Published:Updated:

உயிர் குடிக்கும் பேருந்துகள்!

உயிர் குடிக்கும் பேருந்துகள்!

பிரீமியம் ஸ்டோரி
உயிர் குடிக்கும் பேருந்துகள்!

ஸ்ருதியின் மரணத்தில் இருந்து மீளாத தமிழகத்துக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி, சுஜிதாவின் மரணம். 

##~##

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ளது ஈச்சம்பட்டு கிராமம். இங்கே மேல்குப்பத்தில் உள்ள எம்பசோ மெட்ரிக் பள்ளியில் சுஜிதா இந்த வருடம்தான் யு.கே.ஜி. சேர்க்கப்பட்டு இருக்கிறாள். 27-ம் தேதி மாலை பள்ளிப் பேருந்தில் வீட்டுக்குத் திரும்பினாள் சுஜிதா. வீட்டுக்கு அருகே உள்ள கோயில் நிறுத்தத்தில் சுஜிதாவும் அவளுடைய சகோதரி சுவேஜாவும் இறங்கினார்கள். இறங்கியதும் பஸ்ஸுக்கு முன்னால் வேகமாக சுஜிதா செல்வதைக் கவனிக்காமல் டிரைவர் பஸ்ஸை எடுத்துவிடவே, சுஜிதாவின் மீது பஸ் மோதி, சக்கரம் தலையில் ஏறியுள்ளது. அலறக்கூட முடியாமல் நொடியில் சுஜிதாவின் உயிர் பிரிந்துவிட்டது.

''எப்பவும் கிராமத்தைச் சுத்திட்டு வந்து கடைசியாத்தான் இந்த ஸ்டாப்பில் இறக்கிவிடுவாங்க. பஸ் போகும் திசைக்கு எதிர் திசையில் குழந்தை வீட்டுக்குப் போவா. ஆனா, அன்னிக்கு ஊரைச் சுற்றி வராமல் முதல்ல இங்கே பஸ் வந்துடுச்சு. குழந்தையும் எப்பவும்போல இறக்கிவிடுறாங்கனு நினைச்சு பழக்கதோஷத்துல போயிருக்கா. அதைக் கவனிக்காத டிரைவர் வண்டியை எடுக்க, பஸ் டயரில் குழந்தை மாட்டி, அந்த இடத்துலயே செத்துப்போச்சுங்க'' என்று கண்ணீர்விட்டனர் கிராம மக்கள்.

உயிர் குடிக்கும் பேருந்துகள்!

மறுநாள் காலை 7 மணிக்கு போஸ்ட்மார்ட்டம் முடிந்து சுஜிதாவின் உடல் ஈச்சம்பட்டுக்குக் கொண்டுவரப்பட... ஒட்டுமொத்தக் கிராம மக்களும் கனத்த சோகத்துடன் கூடி இறுதிச் சடங்கு செய்திருக்கிறார்கள். சுஜிதாவின் தந்தை குமாரிடம் பேச்சுக் கொடுத்தோம். ''ஆசை ஆசையா வளர்த்தோம். இப்ப விட்டுட்டுப் போயிட்டாளே!'' எனக் கதறினார்.

உயிர் குடிக்கும் பேருந்துகள்!

எம்பசோ பள்ளி தாளாளர் சண்முகம் வந்து குழந்தைக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தி னார். அவரிடம் பேசினோம். ''தவறை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எங்களது நிர்வாகம் தேவை யானதை செய்துகொடுக்கும்'' என்று பேசியவரை... காவல் துறையினர் பேசவிடாமல் தடுத்தனர். அஞ்சலி செலுத்த வந்திருந்த சுஜிதாவின் ஆசிரியைகள், ''சரியான சுட்டிப் பொண்ணு. கிளாஸில் எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்பா. எங்களை எல்லாம் ஏமாத்திட்டுப் போயிட்டா...'' என்று கதற... அந்த இடமே உச்சகட்ட சோகத்தில் ஆழ்ந்தது. வீட்டுக்கு அருகே இருந்த இடுகாட்டில் சுஜிதா புதைக்கப்பட்டபோது... கதறி அழுதது கிராமம்.

சுஜிதாவின் தாய் மாமன் முரளி, ''பஸ்ஸின் டிரைவருக்கு 60 வயசு ஆகுது. ஆனா அதை மூடி மறைச்சு இருக்காங்க. இதுவரை இந்தத் தொகுதியோட எம்.எல்.ஏ., வேலூர் மாவட்டக் கலெக்டர் என்று யாருமே வரலை. ஒரு போன் செய்து விசாரிக்கக்கூட இல்லை. ஏன்னா... இது கிராமம்'' என்று அழத் தொடங்கினார்.

உயிர் குடிக்கும் பேருந்துகள்!
உயிர் குடிக்கும் பேருந்துகள்!

சுஜிதாவின் மரணத்துக்குக் காரணமான டிரைவர் சங்கரனையும், கிளீனர் சக்தி குமாரையும் கைது செய்து உள்ளனர். பள்ளியின் தாளாளர் சண்முகத்தை விசாரணை மட்டுமே செய்திருக்கிறது போலீஸ். தினந்தோறும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனமே கொலையும் செய்யும் கொடுமைக்கு, சுஜிதாவே கடைசிப் பலியாக இருக்கட்டும்!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

 ''அஞ்சலி செலுத்தக்கூட யாரும் வரல!''

உயிர் குடிக்கும் பேருந்துகள்!

 முடிச்சூர் மெயின் ரோட்டில் உள்ள அட்டைக் கம்பெனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ''பி.டி.சி. குவார்டர்ஸ்?'' என்றாலே, ''ஸ்ருதி பாப்பா வீடுங்களா?'' என்று முன்வந்து வழி சொல்கிறார்கள். தாம்பரத்தில் இருந்தே ஸ்ருதியின் அழகு முகம் பதித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களைப் பார்க்க முடிகிறது.

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து ஸ்ருதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவளுடைய பெற்றோருக்கு ஆறுதல் சொல்லிச் செல்கிறார்கள். வீட்டின் உள்ளே இருக்கும் மேஜையில் சிரிக்கிறது, ஸ்ருதி அழகாக ஆடும் புகைப்படம். குடும்ப நண்பரான ஞானசெல்வம், ''இப்படித்தாங்க பாட்டு, டான்ஸ்னு இருப்பா. எப்பவும் எல்லாருக்கும் பிடிச்ச செல்லக் குழந்தையா இருப்பா. பள்ளியில் எந்த நிகழ்ச்சி னாலும் முந்தின நாளே போன் பண்ணி ஏழு மணிக்கே அனுப்புங்கன்னு சொல்வாங்க. அதுக்கெல்லாம் போன் செஞ்சவங்களுக்கு ஒரு இரங்கல் செய்தி சொல்ல போன் செய்ய முடியலை'' என்று ஆதங்கப்பட்டார்.

ஸ்ருதியின் அம்மா ப்ரியா, ''குழந்தை எங்களை விட்டுப் போயிட்டாங்கிறதை இன்னும் நம்பவே முடியல. நாங்க கேரளாக்காரங்க. ஒண்ணு ரெண்டு சொந்தக்காரங்கதான் இங்க இருக்காங்க. மத்தபடி எங்களுக்கு முழு உதவியா இருந்தது நண்பர்கள்தான். வந்த எல்லோரும் பாப்பாவுக்காக உருகினாங்க. ஆனா, அவ நாலு வருஷமாப் படிச்ச பள்ளிக்கூடத்துல இருந்து ஒரு போன்கூட வரல. அவளோட படிச்ச குழந்தைகளைக்கூட அஞ்சலி செலுத்த அனுப்பிவைக்கல'' என்று அழுதார்.

இந்தச் சம்பவம் பற்றி பத்திரி கைகளில் வந்த செய்திகளைப் பார்த்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தாமே முன்வந்து இந்த வழக்கை எடுத்துக் கொண்டனர். நீதிமன்றத்தில் ஆஜரான வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்களிடம் சற்று காட்டமாகவே பேசிய நீதிபதிகள், ''இதை ஏன் கொலை வழக்காக மாற்றக்கூடாது'' என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பள்ளித் தாளாளர் விஜயன், பஸ் டிரைவர் சீமான், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். 'தகுதிச் சான்றிதழுக்காக வரும் வாகனங்களில் பிளாட்பார்ம் சரியாக இருக்கிறதா’ என்பதையும் பார்க்க வேண்டும் என்று விதிமுறைகளில் இல்லை என்ற பாயின்ட்டை வைத்து இந்த வழக்கைச் சந்திக்க, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் தயாராகி வருகிறாராம்.

- பி.என்.அர்ச்சனா

''குழந்தை, குட்டியோட இருக்க வேண்டியவனை...''

உயிர் குடிக்கும் பேருந்துகள்!

தாம்பரம் ஸ்ருதியைப் போல், 27 வருடங்களுக்கு முன்னர் பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையின் வழியாக விழுந்து இறந்தான் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவன் வினோத் என்கிற வினுகுமார். இதுபற்றி  16.09.1985 தேதியிட்ட ஜூ.வி. இதழில் அட்டைப்படக் கட்டுரையே வெளியிட்டு இருந்தோம். இப்போது வினுகுமாரின் குடும்பம் எப்படி இருக்கிறது?  

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கிராமத்தில் இருக்கும் வினுகுமார் இல்லத்துக்குச் சென்றோம். வருடங்கள் உருண் டாலும் இன்னமும் வினுகுமார் வீட்டில் சோகம் நிழலாடுகிறது. விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார் வினுகுமாரின் தந்தை கருணாகரன்.

''இப்ப எங்க வினு இருந்திருந்தா, அவனுக்கு 33 வயசு இருக்கும். கல்யாணம் முடிஞ்சு குழந்தை குட்டிகளோட சந்தோஷமா இருந்திருக்க வேண்டியவனை, ஸ்கூல் பஸ்ல அனுப்பிவெச்ச ஒரே காரணத்தால், இழந்து நிக்கிறோம். தினமும் காலையில் ஸ்கூல் யூனிஃபார்மைப் போட்டுட்டு, பஸ் வந்துடுச்சானு பார்க்க வாசலுக்கும் வீட்டுக்குமா கபடி ஆடுவான். அப்பவெல்லாம் அவன் எதிர்பார்த்து நிக்குறது பஸ்ஸை இல்லை... அவன் உயிரையே காவு வாங்கப்போற எமன்னு எங்களுக்குத் தெரியாமப்போச்சே'' என்று விம்மி விம்மி அழுகிறார்.

''ஒரு நாள் சாயங்காலம் வழக்கமா வர்ற நேரத்துக்கு ஸ்கூல் பஸ் வரல. சந்தேகப்பட்டு அக்கம் பக்கத்தில் விசாரிச்சப்ப, தேரூர் பக்கத்தில் பஸ் ஆக்சிடென்ட் ஆகி நிக்குதுன்னு சொன்னாங்க. பதறியடிச்சு அங்கே போய்ப் பார்த்தா... எங்க வினு ரோட்டில் மூச்சு அடங்கிக்கிடந்தான். அந்த பஸ்ஸில் வருஷக்கணக்கா ஒரு பெரிய ஓட்டை இருந்திருக்கு. அதை பள்ளி நிர்வாகம் அடைக்காம அலட்சியமா விட்டதால், அநியாயமா என் பையனை இழந்துட்டேன்.

சம்பவம் நடந்தப்ப நான் கவர்மென்ட் பஸ் கண்டக்டரா இருந்தேன். எங்க பசங்களுக்கு ஃப்ரீ பாஸ் இருந்துச்சு. ஸ்கூல் பஸ்ல அனுப்பினா சேஃப்டினுதான் ஃபீஸ் கட்டி அனுப்பினேன். இதைவிடக் கொடுமை... எங்க வினுகுமார் இறந்து போன வண்டி மூணு மாசத்துக்கு முன்னாடிதான் ஆர்.டி.ஓ. ஆபீஸில் எஃப்.சி. போயிட்டு வந்திருக்கு. அப்படின்னா லஞ்சமும் ஊழலும் எந்த அளவுக்குத் தலை விரிச்சு ஆடுதுன்னு பாருங்க. தாம்பரத்தில் ஒரு சிறுமி இதே போல் இறந்திருக்கிறதால, இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு இந்த சம்பவம் பரபரப்பா இருக்கும். ஸ்கூல் பஸ்கள் ரெய்டுன்னு அடிக்கடி செய்தி வரும். காலப்போக்கில் எல்லாமே காணாமப்போயிடும். வினுகுமாரை டாக்டராக்கிப் பார்க்க ஆசைப்பட்டேன். என் கனவுகள் எல்லாம் கரைஞ்சு போச்சு'' என்றார் உருக்கமாக.

- என்.சுவாமிநாதன்

படம்: ரா.ராம்குமார்

 சாதா எஃப்.சி... ரன்னிங் எஃப்.சி!

 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், சுற்றுலாப் பேருந்து, பள்ளிப் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் (எஃப்.சி) கொடுப்பதிலும், உரிமம் புதுப்பிப்பதிலும் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது!

''ஒரு பஸ்ஸுக்குத் தகுதிச் சான்றிதழ் கொடுக்க இப்போது 5,000 ருபாய் முதல் 10,000 வரை வசூலிக்கின்றனர்'' என்று சொல்லும் ஒரு தனியார் பஸ் உரிமையாளர், ''தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டிய பஸ்ஸை ஆய்வு செய்ய வேண்டியது மோட்டார் வாகன ஆய்வாளரின் முக்கியப் பணி. ஆனால், பெரும்பாலும் யாருமே வாகனத்துக்குள் ஏறி ஆய்வு செய்வதில்லை. பணத்தை மட்டும் கொடுத்துவிட்டால் போதும். பஸ்ஸுக்குள் ஏறவே மாட்டார்கள். அதனால் பஸ்ஸின் வெளிப்பக்கம் மட்டும் புதிதாக பெயின்ட் அடித்துக் கொண்டுபோய் நிறுத்துவோம். டிரைவரையே அந்த பஸ்ஸை ஸ்டார்ட் செய்யச் சொல்வார் வாகன ஆய்வாளர். ஒரு முறை பிரேக் பிடித்துக் காட்டச் சொல்வார். அவ்வளவுதான். ஆய்வு முடிந்துவிடும். இப்படி ஆய்வு நடப்பதால்தான், மாணவி பலியான பஸ்சில் மிகப்பெரிய ஓட்டை இருந்ததைக்கூடப் பார்க்காமல் தகுதிச் சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.

இதுபோக, ரன்னிங் எஃப்.சி. என்ற ஒன்றையும் நடைமுறையில் வைத்து இருக்கிறார்கள். தகுதிச் சான்றிதழ் பெற வேண்டிய வாகனம் ஓடிக்கொண்டேதான் இருக்கும். 'எல்லா ஒர்க்கையும் பார்த்துடுறோம்யா’ என்று மோட்டார் வாகன ஆய்வாளரிடம் சொல்லிவிடுவோம். அவரும் 'எல்லாத்தையும் ஒழுங்காப் பாருங்கய்யா’ என்று சொல்லி, அந்த வண்டிக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கிவிடுவார். இதற்கு 15,000 ரூபாய் என்று நிர்ணயித்து இருக்கின்றனர். இதுதவிர, தனியார் பஸ்களுக்கு ரூட் உரிமம் புதுப்பிக்க ஒரு ஸீட்டுக்கு 1,000 ரூபாய் என்று நிர்ணயித்துக் கறக்கின்றனர். அதிகாரிகளுக்கான இந்தத் தொகை போக, அந்த அலுவலகத்தின் அத்தனை பேருக்கும் பதவிக்கு ஏற்ப அழுதால்தான், வேலை சுலபமாக முடியும்'' என்கிறார்.

இந்தக் கொள்ளைதான் பல கொலைகளுக்குக் காரணம் ஆகிறது!

- எஸ்.கோபாலகிருஷ்ணன்,  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு