Published:Updated:

கற்றுக்கொடுத்தார்... சுட்டுவிட்டான்!

சீர்காழி துயரம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ளர்த்த கடா மார்பில் பாய்ந்த பரிதாபக் கதை இது!

 செப்டம்பர் 23-ம் தேதி மதியம் இரண்டு மணி. சீர்காழி, மேல மாரியம்மன் கோயில் தெருவில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆடிய பாதத்தின் வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பதறி ஓடிப்போய்ப் பார்க்க... தெருக்கதவு மற்றும் கொல்லைக் கதவு உள்பக்கமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. ஏதோ விபரீதம் என்று யூகித்த தெருவாசிகள், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல... கொல்லைப்புறத்தில் ஆடிய​ பாதத்தை மடியில் தூக்கிவைத்துக் கதறிக்கொண்டு இருந்தார் அவருடைய மனைவி முத்தமிழ். ஆடியபாதத்தின் கழுத்தருகே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, ரத்தம் வெளியேறி இருந்தது. வீட்டின் உள்ளே கையில் இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் மிரட்சியோடு நின்றான் ஆடியபாதத்தின் மகன் அருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயதுதான் அவனுக்கு!

கற்றுக்கொடுத்தார்... சுட்டுவிட்டான்!

26 ஆண்டுகள் ராணு வத்தில் பணிபுரிந்து, கேப்டன் பதவி வரை வகித்து, நான்கு வருடங்களுக்கு முன் ஓய்வுபெற்றவர் ஆடியபாதம். பிறகு, தேரழுந்தூரில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வயர்லெஸ் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். அவரின் மகன் அருண் சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறான். மகள் சோனா, திருவாரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிக்கிறார். ஆடியபாதத்தை அவருடைய ஆசை மகனே துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல என்ன காரணம்?

கற்றுக்கொடுத்தார்... சுட்டுவிட்டான்!

''நேத்து ஆயிரம் ரூபா பணத்தைக் காணோம், செல்லைக் காணோம்னு அவன்கிட்ட கேட்டுக்​கிட்டு இருந்தார். அதுக்கு அவன் சரியாப் பதில் சொல்லலை. கோபமா சத்தம் போட்டுக் கண்டிச்சுட்டு, வேலைக்குப் போயிட்டார். இன்னிக்கு மத்தியானம்தான் வந்தார். சாப்பிட்டதும் கொல்லைப் பக்கத்தில் போய் பேசிட்டு இருந்தோம். அப்பதான் இவன் கொல்லைக் கதவைச் சாத்திட்டு கையில் துப்பாக்கியோட நின்னான். 'நகரும்மா... அவரை சுடுறேன்’னு சொல்லி துப்பாக்கியை நீட்டினான். சும்மா வெறும் துப்பாக்கியை வெச்சு விளையாட்டுக் காட்டுறான்னு சிரிச்சுட்டே, 'சும்மா இருடா... என்னடா விளையாட்டு இது?’னு கேட்டேன். ஆனா அதுக்குள்ளே, டிரிக்கரை அழுத்திட்டான்'' என்று கதற ஆரம்பித்தார் முத்தமிழ்.  

ஓய்வுக்குப் பிறகு, முறைப்படி அரசு அனுமதி பெற்று துப்பாக்கி வாங்கிய ஆடியபாதம், அதற்கான உரிமத்தையும் தவறாமல் புதுப்பித்து வந்திருக்கிறார். புல்லட் நிரப்பிச் சுடும் ரகத்தைச் சேர்ந்த இரட்டைக் குழல் துப்பாக்கியை எப்படிக் கையாள்வது என்று தன்னுடைய மகனுக்கு, விளக்கமாகவே கற்றுக்கொடுத்து இருக்கிறார். அதன்படி துப்பாக்கியை லோடு செய்த அருண், தந்தையைக் குறிபார்த்து சுட்டு இருக்கிறான். குண்டு பாய்ந்ததும் அந்த இடத்திலேயே உயிரை விட்டிருக்கிறார் ஆடியபாதம். தந்தை இறந்ததைக் கண்டதும்தான், செய்த விபரீதம் அருணுக்கு உறைத்து இருக்கிறது. உடனே, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றிக்​கொண்டு தீக்குளிக்க முயற்சித்து இருக்கிறான். அதற்குள் அவனைத் தன் னுடைய கஸ்டடிக்குக் கொண்டுவந்து விட்டார் சீர்காழி டி.எஸ்.பி. பாலகுரு.

''புத்தி கெட்டுப்போய் இப்படிப் பண்ணிட்டேன் சார். இப்படி ஆகும்னு தெரியாது. செல்போன் காணாமப்போனா நான் என்ன சார் பண்ண முடியும்? என்னைப் போட்டு அடிக்கிறார். அதான் ஆத்திரத்துல இப்படிப் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சார்'' என்று ஸ்டேஷனில் கதறினானாம் அருண்.

கற்றுக்கொடுத்தார்... சுட்டுவிட்டான்!
கற்றுக்கொடுத்தார்... சுட்டுவிட்டான்!

ஆடியபாதத்தின் அண்ணன் அமிர்தலிங்கம், ''ஆடியபாதத்தின் முதல் மனைவி சீதாவுக்குப் பிறந்தவங்கதான் அருணும் சோனாவும். சீதா இறந்தவுடனே என் மனைவியோட தங்கை முத் தமிழைக் கட்டிக்கிட்டார் ஆடியபாதம். இவங்க ரெண்டு பேரையும் நல்லா வளர்த்து ஆளாக்கணும்னு வேற குழந்தைங்ககூட பெத்துக்கல. இவனை ரொம்ப நேர்மையானவனா வளர்த்து ராணுவத்தில் அதிகாரியாக ஆக்கணும்னு ரொம்பவும் கண்டிப்பா வளர்த்தார். அதேநேரம் ரொம்ப பாசமாவும் இருப்பார். அந்தப் பாசமும் கண்டிப்புமே இப்ப அவனுக்கு எமனா ஆயிடுச்சு'' என்றார்.

மாணவர்களின் இந்த விபரீதப் போக்கு பற்றி தஞ்சாவூர் மனநல மருத்துவர் தியாகராஜனைக் கேட்டோம். ''பல நாட் களாக மனதில் இருக்கும் அழுத்தம் வெளிப்படும்போது இப்படித்தான் நடக் கும். துப்பாக்கி இல்லாத சாதாரண வீடாக இருந்தால், வேறு மாதிரி வெளிப் பட்டு இருக்கும். அப்பா அரிதாகப் போற்றி வைத்திருக்கும் பேனாவையோ, முக்கியமான போட்டோவையோ, பேப் பரையோ எடுத்துக் கிழித்து ஆத்திரத்தைத் தீர்த்திருப்பான். அவனுக்குத் துப்பாக்கி கிடைத்ததால், அதை எடுத்து சுட்டு விட்டான். இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டியது மாணவர்களுக்கான வடிகால் பற்றித்தான். அவர்களை தினமும் ஒரு மணி நேரமாவது விளை யாட்டுக்களில் ஈடுபடுத்த வேண்டும். கால்பந்தில் முரட்டுத்தனமாகப் பந்தை உதைக்கும்போதும், கிரிக்கெட்டில் பலம்கொண்ட மட்டும் பந்தை பேட்டால் அடிக்கும்போதும் அவனுடைய ஆழ்மனத்தில் கோபம் இருந்தால், அது தானாகவே குறைந்துபோகும். பிள் ளைகளை எப்போதும் படி படி என்று சொல்லி விரட்டாமல் அரை மணி நேரமாவது அவர்களின் அருகில் அமர்ந்து ஆசையாகப் பேச வேண்டும்'' என்றார்.  

சீர்காழி டி.எஸ்.பி. பாலகுரு, ''உணர்ச்சிவசப்பட்டு இப்படிச் செய்துவிட்ட அருணுக்கு கவுன்சிலிங் கொடுத்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறோம்'' என்றார் வருத்தத்துடன்.  

பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருமே தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது!

- கரு.முத்து    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு