##~## |
பிழைப்புத் தேடி வந்தவர்கள் பிணமானதைக் கண்டு காஞ்சிபுரம் சுற்றுவட்டாரமே சோகத்தில் உறைந்து போய் இருக்கிறது!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் இருக்கிறது, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி. ஐந்து பாடப்பிரிவுகளோடு கடந்த ஆண்டுதான் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. மொத்தம் 360 பேர் இங்கு படிக்கின்றனர். கட்டடப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், பாடம் நடக்கும் கட்டடங்களில், பணியும் நடக்கிறது. ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இங்கே கட்டட வேலை செய்து வந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்டட வேலைகளோடு உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணியும் நடந்தது. கடந்த 6-ம் தேதி, அரங்கு அமைப்புக்காக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் இருந்தனர். 250 அடி நீளம், 150 அடி அகலம் கொண்ட அரங்குக்கு தூண் களுடன் கூடிய சுவர் எழுப்பப்பட்டு வந்தது. ஹாலோ பிளாக் கொண்டு 30 அடி உயரம் எழுப்பப்பட்ட சுவரின் அருகே தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். திடீரென, மாலை 3 மணிக்கு கட்டட வேலை செய்பவர்கள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் கட்டடத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் தவித்தனர். உடனே, சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்துக்கும், ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் இறங்கியபோது, அவர்களுடன் கிராம மக்களும் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். தொழிலாளர்களுக்குத் தமிழ் தெரியாததால் அவர்களின் கதறலைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர் கிராம மக்கள்.

முதலில் மீட்கப்பட்ட ஆறு பேர் பலத்த காயங் களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சாகர் என்பவரின் உயிர் பிரிந்தது. அடுத்து சத்ருகன் மற்றும் ரங்காய் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். கட்டட இடிபாடுகளில் இருந்து ஆறு சடலங்கள் மீட்கப்பட்டன. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளிகளுக்கு முதல்உதவி மட்டும் அளிக்கப்பட்டு, பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பைகான் என்பவர் 7-ம் தேதி காலை சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.
விபத்து நடந்த இடத்தில் பணியில் இருந்தவர் களைச் சந்தித்தோம். ''கான்கிரீட் தூண்கள் தரமாக அமைக்கப்படாத காரணத்தால் பிடிப்பு இல்லாமல் இருந்தது. கான்கிரீட் சுவர் திடீரென ஆடியதைப் பார்த்து பலரும் தப்பி ஓடினோம். தப்ப முடியாதவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். கட்டடப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தலைக்கவசம் அவசியம். தலைக் கவசம் அணிந்து இருந்தால் கண்டிப்பாக சிலர் உயிர் தப்பி இருக்கலாம்'' என்று வேதனையுடன் சொன்னார்கள்.
கல்லூரி வளாகத்தில் கொட்டகை அமைத்துத் தங்கி இருந்த தொழிலாளர்களிடம் பேசிய போது, ''ஆறு மாதங்களாக சுமார் 500 பேர் இங்கே வேலை செய்கிறோம். காலையில் 8 மணிக்கு வேலைக்குப் போவோம். மாலை 6 மணி வரை வேலை செய்வோம். ஒரு நாளைக்கு 240 ரூபாய் கூலி. பெரும்பாலான கட்டடங்களில் போதுமான தரம் இல்லை. கட்டட வேலை செய்பவர்களுக்கு பாதுகாப்புக் கவசம் எதுவும் ஒப்பந்தக்காரர்கள் கொடுப்பதும் இல்லை'' என்றார்கள்.
''கல்லூரியில் இருக்கும் பல தூண்களில் வெடிப்புகள் காணப்படுகின்றன. அதனால் இங்கே படிக்கவே பயமாக இருக்கிறது. கட்டும் போதே சரிந்து விழுகிறது என்றால் எங்கள் மீது விழாது என்பது என்ன நிச்சயம்?'' என்று அச்சப்படுகிறார்கள் மாணவர்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஹனிஷ் சாப்ரா, ''கல்லூரியில் நடந்த விபத்து தொடர்பாக, ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். கட்டடம் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா... விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து விளக்கம் அளிக்க கல்லூரி நிர்வாகத்துக்கும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறேன். விசாரணைக் குழு தரும் அறிக்கையைப் பொறுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இறந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா இரண்டு லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் தருவதாக கல்லூரி தரப்பில் அறிவித்து இருக்கிறார்கள். நானும் அரசின் நிதிக்காகப் பரிந்துரை செய்துள்ளேன்'' என்றார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. கஜேந்திரகுமார், ''இடிந்து விழுந்த கட்டுமானப் பொருட் களைத் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம். விபத்து நடக்கும் என்றே தெரிந்தும் அந்தச் செயலைச் செய்து மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிவில் இன்ஜினீயர்கள் ராஜ்குமார், அருள் ஜெயாரோஸ் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கான்ட்ராக்டர் சுதானந்தம் ஆகியோரைக் கைது செய்துள்ளோம்'' என்றார்.
தரம் குறைவான கட்டுமானமும் ஒரு கொலைகாரச் செயல்தான்!
- பா.ஜெயவேல்
படங்கள்: ச.வெங்கடேசன், வீ.ஆனந்த ஜோதி