Published:Updated:

இலங்கை பிரச்னை:மேனனிடம் முதல்வர் வலியுறுத்தல்

விகடன் விமர்சனக்குழு

சென்னை, ஜூன்.10,2011

இலங்கையில் இன்னமும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று இலங்கை செல்லும் முன் தன்னை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் வலியுறுத்தினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை இன்று இலங்கை அதிபரை சந்திக்கவிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நேற்று மாலை 5 மணிக்கு சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, முதல்வர் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த தனது கவலையை தெரிவித்து, இரு நாடுகளுக்கிடையேயான உறுதிமொழிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதையும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன்பிடிக்க தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும், கச்சத்தீவில் ஏற்கனவே தமிழக மீனவர்களுக்கு இருந்த உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் எடுத்துரைத்தார்.

மேலும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தமிழர்கள் எவ்வளவு பேர் இடம்பெயர்ந்தனர் என்பது குறித்தும், எவ்வளவு பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் என்பது குறித்தும், எவ்வளவு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது என்பது குறித்தும், இன்னமும் எவ்வளவு பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் வெவ்வேறான தகவல்கள் பல்வேறு தரப்பிலிருந்து வருவதை சுட்டிக்காட்டிய முதல்வர் இதுகுறித்து சரியான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் வலியுறுத்தினார்.

இதுமட்டுமல்லாமல், இன்னமும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்றும், போருக்கு முன் அவர்கள் வசித்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், சிங்களர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிமைகளும், சலுகைகளும் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் வலியுறுத்தினார்.

இது தவிர, அண்மையில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, காற்றின் வேகத்தால் இலங்கையில் உள்ள நெடுந்தீவு அருகிலுள்ள பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு நைனாத் தீவில் ஒதுங்கிய தமிழக மீனவர்கள் தற்போது காங்கேசன் துறை நீதிமன்றத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர்களை உடனடியாக விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

முதல்வர் தெரிவித்த விவரங்களை கவனத்துடன் கேட்டுக் கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இவை அனைத்தையும் இலங்கை அதிபரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இலங்கையிலிருந்து டெல்லி செல்லும் வழியில் மீண்டும் தமிழ்நாடு முதல்வர் சந்தித்து பேச்சுவார்த்தையின் விவரத்தை எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உடனிருந்தார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.