ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

குழி தோண்டியது மத்திய அரசு... மண்ணை மூடியது மாநில அரசு!

கடலுக்குள்.. மண்ணுக்குள்... அணு அணுவாய் போராட்டம்!

##~##

டலுக்குள் இறங்கிப் போராடிய மக்கள், இப்போது கடலோர மணலில் குழி தோண்டி கழுத்து வரை தங்களைப் புதைத்துக்கொண்டு புதுமையாகப் போராடி, சர்வதேசக் கவனத்தை ஈர்க்​கிறார்கள். ஆனால், அணு உலை நிர்வாகத்தினரோ, யுரேனி​யத்தை நிரப்புவதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்!   

அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அணு உலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். அத்துடன், போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப.உதயகுமாரன், புஷ்பராயன், முகிலன், மைபா.யேசுராஜ் உள்ளிட்டவர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போடப்பட்டு இருக்கின்றன. போராட்டத்தை ஒடுக்குவதற்கு முடிவெடுத்த போலீஸார், போராட்டக் குழுவினரைக் கைது செய்யும் முனைப்பில் இருந்தனர். உதயகுமாரன் தரப்பினர் கைதாவதற்குத் தயாரான சூழலில், உள்ளூர் இளைஞர்கள் அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு படகில் சென்றுவிட்டனர்.

குழி தோண்டியது மத்திய அரசு... மண்ணை மூடியது மாநில அரசு!

மைபா.யேசுராஜ் மட்டும் மக்களுடன் இருந்து போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். போலீஸ் நடத்திய தாக்குதல் காரணமாக, இடிந்தகரையில் மட்டும் நடந்துவந்த போராட்டம் இப்போது பல்வேறு

குழி தோண்டியது மத்திய அரசு... மண்ணை மூடியது மாநில அரசு!

கிராமங்களுக்கும் பரவிவிட்டது. போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருப்பதால், 500-க்கும் அதிகமான விசைப் படகுகள் கடலோரத்தில் நிறுத்தி​வைக்கப்பட்டு இருக்கின்றன.

இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகப் போராட்​டத்தில் குதித்து இருக்கும் கூட்டப்புளி கிராமத்து மக்கள், வித்தியாசமான முறையில் மணலில் குழியைத் தோண்டி அதில் கழுத்து வரை புதைத்துக்கொண்டு போராடுகிறார்கள். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள். கழுத்து வரை புதைந்து இருக்கும் இடத்தில், 'குழி தோண்டியது மத்திய அரசு, மண்ணை மூடியது மாநில அரசு’ என்று எழுதப்பட்ட அட்டைகள் ஆயிரம் கதைகளைச் சொல்லாமல் சொல்கின்றன.

அதே சமயம், போராட்டக் குழுவினரைக் கைது செய்யும் முனைப்பில் இருக்கும் போலீஸார், வள்ளியூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மூலம் சுப.உதயகுமாரன் மற்றும் அவரது மனைவிக்குச் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இது தவிர அணு உலை ஆதரவாளர்கள் சார்பில் உதயகுமாரனைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றையும் தொடர்ந்து இருக்கிறார்கள். இப்படி இரு தரப்பும் சட்ட ரீதியாகவும் போராட்ட ரீதியாகவும் காய்களை நகர்த்திக்கொண்டு இருப்பதால் பரபரப்பு குறையாமல் இருக்கிறது கூடங்குளம்.

இப்போது தலைமறைவாக இருந்து வரும் போராட்டக் குழுவினர், தொடர்ந்து இந்தப் போ​ராட்டத்தை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இடிந்தகரை கிராமத்தில் கடலுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தியபோது அவர்களை மிரட்டுவதற்காக தாழ்வாகப் பறந்த கடற்படை விமானத்தால் நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்த சகாயம் எனபவர் மறைவை அறிந்ததும் சுப.உதய​குமாரன் செல்போன் மூலமாகப் போராட்டப் பந்தலில் இருந்தவர்களிடம் பேசியபோது, 'சகாயம் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பு’ என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், தலைமறைவாக இருக்கும் உதயகுமாரனிடம்  பேசினோம்.  

''எங்கள் போராட்டம் அகிம்சை முறையில் சரியான திசையில் போய்க்கொண்டு இருக்கிறது. இதில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, எங்களைக் கைது செய்துவிட்டால் போராட்டம் பிசுபிசுத்துவிடும் என போலீஸார் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களின் நினைப்பு தவறானது. இது தனிநபர் போராட்டம் அல்ல. பொதுவாக தமிழக அரசியலில் தனிநபர் துதி மட்டுமே மேலோங்கி இருக்கும். அதே போல எங்களை நினைக்கக் கூடாது. இது மக்களுக்கான பிரச்னை. அதில் அவர்களே போராடுகிறார்கள். இங்கு பிரச்னைதான் முக்கியமே தவிர எந்தத் தனி நபரும் கிடையாது. எங்களால் பொது மக்களுக்கு இடையூறு வரக் கூடாது என்பதால் கைதாகும் முடிவை எடுத்தோம். அதற்கு அனுமதிக்க முடியாது என்று இளைஞர்கள் எங்களைத் தூக்கி வந்துவிட்டார்கள்.

அந்த இளைஞர்களிடமும் ஊர்ப் பெரியவர்​களிடமும் தொடர்ந்து எங்கள் முடிவைப் பற்றிப் பேசியும் அவர்கள் விடாப்பிடியாக எங்​களிடம், 'கைதாக வேண்டாம்’ என வலியுறுத்​தினார்கள். அரவிந்த கெஜ்ரிவாலும் இதே கருத்தையே வலியுறுத்தினார். தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் தலைவர்களும் என்னைத் தொடர்புகொண்டு இதே கருத்தை வலியுறுத்திய காரணத்தால் நாங்கள் முடிவை மாற்றிக்கொண்டோம்.

குழி தோண்டியது மத்திய அரசு... மண்ணை மூடியது மாநில அரசு!

இப்போது தினமும் எங்களை ஏதாவது ஒரு கிராமத்தில் பத்திரமாகப் பாதுகாக்கிறார்கள். நானோ என்னுடன் இருப்பவர்களோ எம்.எல்.ஏ., எம்.பி. போன்ற எந்தப் பொறுப்பையும் எதிர்பார்த்து இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை, எனது ஊர் எது என்பதைக்கூட தெரியாமலே இந்த மக்கள் என்னையும் அவர்களுடைய போராட்டத்தில் சேர்த்துக்கொண்டார்கள். இப்போது என் மீது அபரிமிதமான அன்பு வைத்து இருப்பதைப் பார்க்கும்போது, இந்தப் பிறவியில் இது போதும்.. இந்த நிமிடத்தில் நான் சாகத் தயார்'' என்று உணர்ச்சிவசப்பட்டவர் தொடர்ந்து,

''முதல்வரை நாங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தித்தபோது 45 நிமிடங்கள் எங்களிடம் ஆங்கிலத்தில் பேசினார். இதற்கு முன்பும், அணு சக்தி குறித்த எங்கள் கருத்துக்களை ஆர்வமாகக் கேட்டார். 2007-ல் யு.எஸ்.எஸ். லிமிட்ஸ் என்கிற கப்பல் சென்னைக்கு வந்தபோது அணுக் கதிர்வீச்சு ஏற்படும் என்று அதனை எதிர்த்தார். இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தார். மார்ச் 19-ம் தேதி அவருடைய கருத்தை மாற்றிக்கொள்ளும் வரைக்கும் மாற்று எரிசக்தி பற்றிப் பேசினாரே தவிர அணு சக்தி பற்றி வாய் திறக்கவே இல்லை. இப்போது ஏதோ அரசியல் நெருக்கடியால் அவர் போராட்டத்துக்கு எதிராக மாறி இருக்கிறார்.

எங்களை மத்திய, மாநில அரசுகள் ஏதோ தீவிரவாதிகளைப் போலவே சித்திரிக்க முயற்சி செய்கின்றன. போராட்டத்தில் பங்கேற்கும் மக்களை எல்லாம் தீவிரவாதிகள் போல ஒப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது மக்களிடம் தேவை இல்லாத பாதிப்புகளை உருவாக்கிவிடும். இப்படியே தொடர்ந்து சித்திரித்தால் இந்த மக்கள், மாவோயிஸ்ட்களாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது.

கடந்த ஜூலை 15-ம் தேதி வரைக்கும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,45,000 பேர் மீது 271 வழக்குகள் போடப்பட்டு இருக்கின்றன. இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாகி இருக்கும். இப்படி வழக்குகளால் பாதிக்கப்பட்ட மக்கள், போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அணு உலைக்கு வெளியே எதிரிகளாகத்தான் இருப்பார்கள். மக்களை எதிரிகளாக்கி அணு உலையைத் திறப்பது நல்லதா?

குழி தோண்டியது மத்திய அரசு... மண்ணை மூடியது மாநில அரசு!

அதனால் போலீஸார் மக்களுக்கு எதிரிகள்போல நடந்துகொள்ளக் கூடாது. இந்த மக்கள் அணு உலையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காகவே போராடுகிறார்கள். தங்கள் உயிருக்கும் வாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அணு உலை வேண்டாம் என்று சொல்லும் உரிமைகூட இந்த மக்களுக்குக் கிடையாதா? அப்படியானால் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையா?  

எங்களை மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தியாகிகள் வரிசையில் சித்திரிக்க வேண்டாம். அவர்கள் எல்லாம் நாட்டு விடுதலைக்காக மிகப் பெரிய தியாகங்களை செய்தவர்கள். ஆனாலும் எங்களை ஒசாமா பின் லேடன், தாவூத் இப்ராஹிம் போல சித்திரிக்காமல் இருந்தால் போதும். இப்போதும் சொல்கிறேன்... அணு உலை விவகாரம் தொடர்பாக முதல்வர் மீண்டும் அழைத்தால்கூட, திறந்த மனதோடு நாங்கள் பேசத் தயாராகவே இருக்கிறோம்'' என்றார் நிதானமாக.

மக்களின் கொந்தளிப்பை பேசித் தீர்ப்பதுதான் அரசுக்கு நல்லது!

- ஆண்டனிராஜ், ஆ.கோமதிநாயகம்

படங்கள்: எல்.ராஜேந்திரன்,

ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார்