Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் 2,577 கோடி ரூபாய் இழப்பு... யார் காரணம்?

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

2016-ம் ஆண்டில் மட்டுமின்றி, 2019-ம் ஆண்டிலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என உயர், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது தி.மு.க!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தாத காரணத்தால் தமிழக அரசுக்கு 2,577 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 9-ம் தேதி காலையில் கடந்த அ.தி.மு.க அரசின் நிதிச் செயல்பாடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இதைக் குறிப்பிட்டார். ``இதைக் கேட்டுச் சிரிப்பதா... கோபப்படுவதா என்றே தெரியவில்லை" என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். ஏன் என்று விசாரித்தோம்.

``உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் 2,577 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பொதுவாகச் சொல்லியிருந்தால் கேள்விக்கே இடமில்லை. ஆனால், அ.தி.மு.க அரசு நடத்தாத காரணத்தால் என்று சொல்வதற்குத்தான் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஏனெனில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சையிலிருந்த நேரத்தில்தான் அதாவது, செப்டம்பர் 26-ம் தேதிதான் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில், அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்தே வேட்புமனுத் தாக்கலும் தொடங்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே, அவரது பெயரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஆனால், தேர்தலுக்குத் தயாராகாத தி.மு.க., ``உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதனால், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், இட ஒதுக்கீடு பற்றி எந்தக் குறையும் சொல்லவில்லை. மாறாக, தமிழ்நாடு பஞ்சாயத்து (தேர்தல்) விதிகள் 1995 (பிரிவு 24-ஐ) மீறும் வகையில் உள்ளது என்று கூறி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.

அதன் பிறகு, வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களையும், விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சியையும், காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டையும், நெல்லையிலிருந்து தென்காசியையும் பிரித்தது தமிழக அரசு. பிரிக்கப்பட்ட பிறகு மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு 2019, டிசம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முறை ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. `புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை’ என்று கூறி மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றம் சென்றது தி.மு.க. அதை விசாரித்த நீதிமன்றம், புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி உத்தரவிட்டது. அதன்படிதான் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15-க்குள் நடத்த வேண்டுமென சமீபத்தில் நீதிமன்றம் குறிப்பிட்டது. இவற்றையெல்லாம் பார்த்தாலே யார் உள்ளாட்சித் தேர்தல் நடக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்” என்று முடித்தனர்.

`வெள்ளை அறிக்கை' - அதிமுக ஆட்சியின் ஆவணப்படமா, திமுக ஆட்சியின் வரி வசூலுக்கான ட்ரெய்லரா?
பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

அ.தி.மு.க-வினரின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் பி.டி.அரசகுமாரிடம் கேட்டோம். ``2016-ல் பழங்குடியினர், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதால் அப்போது இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க வழக்கு போட்டது. 2019-ல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், மாவட்ட வார்டு வரையறைகளை ஒழுங்காக மேற்கொள்ளாமல் அவசரகதியில் மீண்டும் தேர்தல் அறிவித்ததால்தான் மீண்டும் தி.மு.க நீதிமன்றம் சென்றது. ஒருபோதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று தி.மு.க வழக்கு போடவில்லை. அவர்கள் முறையாக எல்லாவற்றையும் செய்திருந்தால் நாங்கள் ஏன் நீதிமன்றம் செல்லப்போகிறோம்? அதன் பிறகு நீதிமன்றம் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை விடுத்து மீதமுள்ள மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்திக்கொள்ளலாம் என்று சொன்னபோது நாங்கள் எதிர்க்கவில்லையே!” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு