ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கறுப்புக் குல்லா யேசுதாஸைக் காப்பாற்றினாரா அமைச்சர்?

வில்லங்க விபரீதம்

##~##

பெண்கள் பூமாரி பொழிய... கறுப்புக் குல்லா... கறுப்புக் கண்ணாடி சகிதமாக மெகா சைஸ் போஸ்டர்களில் சிரித்துக்கொண்டு இருப்பார் 'அப்ரோ’ யேசுதாஸ். இந்தக் காட்சிகள் எல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்பு வரை. ஜூலை 22-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'கறுப்புக் குல்லா யேசுதாஸ் நல்லவரா?’ என்ற தலைப்பில் செய்தி வெளியான பின், அவருடைய நிலையும் தலைகீழாக மாறி, இப்போது புழல் சிறையில் இருக்கிறார். 

வட்டியில்லாக் கடன், தங்கநகைக் கடன், கல்விக் கடன், சுற்றுலாக் கடன் எனக் கடன்களில் எத்தனை வகை உண்டோ... அத்தனை கடன்களும் தரப்படும் என சிலமாதங்களுக்கு முன் அப்ரோ நிறுவனம் விளம்பரம் செய்தது. அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வெளியான இந்த விளம்பரங்களில் அப்ரோ நிறுவனம், 'ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றது’ என்றும் குறிப்பிட்டது. இதுதான் நம் கண்களை உறுத்தியது.

கறுப்புக் குல்லா யேசுதாஸைக் காப்பாற்றினாரா அமைச்சர்?

உடனே, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணையில் இறங்கினோம். அப்ரோ நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெறவில்லை என்பதும், வட்டியில்லாக் கடன் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை வசூல் செய்து ஏமாற்றுவதும் நமது விசாரணையில் உறுதியானது. அந்த விவரங்களை நாம் கட்டுரையாக வெளியிட்டதும், சுதாரித்துக்கொண்டது ரிசர்வ் வங்கி. 'அப்ரோ நிறுவனம் ரிசர்வ் வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுகிறது. அதை நம்ப வேண்டாம்’ என்று அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து, கடந்த ஜூலை 25-ம் தேதி கொளத்தூரில் உள்ள யேசுதாஸின் வீடு மற்றும் அலுவலகங்களைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் சுற்றி வளைத்தனர். உடனே, யேசுதாஸ் தலைமறைவானார். அவருடைய அண்ணன் செல்லத் துரை, உதவியாளர் ராஜேஷ் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தலைமறைவான யேசுதாஸ், கடந்த 12-ம் தேதி பெங்களூரு ரிச்மாண்ட் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்படையில் இருந்த இன்ஸ்பெக்டர் குமரனிடம் பேசினோம். ''தலைமறைவான உடனேயே அதுவரை பயன்படுத்தி வந்த சிம் கார்டுகள் அனைத்தையும் மாற்றி விட்டார் யேசுதாஸ். புதிய சிம் கார்டுகளை வாங்கி பழைய மொபைல்களிலேயே பொருத்திப் பயன்படுத்தி வந்தார். அதனால், அந்த மொபைல் போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்களை வைத்து அவரைத் தேடினோம். ஆந்திரா, பெங்களூரு, மைசூரு என்று தங்கியிருந்த இடத்தை யேசுதாஸ் மாற்றிக்கொண்டே இருந்ததால், அவரைக் கைது செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

கடந்த 15 நாட்களாக, அவர் இடத்தை மாற்றாமல் பெங்களூருவிலேயே தங்கி இருந்தார். இதை ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டதும் பெங்களூரு விரைந்தோம். அங்கு உள்ள முக்கியமான ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் அவருடைய போட்டோவைக் காண்பித்து விசாரித்தோம். கடைசியில் ரிச்மாண்ட் என்ற ஹோட்டலில் தங்கி இருந்த யேசுதாஸையும், அப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரான தேவியையும் கைது செய்தோம்.'' என்றார்.

யேசுதாஸிடம் நடந்த முதல் கட்ட விசாரணையில் காவல் துறைக்குக் கிடைத்துள்ள தகவல்கள் என்ன?  

''சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் யேசுதாஸ். மனிதஉரிமை ஆர்வலர் என்ற போர்வையில் கணவரை இழந்த தேவியுடன் அறிமுகமாகி உள்ளார். இருவரும் சேர்ந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கமிஷன் அடிப்படையில் கடன் வாங்கித் தந்துள்ளனர். வங்கிகளின் நடைமுறைகளை ஓரளவு தெரிந்துகொண்ட யேசுதாஸ், அதன்பிறகு தானாகவே கடன் வழங்க முடிவுசெய்து அப்ரோ நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார். பதிவுக் கட்டணமாக முதலில் 600 ரூபாய் செலுத்த வேண்டும். அதன்பின் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு 5,600 ரூபாய் செலுத்த வேண்டும். இப்படி செலுத்தியவர்களில் யாராவது ஒன்றிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் கடன் கொடுத்துவிட்டு, அதைப் பிரமாண்டமாக விளம்பரம் செய்வார்கள். அதைநம்பி, ஏராளமானோர் கடன் கேட்டு விண்ணப்பித்தனர்.

அப்படி விண்ணப்பித்தவர்களிடம் வசூல் செய்த பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழ்ந்தார். யேசுதாஸுக்கு எங்கெங்கு சொத்துக்கள் உள்ளன. அவருக்குத் துணையாக இந்த ஏமாற்று வேலையில் வேறு யாரெல்லாம் இருந்தனர் என்ற விவரங்கள் இனிமேல்தான் வெளிவரும்'' என்கின்றனர் யேசுதாஸிடம் வாக்குமூலம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள்.

''ஜூலை 25-ம் தேதி தலைமறைவான யேசுதாஸை இரண்டு மாதங்களாக போலீஸாரால் நெருங்க முடியவில்லை. இதற்குக் காரணமாக அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரைக் காட்டுகிறார்கள். யேசுதாஸை வழக்குகளில் இருந்து காப்பாற்றுவதற்காக முன் பணமாக 15 லட்ச ரூபாய் பணம் கைமாறியதாம். அதன்பிறகு, அமைச்சர் தரப்பில் இருந்து இரண்டு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய தொகையை யேசுதாஸால் கொடுக்க முடியவில்லை. அதனால், அமைச்சர் தரப்பு ஒதுங்கிக்கொண்டது. அமைச்சர் சொன்ன காரணத்தால்தான் போலீஸ் இத்தனை நாட்களும் மெத்தனமாக இருந்தது. இவர்கள்தான் யேசுதாஸ் இருக்கும் இடத்தை போலீஸுக்குச் சொன்னார்கள்'' என்றும் சொல்கிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, யேசுதாஸ் போன்றவர்கள் அப்பாவி மக்களுக்கு குல்லா போடத்தான் செய்வார்கள். கைது செய்து அழைத்து வரப்பட்டபோது யேசுதாஸ் குல்லா இல்லாமல்தான் இருந்தார்!

- ஜோ.ஸ்டாலின்

படம்: வீ.நாகமணி