ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

திருடப்பட்ட கோப்புகள்... கிழிக்கப்பட்ட எஃப்.ஐ.ஆர்...

கிடுகிடுக்கவைக்கும் கிரானைட் விசாரணை

##~##

பி.ஆர்.பி. போலீஸில் சிக்கிய பிறகு கிரானைட் குவாரி விசாரணைகள் பல்வேறு கோணங்களில் சூடுபிடிக்கிறது. இதுவரை கண்ணில் சிக்கிய கிரானைட் புதையல்களைத் தோராயமாக மதிப்பிட்டாலே, மூன்று லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள்! 

துறைமுகத்தில் துருவல்

பி.ஆர்.பழனிச்சாமியின் சொத்துக்கள் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் கடந்த 22-ம் தேதி தனிப் படைகளை அனுப்பி, விவரங்களைத் திரட்டச் சொல்லி இருக்கிறார், எஸ்.பி. பாலகிருஷ்ணன். கிரானைட் ஏற்றுமதியை நிறுத்தி வைக்கச் சொல்லியும் தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது போலீஸ். ஹெராயின் கடத்தல் பற்றி துப்புக் கொடுத்த நபருடன் 22-ம் தேதி தூத்துக்குடி சென்ற போலீஸார், அங்கிருந்த இரண்டு ஸ்டாக் யார்டுகளைத் தோண்டித் துருவி விட்டுத் திரும்பி இருக்கிறார்கள். இதனிடையே, பி.ஆர்.பி. நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தியுள்ளதா என்பதை சோதனை நடத்தி சரிபார்க்கும்படி, போலீஸ் தரப்பில் இருந்து வருமானவரித் துறைக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

திருடப்பட்ட கோப்புகள்... கிழிக்கப்பட்ட எஃப்.ஐ.ஆர்...

திருடப்பட்ட 100 கோப்புகள்!

    பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட 22 இடங்களில் நடந்த ரெய்டுகளின்போது, தாலுக்கா அலுவலகத்தில் இருக்க வேண்டிய வருவாய்த் துறை ஆவணங்களும் நகல்களும் சிக்கினவாம். இவை எப்படி கிரானைட் புள்ளிகளின் கைக்குப் போனது என்று ஆராய்ந்தபோதுதான், மேலூர் தாலுக்கா அலுவலகத்தில் இருந்த பட்டா மாறுதல் சம்பந்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் மாயமானது தெரிந்திருக்கிறது. நடவடிக்​கை வரலாம் என்று தெரிந்ததுமே கிரானைட் கம்பெனியைச் சேர்ந்த அதிரடியான ஆள் ஒருவர் மேலூர் தாலுக்கா அலுவலகம் வந்து, குவாரி நிலங்களுக்கான பட்டா மாறுதல் சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்தாராம். சில வில்லங்கமான கோப்புகளின் அசலையும் தூக்கிச் சென்று விட்​டாராம்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பராமரிக்கப்​பட்டுவந்த ரெவின்யூ ரெக்கார்டுகளே இப்போது மேலூர் தாலுக்கா அலுவலகத்தில் இல்லையாம். இதற்கு உடந்தையாக இருந்த தாலுக்கா அலுவலக ஊழியர்கள் மூவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்த கலெக்டர், 'அலுவலகத்தில் புகுந்து ரெக்கார்ட்ஸைத் திருடியிருக்காங்க. நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’ என்று தாசில்தார் வசந்தா ஜூலியட்டையும் ஒரு பிடிபிடித்தாராம். 'எனக்கு எதுவும் தெரியாது சார். நான் இப்பத்தான் டிரான்ஸ்

ஃ​பரில் வந்தேன்’ என்று பதறினாராம் தாசில்தார். 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. திருடுபோன ரெக்கார்ட்ஸ் வந்தாகணும்’ என்று கலெக்டர் கண்டிப்பு காட்டியிருப்பதால், இரண்டு நாட்களாக ரெக்கார்டு ரூமிலேயே உட்கார்ந்திருக்​கிறாராம் தாசில்தார்.

திருடப்பட்ட கோப்புகள்... கிழிக்கப்பட்ட எஃப்.ஐ.ஆர்...

ஒன்பது பேர் சஸ்பென்ட்!

மேலூர் தாலுக்கா அலுவலக கிளர்க்​குகள் இருவரும் தத்தம் மகள்​களுக்கு சமீபத்தில் நடத்தி முடித்த ஆடம்பரத் திருமணங்​கள் குறித்தும், பியூன் முத்துக்கிருஷ்ணன் மேலூர் வெங்கடேஸ்வரா நகரில் 30 லட்சத்தில் கட்டி இருக்கும் வீடு குறித்தும் கலெக்​டருக்குத் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்திய கலெக்டர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் ருக்மணி, துணை தாசில்தார் மோகன், வி.ஏ.ஓ-க்கள் சுப்புராஜ், செல்வராஜ், பொன்னையா, சேட்பாபு உள்ளிட்ட ஒன்பது பேரை 21-ம் தேதி அதிரடியாய் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். இவர்களைத் தவிர, பணியில் இருந்து ஓய்வு பெற்ற தாசில்தார்கள் உள்ளிட்ட மேலும் ஏழு பேரின் பென்ஷனை முடக்கி மேல் நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு எழுதி இருக்கிறார். மதுரையில் தொடங்கி சென்னை வரை கிரானைட் புள்ளிகளுக்கு ஆதரவாக சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பட்டியலை எடுத்து விட்டதால், விரைவில் முன்னாள் இந்நாள் அதிகாரிகளின் வீடுகளில் விஜிலென்ஸ் அதிகாரிகளின் காலடிச் சத்தம் கேட்கும் என்கிறார்கள்.

   கிழிக்கப்பட்ட எஃப்.ஐ.ஆர்.

கடந்த காலங்களில் பி.ஆர்.பி-க்கு ஆதரவாகச் செயல்பட்டு அநீதிக்குத் துணைபோன போலீஸ் அதிகாரிகள் குறித்தும் கணக்கு எடுக்கிறார்கள். கிரானைட் மோசடி குறித்துக் கட்டுரைகள் எழுதிய 'தினபூமி’ ஆசிரியர் மணிமாறன் மீது பொய் வழக்குப் போட உத்தரவிட்ட அதிகாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளின் ஜாதகத்தைத் தோண்டுகிறார்கள். அழகிரிக்கு எல்லாமுமாக இருந்ததாகச் சொல்லிக்கொண்ட முக்கியப் புள்ளியின் பெயர்கள் இதில் முக்கியமாக வருகின்றன. மேலூர் டி.எஸ்.பி-யாக விஜயபாஸ்கர் இருந்தபோது பி.ஆர்.பி-க்கு எதிராக ஏகப்பட்ட பெட்டி​ஷன்கள் குவிந்தனவாம். எதுவுமே விசாரணைக்கு வராமல் பார்த்துக்கொண்டாராம் விஜயபாஸ்கர். கனிம வளத் துறை மற்றும் டாமின் அதிகாரிகளின் கையெழுத்துக்களைப் போலியாகப் போட்டும் போலி முத்திரைகளைப் பயன்படுத்தியும் போலி பெர்மிட்களைத் தயாரித்தும் லட்சக்கணக்கான கிரானைட் கற்களை திருட்டுத்தனமாகக் கடத்து​கிறார்கள் என்று முருகேசன் என்பவர் அப்போதைய கலெக்டரிடம் புகார் கொடுத்தாராம். அது, மேலூர் இன்ஸ்பெக்டராக இருந்த ராமகிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புகார் தொடர்பாக, எஃப்.ஐ.ஆர். போட்ட ராம​கிருஷ்ணன், மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. முருகேசன் விசாரித்தபோது, அந்த எஃப்ஐ.ஆரையே கிழித்து விட்டார்கள் என்ற விஷயம் தெரிந்திருக்கிறது. அதனால், ராமகிருஷ்ணன் மீது அழுத்தப் பார்வை விழுந்து இருக்கிறது. எந்த நேரமும் நடவடிக்கை பாயலாம்.

பட்டியல் ரெடி!

கிரானைட் புள்ளிகளின் பினாமிகளான திடீர்ப் பணக்காரர்களின் பட்டியல் இப்போது கலெக்டர் அன்சுல் மிஸ்ராவின் கையில் இருக்கிறது. மேலூர் வெங்கடேஸ்வரா நகரில் மூன்று கோடிக்கு வீடு கட்டி இருக்கும் பி.ஆர்.பி-யின் மருமகன் முருகேசன் வீட்டு எடுபிடி ராஜாராம், ஜி.எஸ். என்ற ஜி.சுப்பிரமணி, ஐயப்பன், அனுமந்தன், ஜோதிபாசு, ரவி, குமார் செட்டியார், தெற்கு தெரு ராஜசேகரன், முத்துக்குமார், டீக்கடை ராமசாமி, கீழவளவு சண்முகம் பிள்ளை, கனகு என்ற சொக்கலிங்கம், நயினார், பிரசாந்த், மேலவளவு கட்டைச்சாமி, பிரசாந்த் தேவன், லோகநாதன், ஜெயக்குமார், சுப்புராம், தமிழரசன், சூரக்குண்டு எம்.கே.பாலகிருஷ்ணன், அய்யாவு, ஆர்.பி.ஆர்.​ராஜேந்திரன், இளஞ்செழியன், பிரபு, பத்தூர் ஆலம்பட்டி பாலு, பதினெட்டாங்குடி சோலை, மச்சராஜா, எட்டிமங்கலம் மச்சராஜா, கருவாட்டு பாய், பன்னீர், ராஜாபாய், உதுமான் உள்ளிட்ட 53 பேரின் ஜாதகங்கள் இப்போது கலெக்டர் வசம். 'இவர்களைப் பற்றி விசாரித்து வருகிறோம்’ என்கிறது போலீஸ். இதேபோல், கிரானைட் நிலங்களை முஷ்டி தூக்கி வளைக்க உதவிய, ஜி.ஜி.கிரானைட்ஸ் அதிபர் கோபாலகிருஷ்ணன், தாமரைப்பட்டி யோகேஸ்வரன், கே.கே.நகர் ஞானராஜ், நடராஜன், பொதுப்பணித் துறையில் இருந்து விருப்ப ஓய்வில் சென்று விட்ட இன்ஜினீயர் முத்துவேல், மதுரையின் பிரபல டெய்லர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட பட்டியலை ரெடியாக வைத்திருக்கிறார் எஸ்.பி!

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்கள் எங்கே?

கிரானைட் கம்பெனிகளுக்குள் நடந்திருக்கும் சில மர்ம மரணங்கள் குறித்து விசாரிப்பதற்கு டி.எஸ்.பி. அசோக்குமார் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்தார் எஸ்.பி. அப்படி சந்தேகத்துக்கிடமான ஆறு வழக்குகளைக் கையில் எடுத்திருக்கும் அசோக்​குமார், முதல்கட்ட விசாரணையை 22-ம் தேதி தொடங்​கினார். ஆரம்பமே அதிர்ச்சிதான். அந்த வழக்குகள் தொடர்பாகப் போடப்பட்ட எஃப்.ஐ.ஆர். நகல்​களில் இணைக்கப்பட்டிருந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்​போர்ட்கள் அனைத்தும் மிஸ்ஸிங். மேலூர் ஜி.ஹெச்-சில் போஸ்ட்மார்ட்டம் நகல்கள் கேட்டு, அடுத்த கட்ட விசாரணைக்கு போயிருக்கிறார் அசோக்​குமார்.

எதற்காக சி.பி.ஐ. விசாரணை?

கிரானைட் ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மூன்று பொதுநல வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இந்த மனுக்கள் கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது குவாரிகள் விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டரும் எஸ்.பி-யும் தனித்தனியாக அறிக்கைகளைத் தாக்கல் செய்தனர். 'இதுவரை 167 குவாரிகளில் நடத் தப்பட்ட ஆய்வுகளில் 89 குவாரிகளில் ஏகப்பட்ட விதிமீறல்கள் நடந்திருக்கின்றன. பி.ஆர்.பி. நிறுவனம் உள்ளூர்த் திட்டக் குழுமத்தின் விதி முறையை மீறியும் முறையான அனுமதி பெறாமலும் கட்டடங்களைக் கட்டி இருக்கிறது’ என்று கலெக்டரும், 'கிரானைட் விதிமீறல்கள் தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தலைமறைவாக இருக்கும் கிரா னைட் புள்ளிகள் 12 பேரின் பாஸ்போர்ட்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை’ என எஸ்.பி-யும் தங்களது அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இப்போது பி.ஆர்.பி-யை மூன்றுநாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளதால் திடுக்கிடும் திருப்பங்கள் அடுத்து நிகழலாம்.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி