Published:Updated:

சமச்சீர் கல்வியை அமல்படுத்துக: தங்கபாலு, ராம்தாஸ்

விகடன் விமர்சனக்குழு

சென்னை, ஜூன்.11,2011

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், பாமக நிறுவனர் ராமதாஸும் கோரிக்கை விடுத்துள்ளனர். ##~~##

இதுகுறித்து தங்கபாலு வெளியிட்ட அறிக்கையில், "முந்தைய தி.மு.க. அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் ஏதும் அவசர கோலத்தில் அமல்படுத்தியது அல்ல.

பல்வேறு மிகச் சிறந்த கல்வியாளர்கள், வல்லுநர்கள், கல்வி நிறுவனங்களின் நுன்னறிவாளர்கள், முன்னோடியான சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்று பலசுற்று கருத்தாய்வுகள் நடத்தி அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒவ்வொரு பாடத்திலும் மேலான நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களால் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, அனைத்தும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்களும் வரவேற்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்ததுதான் சமச்சீர் கல்வித் திட்டம்.

சமச்சீர் கல்வியை அமல்படுத்துக: தங்கபாலு, ராம்தாஸ்

மேலும் இந்நடைமுறைக்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளும் சாதகமாக அமைந்துள்ளதற்கு பிறகும் புதிய ஆட்சி அமைந்து ஒருசில நாட்களில் திட்டம் ரத்து என்பது ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. அதைத்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் பதிவு செய்துள்ளது.

எனவே தமிழகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் கல்வி அறிவும், உயர்வும் சமமாக கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்டம் தொடர உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக இன்றைய தமிழக அரசு மேல்முறையீடு என்ற நடவடிக்கைகளை எடுக்காமல் திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்," என்று தங்கபாலு கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமதாஸ் வலியுறுத்தல்..

சமச்சீர் கல்வியை அமல்படுத்துக: தங்கபாலு, ராம்தாஸ்

சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைகள் இருந்தாலும் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே அதில் உள்ள குறைகளை படிப்படியாகக் களைய வேண்டும் என்றுதான் பாமக வலியுறுத்தி வந்தது.

சென்னை உயர்நீதிமன்றமும் அதன் இடைக்காலத் தீர்ப்பில் இதையே தெரிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை கெளரவம் பார்க்காமல் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்," என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.