Published:Updated:

தீ வைத்தது நக்ஸலைட்டுகளா?

அதிகாலையில் அதிர்ச்சி மரணம்

பிரீமியம் ஸ்டோரி
தீ வைத்தது நக்ஸலைட்டுகளா?
##~##

டந்த 30-ம் தேதி அதிகாலை நேரம். ஆழ்ந்த உறக்கத்தில் அந்த ரயிலில்  வந்த பல பயணி களுக்கு, அதுவே கடைசிப் பயணமாகிப் போனது! 

டெல்லியில் இருந்து கடந்த 28-ம் தேதி இரவு 10 மணி அளவில் சென்னைக்குப் புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த ராம்நகருக்கு திங்கள் காலை 4.40க்கு வந்து கொண்டிருந்த நேரத்தில், எஸ் 11 கோச் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்தப் பெட்டியில் இருந்து 28 உடல்கள் கண்டு எடுக்கப்பட்டு இருப்பதால், மேலும் பலர் இறந்திருக்கலாம் என்பதுதான் திங்கள் இரவு நிலவரம். காயம் அடைந்த 25 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் மரண பயம் நீங்காமல் பேசினார்கள். ''திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வரவேண்டிய வண்டி, ஆந்திராவின் நெல்லூர் ஸ்டேஷனைத் தாண்டி வந்த போது, காலை 4.30 மணி இருக்கும். எல்லோரும் நல்ல தூக்கத்தில் இருந்தோம். பக்கத்துப் பெட்டியில் இருந்து பெரும் சத்தமும் குபுகுபுவெனப் புகையும் வந்துச்சு. கூடவே அழுகை சத்தமும்... அபயக் குரலும் கேட்டது. உடனே எல்லோரும் சேர்ந்து அபாயச் சங்கிலியைப் பிடிச்சு இழுத்தோம். ஆனாலும் கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் டிரெயின் நின்னது. உடனே கீழே குதிச்சுப் பார்த்தப்போ, தீ இன்னும் அதிகமாக எரிந்தது. உடனே பக்கத்துப் பெட்டிகளைக் கழட்டியதால் வேறு எங்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. தீ எரிந்த பெட்டியில் இருந்து ஒரு சிலர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கீழே குதித்தார்கள். ஆனால், உள்ளே நெரிசலில் தள்ளுமுள்ளு ஆகி, பலர் உள்ளேயே மாட்டிக்கொண்டார்கள். பலர் தூக்கத்திலேயே மூச்சு முட்டி இறந்துவிட்டார்கள். தீ கொழுந்து​விட்டு எரிந்ததால், வெளியில் இருந்து நெருங்க முடியவில்லை. தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்தது எல்லாம் வீணாகி விட்டது. தகவல் போய் ஃபயர் ஸ்டேஷன்ல இருந்து வண்டி வருவதற்குள், அந்தப் பெட்டி முழுமையா எரிந்து முடிந்துவிட்டது. தீ பிடிச்சதுக்குக் காரணம் என்னவென்று எங்களுக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் எங்கள் பெட்டியில் எல்லாம் மின்சாரப் பாதிப்பு எதுவும் ஏற்பட​வில்லை. தீயில் இருந்து மீட்கப்பட்ட சிலரை பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு போனாங்க. பலரை கருகின சடலமாத்தான் மீட்க முடிந்தது. ஆஸ்பத்திரியில் இருக்கும் சிலரது நிலைமையும் மிகவும் மோசமாகத்தான் இருக்கு. ரொம்பவும் கொடுமையான விபத்துங்க இது. இப்ப நினைச்சாலும் நெஞ்சு நடுங்குது...'' என்றனர்.

தீ வைத்தது நக்ஸலைட்டுகளா?

விபத்து நடந்த பகுதிக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தொடங்கி, பல்வேறு அமைச்சர்களும் ஓடோடி வந்து ஆறுதல் சொல்லி இருக்கிறார்கள். இந்த விபத்தில் பலியானவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். மத்திய அரசு சார்பில் உயிர் இழந்தவர்​களுக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்சாரக் கோளாறு காரணமாகவே தீ பிடித்ததாக முதலில் அறிவித்த அரசு, இப்போது தீவிரவாதிகளின் வேலையாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது. ஏனென்றால், கடந்த 1990-ம் ஆண்டு ஹைதராபாதில் நக்ஸலைட்டுகள் தாக்குதல் காரணமாக, இது போன்ற விபத்து ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள். அதனால் நக்ஸலைட்டுகள் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்ற ரீதியில் இப்போது ஆராய்ந்து வருகிறார்கள். இதுபற்றி பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய், ''விபத்து நடந்த போது மிகப்பெரிய சத்தம் கேட்டதாகச் சொல்வதை ஒதுக்கி விட முடியாது. அதுபற்றி விசாரணை நடத்தப்படும்'' என்று கூறியிருக்கிறார். எனவே, விபத்து என்று முதற்கட்டமாகச் சொல்லப்பட்டாலும், விசாரணை முடிவில் திடுக் தகவல் வெளியே வரவும் வாய்ப்பு இருக்கிறது.

  எரிந்த பெட்டியை மட்டும் அங்கேயே நிறுத்திவிட்டு, மற்ற பெட்டிகளுடன் சென்னைக்குப் பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்தது ரயில்வே நிர்வாகம். அது போல் சென்னையில் இருந்து சம்பவ இடத்துக்கும் ஒரு சிறப்பு ரயில் மூலம் உறவினர்களைக் கொண்டுபோய் சேர்த்தது.

மறக்க முடியாத... இனி நிகழக்கூடாத பயணம் இது!

- கே.ஏ.சசிகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு