ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மலையை முழுங்கிய மாஃபியாக்கள்!

வளத்தைக் காப்பாற்றுவாரா ஜெ.?

மலையை முழுங்கிய மாஃபியாக்கள்!
##~##

யற்கை வளத்தைக் கொள்ளை அடிப்பது இன்று... நேற்றா நடக்கிறது? கொடுமையிலும் கொடு​மை, அந்தக் கொள்ளை பல்லாயிரம் கோடியைத் தொட்டுவிட்டது. இதைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  சொல்லும்போது, 'இவனுக்கு வேற வேலை இல்லை’ என்று அதிகாரிகள் உதாசீனம் செய்வார்கள். ஆனால், ஓர் அதிகாரியே சொன்னால்..? 

கிரானைட் மாஃபியாக்களின் அஸ்திவாரத்துக்கே அணுகுண்டு வைக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருப்​பவர், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ். அவரது கடிதம் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மதுரையில் இருந்து சகாயத்தை வேறு இடத்துக்கு நகர்த்தவே அவரது இந்த நடவடிக்கைதான் காரணம் என்பதை அப்போதே கழுகார் சொல்லி இருந்தார். 30.5.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில், ''சகாயத்தின் திடீர் மாறுதலுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்​டாலும் கிரானைட் குவாரிகளை இறுக்கிப் பிடித்தது​தான் முக்கியமான காரணம் என்கிறார்கள். மேலூர் பகுதியில் உள்ள சட்டவிரோதக் குவாரிகள் குறித்து சகாயத்துக்குப் புகார் அனுப்பியவர்கள், கண்மாய் குளங்களையும் கிரானைட் முதலாளிகள் ஆக்கிரமித்துப் போட்டிருப்பதாக ஆதாரங்களைக் காட்டினார்கள். அதில், பிரபல மூன்று எழுத்துக் கம்பெனி மீதான புகார்கள்தான் அதிகம். 'சசி அண்ட் கோ-விடம் நல்ல டீலிங் வைத்திருக்கும் அவர்களைத் தொட்டால் சிக்கல் வரும்’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பே அட்வைஸ் செய்தார்கள். ஆனாலும், கிரானைட் குவாரிகளைக் கிண்டிக் கிழங்கெடுக்க ஆரம்பித்தவர், தன்னிடம் புகார் கொடுத்தவர்களிடம், 'என்னை ரொம்ப நாளைக்கு இங்கே இருக்கவிட மாட்டாங்கப்பா...’ என்று சொல்லிவிட்டுத்தான் மளமளவெனக் காரியத்தில் இறங்கினார். அதே வேகத்துடன் அந்த மூன்றெழுத்துக் குவாரி நிர்வாகம் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வரவேண்டிய பணத்தை எப்படி எல்லாம் சுருட்டி இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் அறிக்கை தயாரித்தார். இதுதான் திடீர் மாறுதலுக்குக் காரணம் என்கிறார்கள்'' - என்று நாம் விரிவாகக் குறிப்பிட்டு இருந்தோம்.

மலையை முழுங்கிய மாஃபியாக்கள்!

தான் தயாரித்த அறிக்கையை தமிழகத் தொழில் துறை முதன்மைச் செயலாளருக்கு கடந்த மே மாதம் 19-ம் தேதி அனுப்பி வைத்தார் சகாயம். அடுத்த ஒரே வாரத்தில் சகாயம் மதுரையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். ஆனாலும், சகாயம் அனுப்பிய கடிதம்... இன்னமும் உயிரோடு உலா வருகிறது.

அனல் கொதிக்கும் மே மாதம்தான் இந்த விவகாரம் ஆரம்பமானது. மேலூரை அடுத்துள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி போன்ற கிரானைட் தொழில் கொழிக்கும் பகுதிகளில் மே 1-ம் தேதி புகுந்து அதிரடி சோதனை நடத்தினார் சகாயம். உடனடியாக, சென்னையில் இருந்து அவருக்கு ஒரு போன். 'என்னுடைய அனுமதி இல்லாமல் ஏன் இந்த ரெய்டுக்குச் சென்றீர்கள்? அந்த அதிபருக்கு யாரிடம் செல்வாக்கு இருக்கிறது தெரியுமா?’ என்று கேட்டது அந்தக் குரல். 'இனிமே உங்க அனுமதி வாங்கிட்டுப் போறேன் சார்’ என்று அமைதியானார் சகாயம். மே 17 அன்று ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஓ.

மலையை முழுங்கிய மாஃபியாக்கள்!

தலைமையில் ஒரு குழுவை அந்தக் குவாரிகளுக்கு அனுப்பி மீண்டும் சோதனை நடத்தினார். அதில் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு கடிதம் தயாரித்து தொழில் துறைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார். சகாயம் கணித்ததுபோலவே மே 23-ல் அவருக்கு டிரான்ஸ்ஃபர் வந்தது.

''மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் சட்ட​விரோதக் குவாரிகள் மூலம் அரசுக்கு 16,000 கோடி ரூபாய்க்கும் மேலாக வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இயங்கி வரும் 91 குவாரிகளில் முறைகேடாகக் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால், அரசுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடிகள் தனியார் பாக்கெட்டுகளுக்குப் போகிறது. இந்தக் குவாரிகளைத் தனியாருக்குக் கொடுக்காமல் அரசே எடுத்து நடத்தினால், 1,000 கோடிக்கு மேல் லாபம் ஈட்ட முடியும். எனவே, சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளை உடனடியாக மூடிவிட்டு அவர்கள் பதுக்கி வைத்துள்ள கிரானைட் கற்களைப் பொதுஏலத்தில் விட வேண்டும். சட்டவிரோதமாகக் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதையும் கடத்தலையும் கண்டுகொள்ளாமல் இருக்க வருவாய்த் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் பெருமளவில் நிதி ஆதாரம் அடைந்துள்ளனர்.

சமூகச் சொத்தை தனி நபரும் தனியார் நிறுவனமும் சுரண்டிச் சூறையாடுவதை அனுமதிக்க

மலையை முழுங்கிய மாஃபியாக்கள்!

இயலாது. அதுவும் பல ஆயிரம் ஏழை விவசாயிகளின் வாழ்​வாதாரங்களை அழித்து தனியார் நிறுவனங்கள் பெரும்பலன் அடைவதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. இவற்றைத் தடுத்து நிறுத்த வெளி மாவட்டக் கனிமவளத் துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு குவாரிகளை ஆய்வுசெய்து, முறைகேடாக கிரானைட்டை வெட்டிக் கடத்திய தனியார் நிறுவனங்களிடம் அதற்கான தொகையை வசூலிக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த நிதி இழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படைகளை அமைத்து கிரானைட் குவாரிகளைத் தணிக்கை செய்ய வேண்டும்''  - இதுதான் சகாயம் அனுப்பிய அறிக்கையின் சுருக்கம்.

இந்த அறிக்கையை வைத்து சிந்து கிரானைட், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனங்களுக்கு 'உங்களது உரிமங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய கனிமவளத் துறை, இன்னொரு நிறுவனம் குறித்து மூச்சே விடவில்லை. அது, பி.ஆர்.பி. நிறுவனம். நோட்டீஸுக்கு இதுவரை ஒலிம்பஸ் நிறுவனம் பதில் ஏதும் கொடுக்கவில்லை என்றும் சிந்து கிரானைட்ஸ் மட்டும் கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கி இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. பி.ஆர்.பி. நிறுவனத்தின் உரிமையாளர்தான், தி.மு.க. ஆட்சி செய்தாலும் அ.தி.மு.க. ஆட்சி செய்தாலும் மேலூரை எந்த இடைஞ்சலும் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடிய பி.ஆர். பழனிச்சாமி. ஒலிம்பஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்களாக துரை தயாநிதி, க.நாகராஜ் ஆகிய இருவர் பெயர் சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிதான் அவர்.

கிரானைட் ஊழல்களைக் கண்டுபிடிக்க சகாயத்துக்கு தோள் கொடுத்து நின்ற அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''புறம்போக்கில் கிரானைட் கற்களை வெட்டி எடுக்கும் உரிமத்தை 'டாமின்’ நிறுவனத்துக்குத்தான் அரசு வழங்குகிறது. ஆனால், 'டாமின்’ நிறுவனத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதற்கான நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை. அதனால், 'டாமின்’ நிறுவனம் தனது குவாரிகளை 'ரைசிங் செல்லிங்’ சிஸ்டத்தில் தனியாருக்குக் குத்தகைக்கு  விடுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்களில் கன மீட்டருக்கு இவ்வளவு என ஒரு குறிப்பிட்ட தொகையை 'டாமின்’ நிறுவனத்துக்கு தனியார் செலுத்த வேண்​டும். இதில்தான் புகுந்து விளை​யாடுகிறார்கள். தனியார் பட்டா நிலங்களை கிரானைட் குவாரிக்​காக வாங்கிப் போட்டு இருப்பவர்கள், 'டாமின்’ குவாரிகளில் பெரிய அளவில் கற்களை வெட்டி எடுத்து, அவற்றைப் பட்டா நிலங்களில் வெட்டி எடுத்ததாகக் கணக்கு காட்டுகிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தை.

கீழவளவு ஏரியாவில் 2010-ல் ஒரு குவாரிக்கு அனுமதி வாங்கியது ஒரு நிறுவனம். ஆனால், அங்கே கிரானைட் எடுக்காமல் டாமின் குவாரியில் கள்ளத்தனமாகக் கற்களை வெட்டி எடுத்துக் கடத்துகிறது. ஆனால், தாங்கள் குவாரிக்கு அனுமதி வாங்கிய இடத்தில் 4,000 கன மீட்டர் அளவுக்கு கற்களை வெட்டி எடுத்ததாக அந்த நிறுவனம் கணக்கு வைத்துள்ளது. அங்கே அவ்வளவு கற்கள் வெட்டி எடுத்ததற்கான தடயமே இல்லை. இப்படி எடுக்கப்பட்ட பல நூறு கோடி மதிப்பிலான கற்களை மேலூர் பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர். 2011-ல் இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு ஒன்று வந்தபோது, 'அது வேஸ்ட் கற்கள்’ என்று கலெக்டரையே அறிக்கை கொடுக்க வைத்தார்கள்'' என்றார்.

மேலூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ''பொதுப்பணித் துறையின் ஒத்துழைப்போடு

மலையை முழுங்கிய மாஃபியாக்கள்!

கிரானைட் கழிவுகளைக் கொட்டி மேலூர் பகுதிகளில் உள்ள 12 கண்மாய்களையும் எட்டு மீன் வளர்ப்புக் குளங்களையும் தூர்த்து விட்டார்கள். பெரியாறு வரத்துக் கால்வாய்களிலும் கழிவுகளைக் கொட்டி தண்ணீர் வரத்தை அடைத்து விட்டதால், சுமார் 2,000 ஏக்கர் நிலம் நீர் இன்றிப் பாழாகிவிட்டது. இதில் பெரும் பகுதியை கிரானைட் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு வளைத்துப்போட்டது. கோயில்கள், குளங்கள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புப் பகுதிகளைவிட்டு 300 மீட்டர் தள்ளித்தான் கிரானைட் குவாரிகள் இருக்க வேண்டும் என்ற விதி எல்லாம் காற்றில் பறந்துவிட்டது. 2011-ல் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் மதுரையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு 10 ஆயிரம் கன மீட்டர் கிரானைட் கற்கள் கொண்டு செல்லப்பட்டதாக மதுரை கனிம வளத் துறையில் கணக்கு இருக்கிறது. ஆனால், அதே காலத்தில் ஒரு லட்சம் கன மீட்டர் கற்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்ததாக துறைமுகத்தில் கணக்கு இருக்கிறது. இதை வைத்து ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார். 'முறைகேடு நடந்திருப்பது ஊர்ஜிதம் ஆவதால் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதியரசர் சந்துரு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதுவரை, எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்​படவில்லை.  இங்கு இருக்கும் போலீஸ் ஸ்டேஷன், தாலுக்கா ஆபீஸ் எல்லாவற்றுக்குமே கிரானைட் கம்பெனிகளில் இருந்து தனி சம்பளமே போகிறது. அதனால், முதல்வர் மனது வைத்தால் மட்டுமே இந்தக் கொள்ளையைத் தடுக்க முடியும்'' என்றார்.

''சகாயம் கண்டுபிடித்தது சமீபத்​திய ஊழல்களை மட்டும்தான். ஆனால், 16 வருடங்களாக குவாரிகள் நடப்பதால், எம்புட்டு சம்பாதிச்​சிருப்பாங்கன்னு பாத்துக்குங்க. சி.பி.ஐ. விசாரிச்சா ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட பெரிய அளவுக்கு பூதம் கிளம்பும். சகாயம் அதைக் கண்டுபிடித்ததும் இப்போது, டாமின் குவாரியில் இருக்கும் கழிவுகளைக் கொண்டு​வந்து கொட்டி, அந்தக் குழியை மூடுறாங்க. இதை மூடக்கூடாதுன்னு சொன்னதுக்கே எனக்கே கொலை மிரட்டல் வருது'' என்கிறார் கீழவளவு பஞ்சாயத்துத் தலைவர் தர்மலிங்கம்.

இதற்கான பதிலை அறிவதற்கான பி.ஆர்.பி. நிறுவனத்தைத் தொடர்புகொண்​டோம். பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன மேனேஜர் சண்முகநாதனிடம் கேட்டதற்கு, ''சகாயத்தின் குற்றச்சாட்டுகள் என்ன என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு, நாங்களே உங்களிடம் பேசுகிறோம்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். இந்த இதழ் அச்சேறும் வரை அவர்களது பதில் கிடைக்கவில்லை. அவர்கள் விளக்கம் கொடுத்தால் முழுமையாக வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.

சிந்து கிரானைட்ஸ் அதிபர் பி.கே.செல்வராஜ் நம்மிடம், ''கனிமவளத் துறை அதிகாரிகளை நம்பாமல் வேறு அதிகாரிகளை வைத்து எங்களுக்கும் தெரியாமல் சகாயம் தன்னிச்சையாக எங்கள் கம்பெனிக்குள் வந்து சோதனை செய்துள்ளார். எங்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நாங்கள் நேர்மையாக தொழில் செய்து வருகிறோம். ஒன்றரை வருஷம் இங்கே கலெக்டராக இருந்த சகாயம் அப்போதே எங்களைக் கூப்பிட்டு விசாரணை நடத்தி இருக்கலாம். அதைவிட்டுட்டு டிரான்ஸ்ஃபர் ஆகிப்போன பிறகு நோட்டீஸ் விடுகிறார்கள். 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிற கல்லுக்கு 35 ஆயிரம்னு ரேட் போட்டு எங்களுக்கு 4 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறார். அதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் தடை வாங்கி இருக்கிறோம். தவறு செய்திருந்தால் தண்டிக்கட்டும். ஆனால் நாங்கள் நிரபராதிகள்'' என்றவர் மேலும், ''உண்மையை சொல்லணும்னா, கிரானைட் பிசினஸ் இப்போது 10 சதவிகிதம்தான் சக்சஸாப் போயிக்கிட்டு இருக்கு. மேலூர் பகுதியில இருக்கிற மொத்த கிரானைட் கம்பெனிகளோட ஒரு வருஷ டர்ன்ஓவரே 700 கோடிதான். இதுல லாபம்னு பார்த்தா அதிகபட்சம் 25 சதவிகிதம் நிற்கும். இதுல எப்படி 16,000 கோடிக்கு ஊழல் பண்ண முடியும்?'' என்று நம்மையே திருப்பிக் கேட்டார்!

சகாயத்திடம் இதுபற்றிக் கேட்டோம். ''மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற முறையில் கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து என்னிடம் வந்த புகார்கள் தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பினேன். இப்போது நான் மாறுதலாகி வந்துவிட்ட நிலையில், அதுகுறித்து நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்

மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, ''மதுரை மாவட்டத்தில் மொத்தம் 175 கிரானைட் குவாரிகள் இருக்கின்றன. இதில் 149 தனியார் குவாரிகள். 26 குவாரிகள் புறம்போக்கில் உள்ளவை. இவற்றில் எட்டு மட்டுமே டாமினுக்கு சொந்தமானது. மீதி 18-ல் டெண்டர் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கும் 13 குவாரிகளில் பெரும் பகுதியை பி.ஆர்.பி. கிரானைட்ஸ் எடுத்து நடத்துறாங்க. இந்த 13 குவாரிகளையும் க்ளோஸ் பண்றதுக்கு நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அவங்க, கோர்ட்டுக்குப் போயி எக்ஸ்டென்ஷன் வாங்கி இருக்காங்க. எல்லாவற்றையும் சேர்த்தால் இப்போதைக்கு மொத்தமே 50 குவாரிகள்தான் இருக்கு. இங்கு நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு 17 குழுக்களை அமைச்சிருக்கோம். கண்மாய்களில் கொட்டி இருக்கும் கிரானைட் கழிவுகளை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்த பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு உத்தரவு போட்டுள்ளோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது 10 நாட்களுக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்று உறுதி அளித்தார்.சொன்ன மாதிரியே கடந்த வியாழக்கிழமை அன்று கிரானைட் குவாரிகளில் தங்களது அலுவலர் படையை இறக்கி விட்டுள்ளார் மதுரை கலெக்டர். இந்த அதிரடி இறுதிவரை தொடர வேண்டும் என்பதே மதுரை மக்களின் ஆதங்கம்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையில் ஜெயலலிதா பேசிய பேச்சுதான் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

'... இந்த அளவுக்கு அடித்த கொள்ளை போதாது என்று கிரானைட் கொள்ளை வேறு! தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இருந்து டன் கணக்கில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத கிரானைட் கொள்ளை மூலம் ஏற்பட்டுள்ள வரி இழப்பு 82 ஆயிரம் கோடி ரூபாய். இதைப்பற்றி செய்தி வெளியிடுகின்ற பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைகளில் இருந்து, கிரானைட் கொள்ளையில் கிடைக்கும் பணம் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்’ என்றார் ஜெயலலிதா.

அப்போது அவர் கேள்வி கேட்கும் இடத்தில் இருந்தார். இப்போது நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கிறார்.

எடுப்பாரா?

    - குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி