ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

விடியலுக்கு மறைவு இல்லை!

இரங்கல்

##~##

'விடியல்’ சிவா என்று தோழர்களால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட சிவஞானம் மறைந்து விட்டார். தனது 'விடியல்’ பதிப்பகத்தின் மூலமாக முற்போக்கு புத்தகங்களை தமிழகத்தில் அதிகமாக நடமாட விட்டவர். சேலம் அருகில் உள்ள அக்கிரஹார நாட்டார்மங்கலம் என்ற ஊரில் பிறந்தவர் என்றாலும், விடியல் சிவா என்றவுடன் அறியப்பட்ட முகவரியானது கோவை மாவட்டம், சிங்காநல்லூர், உப்பிலிப்​பாளையம்தான். மக்கள் யுத்தக் குழு என்னும் நக்சல்பாரி இயக்கத்தோடு தொடங்கிய சிவாவின் அரசியல் வாழ்க்கை, அவரது 57-வது வயதில் மாவோவின் தொகுப்புகளைப் புத்தகங்கள் ஆக்குவதோடு முடிவுக்கு வந்திருக்கிறது. 

மார்க்சியத்தின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்ட மனிதர் என்றாலும், மாற்றுக் கருத்துக்களை

விடியலுக்கு மறைவு இல்லை!

மறுக்கும் வறட்டுத்தனமான இயக்கவாதி அல்ல. மார்க்சியத்தை விமர்சிக்கக்கூடிய நூல்களையும் மார்க்சியத்தை சமகாலத்துக்கு ஏற்றவாறு செழுமைப்படுத்தக்கூடிய நூல்களையும் நிறையவே வெளியிட்டார். விடியல் பதிப்பகத்தின் மிக முக்கியமான புத்தகங்களில் முன்வரிசையில் இடம் பிடிக்கக்கூடியவை எஸ்.வி.ராஜதுரை- வ.கீதா இணைந்து எழுதிய 'பெரியார் சுயமரியாதைச் சமதர்மம்’ மற்றும் எஸ்.வி.ஆர். எழுதிய 'பெரியார்: ஆகஸ்ட் 15’. இந்திய விடுதலைப் போராட்டம், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இரண்டுக்கும் பெரியாருக்கும் இடையிலான முரண்பாடுகளையும் அதற்கான நியாயங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்தன இந்தப் புத்தகங்கள். இந்தப் புத்தகங்கள் வெளியான பிறகுதான், பெரியாரின் எழுத்துகள் போதுமான அளவில் ஆவணப்படுத்தப்படவே இல்லை என்ற உண்மை பெரியார் இயக்கத்தினருக்கு உறைத்தது. திருமணம் செய்துகொள்ளாமல் முற்போக்குப் புத்தகங்களைப் பதிப்பித்தலில் மட்டுமே தன் வாழ்க்கையைச் செலவழித்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இறக்கப்போகிறோம் என்று தெரிந்ததும், தன் பதிப்பகத்தை நண்பர்கள் கொண்ட அறக்கட்டளையாக மாற்றிவிட்டார். மாவோவின் தொகுப்புகளைத் தமிழில் கொண்டு​வருவது அவரது கனவு. விடியல் பதிப்பகமும் அலைகள் பதிப்பகமும் இணைந்து வெளியிடும் அந்தப் புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஆனால், அதைப் பார்க்கத்தான் சிவா இல்லை.

விடியலுக்கு மறைவு இல்லை!

தன் களப்பணி வாழ்க்கையில் கண்ட சாதியம் குறித்த அனுபவங்களை எழுதிப் புத்தகமாக வெளியி​டுவது அவரது இன்னொரு கனவாம். பாதி எழுதிய நிலையிலேயே அந்தக் குறிப்புகள் நிற்கின்றன. சிவாவின் பதிப்புலக வெற்றிகளாக இரண்டைச் சொல்லலாம். தமிழில் முற்போக்குச் சிந்தனை குறித்த வாசிப்பின் மீது ஆர்வம் உடைய யாருடைய புத்தக அலமாரியையும் 50 சதவிகிதம் நிறைத்திருப்பவை விடியல் வெளியிட்ட புத்தகங்கள்தான். பொதுவாகத் தீவிர இலக்கியம் மற்றும் அரசியலில் ஆர்வம் உடையவர்கள் தொடங்கும் முயற்சிகள் பாதியோடு நின்றுவிடுவது உண்டு. ஆனால், விடியல் சிவா வெற்றிகரமான பதிப்பாளராக விளங்கினார்.

தமிழக முற்போக்கு அறிவுலகத்தில் விடியலை விதைத்த சிவா, இப்போது இருட்டில் கரைந்து​விட்டார். ஆனாலும் அணையாது ஒளிரும் நெருப்புத் துண்டங்களாய், அடுத்தடுத்த தலைமுறைகளைப் பற்றுவதற்காய்க் காத்திருக்கின்றன அவர் வெளி​யிட்ட புத்தகங்கள்!

- ரீ.சிவக்குமார்