது. இந்தப் பின்னணியில்தான் 2009 ஜனவரி 2-ல் கிளிநொச்சிக்குள் இலங்கை ராணுவம் நுழைந்தது. எனினும் அக்டோபர் (2008) தொடக்கத்திலேயே புலிகள் அங்கிருந்து எல்லோரையும் வெளியேற்றி தருமபுரத்தைத் தற்காலிகத் தலைநகராக்கினர்.

அதே நேரத்தில் இன்னொரு பக்கமாக புலிகளின் மிக வலுவான ராணுவ மற்றும் கடற்​புலித் தளமான முல்லைத் தீவுக்குள் 2009 ஜனவரி 25-ல் இலங்கை ராணுவம் நுழைந்தது. சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களும் புலிகளும் முள்ளிவாய்க்கால், புது மாத்தளன், புதுக்குடியிருப்பு பகுதிக்குள் முடங்க நேரிட்டது. தொடர்ந்த பேரழிவுகளை நாம் அறிவோம்.

அக்கராயன்குளத்தில் இன்றும் வலு​வான ராணுவ முகாம் உள்ளது. அங்கு எங்கள் வண்டி நிறுத்தப்​பட்டு ஓட்டுனர் அழைக்கப்​பட்டார். வண்டி ஆவணங்​களைப் பரிசீலித்த பின் நாங்கள் மேலே செல்ல அனுமதிக்கப்பட்டோம்.

வன்னிப் பகுதி ஏரிப் பாசனத்​துக்குப் பெயர் பெற்ற ஒன்று. மழை நீர் சிறு அணைகளில் தேக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. இந்த அணைகளைத்தான் அவர்கள் குளம் என்கின்றனர். மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு ஊரிலும் இப்படி அணைகள் உள்ளன. சாலையின் இரு பகுதிகளிலும் மீண்டும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. எனினும் எல்லாப் பகுதிகளிலும் விவசாயம் நடக்கிறதா எனத் தெரியவில்லை. ஏனெனில் அருகில் உள்ள திருமுறிகண்டியில் இன்னும் மக்கள் குடியேற்றப்​படவில்லை. நான் அங்கு செல்வதற்குச் சில நாட்கள் முன்புதான் தங்கள் நிலம் மீண்டும் தங்களுக்கே தரப்பட வேண்டுமென மக்கள் ராணுவத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருந்தனர்.

தங்களின் நிலம் திரும்பக் கையளிக்கப்​படும் என்கிற ராணுவ வாக்குறுதியை நம்பி முகாம்களில் இருந்து வந்து முறிகண்டி பள்ளி ஒன்றில் குழுமிய மக்கள் ஒரு சிறு பகுதி நிலம் மட்டுமே தங்களுக்குக் கிடைக்கும் என அறிந்தபோது அதை ஏற்க மறுத்துள்ளனர். கிளிநொச்சிப் பகுதி​யில் உள்ள சில முகாம்கள் நீக்கப்பட்டு முறிகண்டியில் பெரிய முகாம் ஒன்றை அமைக்க இருப்பதாகவும், அதற்கு அதிக அளவில் நிலம் தேவைப்படுவதாகவும் ராணுவத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ராணுவம் பல்வேறு வகைகளில் மிரட்டிப் பார்த்தும் மக்கள் மசியவில்லை. முறிகண்டி நிலப் பறிப்புக்கு எதிரான ஒரு போராட்டமும் அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்துக்கு முதல் நாள் இரவு (ஜூன் 25) அந்த மக்கள் கட்டாயமாக ராணுவ லாரிகளில் ஏற்றப்பட்டனர். தப்பியோடிய மக்கள் பிடித்து இழுத்து ஏற்றப்பட்டனர். இறுதியில் மீண்டும் அவர்கள் முன்பிருந்த கதிர்காமர் முகாம், ஆனந்த குமாரசாமி முகாம் ஆகியவற்றில் கொண்டுவிடப்பட்டனர்.

முறிகண்டி வழியாக நாங்கள் ஏ9 சாலையைப் பிடித்து கிளிநொச்சியை அடைந்தபோது 11 மணி ஆகிவிட்டது. வளர்ந்துவரும் முக்கிய எழுத்தாளரும் போர்ப் பகுதியில் இருந்தவருமான யோ.கர்ணன் எங்களுக்காகக் காத்திருந்தார். அவரையும் ஏற்றிக்கொண்டு எங்கள் வாகனம் பரந்தனை நோக்கி நகர்ந்தது. புலிகள் அமைத்​திருந்த 'தமிழ்ப் பண்பாட்டு மையம்’ மற்றும் 'சேர, சோழ, பாண்டிய’ உணவு விடுதி இங்குதான் இருந்தது என ஓர் இடத்தைக் காட்டினார் கர்ணன். அந்த இடம் இடிக்கப்பட்டு மிகவும் நவீனமான ஹோட்டல் உருவாகியிருந்தது.

பரந்தனில் இருந்து முல்லைத் தீவை நோக்கிச் செல்லும் ஏ-35 சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்தது. தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு வழியாக முள்ளிவாய்க்காலை நோக்கிப் போகப் போகப் போரழிவின் எச்ச சொச்சங்கள் கண்களில் படத் தொடங்கிவிடுகின்றன. சாலை ஓரங்களில் வாகனங்கள் குவியல் குவியலாக எரிந்துகிடக்கின்றன. போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலை இடிபாடுகள் சீர்திருத்தப்பட்டு பேருந்துகளும் போய்வருகின்றன. அவ்வப்போது டூரிஸ்ட் பஸ்களும் எங்களைக் கடந்து சென்றன. உல்லாசப் பயணங்கள் செல்வதை வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகக்கொண்டுள்ள சிங்கள மக்களின் இப்போதைய பயண ஆர்வம் இறுதிப் போர் நடைபெற்ற இடங்களையும் நான்கு தளங்களில் பூமிக்குக் கீழே அமைக்கப்பட்ட பிரபாகரனின் வீடு, தேவிபுரம் நீச்சல்குளம், புலிகளின் போர்த் தளவாடங்களை வைத்து ராணுவம் அமைத்துள்ள அருங்காட்சியகம் ஆகியவற்றை நோக்கியுள்ளது. உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் ஒவ்வொரு இடத்திலும் குழந்தைகள் விளையாடப் பூங்கா, கேன்டீன் முதலியனவும் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் வாழ்ந்த இடத்தை சுற்றுலாத் தளம் ஆக்கிய சூட்சுமத்தின் பின்னணியில் எத்தனை உயிர்கள் பலியாகின என்பதை நினைத்தபடி சென்றோம்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு