ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

துடிக்க வைக்கும் டெங்கு!

துடிக்க வைக்கும் டெங்கு!

துடிக்க வைக்கும் டெங்கு!

'உடம்பு முழுக்க சிவப்புக் கொப்புளமா வந்தது’

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சாலமன்ராஜா என்ற இளைஞர் கடந்த சனிக்கிழமை டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்தார். இவர் எம்.காம். பட்டதாரி. இவரின் தந்தை டேவிட் காவல் துறையில் உதவி ஆய்வாளராக இருந்தவர். சாலமன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் ஒரு விபத்தில் அவரது தந்தை டேவிட் இறந்தார். அடுத்தடுத்து, நடந்த இரு மரணங்களால் நொறுங்கிப் போய் உள்ளது அந்தக் குடும்பம். சாலமன் ராஜாவின் தாயார் வசந்தா,

துடிக்க வைக்கும் டெங்கு!

''என் மகனுக்கு 20 நாளா உடம்பு சரியில்லே. ஆரம்பத்துல சாதாரணக் காய்ச்சல்னு நினைச்சோம். பக்கத்துல இருக்கும் ஒரு தனியார் ஹாஸ்பிட்டல்ல காண்பிச்சு மருந்து மாத்திரை சாப்பிட்டான். போன வாரம் உடம்பு முழுசும் சிவப்புக்கலர்ல சின்னச் சின்னக் கொப்பளம் வந்தது. கை, கால்ல பயங்கர நடுக்கம். எந்திரிக்கக்கூட முடியலை. உடனே, ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். அடுத்த ரெண்டு நாள்ல ஓரளவு குணமாகிட்டான். திடீர்னு முகத்துல ஒரு பக்கம் வீக்கமாகி, பேசவும் முடியாம, மூச்சு விடவும் முடியாம என்மகன் ரொம்ப கஷ்டபட்டான். அவன் பட்ட கஷ்டத்தைப் பார்த்துத் துடிச்சுப் போய்ட்டேன். அடுத்தநாளே எங்களால ஒண்ணும் செய்ய முடியாதுன்னு டாக்டருங்க கைவிரிச்சுட்டாங்க. சனிக்கிழமை அதிகாலைல என் மகன் துடிதுடிச்சு செத்துப்போனான். ஹாஸ்பிட்டல் போனதும் முதல்ல டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைதான் செஞ்சோம். பரிசோதனை முடிவு சொல்ல அஞ்சுநாள் ஆகும்னு சொன்னாங்க. முடிவு தெரியிறதுக்குள்ள அவன் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு'' என்று கதறி அழுதார்.

'திடீர்னு வயிறு வீங்கிடுச்சு!’

துடிக்க வைக்கும் டெங்கு!

''அறிவாப் பேசுற புள்ள பூமியில நிலைக்காதுன்னு சொல்வாங்க. அது உண்மையாப் போச்சே'' என்று மகள் நித்யஸ்ரீயை பறிகொடுத்துவிட்டு, அரற்று கிறார்கள் பெற்றோர் உலகநாயகியும் பாக்யராஜும். இவர்களின் நான்கு வயதுக் குழந்தை நித்யஸ்ரீ டெங்குவால் பலியானது. நித்யஸ்ரீ இறக்கும் வரை டெங்குவின் தீவிரம் பற்றி மாவட்ட நிர்வாகம் அலட்டிக்கொள்ளவில்லை. அதன் பிறகே, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஞானோதயம் வந்தது. நித்யஸ்ரீயின் தந்தை பாக்யராஜிடம் பேசினோம். ''குழந்தைக்கு ஜுரம்னு தெரிஞ்சதும் உடனே பெரியாஸ் பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். அப்படியும் காய்ச்சல் நிக்கலை. இதேபோல, ஜுரம் இருந்த பல குழந்தைகளையும் ஒரு வேன்ல ஏத்திக்கிட்டு ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. அங்க போய் ரெண்டு நாள் ஆகியும் எந்த வைத்தியமும் பண்ணலை. கேட்டதுக்கு பிளட் டெஸ்ட் எடுத்துருக்கோம். ரிசல்ட் வந்தாத்தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்போம்னு சொன்னாங்க. அதுவரைக்கும் ஓடியாடி விளையாடிக்கிட்டு இருந்த எம் புள்ள திடீர்னு விளையாட்டை நிறுத்திட்டா. சாப்பாட்டையும் நிறுத்திட்டா. திடீர்னு வயிறு வீங்கிடுச்சு. யூரின் போகலே. ஆனா அடுத்த ரெண்டே நாள்ல அவளை எமன் அழைச்சுக்கிட்டான்'' என்று வேதனையுடன் கண்ணீர் வடித்தார்.

''கண் பார்வை அப்படியே நிலை குத்தி நின்னுடுச்சு!''

துடிக்க வைக்கும் டெங்கு!

நாகப்பட்டினம் நம்பியார் நகரில் வினிதா என்ற ஒன்பது வயது சிறுமி டெங்குவால் பலியானாள். ''பெத்த வயிறு பத்தி எரியுதுய்யா. செல்லமா வளர்த்து இப்படியா காய்ச்சலுக்குத் தூக்கிக் கொடுக்கணும்?'' என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதார் வினிதாவின் தாய் சகுந்தலா. ''ஆஸ்பத்திரியில கடைசி நேரத்துல மடியில தலையை வச்சுப் படுத்துக்கிட்டு நீ என்னைய விட்டுட்டு வெளியில போகாதம்மானு எம்பொண்ணு கெஞ்சுனா. நான் உன்னைவிட்டு எங்கேயும் போக மாட்டேன்னு சொன்னேன். கொஞ்ச நேரத்துல கண்ணு அப்படியே நிலைகுத்தி நின்னுடுச்சு. உடனே, டாக்டரைக் கூப்பிட்டுக் கதறினேன். அவங்க நெஞ்சுல கைய வைச்சு அழுத்திப் பார்த்துட்டு, குழந்தை இறந்துட்டதா சொல்லிட்டாங்க. என்னை விட்டுட்டுப் போகாதம்மானு சொல்லிட்டு அவ போயிட்டாய்யா'' என்று பெருங்குரலெடுத்து அழுதார்.

துடிக்க வைக்கும் டெங்கு!

''முடி விறைச்சுப் போய் நின்னது.''

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது டெங்கு. எடப்பாடி அருகே உள்ள சித்தூர் புதூர் பகுதியில் ரித்திகா என்ற நான்கு வயதுக் குழந்தை கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் இறந்தது. இந்தக் குழந்தையின் பாட்டி ஆயம்மாள், ''என் மருமகள் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்க அவங்க அம்மா வீட்டுக்குப் போயிடுச்சு. நான்தான் என் பேத்தி ரித்திகாவை பார்த்துக்கிட்டேன். எங்க வீட்டுல எப்பவும் சுடு தண்ணீர்தான் குடிப்போம். என் பேத்தியை வெளியில கூட விடாமப் பத்திரமாதான் பார்த்தேன். திடீர்னு நாலாம் தேதி புதன்கிழமை சாய்ந்திரம் காய்ச்சல் வந்தது. உடனே ஜலகண்டபுரம் எடுத்துட்டுப் போய் ஊசி போட்டுட்டு வந்தோம். காய்ச்சல் நிற்கவே இல்லே. நெருப்பாட்டம் கொதிச்சது. விட்டு விட்டுக் காய்ச்சல் வந்துட்டே இருந்தது. முதுகு வலிக்குதுன்னு சொன்னது. கை, கால் குடையுதுன்னு சொன்னது. நான் கை, காலைப் பிடிச்சு விட்டேன். தலைமுடி விறைச்சுக்கிச்சு. எண்ணெய் தேய்ச்சாலும் முடி அடங்கல. கண்ணுல வளையம் மாதிரி இருந்தது. குழந்தை ரொம்ப சோர்வா இருந்தது. சேலம் பிரணவ் ஆஸ் பிட்டல் தூக்கிட்டு ஓடினோம். ரத்தம் டெஸ்ட் பண்ணியதில் டெங்கு காய்ச்சல் இருக்கு. அதனால், கோயம்புத்தூர் கொண்டுபோகச் சொல்லிட்டாங்க. ஆறாம் தேதி சனிக்கிழமை குழந்தையை வண்டியில போட்டுட்டுப் போனோம். பாதி வழியிலேயே இறந்துபோச்சு.'' என்று தேம்பி தேம்பி அழுகிறார்.

'மக்கள் பயப்படத் தேவை இல்லை. டெங்குவால் அதிகமாக தமிழகம் பாதிக்கப்படவில்லை!’ என்று தொடர்ந்து முழங்கி வரும் சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய்யின் மாவட்டத்தில் கடந்த வாரம் மட்டும் இரண்டு பேர் டெங்குவால் பலி ஆனார்கள். இதுவரை வேலூரில்  பலியான உயிர்களின் எண்ணிக்கை 8.

மக்களையும் கவனியுங்கள் மாண்பு மிகுக்களே!

- நமது நிருபர்கள்

துடிக்க வைக்கும் டெங்கு!
துடிக்க வைக்கும் டெங்கு!
துடிக்க வைக்கும் டெங்கு!

''டெங்கு காய்ச்சலுக்குத் தடுப்பு ஊசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த நோயைப் பரப்பும் கொசுவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதுதான் ஒரேவழி'' என்கிறார்கள் சென்னை மருத்துவர்கள்.

சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில், 6 குழந்தைகள், 2 பெரிய வர்கள் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள காய்ச்சல் வார்டில் டெங்கு பிரிவு தனியாக ஆரம்பிக்கப்பட்டு இயங்குகிறது. ஏராளமானோர் அங்கு குவிந்தவண்ணம் இருந்தனர். டெங்கு காய்ச்சல் குறித்து, நம்மிடம் விரிவாகப் பேசினார் மருத்துவமனையின் டீன் கீதாலட்சுமி.  ''காய்ச்சல் ஏற்பட்டால் மருந்துக்கடையில் போய் மாத்திரை வாங்கிச் சாப்பிடும் பழக்கத்தை மக்கள் அறவேவிட வேண்டும். அப்போதைக்குக் காய்ச்சல் சரியாகும். ஆனால், மீண்டும் வரும். அரசு மருத்துவனைக்கு வந்தால், காய்ச்சல் கண்டவரின் ரத்தத்தை எடுத்து முதலில் டெஸ்ட் செய்கிறோம். இதில் இருந்து டெங்குவா என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடியும். அடுத்து, எலிசா டெஸ்ட் செய்கிறோம். இதுதான் டெங்கு இருக்கிறதா? இல்லையா? என்று உறுதிப்படுத்தும். டெங்குவாக இருந்தால், தனிக்கவனம் செலுத்திக் கவனிப்போம். மற்ற வகை வைரஸ் காய்ச்சல் என்றால், அதற்கென உள்ள சிகிச்சைகள் தொடங்கும். எல்லாக் காய்ச்சலும் டெங்குதான் என்று கருதிவிடாதீர். ஆரம்பத்திலேயே எங்களிடம் வந்தால், சிகிச்சை அளிப்பது எளிதாகும். அரசாங்கம் போதிய அளவுக்கு மருந்து, உபகரணங்களை கொடுத்திருப்பதால், நிச்சயமாக உயிரைக் காப்போம். பொதுவாக, ரத்தம் உறையும் தன்மையைக் காக்கும் தட்டணுக்கள் மனிதஉடலில் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை இருக்க வேண்டும். டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் படுதீவிரமானால், இந்த அணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் குறையும் ஆபத்து உண்டு. ரத்தம் உறையும் தன்மை மாறும். அதை ஈடுகட்ட நோயாளிக்குப் புதிய ரத்தம் செலுத்திக் காப்பாற்றுகிறோம்'' என்றார்.  

துடிக்க வைக்கும் டெங்கு!

ஏடீஸ் எகிப்தி கொசுவின் கொடூரம்...

இந்தியாவில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழை சீசனில்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஏடீஸ் எகிப்தி வகை கொசுதான் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் வைரஸை மனிதனுக்குப் பரப்புகின்றன. இவை, நாலு வாரங்கள் உயிர் வாழும். அதிகாலை நேரம், மாலை 4 மணி முதல் 7 மணி வரை இந்த வகைக் கொசுக்களுக்கு உணவு நேரம். மனிதனைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும். 2 கி.மீ. முதல் 3 கி.மீ. தூரம் வரை பறந்து செல்லக் கூடியவை. வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கப், தேங்காய் மூடி, மூடப்படாத மேல்நிலை நீர்த்தொட்டிகளில் இனப்பெருக்கம் செய்யும். ஒரு கொசு 150 முட்டைகளை இடும். ஒரு வாரம் நீரில் பல்வேறு பருவங்களாக வளர்ந்து கொசுவாகப் பறக்கும்.

துடிக்க வைக்கும் டெங்கு!

மனிதனுக்கு அருகில் உள்ள நல்லநீர் நிலை தேக்கங்களில்தான் இவை முட்டை இடுகின்றன. 30 மி.லி. பெட்ரோல் அல்லது கெரசினை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து நீர்த்தேக்கங்களில் தெளித்தால் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம். இப்படி வாரம் ஒருமுறை செய்து வரவேண்டும். கிணறுகளில் கொசுக்களின் லார்வாக்களை விரும்பிச் சாப்பிடும் சின்ன சின்ன மீன்களை விட்டால் நல்லது.  

எனவே, வாரம் ஒருமுறை தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தாலே, லார்வா பருவத்திலேயே இந்த வகை கொசு அழியும். நாள்பட்ட தேவையில்லாத பொருட்களை வீட்டின் உள்ளே - வெளியே போட்டு வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, உடல் முழுவதும் மறைக்கும்படியான ஆடைகள் அணிவது, கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச்சுருள் போன்ற கொசு விரட்டிகள் பயன்படுத்தலாம்.  

- ஆர்.பி.

 வாழ்த்து கட்-அவுட், கண்ணீர் அஞ்சலியானது!

துடிக்க வைக்கும் டெங்கு!

சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில் தலையைக் காட்டி வந்த திலீபனுக்கு, ஹீரோ ஆக வேண்டும் என்பது கனவு. சமீபத்தில், ரிலீஸான 'செம்பட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்தார். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற திலீபன் 'செம்பட்டை’ படத்துக்காக மூன்று வருஷம் முடி வளர்த்து ஹோம்வொர்க் செய்து நடித்தார். படம் ரிலீஸான அன்று வயிற்று வலி. சென்னையில், வீட்டுக்கு அருகில் இருக்கும் க்ளினிக்கில் ரத்தப் பரிசோதனை செய்தார். பரிசோதித்த டாக்டர், திலீபனை உடனே ஊருக்குப் போகச்சொல்லி இருக்கிறார். சொந்த ஊரான ஒரத்தநாட்டில் 'செம்பட்டை’ படத்துக்காக நண்பர்கள் எல்லாம் திலீபனுக்கு கட்அவுட் வைக்க... ஏனோ அந்த ஊரில் மட்டும் 'செம்பட்டை ரிலீஸாகவில்லை. அதனால், மனம் வெறுத்துப்போன திலீபன் அஸிஸ்டென்ட் டைரக்டருடன் உடம்புக்கு சிகிச்சை எடுக்க ராஜபாளையம் சென்றார். வயிற்று வலி அதிகமாக மதுரையில் இருக்கும் தனியார் ஆஸ்பத்தியில் சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாமல் இறந்து போனார். சென்னையில் இருக்கிறார் என்று திலீபன் குடும்பத்தினரும் ஒரத்தநாட்டில் இருக்கிறார் என்று சென்னை நண்பர்களும் நினைத்துக்கொண்டு இருக்க இரண்டு இடத்திலும் இல்லாமல் அனாதையாக மதுரையில் டெங்கு காய்ச்சலுக்குப் பலியானார், திலீபன். ஒரத்தநாட்டில் இறுதிச்சடங்கு நடந்தபோது அவரை வாழ்த்தி வைத்திருந்த கட்-அவுட் வினயல் போர்டு போட்டோக்களில் மாலையை மாட்டி கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருந்தனர் நண்பர்கள்!