Published:Updated:

இலவச கலர் டிவி திட்டம் ரத்து: ஜெ.அறிவிப்பு

சென்னை, ஜூன் 10,2011

இலவச கலர் டிவி திட்டம் ரத்து: ஜெ.அறிவிப்பு

முந்தைய அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக, சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். 

சட்டப்பேரவையில் இன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசியது:

"மக்கள் தங்களுக்கு எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்பதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த வெற்றியை பெற்று இருக்கிறோம். இதற்கு பின்னணி மக்கள் தான். இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.
 
அதிமுக இந்த தேர்தலில் திமுக வின் படைபலம், பணபலம் போன்றவற்றையெல்லாம் வென்று அதிமுக மீது நம்பிக்கை வைத்து மக்கள் இந்த ஆதரவை அளித்து இருக்கிறார்கள். இதன் மூலம் 203 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
 
அதிமுக வேட்பாளர்கள் மட்டும் 146 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த அமோக வெற்றிக்கு வழங்கிய அன்பு மக்களுக்கும், ஸ்ரீரங்கம் தொகுதியில் எனக்கு அமோக வெற்றியை வழங்கிய வாக்காளர் பெருமக்களுக்கும் இந்த மாபெரும் வெற்றியை உழைத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், எல்லா வற்றுக்கும் மேலாக இந்த மாபெரும் வெற்றிக்கு இரவு பகலாக உழைத்த உடன் பிறப்புக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  ##~~##
 
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்குவோம், விலைவாசியை கட்டுப்படுத்தவும், மின்வெட்டை போக்கவும் அயராது பாடுபடுவேன்.

கடந்த ஐந்து ஆண்டு காலமாக திமுக ஆட்சியில் மக்கள் வேதனைகளையும், சோதனைகளையும் அனுபவித்தனர். மின்வெட்டு, மணல் திருட்டு, கள்ள லாட்டரி, போலி மருந்து, நில அபகரிப்பு போன்ற கொடுமைகள் நடந்தன. ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி சிக்கித் தவித்தது. இன்று சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் இருக்கிறார்கள்.

நான் பதவி ஏற்ற அன்று 7 வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றினேன். இது தவிர வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சரகம் அமைக்கப்பட்டது.

இலவச டி.வி.திட்டம் ரத்து... ஏன்?

திமுகவினர் இலவசங்களை வழங்கி மக்களை ஏமாற்றி, அதை ஓட்டுக்கான கருவியாகத்தான் பார்த்தனர். திமுக ஆட்சியில் இலவச டி.வி. இல்லாதவர்களுக்கு டி.வி. கொடுப்பதாக அறிவித்தனர். 1.64 கோடி டி.வி. பெட்டிகள் இது வரை டி.வி.யே இல்லாத குடும்பத்துக்குத்தான் கொடுக்கப்பட்டு இருக்குமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். சொந்தமாக கார் வைத்து இருப்பவர்கள் கூட காரில் வந்து இலவச டி.வி. வாங்கிச் சென்றதை மக்கள் பார்த்தனர்.
 
எனவே, இலவச கலர் டி.வி. திட்டம், மக்கள் பயன்பட கூடிய திட்டமா? அல்லது ஆட்சியாளர்களுக்கு பயன்பட்ட திட்டமா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

இலவச டி.வி. ஒவ்வொன்றுக்கும் ரூ.2,265 செலவு செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கப்பட்டது. டி.வி. வாங்கினாலும், அதில் கேபிள் இணைப்பு பெற்ற வகையில் பயன் அடைந்தவர்கள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், துரை தயாநிதிதான். ##~~##
 
ஆண்டு ஒன்றுக்கு கேபிள் டி.வி.க்காக ரூ.4 ஆயிரம் கோடி பணத்தை மக்கள் கொடுத்து வருகிறார்கள். இந்த அளவுக்கு வருமானம் வகையில் கருணாநிதி தன் குடும்பத்துக்கு வழி செய்து கொடுத்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாயை கருணாநிதி குடும்பம் கேபிள் டி.வி. மூலம் பெற்றுள்ளது. எனவே, இலவச டி.வி. வழங்கும் திட்டம், அவரது சொந்த நலனுக்காக கொண்டு வந்த திட்டம் என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும்.
 
ஆறாம் கட்டமாக இலவச கலர் டி.வி. வழங்க 10 லட்சம் டி.வி. பெட்டிகள் கொள்முதல் செய்ய முடிவு செய்திருந்தனர். இதில் கொள்முதல் செய்யப்படாத சுமார் 7 லட்சத்து 48 ஆயிரம் டி.வி. பெட்டிகளின் கொள்முதல் உத்தரவு ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்களுக்கு வழங்கப்படாமல் 1 லட்சத்து 27 ஆயிரம் டி.வி. பெட்டிகள் உள்ளது.
 
இந்த டி.வி. பெட்டிகள் ஆதரவற்ற இல்லங்கள், அரசு பள்ளிகள், பஞ்சாயத்துகள், சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி போன்றவற்றுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
கடந்த ஆட்சியில் இதுபோன்ற ஊழல் மலிந்த திட்டங்கள்தான் நடை முறைப்படுத்தப்பட்டன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதால் இந்த உதாரணத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

சட்டம் - ஒழுங்கு...

இங்கு பேசிய உறுப்பினர்கள் சட்டம் - ஒழுங்கு பற்றி குறிப்பிட்டனர். கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு, அமளிக்காடானது. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழ்நாடு போலீசார் தன் மானம் இழந்து, மனோதிடம் இழந்து பரிதாபமான நிலைக்கு ஆளானார்கள்.
 
நான் ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலையை மாற்ற உடனடி நடவடிக்கை எடுத்தேன். காவல் துறையில் பணியில் எந்த குறுக்கீடும் இருக்க கூடாது அப்போது தான் சமூக விரோதிகளை ஒடுக்கும் முயற்சியில் காவலர்கள் சிறப்பாக பணிபுரிய முடியும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் காவலர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.  
 
கடந்த ஆட்சியில் பெரும்பலான காவலர்கள் அதிகாரப்பூர்வ மற்ற முறையில் வேறுபணிகளுக்கு பயன்படுத்தப்பட்டார்கள். கருணாநிதி குடும்பத்துக்கு காவல் காப்பதற்காக காலை முதல் மாலை வரை பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

கருணாநிதியின் மனைவி, மகள், மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என்று மொத்தம் 133 பேர் இருக்கிறார்கள் அனைவரது குடும்பத்துக்கும் அதிகாரப் பூர்வ மற்ற முறையில் காவலர்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த குடும்பத்தின் சிபாரிசுப்படி தான் நியமிக்கப்பட்டார்கள் இதனால் அவர்கள் அந்த குடும்பத்துக்கு பயப்படும் நிலை ஏற்பட்டது.
 
மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிலும், அவருக்கு வேண்டியவர்கள் மற்றும் அவருடன் சுற்றித் திரிபவர்களுக்காக போலீசார் காவல் பணியில் நியமிக்கப்பட்டார்கள். முக்கிய பிரமுகர்களுக்காக 5 இடங்களில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க சட்டம்...
 
இது தவிர நில ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து, ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தல், சமூக விரோத செயல் நிலத்தை ஒருவர் விற்றால் செல்வாக்குள்ள ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்பதை தவிர வேறு யாரும் வாங்கமுடியாத நிலை ஏற்பட்டது. தற்போது இவை அனைத்தையும் தடுத்து பாகுபாடியின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறேன். இதை கண்கூடாக நீங்களும் பார்த்து இருப்பீர்கள்.  

பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க விரைவில் சட்டம் கொண்டு வரப்படும். மணல் கடத்தலை தடுக்க தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த 2 வாரத்தில் மட்டும் மணல் கடத்திய 897 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 810 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
 
மணல் கடத்திய 11 லாரிகள், 77 டிராக்டர்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணல் அள்ளும் எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் குற்றம் செய்வோரை கண்டுபிடித்து குற்றவாளிகளை தண்டித்து தமிழ்நாட்டில் காவல் துறை இழந்த பெருமையை மீண்டும் பெறுவோம். மீண்டும் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறும்.

மின்வெட்டு நேரம் குறைக்கப்படும்...
 
கடந்த ஐந்து ஆண்டுகளாக மின் பற்றாக்குறை இருந்து வருகிறது. சென்னையில் ஒரு மணி நேரமும், மற்ற இடங்களில் 3 மணி நேரமும் மின்வெட்டு என்றாலும் அதை விட பல மணி நேரங்கள் மின் வெட்டு இருந்தன. தொழிற்சாலைகளுக்கு பகலில் 20 சதவீதமும், மாலையில் மற்றும் இரவில் 90 சதவீதமும் மின்வெட்டு இருந்தது. மின் வெட்டுக்கு காரணம் அதிமுகஆட்சி தான் என்றும், மின் உற்பத்தியை பெருக்க திட்டமிடவில்லை என்றும் திமுக ஆட்சியில் தவறாக கூறி வந்தனர்.
 
அதிமுக ஆட்சியில் இருந்த போது வடசென்னையில் 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டத்துக்கும் தூத்துக்குடியில் 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதுபோல் வடுவூரில் 300 மெகாவாட் திட்டத்துக்கு 2004-லும், வடசென்னையில் மேலும் 500 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்துக்கு 2005-லும் திட்டமிடப்பட்டது.
 
குண்டல் நீரேற்று மின் நிலைய திட்டத்துக்கு 2005-ல் திட்ட மிடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்தி இருந்தால் மின்சார தட்டுப்பாடு வந்து இருக்காது. மத்திய அரசு 4000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மிகப் பெரிய 2 திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்தது.

திமுக அரசு அதிலும் கால தாமதம் செய்ததால் ஒரு திட்டத்துக்கு மட்டுமே ஒப்புதல் பெற முடிந்தது. அதுவும் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு பிறகே ஒப்புதல் பெற்றனர்.
 
அதிமுக ஆட்சியில் இருந்த போது தூத்துக்குடி, மேட்டூர், எண்ணூர் போன்ற திட்டங்களால் 2500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்தது. ஆனால் திமுக ஆட்சியில் 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து அதிகவிலை கொடுத்து மின்சாரம் வாங்கினார்கள். திமுக அரசு மின்சார நிலையங்களை முறையாக பராமரிக்கவில்லை. ஆனால் அதிமுக  ஆட்சிக்கு வந்தவுடன் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
அடுத்த மாதத்தில் இருந்து 3 மணி நேர மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும். படிப்படியாக மின் வெட்டே இல்லாத மாநில மாக தமிழகம் மாறும். எனது அரசு 10 ஆயிரம் மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டங்களை நிறைவேற்றும்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.